உலக புற்று நோய் தினம்

1

பவள சங்கரி

தலையங்கம்

”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான். வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல” – ஜான் டைமண்ட்

இன்று உலக புற்று நோய் தினம். புற்று நோய்களில், இரத்தப்புற்று நோய் (லுக்கிமியா) சிறுநீரகப் புற்று நோய், மார்பகப் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கருப்பை புற்று நோய், தோல் புற்று நோய் போன்ற பல வகைப்பட்ட புற்று நோய்கள் உள்ளன. உடலின் செயல்பாடுகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியே புற்று நோயாகும்.

உலக அளவில் முதல் இடத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்று நோயாக இருப்பது மார்பகப் புற்றுநோய். அடுத்து புகையிலைப் பொருட்களால் ஏற்பட்க்கூடிய புற்று நோய் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பது, பான் மசாலா, புகையிலை மெல்லுவது போன்ற காரணங்களால் 10ல் நான்கு பேருக்கு வாய்ப்புற்று நோய் ஏற்படுவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனால் 42 சதவிகித ஆண்களும், பெண்களும் உயிரிழக்க நேரிடுகிறது. மனித வாழ்விற்கு பெரும் சவாலாக இருந்துவரும் நோய்களில் புற்று நோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஏழு இலட்சம் பேருக்கும் மேலாக புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். உலகளவில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.முறையான சிகிச்சையும், சரியான விழிப்புணர்வும் இல்லாத காரணத்தினால் நாளொன்றுக்கு 3,50,000 பேருக்கு மேல் இறப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. மேலும், சமீபத்திய ஆய்வுப்படி இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோய்க்கும், ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் இறப்பதாகவும் தெரிகிறது. இன்று பிப்ரவரி 4ந்தேதி உலக கேன்சர் தினம். புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டிய நாள். இந்த நோய்க்கான காரணங்களை அறிந்து அதனைக் கட்டுப்படுத்தும் வகைகளை அறிந்து கொண்டு நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

புற்று நோயாளிகளிடம் அவர்களுடைய வியாதி பற்றி நேரடியாகக் கூறாமல் மறைத்து வைப்பதைக் காட்டிலும், அவரிடம், இருக்கும் நிலையை விளக்கி பிரச்சனையை அவர்கள் தைரியமாக எதிர்கொள்ள நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதே முக்கியம். இல்லாவிட்டால் தாம் சீக்கிரமே சாகப் போகிறோம், அதனால்தான் தம்மிடம் எதுவும் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதனால் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதிலும் சிரமப்படுவார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  முதல் சிகிச்சை நோயாளிகளுக்கு மனஉறுதி அளிப்பது தான். புற்றுநோய் சிகிச்சைகளை, ஏற்றுக்கொள்ளும் வகையில் பாதிக்கப்பட்டவர் உடலளவிலும், மனதளவிலும் தயாராக அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையும் தரும் வகையில் மிக இயல்பாக இருத்தல் அவசியம்.

ஆன்கோ பிளாஸ்டிக் மார்பக அறுவை சிகிச்சை நிபுணரான, மருத்துவர் திருமதி செல்வி ராதாகிருஷ்ணா, FRCS., அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “இன்றைய மருத்துவக் கல்வித்துறையில் பட்டப்படிப்பிலும், டிப்ளமோவிலும் மேமோகிராமிற்கான கதிர்வீச்சுப் பயிற்சிகள் போதிய அளவிற்கு இல்லை எனவே பெரும்பாலான பரிசோதனை மையங்களில் செய்ய்ப்படும் பரிசோதனைகளின் தரம் இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இந்த விஷயத்தை ஒரு அர்ப்பண உணர்வுடன் கவனிக்க வேண்டியது மிக அவசியம். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் குறைந்த செலவில், தரமான சிகிச்சைகள்  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறியது பெரிதும் சிந்திக்கச் செய்கிறது. வெறும் இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கவர நினைக்கும் அரசாங்கம், இது போன்ற நற்காரியங்களுக்காகவது கொஞ்சம் பணத்தை செலவு செய்தால் புண்ணியமாவது கிட்டும் அல்லவா?

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உலக புற்று நோய் தினம்

  1. தேர்தல் நேரத்தில், ஏதோ புதிதாக சந்தைக்கு வந்துள்ள பொருளின் விற்பனையை உயர்த்துவதற்காக தொலைகாட்சி, மற்றும் இதர ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுவது போல், மிகைப்படுத்தப்பட்ட கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிடும் அரசியல் கட்சிகள், புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற மக்களுக்கப் பயனுள்ள பணிகளில் ஈடுபடலாமே!

    பொருளாதார வசதி உள்ளவர்கள் இரத்தப் புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று Blood transplantation செய்துகொள்கிறார்கள். அத்தகைய மேம்பட்ட மருத்துவ வசதிகள் சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களின் மனதில் தோன்றினால் நலம் பயக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *