தாயிற்சிறந்த கோவில் இல்லை! தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

4

பவள சங்கரி

தாயிற்சிறந்த கோவில் இல்லை!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
என பள்ளிப்பருவத்திலேயே படித்துப் பதிந்த பாட்டென்றாலும்,தேவையான காலங்களில் இப்பாடல்கள் கைகொடுப்பதில்லையே!

ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி”

தன் தாயை இழந்த தனயன் பட்டினத்தார் சிந்திய கண்ணீர் முத்துக்கள் இவை.

பெற்ற தாய் தந்தையரின் அருமை அவர்கள் இருக்கும் காலத்தில் பல பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.தங்களுடைய இறுதிக்காலம் வரும் வேளையில்தான் தாங்கள் செய்ய மறந்த கடமைகளை எண்ணி செய்வதறியாது ஏங்கித் தவிக்கும் பலரையும் நாம் காண முடிகிறது.தன்னைத் தூக்கி வளர்த்த தாய் தந்தையரைப் பேண மறந்த பிள்ளைகள் மனிதப் பிறவியின் சாபக்கேடுகள்.

ஜூன் 15 ஆம் நாள், ’உலக முதியோர் கொடுமை விழிப்புணர்வு ’நாள்.’ஹெல்பேஜ் இந்தியா’எனபது முதியோர் நலனுக்காக 30 ஆண்டுகளாகச் செயல்படும் ஒரு தொண்டு நிறுவனம்.இவர்கள்தான் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.இவர்கள் மிக ஆழமானதொரு ஆய்வை, சட்ட வல்லுநர்கள்,காவல்துறை அதிகாரிகள்,மருத்துவத்துறை மற்றும் சமுகநலத்துறை அதிகாரிகள் மனநல வல்லுநர்கள், சாதீய அடிப்படையிலான சங்கங்கள் போன்றவைகள் மூலமான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஆய்வறிக்கையின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது வருந்தக்கூடிய செய்தியாகும்.நம் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 கோடி பேர்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் மருமகள் அல்லது மகனாலேயோ கொடுமைப் படுத்தப் படுகிறார்களாம். 63 சதவிகிதம் பேர் தங்கள் மருமகளாலும், 44 சதவிகிதம் பேர் தங்கள் மகனாலேயும் கொடுமைப்படுத்தப்படுகிறார்களாம். தலைநகர் புது தில்லியில் நூறு சதவிகிதம் முதியோரும் மருமகளாலேயே கொடுமைப்படுத்தப்படுகிறாகளாம்.

தங்கள் மகன் மற்றும் மருமகளாலேயெ கொடுமைப்படுத்தப் பட்டாலும், திருடனுக்குத் தேள் கொட்டியது போல அதனை வெளியில் சொல்லக்கூட முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்து புழுங்கிப் போய் உடல் நலப் பாதிப்புக்குள்ளாகிறாகள். கொடுமைப்படுத்தப்படுகிறவர்கள் 52சதவிகிதம் பேர் படிப்பறிவில்லாதவர்கள்.66 சதவிகிதம் பேர் பொருளாதாரரீதியாக குடும்பத்தைச் சார்ந்திருப்பவர்கள்.85 சதவிகிதம் பேர் மருத்துவ உதவி எதிர்பார்த்து வாழுகிறவர்கள்.இதில் ஒரு ஆறுதலான் விடயமென்னவென்றால்,நம் தமிழ்நாட்டில் மட்டும் 2 சதவிகிதம் பேர்களே முதியோரைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதுதான்.ஆனால் பெரும்பாலான முதியோர் தங்கள் மகள் வீட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ, உழைக்க தெம்பு இருக்கும் காலத்திலேயே, பிற்காலத்தில் ஒருவரையும் அண்டிப் பிழைக்கும் நிலை வராதவாறு முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்துக் கொள்வதே உத்தமம். கையில் இருக்கும் கடைசி நாணயம் வரை தாம் பெற்ற குழந்தைகளுக்காகவே செலவழித்து விட்டு இறுதிக் காலங்களில் அந்தக் குழந்தைகள் மூலமாகவே உதாசீனப் படுத்தப்படும் அவலம் கட்டாயமாக மாற்றம் பெற வேண்டும்.ஆன்மீக நம்பிக்கை அதிகம் கொண்ட நம் நாட்டில் இது போன்று தெய்வத்திற்கு சமமான பெற்றோரை கொடுமைப் படுத்துவது என்பது மிக வருந்தக் கூடியச் செயலாகும்.

இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும்.

இனியொரு விதி செய்வோம்!
அதை எந்த நாளும் காப்போம்!
தாய் தநதையருக்கு உணவில்லையெனில்
சேய் நாமென சொல்லிக் கொள்வதில் பயனில்லை!
என்பதை உணர்வோம்!

இந்த நிலை மாற நாம் என்ன செய்யப் போகிறோம்? மனிதம் மலர நம்மால் ஆனதைச் செய்ய உறுதி கொள்வோம் நண்பர்களே!

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தாயிற்சிறந்த கோவில் இல்லை! தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

  1. //எது எப்படியோ, உழைக்க தெம்பு இருக்கும் காலத்திலேயே, பிற்காலத்தில் ஒருவரையும் அண்டிப் பிழைக்கும் நிலை வராதவாறு முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்துக் கொள்வதே உத்தமம்.//

    நல்ல யோசனை !
    இதையும் பிள்ளைகள் கேட்டால் கொடுக்காமலா இருக்கும் தாய் மனம்.

  2. ”இருக்கும் கடைசி நாணயம் வரை தாம் பெற்ற குழந்தைகளுக்காகவே செலவழித்து விட்டு இறுதிக் காலங்களில் அந்தக் குழந்தைகள் மூலமாகவே உதாசீனப் படுத்தப்படும் அவலம் கட்டாயமாக மாற்றம் பெற வேண்டும்” அருமையான கருத்து. இதனை அனைவரும் நினைவிற்கொள்ள வேண்டும்.

  3. காலம் காலமாக நடைபெற்று வரும் அவலம் இது

    ஆனால் இன்னமும் பெற்றோர்கள் தங்களுக்கென்று சேமிப்பு வைத்துக்கொள்வதில்லை,
    அப்படியே வைத்துக்கொண்டாலும் அவற்றையும் குழந்தைகள் கேட்டால் அள்ளிக்கொடுத்துவிட்டு அவதிப் படுவோரே அதிகம்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  4. தாயிற்ச்சிறந்த கோவில் இல்லை கட்டுரை அருமை.
    பட்டினத்தாரும் ஆதிசங்கரரும் துறவி ஆன பின்பு
    தத்தம் தாய்க்கு ஒரு வாக்கு கொடுத்தனர். தாய்
    இறக்கும் போது கடைசிக் காரியங்களை உறுதியாக
    தாங்களே நிறைவேற்றுவோம் என்பது தான் அந்த
    வாக்கு. இருவரும் அக்காரியத்தை செய்து முடித்தனர்
    என்பது வரலாறு. ஒருவர் துறவி ஆன பின்பு தாயைப்
    பார்க்கும் சமயம் தாயின் காலில் விழுந்து வணங்கலாம்.
    ஆனால், தந்தையின் காலில் விழுந்து வணங்கக் கூடாது.
    மாறாக அவரது தந்தை இந்தத் துறவியின் (மகன் தான் )
    காலில் விழுந்து வணங்கவேண்டும். தாய்க்குள்ள
    மகத்துவம் அப்படி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *