குறத்தி நகரப்பெண் உரையாடல் (சென்ற வாரத் தொடர்ச்சி)

குறத்தி:

நெல்லிக் கனியை முழுதாய் நானும்,

அள்ளிக் கைகளில் அன்புடன் தருகிறேன்!

 

மாங்கனி களையும் உங்கள் மனம்படி,

பாங்குடன் பிரித்து எடுத்துத் தருகிறேன்!

 

எட்டுக் கட்டுக் கீரை எதற்கு?

வீணாய் வாடிப் போகுமம்மா!                                                                                                     203

 

நகரப்பெண்:

எட்டுக் கட்டுக் கீரைகளை,

எத்தனை நாட்கள் ஆனாலும்,

கெட்டுப் போக விட்டிடாமல்,

காக்கும் கருவுயில் வைத்திடுவேன்!                                                                                                            204

 

குறத்தி:

காக்கும் கடவுளை நானறிவேன்,

காக்கும் கருவியை அறியேனே!

அப்படி என்ன கருவியது?                                                                                                                                   205

 

நகரப்பெண்:

வந்ததும் கொடுத்த மோரினை நான்,

அதிலே வைத்துத் தந்ததால் தான்,

உந்தன் தாகம் தீர்ந்தது பெண்ணே!                                                                                                               206

 

குறத்தி:

காக்கும் கருவி என் தாகம்,

தீர்த்ததை எண்ணி வியக்கின்றேன்,

காக்கும் கருவி இல்லையம்மா, தாகம்

தீர்த்தது உங்கள் கருணை அம்மா!                                                                                                               207

 

நகரப்பெண்:

சரிசரி நீயும் பேச்சு வாக்கில்,

மலர்களைப் பற்றி மறந்த தேனோ?

மலர் என்ன மலரைக் கொண்டுவந்தாய்?

இப்போதாவது சொல் பெண்ணே!                                                                                                                  208

 

குறத்தி:

மறந்ததை, மறந்து மன்னித் திடுங்கள்,

மலர்களில் சிறந்த மலர்களை எடுத்து,

பாதியை மட்டும் சரமாய்த் தொடுத்து,

மீதியை உதிரியாய்க் கொண்டு வந்தேன்!

 

பவள மல்லிப் பூக்களை,

உதிரியாகக் கொண்டு வந்தேன்!

 

படர்ந்து நின்ற கொடியில் பூத்த,

பச்சைக் கம்பு மல்லிகையை,

சரஞ் சரமாய்த் தொடுத்து நானும்,

சிரம மின்றி எடுத்து வந்தேன்!

 

மகேசன் மார்பில் சூடிட,

மலர்ந்து நின்ற அரளியை,

வணங்கி நின்று கொய்துவந்தேன்!

 

என் கணவன் எனக்காக,

எடுத்து வந்த மலர்களிலே,

எழில் மிகுந்த கமலத்தில்,

இரண்டெடுத்துச் சூடிமீதி மலர்களை,

எல்லோர்க்குமாய் எடுத்து வந்தேன்!                                                                                                            209

 

நகரப்பெண்:

நான் சூடிட மல்லிகையும், என்

மணவாளன் மார்பில் சூடத் தாமரையும்,

மகேசனின் மார்பில் சூடிட அரளியையும்,

மங்கலமாய்த் தந்து செல் குறத்தி!                                                                                                               210

 

குறத்தி:

மல்லிகை சூடிய குழலும்,

சந்தனம் சூடிய நுதலும்,

புன்னகை சூடிய இதழும்,

உங்களின் எழிலைப் பன்மடங் காக்கும்,

அன்புடன் சென்று வருகிறேன் அம்மா!                                                                                                     211

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறவன் பாட்டு-25

  1. காக்கும் கருவியல்ல,
    தாகம் தீர்த்தது
    கருணை என்பது சிறப்பு…!

  2. @திரு.செண்பக ஜெகதீசன்

    தங்களது நேரத்தை செலவிட்டுக் கவிதைகளைப் படித்துத் தவறாமல் பின்னூட்டமிடும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *