பெருவை பார்த்தசாரதி

DSC05687

இன்று நாம் எந்த ஒரு மருத்துவரிடம் சென்றாலும், அவர்கள் மருத்துச் சீட்டோடு கூடவே பரிந்துரைப்பது நடைபயிலுதலும் ஒன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அன்றாடம், அதிகாலை நடைபயிலுதல் என்பது மனிதனுக்குள்ள அத்தியாவசியக் கடமைகளுள் ஒன்றாகிவிட்டது. ஆனால் இன்று இருக்கும் அவசர யுகத்தில் தினமும் நடைப் பயிற்ச்சி முடித்துவிட்டு அலுவலகம் செல்வதென்பது பலருக்கு சற்று சிரமம்தான்.

அனுதினமும் நடக்கமுடியவில்லையே?..என்பவர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு நாளாவது எங்காவது நடந்து செல்ல வேண்டும் என்றும் தோன்றும்.   தினமும் அலுவலகம், வீடு, குடும்பம் போன்ற அன்றாட பணிகளில் ஈடுபட்டு அந்த வட்டத்துக்குள்ளேயே சுழன்றுகொண்டிருப்பவர்களுக்கு, ஒரு சில நாட்கள் இவை எல்லாவற்றையும் மறந்து, எங்காவது அடர்ந்த காடு, இயற்கைவளம் நிறைந்த வயல்வெளிகள், ஆரோக்கியமான சுற்றுச் சூழல் இவற்றையெல்லாம் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது சகஜம்!..

இப்படி ஒரு ஆசை எழுவது, பொதுவாக அனைவருக்கும் பொருந்தும்.  ஆக ஒரு தொலைதூர நடைப்பயணத்தின் அடிப்படையில் தோன்றியதுதான் “பாத யாத்திரை”. இருப்பிடத்துக்கு வெகுதொலைவில் உள்ள ஆலயங்கள், மலைமேல் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தரிசிக்க நடப்பயணமாகச் சென்று வருதல் என்பது, தொன்றுதொட்டு அனைத்து மக்களாலும் கடைபிடித்து வரப்படுகிறது.

சேர்ந்தார்ப்போல் நான்கு நாட்கள் விடுமுறை வரும்போது, வீட்டில் அடைந்து கொண்டு வெளியே செல்லாமல், தொலைக்காட்சி முன்னும். இணைய தளத்திலும் காலம் கழிவதைவிட இறையருட்தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று வந்தால், மனம் விசாலம் அடைந்து,, நிம்மதி நிரந்தரமாகக் குடிகொள்ளும்.

தேக ஆரோக்கியத்திற்காக தினமும் விளையாட்டு மைதானத்திலும், பூங்காக்கள் மற்றும் சாலைகளிலும் நடந்து சென்றாலும், இறை சிந்தனையோடு நீண்ட நெடுந்தூரத்தை நடந்து கடக்க திருமலை பாத யாத்திரை கைகொடுத்தது.

இந்த யாத்ரானுபவத்தை வல்லமை வாசகர்களோடு பங்கிட்டுக் கொள்ள விழைகிறேன்.

சென்னை எல்லை முடிந்து, ஆந்திர எல்லை ஆரம்பித்தவுடன், வழிநெடுக பச்சைப்பசேலென்ற வயல்வெளிகள், பறவைகளும், விலங்குகளும் எழுப்பும் ஒலி மிகத்துல்லியமாகக் கேட்டதை ரசித்தபடி, சில்லென்ற தண்ணீரில் ஆங்காங்கே பசுமைமான புல்வெளியில் குளித்த படி நான்கு நாட்கள் பயணம்.

 ஒவ்வொரு நாளும், இரவில் இரண்டு மணிக்கு மேலும், பகலில் மூன்று மணிக்கு மேலும் தொடர்ந்து நடந்து சென்று, கடக்க வேண்டிய தூரத்தை மெதுவாகக் கடந்து விட்டோம்.  சூரிய, சந்திரக் ஒளிக்கதிர்கள் தொடர்ந்து நமது உடலில் பட்டுக் கொண்டே இருந்ததால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மாறுதல் அடைந்ததை உணர முடிந்தது.

நமது உடலில் உள்ள ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாடுகளும் கால் பாதத்தில்தான் அமைந்து இருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அவ்வப்போது, ஒரு சில காத தூரத்தை செருப்பு அணியாமல் நடந்து சென்றதால், காலில் சிறுமணிக்கற்கள் குத்தி வலியைப் போக்கி, பாதத்திற்கு இதம் அளித்ததோடு, இதர உடல் உபாதைகள் குறைத்ததை உணர முடிந்தது. மனமும் சாந்தி அடைந்தது.

சிறு சிறு குழுக்களாக, நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் தமக்குத்தெரிந்த ஆன்மீகக் கதைகளைச் சொல்ல அனைத்தையும் கேட்டுக்கொண்டே சென்றதால், நாட்கள் போனது தெரியவில்லை. ஆந்திர எல்லைமுதல் திருப்பதி வரை வழியில் உள்ள அனேக வீடுகளில் திண்டோடு கூடிய திண்ணை கட்டி வைத்திருப்பதைக் காண முடிகிறது. யாத்திரிகர்கள் குளிப்பதற்கு தண்ணீர், ஓய்வெடுக்க இடம் எல்லாம் இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஒரு சில இடங்களில், யாத்திர்கர் என்று சொன்னாலே அனைத்தும் இலவசம்தான்.

ஏழுமலையானை எளிதில் தரிசிக்க இயலாது என்பதுபோல், நான்காவது நாள் திருமலையை அடைந்தவுடன், சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக கூண்டில் அடைக்கப்பட்ட பிறகு தான் பகவானின் அறுபுத தரிசனம் கிட்டியது.

ஒவ்வொரு வருடமும் செல்லும் வழி ஒன்றுதான் என்பதால், சென்று வந்த தலங்களின் சிறப்புபற்றி சென்ற வருடம் வல்லமையில் வெளிவந்த பதிவை இதனுடன் இணைத்திருக்கிறேன்.

https://www.vallamai.com/?p=30137

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *