இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (89)

1

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

கிறீஸ்துவ பெருநாளான நத்தார் தினம் கூடும் இவ்வாரத்திலே உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

அன்பு, காதல் என்பது ஒரு உள்ளத்தின் அதீத உணர்வென்பார்கள். காதல் என்பது இலக்கியத்தில் இனிதாக விளக்கப்பட்டிருக்கிறது. காதல் எனும் உணர்வு ஏதோ புதிய தலைமுறையில் கண்டு பிடிக்கப்பட்டதல்ல.

தொல்காப்பியம் என எமது இலக்கியத்தின் ஆரம்ப ஆதாரங்களில் இருந்து இன்றுவரை இக்காதலின் வெவ்வேறு அங்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் அழகிய தமிழில் அர்த்தப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆனால் காதல் எனும் அன்பின் அதீத வெளிப்படுத்தலை கொச்சைப்படுத்தாதவர்களும் இல்லை . பலர் காதல் எனும் போர்வையில் பலரது வாழ்வினைச் சிதைத்த சம்பவங்களையும் நாம் அறியாமலில்லை.

என்னடா இது ? சக்தி மிகவும் ஆடம்பரமாகக் காதலை வியாபிக்கிறானே இங்கே போகிறது இவன் மடல் எனும் கேள்வி உங்கள் உள்ளங்களில் நர்த்தனமாடுவதை நான் நன்கறிவேன்.

கடந்தவாரம் லண்டனை நோக்கி ரயிலில் பயணம் செய்தபோது பத்திரிகையில் யதேச்சையாகப் பார்த்த ஒரு செய்தி எனது நெஞ்சைத் தொட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் அவாவே எனது இப்பதிவிற்குக் காரணம்.

இலண்டனின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் “கென்ட்(Kent)” எனும் இடத்தில் வாழ்பவர் “ரயன் பீலிக்ஸ் கிலீனி(Ryan Felix Glenny)” அவருக்கு வயது 23. மேற்கத்திய நாடுகளில் இருக்கும் வழக்க்கம் போல் இவரும் 22வயதான “வெல்ஸ்(Wells)” எனும் நங்கையுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.

 felix1

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு. 2 வயதான மகனும், பத்து மாதங்கள் நிறைந்த பெண்குழந்தையும் உண்டு.

தனது வயிற்றில் ஏற்பட்ட அஜீரணக் கோளாறுகளினால் அவதிக்குள்ளான இவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பல பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட இவர் வயிற்றின் அடிப்பகுதியில் ஏற்படும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதற்குரிய பலவிதமான வைத்தியங்கள் சத்திரசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு வைத்தியம் என்பனவற்றிற்கு உள்ளானார்.

இருப்பினும் இவரது புற்றுநோய் சிகிச்சைக்கப்பாற்பட்டு பரவி விட்டது என்றும் இவர் உயிரோடிருப்பது இன்னும் சில மாதங்களே எனும் கசப்பான செய்தி இவரது மகனின் பிறந்தநாள் பரிசாக இவர்களுக்குக் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இவர்கள் எடுத்த முடிவே காதலின் அதியுச்சத்தைக் காட்டுகிறது.

 felix2

ஆமாம் தனது வாழ்வின் இறுதி நிர்ணயிக்கப்பட்டதும் அவர்கள் தாமிருவரும் சட்டமூலம் தமது பந்தத்தை உறுதியாக்க முடிவெடுத்தார்கள்.

அவர் படுத்த படுக்கையாகவிருக்கும் வைத்தியசாலைக் கட்டிலிலேயே தனது காதலியை, தனது குழந்தைகளின் தாயை சட்டமூலம் தனது மனைவியாக்கினார்.

பாதிரியாரும், அவரது நெருங்கிய உறவினர்களும் அந்நிகழ்விற்கு சமூகமளித்திருந்தார்கள் .

இவர்களுக்காக அவரது உற்ற நண்பர் ஒரு நிதிசேகரிப்பை ஆரம்பித்து இதுவரை சுமார் 26,000 ஸ்ரெலிங் பவுண்ஸ் அளவில் சேகரித்துள்ளார்.

சிலமாதங்களே வாழப்போகும் தனது காதலனை தனது கணவனாக்க முடிவு செய்த அப்பெண்ணின் காதல் உணர்வு அதீதமானதே.

தனது கணவனின் இறுதி கிறீஸ்துமஸ் நாளைத் தமது குழந்தைகளுடன் தனது கணவன் மகிழ்ச்சியாகக் களிக்க தான் அனைத்தையும் செய்யப் போவதாக அம்மங்கை தெரிவித்துள்ளார்.

ஆமாம் காதல் அன்பின் உயர்ந்த ஒரு நிலையாக இருக்கிறது. அதன் மகத்துவத்தை அதன் பவித்திரத்தை இப்படியான ஒரு நிகழ்வு அதுவும் நாகரீகம் எனும் பெயரால் காம இச்சைகளுக்கு முதலிடம் அளிக்கும் மேற்கத்திய நாட்டில் நிகழ்ந்தது என்பது ஏனோ என்னிதயத்தைத் தொட்டது.

மீண்டும் அடுத்த மடலில்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (89)

  1. இறைவனையே காதலனாக பாவித்து பெண் வாழ்ந்ததாக நமது இலக்கியங்கள் கூறுகின்றன. நிச்சயம் இந்தப் பெண்மணியின் காதல் அதற்கும் ஒருபடி மேலானது என்றே கருதுகிறேன். இதுபோல் மரணப் படுக்கையில் இருக்கும் தன் கணவனுக்காகவே வாழும் எத்தனையோ பெண்கள் இந்தியாவில் உண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *