தமிழால் முடியுமா? – தமிழக அறிவுஜீவிகள் பலரும் எழுப்பும் கேள்வி – 49

பேராசிரியர் இ. அண்ணாமலை

தமிழால் முடியுமா என்னும் கேள்வி நவீன காலத்தில் தோன்றியுள்ள கேள்வி. நவீன காலத்திற்கு முன்னால் இந்தக் கேள்வியைத் தமிழர்கள் கேட்டதாகத் தெரியவில்லை. சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில்கூட இந்தக் கேள்வி எழவில்லை. காலனிய காலத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் வேரூன்றியபோதே இந்தக் கேள்வி எழுந்தது. இது பாமரர்களிடம் எழவில்லை; ஆங்கிலம் கற்றவர்களிடம் எழுந்தது. முடியும் என்போர், முடியாது என்போர் என இரண்டு அணிகள் எழுந்தன; எரிந்த கட்சி, எரியாத கட்சி வாதத்திற்கு இன்னும் விடிவில்லை. இந்தக் கேள்வி எது முடியுமா என்று கேட்கிறது என்று வெளிப்படையாகச் தெரியப்படுத்தவில்லை. இது நிச்சயமாகக் காதல் செய்வது பற்றிக் கேட்கவில்லை; இலக்கியம் செய்வது பற்றிக் கேட்கவில்லை; திரைப்படம் எடுப்பது பற்றிக் கேட்கவில்லை; உழவுத்தொழில் செய்வது பற்றிக் கேட்கவில்லை; வணிகம் செய்வது பற்றிக் கேட்கவில்லை. இப்படிப்பட்ட பலவேறு துறைகளில் தமிழில் இயங்கமுடியுமா என்று இந்தக் கேள்வி கேட்கவில்லை. இந்தக் தமிழால் நாட்டை ஆட்சி செய்வதைப் பற்றியது; நீதிமன்றங்களில் வழக்காடுவது பற்றியது; கல்லூரிகளில் கல்வி கொடுப்பதைப் பற்றியது. அதாவது, தமிழ் அதிகார மொழியாக, அறிவு மொழியாகச் செயல்பட முடியுமா என்பதே இந்தக் கேள்வியின் சாரம்.

மொழிக்கென்று உள்ளார்ந்த தனித்திறன் எதுவும் இல்லை. ஒரு மொழி செய்வதை இன்னொரு மொழி அதன் தன்மை வேறுபாட்டால், இலக்கண வேறுபாட்டால் செய்ய முடியாது என்பதில்லை. எந்த மொழியும் எதையும் செய்ய முடியும். இதற்கு வாய்ப்பு வேண்டும். வாய்ப்பைத் தர அந்த மொழியைப் பேசுபவர்கள் விரும்ப வேண்டும்; விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு பலம் வேண்டும். இந்த பலம் ஆட்சி பலம், பண பலம் மட்டுமல்ல; அறிவு பலமும் ஆகும். ஆட்சி பலமும், பண பலமும் பெறுவது வரலாற்றுக் காரணங்களைப் பொறுத்தது; அறிவு பலம் பெறுவது சமூகத்தின் கையில் இருக்கிறது; செய்யவேண்டும் என்ற சமூகத்தின் முனைப்பில் இருக்கிறது. தமிழர்களின் அறிவு பலம் –அறிவியல் பலம், சட்டவியல் பலம், வணிக மேலாண்மை பலம் முதலானவை எல்லாம்- ஆங்கிலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பலத்தின் கனம் தமிழர்களின் காலைத் தமிழ் அறிவு உலகில் ஓடவிடாமல் கட்டிப்போடுகிறது; தங்களால் முடியாது என்ற மனநிலையையும் உருவாக்குகிறது. இந்த மனநிலைதான் தமிழ் அறிவுத்துறைகளில் மேலே செல்லாமல் தடுக்கும் கால்கட்டு; தமிழ் மொழி அல்ல. தங்களால் முடியாது என்னும் மனநிலை தமிழால் முடியாது என்னும் சமாதானத்தில் மறைக்கப்படுகிறது.

அறிவுத் தமிழ் தான்தோன்றி அல்ல. இது அறிவியல் தமிழ் மட்டுமே அல்ல.; அதை விடப் பரந்துபட்டது இந்தத் தமிழ் உருவாவது அறிவுத்துறைகளில் புலமை பெற்றவர்களின் கையில் உள்ளது. தங்கள் புலமையைப் பிற மொழிகளின் வழியே பெற்றவர்கள் அதைப் பயன்படுத்தித் தமிழில் எழுத வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் எழுத வேண்டும். பிற அறிவுத்துறைகளைச் சாரந்த புலவர்களுக்கும் தங்கள் துறை அறிவைத் தமிழில் எழுதவேண்டும். இந்த எழுத்தியக்கத்தைத் துவங்க அரசின் தயவுக்குக் காத்திருக்கத் தேவை இல்லை; அரசின் ஆங்கிலவழிக் கல்விக் கொள்கையை மாற்றாமல் செய்ய முடியாது என்று கையைப் பிசையத் தேவை இல்லை.; பழியை மற்றவர்களின் மேல்போடத் தேவை இல்லை.  பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்க இன்றைய தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. தமிழ்வழியே பல துறை அறிவை வளர்க்க எழுதுவதை, உலகமயமாதலின் விளைவாகத் தோன்றும் பொருளாதார, சமூக, கலாச்சாரக் கேள்விகளுக்குப் பதில் தேடி எழுதுவதை வலைப்பூக்களில், மின்னிதழ்களில், இணையதள விவாதக்குழுக்களில் ஆரம்பிக்கலாம். இங்கும் அரைத்த மாவையே அரைக்கத் தேவை இல்லை. எந்தத் துறையறிவைப் பற்றியும் தமிழில் எழுதினால், தமிழ்த்துறை சார்ந்தவர்களே எழுத வேண்டும் என்னும் நியதி மாற வேண்டும்.

அறிவுத்தமிழ் எழுதப் தமிழ்ப் புலமை தேவை என்பது தடுக்கும் சுவராக, விலங்காக அமையக் கூடாது. கலப்பற்ற தமிழில்தான் இந்தத் தமிழை எழுத வேண்டும் என்ற தேவை இல்லை. குழந்தை நடக்கத் துவங்கும்போது நேராக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு முரணானது. புதிய துறையில் ஒரு மொழியின் வளர்ச்சியும் இப்படியே.

எழுத்தறிவு இயக்கத்தைப் போல, அறிவுத்தமிழ் எழுத்தியக்கமும் தமிழுக்கு அறிவொளி இயக்கமாகப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்பது தமிழ் அறிவுஜீவிகளின் கையில் இருக்கிறது.

இ.அண்ணாமலை

இ.அண்ணாமலை

பேராசிரியர் இ.அண்ணாமலை, இலக்கியத்திலும் மொழியியலிலும் பயிற்சி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இவற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இலக்கியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார்.

இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.

மனிதரின் கலாச்சாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இவர் மொழியை அணுகுகிறார். மனித மனத்தின் சிந்தனைத் திறனை விளக்கும் கருவியாகவும் பார்க்கிறார். தமிழ் மொழி ஆய்விலும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். தமிழில் ஈடுபாட்டைக் காட்டும் இவருடைய ஆய்வு, அதே நேரத்தில் அறிவு நெறியோடு பிணைந்தது. தமிழைத் தனித்து நிற்கும் பொருளாகப் பார்க்காமல் வரலாற்றோடும் சமூகத்தோடும் இணைத்தே பார்ப்பது இவருடைய சிறப்பு.

ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் தவிர, தமிழ்க் கல்விக்கு இவருடைய பங்களிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும், வழக்குத் தமிழ் என்ற பயிற்று நூலும் அடங்கும்.

Share

About the Author

இ.அண்ணாமலை

has written 51 stories on this site.

பேராசிரியர் இ.அண்ணாமலை, இலக்கியத்திலும் மொழியியலிலும் பயிற்சி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இவற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இலக்கியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார். இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில். மனிதரின் கலாச்சாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இவர் மொழியை அணுகுகிறார். மனித மனத்தின் சிந்தனைத் திறனை விளக்கும் கருவியாகவும் பார்க்கிறார். தமிழ் மொழி ஆய்விலும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். தமிழில் ஈடுபாட்டைக் காட்டும் இவருடைய ஆய்வு, அதே நேரத்தில் அறிவு நெறியோடு பிணைந்தது. தமிழைத் தனித்து நிற்கும் பொருளாகப் பார்க்காமல் வரலாற்றோடும் சமூகத்தோடும் இணைத்தே பார்ப்பது இவருடைய சிறப்பு. ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் தவிர, தமிழ்க் கல்விக்கு இவருடைய பங்களிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும், வழக்குத் தமிழ் என்ற பயிற்று நூலும் அடங்கும்.

10 Comments on “தமிழால் முடியுமா? – தமிழக அறிவுஜீவிகள் பலரும் எழுப்பும் கேள்வி – 49”

 • சச்சிதானந்தம் wrote on 1 January, 2014, 17:54

  தமிழால் முடியுமா என்று நாம் நமக்குள்ளே கேட்டுக் கொண்டே நின்றால், தமிழனால் முடியாது என்று மற்ற மொழியினர் முடிவு கட்டிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே தங்களைப் போன்றவர்களின் வழிகாட்டுதலோடு நாம் ஒவ்வொருவரும் தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி இன்றுமுதல் செயல்படத் தொடங்குவோம் ஐயா! நன்றி!

 • இன்னம்பூரான்
  innamburan wrote on 2 February, 2014, 3:14

  எழுத்தறிவு இயக்கத்தைப் போல, அறிவுத்தமிழ் எழுத்தியக்கமும் தமிழுக்கு அறிவொளி இயக்கமாகப் புத்தாண்டில் அடியெடுத்து வைப்பது தமிழ் அறிவுஜீவிகளின் கையில் இருக்கிறது.
  ~ நன்றாக சொன்னீர்கள்.வாழ்த்துக்கள்

 • narayan rao wrote on 4 April, 2014, 11:22

  Instead of the mere lip service, let tamil language be made the only language for all purpose in Tamil Nadu. Pack off all the other languages in existence. Something will happen, let it be done….. the hesitance is because of lack of confidence at every level. Hence set aside the lack of confidence and apply Tamil at every aspect – all tamil and nothing but tamil and well cross the bridge when it comes.

 • சசிகரன் பத்மநாதன் wrote on 16 July, 2014, 1:56

  ஆம், தமிழால் முடியும். யூத இன மக்களைப்போல் மொழியால் ஒன்றுபட்டு, தமிழால் ஒட்டுமொத்த கட்டுமானங்களையும் கட்டியெழுப்புவோம். தமிழ் மொழி மனித குலத்தோடு வெற்றிகரமாக பரிணமித்த மொழி, அன்றும் இன்றும் என்றும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப தன்னை வளர்த்துக்கொண்ட, அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள செழுமையான செம்மொழி! இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் செழித்து வளர்ந்தோங்கும் என்பது திண்ணமே! நன்றி. கணினிக்கான தமிழெழுத்துருவாக்குனர்.

 • கே.ரவி wrote on 25 October, 2014, 16:45

  பேராசிரியர் சொல்வதை ஆமோதிக்கிறேன். தமிழ் மக்களின் கல்வியறிவு பரந்து, விரிந்தால் தமிழும் விரிவு பெற்று வளரும். எதையும் புரிய வைக்கும் சொற்களைத் தமிழில் எளிதில் ஆக்கிக் கொள்ளலாம் என்பது என் நம்பிக்கை. தழல்புரை சுடர்க்கடவுள் செய்த தமிழ் இல்லையா! 

 • Jeyaraj Daniel wrote on 29 October, 2014, 20:01

  தமிழால் முடியும்… முடியும்… முடியும்…
  எதுவும் முடியும் என்று மார் தட்டலாம்.
  எப்பொழுது?
  எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! 
  என்ற நிலை வந்தால்…
  வருமா?
  எல்லாம் ஆசிாியர்கள் கையில்.
  தமிழையே சாிவர சொல்லித் தராத 
  ஆசிாியர்களை அனுப்ப வேண்டும்
  அண்டார்டிகாவுக்கு!
  நான் ஒரு கல்லுாாி ஆசிாியர். பிரெஞ்சு மொழி கற்பிப்பவன்.
  என்னிடம் பயிலும் மாணவர்களுக்கு எனக்குத் தொிந்த வரையில்
  தமிழிலக்கியம் குறித்து ஒப்பாய்வு அடிப்படையில் நிறைய சொல்வேன்.
  பாவம்! அவர்களுக்குத் தமிழிலக்கியம் தொியாவிட்டாலும் பரவாயில்லை.
  தமிழ் மொழியிலேயே எழுதத் தொியாமலும், நாளிதழ் படிக்காதவர்களாகவும்
  இருக்கிறார்கள். என் செய்ய! 
  என் தாய்மொழியாம் தமிழின் மீது எனக்கிருந்த பற்றும் காதலும் தான் 
  என்னைப் பிரெஞ்சு இலக்கியம் படிக்கத் துாண்டியது.
  எனக்கு அப்பொழுது ஏறபட்ட அனுபவத்தை அவர்களிடம் சொல்லி
  அவர்களுடைய ஆவலைத் துாண்ட முயற்சி செய்து கொண்டுதானிருக்கிறேன்.
  விடியுமா ? விடியும்…. விடியும்…. விடியும்….

 • நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன் wrote on 20 October, 2015, 17:00

  தமிழ் மொழியால் எதையும் செய்து சாதணை படைக்கலாம். பேராசிரியர் இ.அண்ணாமலை கருத்துக்கு நன்றி ! வணக்கம்

 • Muthu wrote on 22 November, 2015, 6:11

  தமிழில் கணினி மென்பொருள் நிரல் (Computer Software Program) எழுதக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற ஆர்வத்துடன் இந்த “எழில்” தளத்துக்கு வருக. எழில், ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல் முறை கணிப்பொறி நிரல் எழுதுவதற்கு உதவும்.
  எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும்.

 • இன்னம்பூரான்
  Innamburan wrote on 23 August, 2016, 8:07

  நேற்று பேராசிரியர்  இ. அண்ணாமலை அவர்களை சந்தித்தேன். எடுத்த உடனேயே என்னை அவரறிந்து கொண்டார். அவரிடம் நான் ஏகலைவ பாடம் படித்து வந்ததை சொல்லி மகிழ்ந்தேன்.
  இன்னம்பூரான்

 • ஆழ்கடல் முத்து wrote on 14 July, 2017, 18:46

  மொழி என்பது ஒருவர் மனதில் தோன்றும் கருத்தை, எண்ணங்களை, கற்பனையை பிறருக்கு எடுத்துரைக்க உருவாக்கப்பட்ட ஒன்று. இதை உலகில் ஒவ்வொரு மூலையிலும் இருப்பவர்கள் தன்னுள்ளிருக்கும் ஆற்றலைக் கொண்டு சொற்றொடராக்கி, அதற்கு உருவமும் கொடுத்து தத்தம் எண்ணங்களைப் பறிமாறிக் கொண்டதால், உலகின் முதலில் தோன்றிய மொழிகளான தமிழையும், சமஸ்கிருதத்தையும் முன்னுதாரணமாகக் கொண்டு, பல மொழிகள் உருவாக்கப்பட்டன. எனவே உலகின் முதல் மொழியாக விளங்கும் தமிழால் முடியுமா? என்றால், இதற்கு அவரவர் ஆற்றல்தான் பின்பலமாக இருக்க முடியுமேயன்றி மொழியால் முடியாது என்றோ, முடியும் என்றோ கூற இயலாது என்பது என் கருத்து. ஊனமுற்றோரும் (பேச இயலாதவர், காது கேளாதவர் போன்றோர்) தன் எண்ணங்களை, சைகை மொழியாக்கி தத்தம் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்கின்றனர். முடியுமா? என்ற ஒரு வாதம் ஒரு சிறுபிள்ளைத்தனம் என்பதற்கு ஓர் எளிமையான உதாரணம் தருவதற்கு முயல்கிறேன்: பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையனிடம், பணக்காரப் பையன் போய் “எங்கப்பா காரு வாங்கியிருக்கிறாப்பல, உங்கப்பாவால வாங்க முடியுமா?” என்று கேட்பதுபோன்றது. அங்கு பொருளாதார ஆற்றல் மையமாகவுள்ளது. நன்றி……ஆழ்கடல் முத்து

Write a Comment [மறுமொழி இடவும்]


four + = 5


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.