அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 20

0

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (20) தாய்லாந்து

சுபாஷிணி ட்ரெம்மல்

இந்த அருங்காட்சியகம் பற்றிய தொடரில் உங்களை நான் இன்று அழைத்துச் செல்லவிருப்பது தாய்லாந்திற்குத்தான்!

பொருளாதாரப் பிரச்சனைகள்; அரசியலில் நேர்மையற்ற நிலை; சிறுபாண்மையினர் சமூகத்தின் தேவைகள் வாக்களித்தபடி நிறைவேற்றப்படாத ஏமாற்றம்; ஐரோப்பிய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணிகளின் வரவை மையமாக வைத்து இயங்கும் விபச்சார விடுதிகள் – இவை தற்போதைய தாய்லாந்தைப் பற்றி அடிக்கடி ஊடகங்களின் வழி நாம் கேள்விப்படும் செய்திகள்.  ’இது மட்டுமா தாய்லாந்து?’ என நினைப்பதே கூட தவறு என நம்மை திகைக்க வைக்கின்றது நேரடியாக இங்கு பார்க்கும் போது.

இந்தப் பதிவு ஒரு வகையில் வித்தியாசமானதொரு பதிவு என்றே சொல்வேன். ஏனெனில், இப்பதிவை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தாய்லாந்தின் தெற்குப் பகுதி  நகர் ஒன்றிலிருந்து தான் என்பதால்.

இந்தியா, சீனா என்ற இரண்டு பெரிய பண்பாட்டு, நாகரிக செழுமை நிறைந்த நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கின்றது தாய்லாந்து. இவ்விரண்டு பெரிய நாடுகளின் சமய, பண்பாட்டு, வாழ்வியல் தாக்கங்களின் விளைவாகவும், அதனால் விளைந்த ஒரு கலவையாகவும், ஆனால், அதே வேளை ஒரு தெளிவான தனித்துவம் ஒன்றினையும் பேணும் ஒரு கலாச்சாரத்தைக் கொண்டதாகவும் தாய்லாந்து திகழ்கின்றது.

இன்னொரு சிறப்பும் இந்த நாட்டிற்கு இருப்பதை குறிப்பாகக் காண்கின்றேன். காலனித்துவ ஆட்சியில் சிக்கி சில நூற்றாண்டுகள் தவித்த ஏனைய அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனிசியா போலல்லாது ஐரோப்பியர் வசம் தம் நாட்டை  இழக்காத ராஜ்ஜியத்தைக் கொண்டிருந்த நாடு இது.  அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஹாலந்து ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க கைப்பற்றும் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி என்பதே இல்லாமல் சுய ஆட்சியிலேயே தொடரும் ஒரு பெரும் நாடு இது என்பதே ஒரு தனிப் பெருமை.

இன்றைய இந்தோனிசியாவின் ஒரு தீவான சுமத்ராவிலிருந்து தாய்லாந்தின் தென் பகுதி வரை ஸ்ரீவிஜயா அரசு 10ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்தது. அப்பேரரசும் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க அதனைப் பயன்படுத்திக் கொண்டு,  போரிட்டு வெற்றி பெற்ற தாய் அரசு இப்போதைய அயோத்யாவில் தனது நாட்டின் முதல் தலைநகரை அமைத்து ஆட்சியைத் தொடங்கியது.  அதன் பின்னரும் கூட பற்பல போர்கள்,  குறிப்பாக பர்மா மற்றும் சீன மலைப்பகுதி அரசுகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினாலும் கூட, தாய் அரசாட்சி என்பது மட்டும் மறையாமல்,  இன்றும் மன்னராட்சியுடன் கூடிய மக்களாட்சி தொடர்கின்றது.

இந்த ஆண்டு இறுதியையும் 2014ம் ஆண்டின் தொடக்க நாட்கள் சிலவற்றையும் தாய்லாந்தின் சில நகரங்களுக்குப் பயணித்து இந்நாட்டின் வரலாற்று கலாச்சார பின்னனியை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தாய்லாந்தின் இயற்கை சூழலில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு நானும் என் கணவரும் தாய்லாந்து வந்தோம்.  மிக அன்பான ஒரு சுற்றுலா பயண வழிகாட்டி தாய் பெண்மணி ஒருவருடன் 22 பேர் கொண்ட ஜெர்மானிய சுற்றுலா குழுவில் இணைந்து பாங்கோக் தொடங்கி அயோத்யா, சுக்கோத்தை, லம்பாங், சாங் ராய், சாங் மை, லோக் புரி, காஞ்சனாபுரி, சா ஆம் ஆகிய இடங்களுக்கு இப்பயணக்குழுவினருடன் 15 நாட்கள், 2800 கிலோமீட்டர் தூரம் வடக்கு மேற்கு தெற்குப் பகுதிகளில் பயணித்து விட்டு தற்சமயம் கோ சாமூய் தீவிலிருந்து இப்பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தாய்லாந்தின் அருங்காட்சியகங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னர் இந்த நாட்டின் வரலாற்றுப் பின்னணியைப் பற்றியும், நாட்டினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்வது உதவலாம் என்பதால் ஒரு சிறு குறிப்பு.

பௌத்தம் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மதம்.  அதிலும் நாட்டின் மக்கள் தொகையில் 80% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் தாவோயிசம், ஹிந்து சமயம், கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் என்ற வகையில் அமைந்துள்ள நாடு இது. இந்த 80% பௌத்தர்களில் ஏறக்குறைய 96 விழுக்காட்டினர் தேரவாத புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் மஹாயானா பௌத்தத்தைப் பின்பற்றுவோர்.

தாய்லாந்து ஒரு அதிசயமான நாடு.

தேரவாத பௌத்தம் என்றாலும் மிகக் கட்டுப்பாடான வகையில் இந்த வகை பௌத்தத்தை கடைப்பிடிப்பது என்பது இங்கு நடைமுறையில் இல்லை.  பல வழக்குகளை இணைத்துக் கொண்டு புதுமையான ஒரு பௌத்த நெறியாக இங்கே பௌத்தம் நடைமுறையில் திகழ்கின்றது.

suba_mus3

இரண்டு பௌத்த பிக்குகள் – சந்தையில்

இங்கு பிறக்கும் பௌத்த குடும்பத்து ஒவ்வொரு ஆணும் தம் திருமணத்திற்கு முன்னர் குறைந்தது மூன்று மாதங்களாவது ஒரு பௌத்த ஆலயத்தில் இணைந்து புத்த பிக்குவாக நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பது வழக்காக உள்ளது. சமூகத்தளத்தில் அதி உயரத்தில் இருக்கும் மன்னர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு விதி இது. இன்றைய மன்னர் பூமிபோல் அவர்களும் புத்த பிக்குவாக சில காலம் இருந்தார் என்பது குறிப்பிடப்பட  வேண்டிய ஒன்று. பெண்களும் வெள்ளை ஆடை உடுத்தி பெண் பிக்குணிகளாக தாம் விரும்பும் எக்காலத்திலும் ஒரு பௌத்த சங்கத்தில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். ஆணோ பெண்ணோ, தாங்கள் விரும்பும் வரை புத்த பிக்கு, பிக்குணிகளாக இருந்து விட்டு மீண்டும் சங்கத்திலிருந்து வெளியேறி சம்சார வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு தம் வாழ்க்கையைத் தொடரலாம். இதற்கு சங்கத்திலும் சரி குடும்பத்திலும் சரி எத்தடையும் இல்லை. புத்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்கும் உணவு வழங்குவதையும் ஆலயங்களுக்கு நன்கொடை கொடுப்பதையும் மனதார அன்போடு செய்கின்றனர் தாய் மக்கள்.  அனாதையாகத் திரியும் பிராணிகளை எங்கேனும் கண்டால் அவற்றை அருகில் உள்ள புத்த விகாரைகளுக்குக் கொண்டு சென்று சேர்க்கின்றனர். அங்கே அப்பிராணிகள் பாதுகாக்கப்படுகின்றன.

இங்கு என்னை அதிசயத்தில் ஆழ்த்திய ஒன்று…

பௌத்த ஆலயங்களாகட்டும் கட்டிடங்களின் முன்புற வாசலாகட்டும், தனியார் வீடுகளாகட்டும், தங்கும் விடுதிகளாகட்டும், சாலையின் சந்திகளாகட்டும் – எங்கு நோக்கினும் விநாயகரின் மாபெரும் சிலைகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. புன்னகை பூத்த முகத்துடன் நர்த்தனமாடிக் கொண்டும் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டும் அழகாகக் காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள் ஒரு அதிசயம் என்றால் இன்னும் வியப்பில் ஆழ்த்துவது தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் வாசலில் இருக்கும் சிவபெருமான் சிலைகள் தாம். தாய் மக்கள் சிவபெருமானையும் விநாயகரையும் அதிர்ஷ்டத்தை தரும் தெய்வங்களாக இங்கே கருதுகின்றார்கள்.  அதே போல எல்லா இடங்களிலும் பிரம்மாவின் சிலைகள்.  விஷ்ணுவின் ஒரு அவதாரமாக புத்தரை தாய் மக்கள் கருதுவதால் இங்கு தனியாக விஷ்ணுவுக்கு சிலைகள் இல்லை. ஹிந்து சமயத்தின் மும்மூர்த்திகளே இங்கே தாய்லாந்தின் பௌத்த வழிபாட்டு நடைமுறையில் வித்தியாசமான முறையில் கலந்து விட்டனர் என்பதே ஆச்சரியமளிக்கின்றது அல்லவா?

suba_mus1

விநாயகர் ஒய்யாரமாய் ஒரு உணவு விடுதியின் முன்னே

தாய்லாந்தில் நான் பார்த்த பெரிய சிறிய நகரங்கள் அனைத்திலும் புத்த விகாரைகள் எண்ணற்றவை உள்ளன.  ஒவ்வொரு கோயில்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தர் சிலை வடிவங்கள் நிறைந்திருக்கின்றன.  கோயிலைச் சுற்றி பல புத்தர் சிலை வடிவங்கள் தியான நிலையில் இருப்பது போல அமைந்திருந்தாலும்,  கோயில் மூலஸ்தானத்தில் ஏதாகினும் ஒரு வடிவில் சிறப்பான புத்தர் சிலை என்பது அமைந்திருக்கின்றது. சில ஆலயங்களில் இருபது கோண தங்க நிற ஸ்தூபம் தனிக் கோயில் போன்று வடிக்கப்பட்டு மைய வழிபாட்டு அம்சமாக கோயிலில் அமைந்திருக்கின்றது.

புத்தரின் உருவச் சிலைகள் எனும் போது பொதுவாக ஐந்து வகைகள் இருக்கின்றன. தியான வடிவில் புத்தர்; அனந்த சயனத்தில் புத்தர்; நின்ற வடிவில் புத்தர்; நடக்கும் வடிவில் புத்தர்; ஞானம் வழங்கும் வடிவில் புத்தர் இப்படி.

கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் பௌத்தம் இங்கு பரவி காலூன்றி செழித்தது என்று அறிந்து கொண்டேன். அதிலும் குறிப்பாக ஸ்ரீ லங்கா, பர்மா, தீபெத் ஆகிய நாடுகளிலிருந்து சியாம் (அப்போதைய தாய்லாந்து)  வந்த பிக்குகளின் முயற்சியால் இங்கு பௌத்தம் அறிமுகமாகியது. இப்படி பல நாடுகளின் தாக்கம் என்பது இருந்தாலும் இங்கு புழக்கத்தில் உள்ள பௌத்தம் பல வழிபாட்டு முறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு பரிமாணத்தில் தாய்லாந்து பௌத்தம் என்ற தனித்துவத்துடன் விளங்குகின்றது. இதில் விநாயகர், பிரம்மா, சிவன் ஆகிய ஹிந்துக் கடவுள்களும் இணைந்து விடுகின்றனர்.  பௌத்த மார்க்க சிந்தனைகளை உபதேசம் கேட்பதும் தியானிப்பதும் பிக்கு, பிக்குணிகளின் தலையாய நெறியாக அமைந்திருக்கின்றது. சாதாரண மக்கள் வழிபாடு, சடங்குகள் என்பனவற்றோடு தியான நெறி​யையும் அனுஷ்டிப்பது வழக்கமாக இருக்கின்றது.

ஆக,  ஒரு வகையில் இங்கு நாம் காணும் ஏறக்குறைய 80 விழுக்காட்டு அருங்காட்சியகங்கள் பௌத்த விகாரைகளுடனோ (Wat) பௌத்த சமயத்துடனோ சம்பத்தப்படுத்தப்பட்டவைகளாகவே இருப்பதைக் காண முடிகின்றது.

தாய்லாந்து தொடர்ச்சியாக பல போர்களை சந்தித்த நாடு என்பதும் உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்நாட்டிற்கு வணிகப் போக்கு வரத்து என்பது தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதாலும் அத்தகைய வரலாற்று விஷயங்களும் இங்குள்ள அருங்காட்சியகங்களில் கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு குறை இருப்பதை மறுக்க முடியாது. பெரும்பாலும் அனைத்து அருங்காட்சியகங்களிலும் தாய் எழுத்தில் மட்டுமே விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. இது அரும்பொருட்களின் தனிச்சிறப்புக்களை தாய் மொழி அறியாதோர் அறிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுத்துகின்றது.

suba_mus2

சுக்கோத்தை – பர்மிய படையினரால் 13ம் நூற்றாண்டில் அழிக்கப்பட்ட புத்த விகாரை வாசலில் (டிசம்பர் 2013)

சரி.  அடுத்த வாரம் வித்தியாசமான ஒர் அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *