எதிர்க்கட்சிக் கூட்டணியின் திருப்தியும் திருப்பதி லட்டும்

6

தேமொழி

வரலாற்றின் அடிப்படையில் ஆராய்ந்தோமானால் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடைகளில் ஒன்றாக இருப்பது சரியான ஒரு தேசிய எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாமல் போவது.  இதுநாள் வரை ஆளும்கட்சியின் அபத்தங்களை தட்டிக் கேட்க தகுதி நிறைந்த எதிர்க் கட்சி ஒன்று இல்லை நமது இந்திய அரசியலில். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் இந்தியாவிற்குத் தேவை சிறந்த எதிரணி, இந்தியாவின் பற்பல கட்சிகள் மக்களாட்சிக்கு உதவவில்லை என்றுக் குறிப்பிட்டார்.  இவ்வாறு தேர்தல் காலங்களில் அடித்துப் பிடித்து கூட்டணி சேர்த்து ஆட்சி அமைத்தாலும், யார் பிரதமர் என்றக் குழப்படி கூட்டணியைச் சிதற அடிக்கிறது. பிறகு ஏதோ சாமாதானதில் விட்டுக் கொடுத்து கூட்டணி உதவியுடன் நடக்கும் ஆட்சியும் எத்தனை நாள்தான் நிலைக்க முடியும் என்ற நிலையில்லாமையில் வீழ்கிறது. இந்தியாவில் நாட்டின் நலனிற்காக என்னும் ஒரு பொதுக் கொள்கையைக் கட்டிக் காக்கும் ஒரு எதிரணி தேவை.  ஆளும் கட்சி அராஜகம் செய்யவே அச்சமுறும் வகையில் பலம் கொண்ட எதிரணி வேண்டும், செய்யும் தவறுகள் அடுத்த தேர்தலில் தங்களை பதவியிழக்கச் செய்யும் என்ற எண்ணம் ஆளும் கட்சிக்கு என்றும் அடிமனதில் இருக்க வேண்டும்.  அதற்கு ஏற்ற பலம் வாய்ந்த எதிர்க்கட்சி தேவை.

தேர்தல் காலங்களில் காங்கிரசிற்கு எதிராக அவசர அவசரமாக உருவாகும் எதிர் அணிகளும் இதுவரை கொண்டிருக்கும் “எதிரணிக் கட்சிக்கொள்கை” காங்கிரசை விரட்டிவிட்டு அங்கு தாங்கள் அமர்ந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே.  இன்றுவரை இதுதான் கொள்கை என்ற வகையிலேயே தங்களை முன்னிறுத்தி வந்திருக்கின்றன எதிரணிக்கட்சிகள்.  எதிரணிக்கட்சிகள் யாவும் பெரும்பாலும் சக்தி வாய்ந்த வட்டாரக் கட்சிகளின் கூட்டணி.  இக்கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே சக்தி வாய்ந்த தலைவர் பதிவியில் தங்கள் கட்சியை வழி நடத்திச் செல்லுபவர்கள். இவர்கள் கனவு பிரதமர் பதவி, தனக்கு இருக்கும் திறமைக்கு தான்தான் பிரத மந்திரியாக வேண்டும் என்ற எண்ணம்.  வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவிக்குப் போட்டி இவர்களிடையே தோன்றும். திருப்தி அடையாதவர்களால் எதிர்க்கட்சி கூட்டணி உடையும். வெற்றி பெற்றாலும் எதிரணியினருக்கு நாட்டிற்குப் பணி செய்வதை விட, தங்கள் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்றுவதில்தான் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என்பது வரலாறு காட்டிய பாடம்.

சுதந்தரம் அடைந்த இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே இந்த நிலைதான்.  சுதந்தரத்திற்குப் பிறகு 1977 இல் ஏர் உழவன் சின்னத்துடன் ஜனதா கட்சி எதிர் அணியாக உருவெடுத்த பொழுதே யாரைப் பிரதமாராக்குவது என்ற உட்கட்சிப் பூசலும் உடன் பிறந்தது. பிரதமர், துணைப்பிரதமருடன் கொஞ்ச காலம் இந்திய அரசு வண்டியும் தள்ளாடித் தள்ளாடி ஓடியது. மக்கள் அவர்கள் அடித்தக் கூத்தைக் கண்டு வெறுத்துப் போய், இந்த ஆட்களுக்கு நெருக்கடிநிலையை அமல்படுத்திய ‘மிசா’ இந்திராவே மேல் என்று எண்ணி, உடனடியாக தாயே வருக, இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிடுக என்று அழைக்க வேண்டிய நிலையில் அடிதடி சண்டைகள் கேவலமாக இருந்தது.

சுதந்தரத்திற்குப் பின்னர் 30 ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் செய்த தவறான “நெருக்கடி நிலை அமல்படுத்தலே” அக்கட்சியை வீழ்த்தியது. எதிரணி முயன்று  காங்கிரசை வீழ்த்தவில்லை. தொடர்ந்து வந்த ஜனதாவால் ஓராண்டு தாக்குப் பிடிப்பதே சிரமமாக இருந்தது. அதன் பிறகும் தொடர்ந்த நாற்பது ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இல்லை.  தலைவர் காணாது போனால் கட்சியும் காணாமல் போகும் என்ற நிலையே இந்தியாவில் பல கட்சிகளில் நிலவுகிறது.  இந்நிலைக் காட்டுவது நாட்டு நலத்திற்கான கொள்கையற்ற கட்சிகள் அவை என்பதையே. தலைவர் பதவிக்காக கட்சி ஒன்றை உருவாக்கிக் கொண்டு, தங்கள் ஆதரவாளர்களின் சக்தியால் தலைவராக இருந்த தலைவர் மறைந்ததும் கட்சியும் தானே மறைவது, அல்லது அதற்குப் பிறகு மீண்டும் தலைவர் பதவிக்காகத் தோன்றும் உட்கட்சிப் பூசலில் கட்சி பிளவுபட்டுப் போவது, இதுவே கட்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும், அழிவும் என்ற நிலை. இந்த அவல நிலை நாடு முழுவது தொடர்ந்து நடப்பதால், அவரவர் தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தும் அடிதடி சண்டையில், நாட்டு நலன் காற்றோடு போவதும், இதை ஆதாயமாகக் கொண்டு காங்கிரஸ் தொடர்ந்து பிழைப்பதுமாகவே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

சாதனை என்ற நோக்கில் பார்த்தால் காங்கிரசும் நாட்டிற்காக ஒன்றும்பெரிதாக இதுவரை சாதித்துவிடவில்லை.  நாட்டுக்குச் சுதந்தரம் வேண்டும் என்று அன்றைய நாளில் தேசிய நீரோட்டமாக அமைந்துவிட்டிருந்த உணர்சிக் கொள்கையை, இந்தியர் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு கொள்கையை வைத்து தோன்றிய ஒரு தேசிய கட்சியின் பெயரில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

காங்கிரசும் தங்கள் கட்சியின் ஒற்றுமைக்காகவும் ஒன்றும் பெரிதாக இதுவரை சாதிக்கவில்லை.  சுதந்தரத்திற்காக உழைத்த தலைவரின் குடும்பத்தைத் தந்திரமாக தலைமைப் பொறுப்பில் வைத்து கட்சி ஒற்றுமையைக் காக்கிறது. சுதந்தரம் வேண்டி, சென்ற நூற்றாண்டில் நாட்டு மக்களை இணைத்த ஒரு பொதுக் கொள்கையை இன்றுவரை வைத்து காசாக்கிக் கொண்டிருக்கிறது பற்பல ஊழல்களின் வழியாக…. போபர்ஸ் ஊழல், ஆதர்ச வீட்டுவசதி சங்க ஊழல் போன்ற காங்கிரசின் புகழ் வாய்ந்த ஊழல்கள் என தினமும் ஒரு ஊழல் தினசரி செய்திகளில் ஒன்றாகிப் போனதால், இவற்றையெல்லாம் நினைவும் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை.

இவையாவும் உறுதியான எதிரணி அமையாதததையே உறுதிப் படுத்துகிறது.  பற்பல பின்னணிகளின் இருப்பிடமான இந்தியாவில் அனைத்து மக்களையும் இணைக்கும் பொதுவான  கொள்கை  எது?
சிங்கம் எதிர்த்தால் பிரிந்திருந்த மாடுகள் ஒன்றுகூடி எதிர்த்துத் துரத்தும் கதையில் படித்த ஒற்றுமையின் வலிமையை எப்படி வட்டாரக் கட்சிகளாகவே இருந்துவிடும் எதிரணிகளிடம் கொண்டு வருவது?
நமது நாட்டுக்குத் தேவை நல்ல பலம் வாய்ந்த ஓர் எதிர்க்கட்சி; இந்தியர் அனைவரும் தன்னை அதனுடன் இணைத்துத் தங்களை அடையாளம் காண உதவும் ஓர்  எதிர்க்கட்சி.

இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை தேசியக் கட்சி என்று வரையறுக்க வைத்திருக்கும் விதிமுறைகள் சில உள்ளன.     அவை:

  • இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை (அல்லது லோக் சபா) தேர்தலில் குறைந்தது மூன்று மாநிலங்களில் இருந்து 2% (அல்லது 11) இடங்களில் வென்றிருக்க வேண்டும்
  • மக்களவைக்கான பொதுத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் மக்களவையில் நான்கு இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்
  • நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் வட்டாரக் கட்சியாகவும் அறியப்பட வேண்டும்
  • மேலும் தொடர்ந்து ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநிலத் தேர்தலுக்குப் பிறகும் இந்தத் தகுதிகள் இருந்து வரவேண்டும்

இத்தகுதிகள் பெற்றாலே ஒரு கட்சி இந்தியாவின் தேசியக் கட்சியாகக் கருதப்படும்.

இதன் அடிப்படையில், காங்கிரசைத் தவிர்த்து  இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், பாரதீய ஜனதாக் கட்சி (தோற்றம்1980), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1925), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் (1964), தேசியவாத காங்கிரஸ் கட்சி (1999), பகுஜன் சமாஜ் கட்சி (1984) போன்ற கட்சிகள் ஒரு சில காலக் கட்டத்திலாவது தேசியக் கட்சிகள் என அறியப்பட்டுள்ளன. அவ்வாறு அறியப்பட்டாலும் இவை யாவும் இதுவரை சக்தி வாய்ந்த எதிர் கட்சிகளாக இல்லாமலே இருந்து வந்திருக்கிறது.

ethirani

சுதந்தர இந்தியாவில்  67 ஆண்டுகளில் இன்றுவரை 81% காலம் நாடாளுமன்றத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான், ஐந்தில் ஒருபகுதி கூட இல்லாத 19% கால ஆட்சிகாலத்தில் ஆட்சியமைத்த கட்சிகளின் எண்ணிக்கை 5 (ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா கட்சி [கூட்டணி], ஜனதா தளம் [கூட்டணி], சமாஜ்வாதி ஜனதா கட்சி [கூட்டணி], பாரதிய ஜனதா கட்சி [கூட்டணி]). இவையாவும் கூட்டணி இன்றி ஆட்சியமைக்க முடியாத நிலையில் தடுமாறியவை.  தொங்கு நாடாளுமன்றம் என்றால் அது எப்படி இருக்கும் என உணர்த்தியவை.

சுதந்தர இந்தியாவின் 67 ஆண்டுகளில் அமைந்த அமைச்சரவைகள் மொத்தம் 20.  இதில் எதிர்கட்சிகள் கூட்டணி கொண்டு ஆட்சி நடத்திய ஆட்சிகாலத்தில், 12 ஆண்டுகளில் 9 அமைச்சரவைகள் (7, 8, 11, 12, 14, 15, 16, 17, 18 அமைச்சரவைகள்) மாற்றம் நிகழ்ந்திருகிறது.  ஆட்சி அமைத்து தாக்குபிடித்த காலங்கள் இரண்டு வாரங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் என்பதே அதிக அளவு காலக்கட்டம் என்ற நிலைமையில் இருப்பது இந்தியாவின் எதிரணியின் நிலை. இதில் தாங்களும் ஊழலுக்கு சளைத்தவர்கள் அல்ல என மாட்டுத் தீவன ஊழல் என்று போட்டி போட்டுக் கொண்டு குறுகிய காலத்திலும்  ஊழல் அரசையும் நடத்திக் காண்பிக்கப்பட்டது இந்திய மக்கள் எதிர் கொண்ட மற்றொரு அநீதி.

தேர்தல் காலங்களில் ஒரு கட்சியுடன் சேர்ந்து எதிரணியாக உருவாகும் வட்டாரக் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் அக்கட்சி தங்களுக்கு எதிராகவே உருவாகிவிட இடம் அளிப்பதில்லை என்று கவனத்துடன் செயல்படுவதிலும் தவறில்லை.  அவ்வாறு அனுமதிப்பது  அவர்களது கட்சியின் நோக்கத்திற்கே எதிரானதுதான். இவ்வாறு பிரிந்து பிரிந்து சேரும் விதம் விதமான எதிரணிகளுடன் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் அடிப்படைத் தகுதி அந்த எதிரணி தோன்றிய முறையின் காரணத்தினாலேயே இல்லாமலும் போய்விடுகிறது.

ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை நட்சத்திரமாக கொள்கை அளவில் இந்தியர் அனைவரையும் இணைக்குமோ என்று தோன்றியது.  ஆனால் அதன்  கட்சியின் பெயர் வேற்றுமொழியில் அந்நியமாகித் தெரிகிறது.  ஆங்கிலத்தில் பெயர்கொண்டு  Progressive Movement of India / Progressive  party என்று இருந்திருந்தால் அதனுடன் தேசிய அளவில் ஓர்  ஒட்டுறவு தோன்றியிருக்கலாமோ என்ற எண்ணமும் வருகிறது. அதுவும் ஒரு வட்டாரக் கட்சியாகவே நின்றுவிடும் போலிருக்கிறது.  எவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடன் தேசிய ஆதரவு எதிர் பார்க்க முடியாதோ அது போலவேதான் ஆம் ஆத்மி என்பதும் இந்தியா முழுவதையும் இணைக்க வேண்டிய தேவையின் சாரம் இழந்து நிற்கிறது.

இந்த 16 வது பாராளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு ஒன்பது கட்டங்களாக, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை நடந்து, வாக்கு எண்ணிக்கை மே 16 இல் நடக்கவிருக்கிறது. பலம் வாய்ந்த தேசியக் கட்சியான காங்கிரஸ் வந்தால் நிலையான ஆட்சி அமையும். நாற்பது  இடங்களில் வெற்றி பெற்றாலே கூட்டணியில் இருப்பதால் பிரதமாரகலாம் என்ற கனவுகளும் மலர்கிறது வட்டாரக் கட்சித் தலைவர்களுக்கு. இந்த தேர்தலிலும் துண்டு துண்டுகளாக பூந்திகளாக இருக்கும் கட்சிகள் ஒன்று சேர்ந்து லட்டாக உருமாறுகிறது. பார்க்கவும் கேட்கவும் இனிப்பாக இருக்கிறது. அளவிலும், உறுதியிலும் பௌலிங் பந்து போல பலமாக இருக்கும் காங்கிரஸ் மோதி உடைத்து மீண்டும் அனைத்துக் கட்சிகளும் பூந்திகளாக சிதறிப் போகாமல் இருக்க இக்கட்சிகளை இணைக்கும் நல்லதொரு பொதுக் கொள்கை தேவை.

அந்த பொதுக் கொள்கை நாட்டின் நலன் என்பதாக இருக்க வேண்டுமே ஒழிய,   காங்கிரசை ஆட்சியில் இருந்து விரட்டுவது என்பதாக மட்டும் இருந்தால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம். நாம் யாவரும் இந்தியர் என்ற பொதுக் கொள்கையும், நாம் செய்ய விரும்புவது நாட்டு மக்களுக்கு நல்லதொரு தொண்டு என்ற பொதுக் கொள்கையும் இல்லாமல், வென்றால் எனக்குப் பிரதமர் பதவி என்று ஒவ்வொரு குட்டிக் குட்டிக் கட்சியின் தலைவர்களும் கொண்டிருக்கும் பொதுக் கொள்கை சரியான எதிர்க் கட்சியை, காங்கிரசை எதிர்த்து நிலைத்து நிற்கும் கட்சியை உருவாக்காது. அவ்வாறு சிறுகட்சிகள் இணைந்து கொண்டுவரும் எதிரணி வெற்றிபெற்றால்,  வரலாறு மீண்டும் திரும்புகிறதோ மீண்டும் தொங்கு நாடாளுமன்றம் என்ற நிலைதானோ என்ற அச்சமும் வந்துவிடுகிறது இந்தியர்களுக்கு.

கார்கில் போர் நிகழ்ந்த காலத்தில் தேசப்பற்று இந்தியரை ஒருங்கிணைத்தது. ஆங்கிலயர்களை எதிர்த்து வெளியேறச் செய்ய காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைத்து போல, தேர்தல் சதுரங்க விளையாட்டின் செக்பாயிண்ட் செய்யும் வலிமை மிகுந்த எதிர்கட்சியை நாட்டின் முன்னேற்றதிற்காக உருவாக்க அதே ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கிரிக்கெட் விளையாட்டினால் ஒருகால் முடியலாம். ஏனெனில் நாமறிந்த வகையில் போரற்ற அமைதி காலத்தில் தற்கால இந்தியர் அனைவரையும் இணைப்பது கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே. மக்கள் விரும்பும் கிரிக்கெட் வீரர் எவராவது எதிர்காலத்தில் கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் இறங்கினால் இளைஞர்களை தம் பக்கம் இழுத்து ஒருங்கிணைத்து ஒரு சக்தி வாய்ந்த தேசிய எதிர்கட்சியை உருவாக்க இயலக்கூடும்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “எதிர்க்கட்சிக் கூட்டணியின் திருப்தியும் திருப்பதி லட்டும்

  1. நல்ல அலசல் தேமொழி.

    மக்களைக் (வாக்காளர்களை) கவர்வதே கொள்கை; அதிகாரத்தைப் பெறுவதே இலக்கு என்பதே இன்றைய அரசியல் நடைமுறையாய் இருக்கிறது.

    /மக்கள் விரும்பும் கிரிக்கெட் வீரர் எவராவது எதிர்காலத்தில் கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் இறங்கினால்/

    சச்சின் தான் கண்ணுக்குத் தெரிகிறார். ஆனால், அவருக்கு இந்தத் துணிச்சல் இருக்கிறதா தெரியவில்லை.

  2. “மக்களைக் (வாக்காளர்களை) கவர்வதே கொள்கை; அதிகாரத்தைப் பெறுவதே இலக்கு என்பதே இன்றைய அரசியல் நடைமுறையாய் இருக்கிறது.”
    மிகச் சரியாகச் சொன்னீர்கள் அண்ணாகண்ணன். அகமொழி போலத் தெரிகிறதே 🙂
    எனக்கும் இதை எழுதும் பொழுது சச்சின்தான் என் மனதிலும் தோன்றினார்.
    பாராட்டிற்கு மிக்க நன்றி

  3. மிக அருமையான ஒரு கட்டுரை சகோதரி. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசியலின் நிலையை fast trackல் அலசி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    //தற்கால இந்தியர் அனைவரையும் இணைப்பது கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே//

    இந்தக் கூற்று உண்மை எனினும், பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள், விளம்பரப் படங்களில் நடித்து கல்லாவை நிறைப்பதிலேயே முனைப்பாக இருப்பது நெருடலாக உள்ளது சகோதரி!

  4. நல்ல கட்டுரை தேமொழி ஆனால்

    “…..இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடைகளில் ஒன்றாக இருப்பது சரியான ஒரு தேசிய எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாமல் போவது. இதுநாள் வரை ஆளும்கட்சியின் அபத்தங்களை தட்டிக் கேட்க தகுதி நிறைந்த எதிர்க் கட்சி ஒன்று இல்லை…..”

    என்ற உங்களின் வார்த்தைகளில் எனக்கு அத்தனை சம்மதமில்லை .ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற அடைமொழிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறிவிடுகிறது .

    இந்தியாவின் முன்னேற்றத்தில் நம் மீடியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன .உதாரணத்துக்கு ஒன்று , மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்ட் கட்சி காணாமல் போக காரணமானது TATA வின் நானோ கார் தொழிற்சாலை. அது தொடங்க இடங்கள் வாங்கிய போது அதை எதிர்த்து மக்கள் போராட்டம் அரசியல் ஆதரவுடன் நடந்தது அந்த நேரத்தில் பத்திரிகைகள் வங்க மக்களை வஞ்சிக்கும் வங்க அரசு என செய்திகள் வெளியிட்டன . தொழிற்சாலை தொடக்கம் நின்று போனது .

    அதே தொழிற்சாலை குஜராத்தில் தொடங்கப்பட்டது இங்கும் இடங்கள் கையகப்படுத்தப்பட்டது அப்போது அதே மீடியாக்கள் தொழில்வளம் பெருக்கும் குஜராத் அரசு என்று செய்திகள் வெளியிட்டது.

    ஒரு தொழிற்சாலை வங்கத்தில் துவங்கினால் மக்களை வஞ்சிக்கும் அரசு என்றும் குஜராத்தில் துவங்கினால் வளம் பெருக்கும் அரசு என்றும் பத்திரிகைகள் சொல்கின்றன.

    இந்த நிலையில் அரசுகளின் செயல்பாடு சரி தவறு என்று வேறு சில ஆதாய நோக்கில் பத்திரிகைகள் வெளியிடுகின்றன ஆகவே இந்தியாவின் முன்னேற்றத்தில் பத்திரிக்கைகளும் தங்கள் சார்பு நிலையில் தங்கள் பெரும் பங்கு கொடுத்து முன்னேற்றத்தை கெடுக்கின்றன.

  5. உங்கள் பாராட்டிற்கு நன்றி  கவிஞர் சச்சிதானந்தம்.  
    யாராவது ஒரு விளையாட்டு வீரர் மாற்றி யோசிப்பாரா பார்ப்போம்.
    நடிகர்கள் வரும் பொழுது இவர்கள் வந்தால் என்ன என்று தோன்றியது 🙂

  6. உங்கள் மறுமொழிக்கு  நன்றி அமீர்.   பத்திரிக்கைகளும் நடுநிலை என்பதை மறந்து  அவ்வப்பொழுது  ஆளும்  கட்சியின்  கொள்கைப் பத்திரிக்கைகள் போலத்தான் நடந்துகொள்கின்றன.  மறுபக்கம் மற்றும்  சில  எதிரணிக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தங்கள் மறைமுக நோக்கத்தை நடத்தப் பார்க்கின்றன. இதில்   காற்றில்  போய்விடுவது பத்திரிக்கை தர்மம்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *