இருளா சனமிட் டுயிரில் அமர்ந்த,

பொருளா சையினைக் களையா தவரால்,

திருவா சகமா யுருவா னவனின்,

அருளா சியினைப் பெறுதல் அரிது!                                                                                9

 

பிச்சையும் பிடி சாம்பலும் கொண்டு,

பித்தனாய் நாடு வீதியில் நின்று,

கச்சையாய்ப் புலித் தோலைக் கொண்டு,

நர்த்தனம் புரி நாதனைக் கண்டேன்!                                                                                 10

 

பனியா சனமே லமர்ந்தா னவனை,

மணிநா வசைவோ டிசையா னவனை,

கனியா மனதோ டிருப்போ ரினையும்,

இனிதா யணைத்துக் கனிந்திடச் செய்வான்!                                                                   11

 

நடரா சனுடன் நடமா டிடவே,

சுடரா னவனுள் சுடரா கிடவே,

இடரா யுயிரைப் படரும் துன்பம்,

தொடரா திருக்கத் தொடர்வோம் அவனை!                                                                     12

 

காடெடுத்துக் குடியிருக்கும் கயிலை நாதன்,

தீயெடுத்த நெற்றிக்கண் ஒளி பாய்ச்சி,

கூடெடுத்த பிண்டத்தின் பிணி நீக்கி,

ஓடெடுத்துக் கண்டத்தில் மாலையாகச் சூடினானே!                                                  13

 

குறிஞ்சிக் காடென விரிந்த சடையில்,

குளிர்நீர் கங்கை பாய்ந்து பரவ,

குமரனை வழங்கிய நெற்றிக் கண்ணின்,

கனலது தணிந்து கருணை பொழியும்!                                                                           14

 

நாணல் வளைவதில் புதுமை இல்லை,

மூங்கில் வளைவதில் புதுமை இல்லை,

நாளும் நாதனைத் துதித் துயரும்,

மானிட மனமே புதுமை என்போம்!                                                                                  15

 

வானவில் வளைவதில் புதுமை இல்லை,

அதனேழு நிறங்களில் புதுமை இல்லை,

வளிவெற் றிடமென நிறைந்தி ருக்கும்,

விமலன் நிறமே புதுமை என்போம்!                                                                                 16

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *