ராமஸ்வாமி ஸம்பத்  

’ஸீதையை எப்படியாவது ராமனிடம் இருந்து பிரிக்க வேண்டும். பிரியமான அழகு மனைவியை இழந்துவிட்டால் ராமன் அந்த பிரிவாற்றாமை தாங்காமல் உயிரையே விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படிச் செய்தால் ஸீதையையும் அடையலாம். அரக்கர் குலத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பை பழியும் வாங்கலாம்’ என நினைந்து ராவணன் தன் மாமனான மாரிசன் தவம் புரியும் ஆசிரமத்தை அடைந்தான்.

“மாமனே, யாரோ அயோத்தி இளவரசன் ராமனாம், மனவி தம்பியோடு நாடு கடத்தப்பட்டு தண்டகாரண்யத்தில் ஒரு போலித்துறவிபோல் வாழ்கிறானாம். அவன் என் தங்கை சூர்ப்பணகையை அவமதித்து, அதற்கு பழிவாங்கப் புறப்பட்ட என் தம்பிகளான கரன் தூஷணன் திரிசிரஸ் மூவரையும் அவர்கள் படைகளையும் நாசம் செய்து விட்டான். இதற்கெல்லாம் நான் அவனுக்குப் பாடம் புகட்டவேண்டும். அதற்காக முதலில் அவன் மனைவி ஸீதையை அபஹரிக்கப் போகிறேன். அதற்கு உன் உதவி தேவை” என்று மாரீசனிடம் ராவணன் கூறினான்.

“மருகா, நெருப்போடு விளையாடாதே. ராமன் தர்மத்தின் மறு உரு மட்டுமல்ல. அவன் உண்மையிலேயே பராக்கிரமம் பொருந்தியவன். உன் விரோதி எவனோ உன்னுடைய நம் அரக்கர் குலத்துடைய நாசத்தை நாடி இப்படிப்பட்ட யோசனையை உனக்கு கொடுத்திருக்கிறான். ராமன் பாலகனாக இருந்தபோதே அவன் வில் வலிமையை நான் அனுபவித்துத் தப்பிப் பிழைத்து வாழ்கிறேன். இந்த தற்கொலை முயற்சியைக் கைவிடு” என்றான் மாரீசன்.

”மாமனே, உன் அறிவுரையை நாடி நான் இங்கு வரவில்லை. நான் சொன்னபடி செய்யாவிட்டால் இப்போதே உன்னை கொன்றுவிடுவேன்.”

”வேண்டாம் அப்படிச் செய்யாதே. உன் கையில் சாவதைவிட ஒரு யோக்கியமான விரோதி கையில் மாள்வதே மேல். சொல். நான் என்ன செய்யவேண்டும்?”

“அப்படி வா வழிக்கு. நீ ஒரு பொன்மயமான மான் வடிவம் எடுத்துக்கொண்டு பஞ்சவடியில் ராமனின் ஆசிரமத்துக்கு அருகில் திரிய வேண்டும். பொன்மானைப் பார்த்த வைதேகி ராமனிடம் உன்னைப் பிடித்துத் தருமாறு கேட்பாள். ராமன் உடனே உன்னைப் பிடிக்க முயல்வான், துரத்துவான். நீ அவன் கையில் பிடிபடா வண்ணம் எட்ட எட்ட ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வெகு தொலை தூரம் சென்றதும் அவன் உன்னைப் பிடித்து விட்டாலோ அல்லது உன்மீது அம்பை எய்து விட்டாலோ நீ ‘ஸீதா அபயம், லக்ஷ்மணா அபயம்’ என்று பயங்கரக் கூச்சலிடவேண்டும். மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

’ராவணனுக்குக் காலன் பாசத்தில் சிக்கவேண்டிய் வேளை நெருங்கிவிட்டது’ என நினைந்து மாரீசன் அவ்வாறே நடக்க ஆயத்தமானான்.

இலங்கை மன்னனின் திட்டப்படியே பொன்மான் வேட்டை துவங்கியது. அண்ணனைத் தடுக்க முயன்ற லக்ஷ்மணனை ராமன் சமாதானம் செய்தான். “லக்ஷ்மணா, என் மனத்திற்கினியவள் இது வரை என்முன் எந்தவிதமான கோரிக்கையும் வைத்ததில்லை. அவள் விருப்பத்தை நான் பூர்த்தி செய்ய வேண்டாமா? அது என் கடமையல்லவா? ஆகவே, நீ ஸீதையைவிட்டு அகலாதே, நான் இந்த பொன்மானைப் பிடித்து வரும் வரையில்” என்று ராமன் கூறி மானைத் துரத்தத் தொடங்கினான். திடீரென்று ‘ஸீதா அபயம், லக்ஷ்மணா அபயம்’  எனும் பெரும் கதறலைக் கேட்ட ஸீதை, “லக்ஷ்மணா, உன் தமையனாருக்கு ஏதோ ஆபத்து போலிருக்கிறது. உடனே அவர் உதவிக்குச் செல்” எனப் பதறினாள்.

“அன்னையே, இது அரக்கர்களின் மாயம் போல் தெரிகிறது. பதற்றம் வேண்டாம். அண்ணனுக்கு எத்தகைய கேடும் விளையாது. தவிர, அண்ணன் என்னை தங்களைவிட்டு அகலக்கூடாது என ஆணையிட்டிருக்கிறார் ” என்றான் லக்ஷ்மணன்.

ராமனுக்கு ஆபத்து என்ற சிந்தனையால் அவள் லக்ஷ்மணன் கூற்றினைத் தவறாக புரிந்துகொண்டு தகாத சொற்களால் அவனைச் சாடி, “நீ இப்போது இங்கிருந்து அண்ணனைத்தேடி போகாவிட்டால் நான் உயிர்த்தியாகம் செய்வேன்” என்று அழுது ஆகாத்தியம் செய்தாள்.

செவியில் நாராசம்போல் வீழ்ந்த அவள் சொற்களால் லக்ஷ்மணன். “என் அன்னைபோன்ற அண்ணியே, என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். இப்போதே அண்ணனைத் தேடி ஓடுகிறேன். தயவு செய்து தாங்கள் மட்டும் இக்குடிலை விட்டு வெளிவரவேண்டாம்” என்று கண்ணீர்மல்க அங்கிருந்து அகன்றான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராவணன் ஒரு துறவி வேடம் தரித்து, பிச்சை வாங்குபவன்போல் நடித்து குடிலைவிட்டு வெளியே வராத ஸீதையை அக்குடிலோடு பெயர்த்துக் கடத்தி இலங்கை நோக்கிப் தன் புஷ்பக விமானத்தில் பறக்கலுற்றான்.

“யாரடா என் மகளை கடத்துவது?” என்ற குரலைக் கேட்ட அரக்கர் மன்னன் திரும்பிப்பார்க்க ஜடாயு தன்னை நோக்கி சினத்தோடு வருவதைக் கண்டான்.

‘இது என்ன விபரீதம்? ராம லக்ஷ்மணர்கள் வருவதற்குள் ஸீதையைக் கடத்திச் செல்லலாம் என்றால் இப்பருந்து இடையூறாக இருக்கிறதே’ என நினைந்து, விமானத்தைக் கீழே இறக்கி, அந்த நல்ல உள்ளம்கொண்ட  பட்சியைக் கொல்ல முயன்றான். ஆனால் பலம் பொருந்திய ஜடாயு அவனைப் பலவாறு தன் கூர்மைமிக்க அலகினால் தாக்கி அந்த ’ஓராதன் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்’ உருட்டித் தள்ளினான். இனியும் தாமதித்தால் ராமன் வந்துவிடுவான் என்று பயந்து, ராவணன் தனக்கு சங்கர பகவான் வரமாகக் கொடுத்த வலிமைமிக்க வாளினால் ஜடாயுவின் இறகுகளை வெட்டி வீழ்த்தினான்.

“ஹா! ராமா..!” என்று கதறியபடி ஜடாயு கீழே விழ்ந்தான். உடனே ராவணன், தந்தைபோன்ற ஜடாயுவை அணைத்தபடி இருந்த ஸீதையை தர தர வென்று அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக்கொண்டு விமானம் ஏறி இலங்கை நோக்கிப் பறந்தான்.

குற்றுயிரும் கொலை உயிருமாக இருந்த ஜடாயு, “ராமா சீக்கிரம் இங்கு வந்து சேர். உனக்கு ஸீதாபஹரணத்தைப் பற்றிய தகவலை அளிக்கவேண்டும். ஐயோ! என் பிராணன் போய்விடப் போகிறதே…” என்று கதறியவாறு கிடந்தான். “என் ஆருயிரே! அவசரப்பட்டு என் உடலைவிட்டு நீங்கி விடாதே. தயவு செய்து சற்று நேரம் ராமன் வரும் வரை காத்திரு…” என்று கதறியவாறு கிடந்தான்.

மாயமானால் மோசம் செய்யப்பட்ட ராமன் லக்ஷ்மணனின் வருகை கண்டு, “தம்பி, ஏன் ஸீதையைத் தனியே விட்டுவிட்டு வந்தாய்?” என்று கேட்க இளவல் தான்பட்ட துயரத்தை விவரித்தான். இருவரும் பயந்தபடியே குடிலும் காணவில்லை. ஸீதையையும் காணவில்லை.

வருத்தம் மேலோங்க இருவரும் அவளைத் தேடியவாறு ஜடாயுவின் அருகில் வந்து சேர்ந்தனர். “ராமா வந்து விட்டாயா? உனக்காகவே உயிரைக் கையில் பிடித்தபடி உள்ளேன். நீங்கள் ஏன் ஜானகியைத் தனியேவிட்டுச் சென்றீர்கள்? அரக்கனான இலங்கை மன்னன் அவளைக் குடிலோடு பெயர்த்துக் கொண்டு தென் திசையாகப் பறந்து சென்றுவிட்டான். என்னால் முயன்றவரை அதனைத் தடுக்க விரும்பினேன். ஆனால் ராவணன் தன் வாளால் என் இறகுகளை வெட்டி வீழ்த்திவிட்டான். இனி நீங்கள் அந்த ’பொல்லா அரக்கனைக் கிள்ளி களைந்து’, உங்கள் குலவிளக்கினை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்” என்று சொல்லி ஜடாயு உயிர் நீத்தான்.

ஸீதையைப் பறிகொடுத்ததோடு தந்தைபோன்ற ஜடாயுவையும் இழந்த ராமன், அப்பருந்திற்கு அந்திம சம்ஸ்காரம் செய்தான். தசரதனுக்குக் கிடைக்காத பேறு ஜடாயுவிற்குக் கிடைத்தது.

மைதிலியின் கடத்தலைப் பற்றிய தகவல் கிடைத்த ராம லக்ஷ்மணர்கள் கோதாவரி நதியின் பாதையில் தென் திசையாக அவளைத்தேடி அலைந்தனர். வழியில் திடீரென்று கண்ணில்படாத ஒரு அரக்கனின் நீண்ட கைகளில் சிக்கித் தவித்தனர். ஒருவாறு சுதாரித்துக் கொண்டு இருவரும் அக்கரங்களை வெட்டி வீழ்த்தினர்.

“ஐயோ, வலி தாங்கவில்லையே” என்று கதறும் அரக்கனை நோக்கினர். அவன் தலை, கால்கள் இல்லாமல் வயிற்றில் ஒற்றைக் கண்ணோடு கோரமாகக் காணப்பட்டான். எவ்வளவு முயற்சி செய்தாலும் அவனைக் கொல்ல முடியவில்லை.

இறுதியில் அவ்வரக்கன் அழுதபடி, ”வீரர்களே, நீங்கள் யார்?” என்று வினவினான்.

”என் பெயர் ராமன். இவன் என் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறிய ராமனை, அவ்வரக்கன், “என்னை மன்னித்து விடுங்கள். கைகள் வெட்டப்பட்ட நிலையில் என்னால் உங்களுக்கு வந்தனம் கூட செய்ய முடியவில்லை. உண்மையில் நான் உங்களை எதிர்பார்த்தபடிதான் உள்ளேன்” என்று சொல்லி தன் விருத்தாந்தைக் கூற ஆரம்பித்தான்….

…”நான் பலம் பொருந்திய ஒரு கந்தர்வன். என் பெயர் கபந்தன். பிரமனை வேண்டி வெகுநீண்ட ஆயுளைப் பெற்றவன். இதனால் கர்வம் தலைக்கேறி எல்லோரையும் ஹிம்சித்து வந்தேன். ஒரு சமயம் இந்திரனைக் கண்டு அவனுடன் போரிடவும் முயன்றேன். அவன் தன் வஜ்ராயுதத்தினால் என்னைக் கொல்லமுடியாமல் என் தலையையும் கால்களையும் வயிற்றுக்குள் போகுமாறு செய்தான். இந்திரனிடம் மன்னிப்புக் கோரி, ’நான் இனி எவ்வாறு உணவு உண்ணமுடியும்?’ என்று கேட்டேன். என்மீது இரக்கம்கொண்டு வானரசன் இந்த நீண்ட கரங்களையும் வயிற்றில் ஒரு கண்ணையும் கொடுத்து ’இவை மூலம் உன் இரையைப் பிடித்து ஜீவித்திரு’ என்றான். எனக்கு விமோசனம் எப்போது என்று கேட்டதும் ’கவலை வேண்டாம். அயோத்தி இளவரசர்களான ராம லக்ஷ்மணர்கள் ஓருநாள் இப்பக்கம் வந்து உன்னை விடுவிப்பார்கள். ஆகவே ராமன் வரும் வரை காத்திரு’ என்று ஆறுதல் சொல்லி அகன்றான்”…

ராமன், ”கபந்தரே, இப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் உங்களை இந்த பயங்கர நிலையிலிருந்து விடுவிக்க?” என்றான்.

“ராமா, என் இந்த சரீரத்தை மண்ணில் புதைத்து விடு. அது போதும்.”

இருவரும் அவ்வாறே செய்ய, அம்மண்ணிலிருந்து ஒரு அழகான கந்தர்வன் எழுந்தான். “மிக்க நன்றி ராமா. உனக்கு ஒரு உதவி செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றான்.

“ஐயா, என் மனைவி ஸீதையை ராவணன் எனும் அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான். அவளை மீட்க உங்களால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா?”

“கவலையை விடு ராமா. உன்னைப் போலவே மனைவி ருமையை இழந்து வாடும் கிஷ்கிந்தையைச் சேர்ந்த வானர வீரன் சுக்ரீவனுடம் நட்பு செய்துகொள். அவன் தற்சமயம் தன் அண்ணன் வாலிக்குப் பயந்து ரிச்யமுக பர்வதத்தில் ஒளிந்து வாழ்கிறான். ரிச்யமுக மலை கோதாவரிக்கு தென் மேற்குப் திசையில் உள்ளது. மனைவியை மீட்பதில் சுக்ரீவனுக்கு நீ உதவினால் அவன்மூலம் நீயும் ஸீதையைத் திரும்பப் பெறலாம்” என்று கூறி கபந்தன் அகன்றான்.

அங்கிருந்து ராமனும் லக்ஷ்மணனும் கோதாவரியின் கரைதாண்டி கிஷ்கிந்தை நோக்கி நடந்து மதங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அவரைப் பற்றி விசாரித்தபோது  அம்முனிவர் மோட்சம் எய்திவிட்டார் என்றும் அவர்தம் குடிலில் சபரி எனும்பெயர் கொண்ட ஒரு வேட்டுவ குலத்தைச் சேர்ந்த மூதாட்டி இருப்பதாகவும் தெரிந்த்து. “அக்கிழவி பைத்தியம் பிடித்தவள்போல் ’ராமன் இன்னும் வரவில்லையே’ என்று வருடக்கணக்கில் புலம்பிக் கொண்டிருக்கிறாள்” என்று ஒரு வழிப்போக்கன் அவர்களிடம் தெரிவித்தான்.

ஆச்சரியம் அடைந்த ராமன் ”முன்பின் தெரியாத என்னைப் பார்க்க ஆசைப்படும் அந்த மூதாட்டியை அவசியம் நாம் சந்திக்கவேண்டும் லக்‌ஷ்மணா” என்று சொல்லி அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

ஆசிரமத்தில் சபரி தியான நிலையில் இருந்தாள். அவள் மோனம் நீங்கும் வரை ராமன் காத்திருந்தான். கண் விழித்த சபரி இருவரையும் வியப்போடு நோக்கினாள். “நீங்கள் யார்?” என்று கேட்டதும் இருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

“ராமா, வந்து விட்டாயா? உன் தரிசனத்திற்காகவே எவ்வளவு காலம் தவமிருந்திருப்பேன்”  என்று சபரி சொல்லி அவர்களை உபசரித்தாள். சபரி அளித்த எளிமையான இலந்தை போன்ற பழங்களை ராமன் விரும்பி உண்டான்.

“அன்னையே, முன்பின் தெரியாத என்னைக் காண தாங்கள் ஏன் விரும்ப வேண்டும்?”

”ராமா, இந்த ஆசிரமத்தில் வெகுகாலம் மதங்க முனிவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அவருக்கு வேண்டிய மலர்கள், காய்கறிகள், பழங்கள், ஹோமத்திற்குத் தேவையான சமித்துகள் இவற்றையெல்லாம் தினம் கொண்டு வந்து கொடுப்பதோடு இந்த குடிலையும் துப்புரவாக வைக்கும் சேவையையும் செய்து வந்தேன். எழுதப்படிக்கத் தெரியாத, ஆன்மீக அறிவு அறவே அற்ற எனக்கு அம்மஹான் தீட்சை கொடுத்து என்னை ஓர் உயர்நிலைக்குக் கொண்டுவந்தார். ஓரு நாள் அவர், ‘சபரி, நான் இறைவனடி சேரும் காலம் வந்துவிட்ட்து. இனி நீயே இந்த ஆசிரமத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார். ’எனக்கும் இறைவனடி சேரும் பாக்கியத்தை அளிக்க்க் கூடாதா?’ என்று கேட்ட என்னை நோக்கி, ‘சபரி, கட்டாயம் உனக்கு அந்தப் பேறு கிடைக்கும். அதற்கு உனக்கு ராம தரிசனம் அவசியம். ஆகவே ராமன் வரும் வரை காத்திரு” என்று சொல்லி தன் யோக வலிமையினால் மோட்சமடைந்தார். அன்றிலிருந்து நான் உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன். இம்மலைவாழ் மக்கள் என்னை பரிகசித்தனர். அவர்களை லட்சியம் செய்யாமல், ஆசான் ஆணைப்படி உன் வருகையை ஆண்டாண்டுகளாக எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,  ராமா” என்றாள் சபரி.

ராமன் தனது சமீபகால நிகழ்வுகளை விவரித்து கபந்தன் கூறியபடி சுக்ரீவனைத் தேடுவதாக சொன்னான். சபரி பரிவுடன் ராமனைத் தடவி ஆசியளித்தாள். “சுக்ரீவனுக்கு உன் நட்பு கிடைப்பது அவன் செய்த பூஜாபலனே. அவன் உதவியால் உன் மனைவியை நீ திரும்ப பெறுவது உறுதி.  ஆனால் அவன் தற்சமயம் வசிக்கும் ரிச்யமுக பர்வதத்தை அடைவது மிக கடினமான செயல். அடர்ந்த முட்புதர்கள் அம்மலைக்கு ஒரு அரணாக திகழ்கின்றன.  கவலை வேண்டாம். உனக்கு உதவி செய்ய ஒரு நல்மனம் படைத்தவன் அங்கு காத்திருக்கிறான்.  ராமா, உனக்காகக் காத்திருந்தேன். அரிய பெரும்பேறைப் பெற்றேன். இனி உன் அனுமதியுடன் நான் என் ஆசானின் திருவடியை அடைய விரும்புகிறேன்.” என்று சொல்லி சபரி தன் யோக வலிமையினால் அக்கினியை உருவாக்கி அதில் கலந்து மோட்சம் அடைந்தாள்.

இதன்பின் ராமனும் லக்ஷ்மணனும் பம்பையாற்றின் வழியாக ரிச்யமுக மலை நோக்கி நடந்தனர். வழியில் கண்பட்ட சிலரை வழிகாட்ட வேண்டினர். ஆனால் அவர்கள் அங்கு செல்வது  ஒரு அபாயகரமான முயற்சி என்று சொல்லித் தப்பித்துக் கொண்டனர். ஸீதையின் பிரிவுத் துயரத்தாலும் நெடுவழி நடந்த களைப்பினாலும் ராமனின் கால்கள் தள்ளாடின.

பம்பை நதியின் இருகரைகளிலும் ராமன் கண்ட இயற்கை காட்சிகள், ஸீதை அருகில் இல்லாததால், அவன் துயரை மேலும் மிகைப்படுத்தின. கம்பர் ராமனின் சோகத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.

பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாளென்

நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த

மஞ்சு பூத்த மழையனைய குழலாள் கண்போல் மணிக்குவளாய்

நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ

[செம்ப்ஞ்சு குழம்பு ஊட்டம் பெற்ற விரல்களால் தாமரை மலரில் பவழம் பொருந்தினது போன்ற பாதங்களை உடையவளும், என் மனமான தாமரை மலரில் வாழ்பவளும், கரிய மேகத்தைப் போன்ற மலர்கள் அணிந்த கூந்தலை உடையவளுமாகிய ஸீதையின் கண்களைப் போன்றிருக்கும் கருங்குவளை மலரே! நஞ்சு படர்ந்த்துபோல நகைத்து (மலர்ந்து) என்னை வருத்துவாயோ?]

பொங்கிவரும் தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு, லக்ஷ்மணன் பலவகையாக அண்ணனை உற்சாகப் படுத்தியவாறு உடன் நடந்தான்.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ராமன் வரும் வ​ரை காத்திரு… (5)

  1. ராமாயணத்துக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ராமனுக்காகக் காத்திருப்பது குறித்த உங்கள் பதிவு அருமையாக உள்ளது.  பகிர்வுக்கு மிக்க நன்றி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *