தி.சுபாஷிணி

வாசிக்கப்படாத நூல் வாழுமா?

ஒரேர் உழவன் கணபதியா பிள்ளை மகனார் நாஞ்சில் நாடன்.

unnamed

தலைவி தலைவன்பால் காதல்வயப்பட்டு, தன்மனம் முழுவதும் அவனை அமர்த்திப் பரவசப்பட்டுக் கொண்டிருக்குங்காலை, தலைவனே அவள் எதிரே தோன்றிவிடுகின்றான். தன் காதலைத் தானே ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, எங்கிருந்துதான் நாணம் வந்துவிடுகின்றதோ, தன்னையறியாது தன் கரங்களால் கண்கள் இரண்டையும் பொத்தி மறைத்துக் கொள்கிறாள். நாணத்தின் செம்மை முகத்தில் பரவ, முகம் பொன்னாலான தாமரையாய் மலர்ந்து மிளர்கின்றது. தலைவனுக்கோ, மதுரை மீனாட்சியம்மன் கோயில் குளத்தில் உலவும் பொற்றாமரை நினைவிற்கு வந்து விடுகின்றது. அங்குதான் மீன்கள் இருக்காது. தாமரை மட்டும் இருக்கும் எனக் கொள்கின்றான்.

“தோற்றும் இயலை மறைத்தீர். பொற்கஞ்சமும் தோற்றுவித்தீர்

சாற்றும் பொழுதினிலே நீரோ மதுரைத் தடம் பொய்கையே!”

என்பவை பாடல்வரிகள்.

இதை “நாணிக் கண் புதைத்தல்” என்கிறார், தளவாய் இரகுநாத சேதுபதியின் ஆஸ்தான வித்வான் அமிர்தக் கவிராயர். “நாணிக் கண் புதைத்தல்” என்னும் சொல்லாட்சியே அற்புதமாக இருக்கின்றது.

ஆண், பெண் உணர்வுகளை முழுமையாகச் சொல்லும் அக இலக்கியம் கோவையாகும். இக்கோவை இலக்கிய வகையின் உச்சம்தான் ஒரு துறைக் கோவையாகும். இதன் புதுத்தடம்தான் “நாணிக்கண் புதைத்தல்”. இதை “வல்லான் வெட்டிய வாய்க்கால்” என்கிறார் வித்வான் கா.நயினார் முகமது.

“சங்கொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொழுது

வந்திழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை”

என்று ஆண்டாள் பாடும் அழகர்மலைபால் உறையும் கள்ளழகர் பால் காதல் கொள்கிறாள் தலைவி. தன் காதலை யார் மூலம் அழகர் பெருமானுக்குத் தெரிவிப்பது? தான் அன்பாய் வளர்க்கும் கிளியைத் தெரிந்தெடுக்கிறாள். ஏனெனில் அதுதான் அவளுடன் சதா சர்வகாலமும் இருக்கின்றது. அவளது உள்ளத்தை அறிந்தது என அவள் எண்ணுகின்றாள் போலும். எனவே தன் கிளியிடம், அழகரிடம் தூது அனுப்புகிறாள். கிளியே! நீ திருமாலிருஞ்சோலை மலையை அடைந்து அங்கிருக்கும் அழகரிடம் செல். ஆனால் அவனிருக்கும் நிலையை முதலில் தெரிந்துகொள். அவனைத் தொழும் அடியார்களுக்கும், அவனருகில் இருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும், அவர்பால் குடிகொண்டிருக்கும் சவுந்தரவல்லித் தாயாருக்கும், இடையூறு வராது, அவன் எள்ளளவும் சினம் கொள்ளாத வகையில் ரகசியமாய் என் நிலையை, என் காதலின் தவிப்பை எடுத்துக்கூறி, உலகின் துயர் தீர்க்கும் சங்கணிந்தவன் அணிந்த மலர் மாலையை வாங்கி வருவாயாக” என வேண்டிக்கொண்டு தன் காதலுக்கு தூதாய் அனுப்புகின்றாள் தலைவி.

“அடியார்கள்

அங்கிருந்தால் கீர்த்தனம் செய்வாய். அடுத்து நாச்சியார்

பங்கிருந்தால் கையில் பறந்து இருப்பாய் & எங்கிருந்து

வந்தாய் என்றால் மாலிருஞ்சோலையில் இருந்து

எந்தாய் உனைத் தொழ வந்தேன் என்பாய் & அந்த

சவுந்தர வல்லி எனும் தற்சொரூபிக்-கும்

உவந்து அலர் சூடிக் கொடுத்தாளுக்கும் & சிவந்த

கடுகிலேசம் கோபம் காணாமல் என் மால்

வடுகிலே சொல்வாய் வகையாய் & அருகிலே

சம்கெடுப்பாய் சங்கெடுக்கும். சச்சிதானந்தர் அணி

கொங்கெடுக்கும் தாமம் கொடு வருவாய்”

இப்பாடல் இடம் பெறும் நூல் திருமாலிருஞ்சோலை அழகர் கிள்ளை விடு தூது. இதன் ஆசிரியர் மதுரையைச் சேர்ந்த பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை. சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தூது.

மூத்த பள்ளியின் நாடான ஆசூர் நாட்டின் பெருமையைப் புகழ்ந்து பாடுகிறான்.

கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்

கடம் பட்டுள்ளது கம்பத்து வேழம்

சிறைபட்டுள்ளது விண்ணெழும் புள்ளு

திரிபட்டுள்ளது வல்லியம் கொம்பு

மறைபட்டுள்ளது அரும்பொருட் செய்யுள்

வளமை ஆசூர் வடகரை நாடே”

உடனே, இதற்குப் பதிலாக இளையபள்ளி, தன் நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டைப் போற்றிப் பாடுகிறாள். தனது நாட்டில் காய்வது சூரியன் மட்டும்தான். மத்தால் கடையப்பட்டுக் கலங்கி நிற்பது கட்டித் தயிர்  மட்டும்தான். அழிந்து போவது நாள்களும் கிழமைகளுமே. வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே சுழன்று வரும். சுமை தாங்காது சாய்வது நெற்கதிர். ஆசைகளை ஒடுக்குவது தவமியற்றுவோர் மனம். தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே.

“காயக் கண்டது சூரிய காந்தி

கலங்கக் கண்டது வெண் தயிர்க் கண்டம்

மாயக் கண்டது நாழிகை வாரம்

மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்

சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்

தணிப்பக் கண்டது தாபதர் உள்ளம்

தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்

சீவல மங்கைத் தென்கரை “நாடே”

இவ்வாறு முக்கடல் பள்ளுவில் தமிழ்பாடிச் செழிக்கின்றனர்.

மந்தர முலைகள் ஏசலாட மகரக் குழைகள் ஊசலாட

சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொம்மெனப்

பந்தடித் தனளே. வசந்த சுந்தரி விந்தையாகவே!”

பாடலைப் பாடும் போதே, வசந்தவல்லியின்

பந்தாட்டத்தின் ஒய்யாரம் நம் கண்முன் காட்சியாய்

விரிகின்றது. மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட குற்றாலக் குறவஞ்சியில் பாடிய பாடல் இது.

பாட்டுடைத் தலைவனின்பால் காதல் கொண்ட தலைவியைக் கண்டு குறத்தி குறி கூறுவதே ‘குறம்’ என்று கூறப்படும் வகைப்பாடல்கள். இங்கு தலைவி அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி சொக்கேசனைக் கூடக் குறி சொல்கிறது குறம். முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

செந்நெல் முத்தும் கன்னல் முத்தும் ஒளி

திகழ் மதுரை அங்கயற்கண்ணி அம்மை

பொன்னும், முத்தும் சொரியும் வெள்ளருவிப்

பொதியமலைக் குறத்தி நான் அம்மே!

குமரகுருபரர் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, 52 வயது வரை வாய் பேசாது இருந்தபோது, இவரது தாய் திருச்செந்தூர் முருகனை கசிந்து கண்ணீர் மல்க வேண்டினாள். அப்போது அம்மா என்று அழைத்து ‘கந்தர் கலிவெண்பா’ பாடினார் என்பர். அவர் இயற்றியது இம்மீனாட்சியம்மை குறம். மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்டகாலத்து அவர் முன்னிலையில் அங்கயற்கண்ணி சன்னிதியில் “மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்” பாடினார்.

திருநெல்வேலி தச்சநல்லூர் வித்துவான் அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றியது, காந்திமதியம்மைப் பிள்ளைத்தமிழ்.

“வாராது இருந்தால் இனி நான் உன்வடிவேல்

விழிக்கு மை எழுதேன்

மதிவான் நுதல்க்குத் திலகம் இடேன் மணியால்

இழைத்த பணி புனையேன்

பேர் ஆதரத்தினொடு பழக்கம் பேசேன்

சிறிதும் முகம் பாரேன்

பிறங்கு முலைப்பால் இனிது ஊட்டேன், பிரியமுடன்

ஒக்கலையில் வைத்துத்

தேர் ஆர் வீதி வளம் காட்டேன், செய்ய

கனிவாய் முத்தம் இடேன்.

திகழும்  மணித் தொட்டிலில் ஏற்றித் திருக்கண்

வளரச் சீராட்டேன்

தார் ஆர் இமவான் தடமார்பில் தவழும்

குழந்தாய் வருகவே!

சாலிப்பதி வாழ காந்திமதித் தாயே

வருக வருகவே!”

மாதுளம் பூ நிறத்தவளாகிய, பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், செப்பும் கனக கலசமும்  போலும் திருமுலைமேல் அப்பும் சுவை, சிந்தூர வண்ணப் பெண்ணாகிய திருக்காவூர் அபிராம வல்லியை, அபிராமிபட்டர், கிண்கிணியில் மெல்லிய சிலம்பின் சிலம்பலில், புலர் காலை புள்ளின இசையில், சிற்றருவித் துள்ளலில், பெருங்கடல் ஓசையில், வண்டினத்தின் ரீங்காரத்தில், திகட்டாத தமிழில் 100 பாடல்கள் கொண்ட அந்தாதியை ஆக்கினார்.

“ஆசைக் கடலில் அகப்பட்டு

அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்லல் பட இருந்த

எனை நின் பாதம் என்னும்

வாசக் கமலம் தலை மேல்

வலிய வைத்து கண்டு கொண்ட

நேசத்தை என் சொல்லு வேன் ஈசர்

பாகத்து நேரிழையே!”

எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி. வெண்பாக்களால் ஆனவை.

“அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

அழகால் அழல் சிவந்த வாறோ & கழலாடப்

பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்

தீயோடு வாய் இதனைச் செப்பு!”

கால்களில் கழல் ஆட, கானகத்தில் போயோடு அனல் ஏந்தித் தீயாடுகிறவனே! தீயேந்தி ஆடுவதால் உன் அழகிய கை சிவந்து காணப்படுகிறதா? அல்லால்  அழகிய உன் கையின் அழகாய் தீ சிவந்த வாறோ? இதை நீ சொல்வாயாக?

சேரமான் பெருமாள் நாயனார் அருளியது பொன் வண்ணத்து அந்தாதி. இப்பாடலில் முதற் பாடலைப் பார்க்கலாம்.

பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

மேனி, பொலிந்து இலங்கும்

மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

வீழ்சடை, வெள்ளிக்குன்றம்

தன் வண்ணம் எவ்வண்மை அவ்வண்ணம்

மால்விடை, தன்னைக் கண்ட

என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

ஆகிய ஈசனுக்கே!

இதில் பன்னிரண்டு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி திருவண்பரிகாரத்து திருவாழி மார்பனைப் பாடுகிறது.

“முதலாம் திருவுருவம் மூன்றென்பார்: ஒன்றே

முதலாடும் மூன்றும் என்பர் & முதல்வா!

நிகர் இலகு கார் உருவா? நின் ஆகத்து அன்றே

புகர் இலகு தாமரையின் பூ?”

எல்லா சமயத்தாருக்கும் பொதுவான பாடல் ஒன்று இதில் உண்டு.

“பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற

காவிமலர் என்றும் காண்தொறும் & பாவியேன்

மெய்ஆவி, மெய் மிகவே யூகிக்கும் அவ்அவை

எல்லாம் பிரான் உருவே என்று”

யாவும் இறைவடிவம் என்பதுதான் இப்பாடலின் நுட்பம்.

கலம்பகம் பாடுவது என்பது எளிதன்று. தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்ம பல்லவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது நந்திக்கலம்பகம். பாடியவர் பெயர் அறியவில்லை. பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் இயற்கை அழகு, தலைவனின் வீரம், தலைவனைச் சேரும் தலைவியின் ஏக்கம், எனப்பாடி தமிழும் கவிதையும் காதலுமாய் துளிர்த்து நிற்பவை. நந்தியைப் பற்றி பல பாடல்கள் தனிப்பாடல்களாக கலம்பகப் படிகளில் ஒருசேர கிடைத்திருக்கின்றன. அவை மிகவும் சுவாரஸ்யமானவை. பைந்தமிழை ஆய்கின்ற நந்திவர்ம பல்லவனின் மார்பினைத்  தழுவ மாட்டாமல் வேகின்ற பாவியாகிய என் மீது செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுமையான குளிர்ச்சியான சந்தனம் என்று யாரோ தடவிப் போனார் என்பது தலைவியின் எதிர்பார்ப்பின் அவஸ்தை மிகு பாடல் இது.

செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்

சந்தனம் என்று யாரோ தடவினார் & பைந்தமிழை

ஆய்கின்ற கோன் நந்தி அகம் தழுவாமல்

வேகின்ற பாவியேன் மேல்!

தலைவி திருவாழி மார்பன் திருவரங்கன்பால் தீராக்

காதல் கொண்டு, அவனிடம் வண்டைத் தூது விடுகிறாள். அது

திரும்பி வராததால் தன் நெஞ்சோடு கிளர்த்திய பாடல் இது.

மறக்குமோ? காலில் மது அருந்தி, அப்பால்

பறக்குமோ? சந்நிதி முன்பு ஆமோ? & சிறக்கத்

தருவரங்கன் கேட்டுமோ? தாழ்க்குமோ? & நெஞ்சே!

திருவரங்கர் பால் போன தேன்?

திருவரங்கர் கலம்பகத்தில் உள்ள பாடல். பிள்ளைப்

பெருமாள் அய்யங்கார் பாடியது.

மேலே குறிப்பிட்ட பாடல்கள் இலக்கியங்கள் வாசிக்கப்படாது வாழ்விழந்து போய்விடுமோ என்ற கவலையில் பிறந்தது “சிற்றிலக்கியங்கள்” என்னும் நூல். கவலைப்பட்டது சாகித்திய விருதாளர், மரபு இலக்கியத்தின் மாண்பினை இன்னமும் கையிலேந்திக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.

“செவிநூர் கனிகளாய், மனத்திற்கினியவாய்

நம்முன் நாட்டியமாடும் தமிழை, எப்போதும் எங்கிருந்தும்

கற்கலாம் என்கின்ற வகையிலே, இளைய வாசகருக்கு

மரபிலக்கிய வாசிப்பைத்  தொடங்குவதற்கு உதவும் வகையிலே”

இந்நூலை உருவாக்கியுள்ளார் நாஞ்சில் நாடன்.

நூல்கள் பயிலப்  பயில, சொல்லச் சொல்ல, அனுபவிக்க அனுபவிக்கத்தான் அவைகள் உயிர்ப்புடன் இருக்கும். இல்லாவிடில் மரணத்தைத் தழுவ வேண்டியதுதான். இந்தக் கவலைதான் சிற்றிலக்கியங்களைத் தொகுத்து அளித்திருக்கின்றார் ஆசிரியர். ஆம் பெரிதினும் பெரிய செயல்தான்.

கோவை, மும்மணிக் கோவை, உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, குறம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, கலம்பகம், பரண், சதகம், மாயை என வகைப்படுத்தி, அவ்வகையிலே காணப்படும் அத்துணை நூல்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அதில் தமிழின் சுவையாயும், பக்தியின் ரஸமாயும் சுவாரஸ்யமான பாடல்களையும் தெரிந்தெடுத்து, அனுபவித்து அளித்திருக்கிறார். சிலவற்றை விளக்கியும், விளக்கமும் விளம்பியிருக்கின்றார். இலக்கிய வகைகளின் பட்டியல்களை சோம்பல் இல்லாது நேர்மையாய் நல்கி இருக்கின்றார்.

“உ.வே.சா ஒருமுறை தானே தேடித்தருவார்? தண்ணீர் மூழ்குபவனை மூன்று முறை வெளிக்காட்டும் என்பார்கள். தமிழன்னை திரும்பத் திரும்பத் தொலைப்பவனுக்கு தேடித்தருவாளா? தேடித் தந்தவருக்குத்தான் என்ன திருப்பி செய்துவிட்டோம்? எதுவோ கிடந்து விட்டுப் போகட்டும். கரையான் அரித்து மட்கி மண்ணாக இருந்தவற்றை ஒருமுறை மீட்போம். நமது அலட்சியத்தால், பொறுப்பற்ற தன்மையினால், ஆர்வம் இன்மையால், வாசிப்புப் புறக்கணிப்பால் மீண்டும் தொலைத்து விடலாகாது என்ற வேண்டுகோளுடன் இந்தக் கட்டுரைகளை உங்கள் முன் வைக்கின்றேன்” என்று ஆதங்கத்துடன் படைத்திருக்கின்றார் “சிற்றிலக்கியங்கள்” என்னும் நூலை, நாஞ்சில் நாடன்.

இந்நூலை “பல பண்டைய நூல்களைக் காப்பாற்றித் தந்த பெருமான் மகாமகோபாத்யாயை  தக்ஷிணாஷ்ய கலாநிதி டாக்டர். உ.வே.சாமிநாதய்யர் தமிழ் சேவைக்கு காணிக்கையாக்கி, தன் நன்றியைத் தெரிவித்துக்  கொள்கிறார் நாஞ்சிலார்.

தலைப்பு         & சிற்றிலக்கியங்கள்

ஆசிரியர்        & நாஞ்சில் நாடன்

பக்கம்                               & 300 பக்கங்கள்& கனமான அட்டை

விலை                             & ரூ.300

பதிப்பகம்       & தமிழினி,

25ஏ. தரைதளம் முதல் பகுதி,

ஸ்பென்சர் பிளாசா, 769, அண்ணா சாலை, சென்னை & 600 002.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *