விசாலம்

தை மாதம் வந்தாலே அம்பாளுக்கு உற்சாகம் தான். எந்தக் கோயிலில் சென்றாலும் பெண்மணிகளின் கூட்டமும், அவர்கள் அழகாக அமர்ந்து லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதும். கூடவே லலிதா திரிசதி படிப்பதும் கேட்பவர்களைப் பரவசப்படுத்தும். தவிர, எல்லாப் பெண்மணிகளுக்கும் தாம்பூலமும் கொடுக்க அம்பாளின் ஆசிகள் நமக்கு பரிபூரணமாக கிடைத்த மன நிறைவு இருக்கிறதே, அதை அனுபவித்தால் தான் தெரியும். அம்பாளுக்கும் விதவிதமான புடவைகள் வந்து குவியும். அவளும் பக்தர்களுக்காக எல்லாம் மாறி மாறி கட்டிக்கொண்டு கொள்ளை அழகாக மடிசாரில் மின்னுவாள். அதுவும் தை வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு மிகவும் விசேஷமான தினம்.

அந்த மாதத்தில் வரும் நாலு அல்லது ஐந்து வார வெள்ளிக்கிழமைகளில் கோயில் மண்டபம் முழுவதும் பெண்மணிகளால் நிரம்பி இருக்கும். மண்டபத்தில் சின்னச்சின்ன கட்டங்களில் மாக்கோலம் போடப்பட்டு அதன் அருகில் நம்பரும் எழுதியிருக்கும்.  கோயிலின் மண்டபத்தின் அளவைப் பொறுத்து நம்பரும் இருக்கும். யார் யார் விளக்கு பூஜைக்கு பெயர்  கொடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு டோக்கன் நுழைவு சீட்டுப் போல் நம்பர் இட்டு கொடுத்திருப்பார்கள். அவர்கள் அந்த டோக்கனுடன் பூஜைக்கு வரவேண்டும். அவர்கள் வரும் போது குத்து விளக்கு, வாழை இலை, தூபக்கால், திரி, எண்ணெய் என்று அவர்கள் கேட்ட ஐட்டங்களுடன் வர, ஒன்பது மணிக்கு பூஜை ஆரம்பிக்கும். சுமார் பன்னிரண்டு மணி வரை நடக்கும். ஒரே நேரத்தில் பல விளக்குகள் ஒளி வீச குத்துவிளக்கை அம்பாளாக பாவித்து அவளுக்கு அரக்கு அல்லது பச்சை புடவை சுற்றி பூவும் சூட்டி மஞ்சள் குங்குமம் இட்டு ரெடியாக “டண்டண்” என்று மணி அடிக்கும் ஒலி. எல்லோரும் தங்கள் கவனம் முழுவதும் அம்பாளிடம் செலுத்த அதுவே ஒரு தியானமாகிவிடும். பின் என்ன வாத்தியார் “கணானாம் த்வா கணபதிம்” என்று ஆனைமுகனை அழைக்க அவரும் மஞ்சள் பிள்ளையாராக வந்து அமர்ந்துவிடுவார். பின்னர் விக்னமில்லாமல் பூஜை நடக்க பிரார்த்தனை தொடங்க  பூஜை மேலே தொடரும்.

ஆஹா! என்ன அழகு! அந்தச் சூழ்நிலை மறக்கமுடியாத ஒன்று. அதேபோல் பூஜை முடிவடையும் நேரம் எல்லோரும் கற்பூரம் காட்டி வழிபடும் நேரமும் மனதை விட்டு நீங்காது. அந்த ஊதுவத்தியின் வாசனை, சாம்பிராணியின் தனி மணம், பல பூக்களின் கதம்ப வாசனை எல்லாம் சேர்ந்து ஆன்மீக வழிக்கு நம்மை எடுத்துச்செல்வதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.நான் தில்லியில் இருக்கும் போது வெள்ளிக்கிழமை தவறாமல் அம்பாள் கோயில் போய் வருவேன். மந்திர் மார்கில், பிர்லா மந்திர் அருகில் இருக்கும் காளி பாரி {kali bari} கோயிலை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அங்கும் வெள்ளிக்கிழமை என்றால் கூட்டம் தாங்கமுடியாது.

நான் பல தடவைகள் இங்கு போயிருக்கிறேன்.  இந்தக் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி இருந்தாலும் இங்கு இருக்கும் காளி தான் மிக விசேஷம். அந்தக் காளியின் கோவில் மிகப் பழமை வாய்ந்தது.

3 Chinamasta123முகலாய வம்சத்தினர் அதன் அருகில் படை எடுத்தப்போதும்கூட கோவில் ஒரு சேதமாகாமல் தப்பித்தது. முகலாயர்கள் இந்தக் கோவில் வரை வந்தும் மனது மாறி திரும்பியதாகச் சொல்லுகிறார்கள். அங்கு பலவிதமான வர்ணப் படங்கள் {paintings} உள்ளன. எல்லாம் அம்பாளின் பல ரூபங்கள். அந்தப் படங்களில் ஒன்று என் மனதை மிகக் கவர்ந்தது. ஆனால் மிகவும் பயங்கரமான ஒன்று. இப்படியும் ஒரு அம்மனா? என்ன கொடூரம்! ரோமங்கள் குத்திட்டு நின்றன. அந்த அம்பாள் பெயர் சின்ன மஸ்தா. மகர சங்கராந்தி, தை செவ்வாய் வெள்ளி, வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி போன்ற நாட்களில் இவளுக்கும் தனி பூஜை உண்டு. சின்ன என்றால் துண்டித்தது; மஸ்தா என்றால் தலை என நினைக்கிறேன். சின்ன மஸ்தா தன்னுடைய ஒரு கையில் தன்னுடைய வெட்டியத் தலையையே வைத்திருக்கிறாள். தன் தலை அதுவும் அப்போதுதான் முண்டித்த தலை, இரத்த வெள்ளம் அருவி போல்; என்ன பயங்கரம்! தலையில்லாமல் முண்டமாக நிற்கிறாள். வெட்டப்பட்ட கழுத்திலிருந்து இரத்தம் பெருகி மூன்று ஊற்றுக்கள் வெளியே வந்து விழுகின்றன.  இடை பிங்கலை  சுழுமுனை  வழியாக வெளியே வந்து  இந்தக் குறுதி ஊற்றுக்கள் பாய்கிறது வெளியே!

இவளுடைய கையில் வெட்டப்பட்டத் தலை மத்ய நாடியான சுஷம்னாவிலிருந்து வரும் இரத்ததைப் பருகுகிறது. இதைப் பற்றி அங்கு இருந்த ஒரு பண்டித்ஜியிடம் கேட்டேன். நாம் நமது இந்திரியத்தை அடக்க முற்படும் போது தலை உச்சி வரை அமுத நீர் ஓடி சஹஸ்ராரா சக்ராவைத் தொட ஆனந்த நிலை, சமாதி  நிலை ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்படுவதற்கு உதவுகிறாள் சின்னமஸ்தா.  இந்திரியங்களை ஒடுக்கினால் மட்டும் போதாது; மனதிலுள்ள  நான் என்ற மமதையும் நீக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டத் தன் தலையையே வெட்டி  தன் கையில் வைத்திருக்கிறாள், கரத்தில் ஒரு கத்திரிக்கோல் உள்ளது. இது  சம்சார பந்தததை வெட்டிக் கொண்டு நான் பிரம்மம் என்று உணர  வைத்திருக்கிறாள். இவள் மேலும் காம புருஷனையும் ரதியையும் காலின்  கீழ் மிதித்துக் கொண்டிருக்கிறாள். இதற்கு பண்டித்ஜி கொடுத்த விளக்கம் ஐந்து இந்திரியங்களுடன் மனதையும் சேர்த்து ஆறாக்கி சஷ்டி தேவி என்றும் இவளைக் கூறுகின்றனர். இவளே சக்தியில் வித்யுத் சக்தி என்ற மின் சக்தி உண்டு செய்கிறாள். இந்த மின் சக்தி குண்டலினி தியானத்தில் மெதுவாக மேலே ஏறி ஜீவாதார சக்தியாக மாறி பின் மின் அதிர்வைத் தருகிறது. ரிஷிகள் இந்த மின் அதிர்வை உணர்ந்து மேலும் மேலே சிரம் உச்சி வரை எடுத்துப் போக BLISS என்ற பேரானந்தம் கிடைக்கிறது.

இந்த சக்தி உண்டாக்க  காரணமான அந்த சின்ன மஸ்தாவை வணங்குவோம்.

யா தேவி  ஸர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸம்ஸ்திதா 

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமோ நம:

யாதேவி  ஸர்வ பூதேஷு  சக்தி ரூபேண சம்ஸ்திதா

நமஸ்தஸ்யை  நம்ஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை நமோ நம:

யதேவி ஸர்வ   பூதேஷு  சாந்தி ரூபேண  ஸம்ஸ்திதா 

நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமோ நம:

படத்திற்கு நன்றி: http://my3yoga.blogspot.com/2012/07/dasha-maha-vidyalu.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *