செண்பக ஜெகதீசன்ele-index

சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்

பட்டுப்பா டூன்றுங் களிறு.

-திருக்குறள்- 597 (ஊக்கமுடைமை)

 

புதுக் கவிதையில்…

 

அம்புபட்டு புண்பட்டாலும்

யானை

அசந்துவிடுவதில்லை,

தெம்புடன் முன்னேறி

திறமையை நிலைநிறுத்தும்..

 

ஊக்கமுடையோர் கதையிதுதான்,

அவர்

உயர்வுக்குச் சிதைவு வரினும்

உறுதியாய் நின்று

ஊக்கமுடன் செயலாற்றி

இறுதியில் பெறுவார் வெற்றியையே…!

 

குறும்பாவில்…

 

அம்பினால் புண்பட்டாலும் அசராமல்

திறம்காட்டும் யானையாய்

இடர்களைந்து வென்றிடுவர் ஊக்கமுள்ளோர்…!

 

மரபுக் கவிதையில்…

 

அம்பது பட்டுப் புண்படினும்

அந்த வலியையும் பாராமல்

தெம்பு கொண்டே முன்னேறும்

திறமை மிக்க யானையைப்போல்,

நம்பும் வெற்றிப் பாதைதனில்

நலிவு யேதும் வந்திடினும்

தெம்பாய் முயன்று பணிசெய்வார்

தீதிலா வெற்றி பெறுவாரே…!

 

லிமரைக்கூ…

 

ஊக்கமுடன் திறம்காட்டும் புண்படினும் அம்பால்,

உறுதியுடன் யானைபோல்

இடர்கடந்து வென்றிடுவர் ஊக்கமுள்ளோர் தெம்பால்…!

 

கிராமியப் பாணியில்…

 

ஆன ஆன போர்யான

அம்பாரி வச்ச போர்யான,

அஞ்சா நெஞ்சப் போர்யான

ஆவேச மான போர்யான,

அம்பு பட்ட புண்ணுடனும்

தெம்பாப் போவும் போர்யான

தெறம காட்டும் போர்யான..

 

இப்புடித்தான்,

தும்பம் வந்து தடுத்தாலும்

தொல்ல வந்து மறிச்சாலும்,

தொவண்டு வெலவிப் போவாம

தெம்பா வேல செஞ்சிவரும்

தெடமா மனசு உள்ளவந்தான்,

தெறம காட்டிச் செயிப்பானே…!

 

http://www.personal.psu.edu/afr3/blogs/SIOW/2011/10/the-elephants-trunk.html

       

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *