இவனுக்கு அப்போது மனு என்று பெயர் – புத்தக மதிப்புரை

1

ரஞ்சனி நாராயணன்

manu

புத்தகத்தின் பெயர்: இவனுக்கு அப்போது மனு என்று பெயர்

ஆசிரியர் : இரா. எட்வின்

பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

பக்கங்கள்: 104

விலை: ரூ. 70/-

ஆசிரியர்:

பெரம்பலூரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் திரு இரா. எட்வின், ஒரு பள்ளி ஆசிரியர். பத்திரிக்கைகளுக்கு எழுதுவதுடன் ‘நோக்குமிடமெல்லாம்’ என்ற வலைப்பதிவையும் நிர்வகித்துவருகிறார். ஆசிரியராக இருப்பதால் இவரது பதிவுகள் பள்ளிக்கூடம், மாணவர்கள் சார்ந்ததாக இருக்கிறது. கூடவே சமூகத்தில் தான் காணும் ஏற்றத்தாழ்வுகளையும் பதிவு செய்கிறார்.

இந்தப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கும் கவின்மலர் இவரது எழுத்துக்கள்  ‘பாசாங்கு இல்லாத எழுத்துக்கள்’ என்கிறார். இவரது வெளிப்படையான எழுத்துக்கள், அதிலிருக்கும் உண்மைகள் நம்மையும் கவருகின்றன. இந்தப்புத்தகத்தில் மொத்தம் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. வலைப்பதிவுகளின் தொகுப்பாக இருப்பதால், ரொம்பவும் நீண்டதாக இல்லாமல் சுருக்கமாகவும் நறுக்கென்றும் இருக்கின்றன என்பதால் படிப்பதற்கு எளிதாக இருக்கின்றன. ‘கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பதுபோல இவரது கட்டுரைகளும் காரசாரமாகவே இருக்கின்றன.

முதல் கட்டுரையில் முகநூலில் தான் கண்ட ஒரு கிழிந்த பனியனின் புகைப்படத்தைப் பற்றி எழுதுகிறார். தனக்குப் பிறந்திருக்கும் புது குழந்தையை போர்த்தி எடுத்துக் கொண்டுபோக காசில்லாத ஒரு ஏழை தந்தையின் கிழிந்த பனியன் அது என்பது நம் மனதை மிகவும் வருத்துகிறது. சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களாகியும் ஏழ்மையை ஒழிக்க முடியாத இந்நாட்டில் பொக்ரான் எதற்கு? என்று கேட்கிறார் இந்த முகநூல் பக்கத்தின் உரிமையாளர் டெல்லி AIIMS இன் இளம் மருத்துவர். 2010 இல் மட்டும் ஏறத்தாழ 1,30,000 இந்தியக் குழந்தைகள் ஏதேதோ காரணங்களால் மாண்டு போயிருக்கிறார்கள் என்பதை அழுதுகொண்டே பதியும் இந்த இளம் மருத்துவர் புன்னகைத்துக்கொண்டே கொந்தளித்து கேட்கும் இன்னொரு கேள்வியையும் இரா.எட்வின் நம் முன் வைக்கிறார்: ‘18 மைல் தூரத்திலிருந்து வந்தால் அவனுக்கு அகதி முகம். 4000 மைல் தொலைவான இத்தாலியிலிருந்து வந்தால்….?

கணவனை இழந்த கண்ணகிக்கு சிலை வைக்கும் இந்த சமூகம், நல்ல நிகழ்ச்சிகளில் விதவைகளை கேவலப்படுத்துவது ஏன்?

மன்மோகன் சிங்கிற்கு ஏறத்தாழ பத்து டாக்டர் பட்டங்கள் ஏன்?

முகநூலில் பொன்னான நேரத்தை வீணாக்கும் மனிதர்களிடையே இப்படியும் ஒரு இளைஞன் என்று நமக்கு அறிமுகம் செய்கிறார் இரா. எட்வின்.

மழைகாலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் ஏற்படும் உயிர் சேதத்திற்கு, கால்நடை சேதத்திற்கு, உடமை சேதத்திற்கு, குடிசை சேதத்திற்கு நிவாரணத் தொகைகளை வாரிவழங்கும் அரசு அந்தத் தொகையை  ஏரிகள், குளங்கள், குட்டைகள், கசிவு நீர் குட்டிகள், தடுப்பணைகள், வாய்க்கால்கள், போன்றவற்றை தூர் எடுக்கவும், நதிகளில் ஏரிகளில் மற்றும் நீர் நிளிகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரை, சீத்தகருவை போன்றவற்றை அப்புறப்படுத்துவதற்கும்   ஏன் பயன்படுத்தக் கூடாது என்று ‘நதி பயணப்படும் பாதை’ என்ற கட்டுரையில் கேட்கிறார்.

வோட்டு போடுவதற்கு பணம் கொடுக்கும் வழக்கத்தை கட்சிகள் எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன, எங்கேயெல்லாம் இந்தப் பணத்தை ஒளித்து வைக்கின்றன என்று சொல்லும் ஆசிரியர் மதுரையில் ஒருவர் தனது வீட்டில் ‘எங்கள் வீட்டு வாக்குகள் விற்பனைக்கல்ல’ என்று எழுதிவைத்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.

தனித்தனியான கட்டுரைகள் என்றாலும் இயல்பாகவே சில கட்டுரைகள் இன்னொன்றின் தொடர்ச்சியாகவோ  அல்லது அதனுடன் சம்பந்தப்பட்டதாகவோ அமைந்திருக்கின்றன இந்தப் புத்தகத்தில். ‘பெயரில் இருக்கிறது’ என்ற கட்டுரையில் பார்ப்பனீய எதிர்ப்பாளரும், தமிழ்மொழிப் பற்றும் கொண்ட  கனக சுப்புரத்தினம் எப்படி பாரதிதாசன் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்பதற்கு பாரதிதாசன் சொன்ன பதில்களை தனது பதிவில் குறிப்பிடும் ஆசிரியர் பாரதியும், பாரதிதாசனும் முதல்சந்திப்பை ‘உச்சங்களின் முதல் சந்திப்பு’ என்று இன்னொரு கட்டுரையில் எழுதுகிறார்.

இந்தப் புத்தகத்தின் பெயரில் வரும் கட்டுரையில் 1892 ஏப்ரலில் சென்னை விக்டோரியா மகாலில் நடைபெற்ற ‘சென்னை மகா சபை கூட்டம்’ பற்றி பேசுகிறார். அயோத்திதாசப் பண்டிதர் பறையர் குலத்தின் பிரதிநிதியாக ஆலயங்களில் வழிபடும் உரிமை, தரிசாகக் கிடக்கும் நிலங்களை தனது குலத்தைச் சார்ந்த கிராமவாசிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது, தனது இனக் குழந்தைகளுக்கும் நான்காவது வரை படிப்பதற்கு இலவச பாடசாலைகள் அமைப்பது போன்ற மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைக்கிறார். அதை எதிர்த்து சிவராம சாஸ்த்ரி திமிராகப் பேசுவதையும் அதற்கு பண்டிதர் கொடுக்கும் பதிலடியையும் கூறி எல்லாக்காலத்திலும் மனு இருக்கிறான். பெயர்தான் வேறு என்கிறார்.

இதற்கு அடுத்த கட்டுரை ‘கதவை சாத்தியது யார்?’. படிக்கத்தெரியாத ஒரு பையனால் ‘இழு’ என்று எழுதப்பட்டிருக்கிற கதவை திறக்க முடியவில்லை என்ற செய்தி சொல்லும் குறும்படத்தைப் பற்றியது. படிப்பு எல்லாக் கதவுகளையும் திறக்கும் என்பது சரி, ஆனால் கதவை சாத்தியது யார் என்ற கேள்வியை நம் முன் வைக்கிறார். கல்வி இல்லாதவனுக்கு கதவுகள் திறக்காது என்பதை ஒத்துக்கொள்ளும் வேளையில் இவர்களை உள்ளே விடாமல் கதவைச் சாத்திய களவாணிகளை சும்மா விடப்போவதில்லை என்கிறார்.

தாத்தாவின் பணத்தைக் கொடுத்து மருத்துவ படிப்பு படிக்க விரும்பாத ஒரு மாணவன், கூட்டம் நெறியும் பஸ்ஸில் பிரயாணிக்க நேரும்போது இப்படி நசுங்கிக் கொண்டு பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறதே என்று ஒவ்வொருவரும் நடத்துனரை சபித்துக் கொண்டுவர, அவரை பார்த்து ‘பாவம்’ என்று பரிதாபப்படும் சிறுவன் என்று பலரையும் இவரது கட்டுரைகளில் சந்திக்க முடிகிறது.

சீருடையும் மதிய உணவும் கொண்டுவந்த பெருந்தலைவர் காமராசரைப் பற்றியும், முரட்டு மொழிப்பற்றாளர் என்று நெ.து. சுந்தரவடிவேலு பற்றியும், திப்பு சுல்தான் பற்றியும் நெகிழ்வுடன் எழுதுகிறார் ஆசிரியர்.

சின்ன சின்ன கட்டுரைகளால் நம்மைப் பெரிதும் சிந்திக்க வைக்கும் இவரது திறமை வியக்க வைக்கிறது. எல்லோரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இவனுக்கு அப்போது மனு என்று பெயர் – புத்தக மதிப்புரை

  1. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடன் ஒரு காலத்தில் பழகியுள்ளேன். நான் என்று உள்ளது உள்ளபடி பேசுகிறோமமோ அன்று தான் நகம்மு விமோசனம். கட்டுரையை தொலுப்பும் புத்தக மதிப்பீடும் அதை உணர்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *