வாசிப்புகளின் வாசலிலே – தி.சுபாஷிணி

தொகுப்பு: வே.முத்துக்குமார்

tkc

இந்நூலின் தொகுப்பாசிரியரான வே.முத்துக்குமார் சிறந்த இலக்கியவாதியும் படைப்பாளியும் ஆவார். பிரபல நாளிதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதிவருபவர். இவர் தி.க.சி.யின் ஆத்மார்த்த சீடர். வெளிஉலகத்திற்குத் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாது, தி.க.சி. அவர்கள்பால் அன்பு கொண்டு, அவருக்குத் தொண்டு புரியும் நெல்லைப் பண்பாளர். தி.க.சியின் இலக்கியப் பொக்கிஷங்களைத் தூசிதட்டி அடுக்கு ம்போது கிடைத்த நல்முத்து இந்நாட்குறிப்புகள்.  1948 ஆம் ஆண்டு டைரியில் முதல் நாள் தொடங்கி, நவம்பர் மாதம் பாதி நாட்கள் அய்யா குறிப்பு எழுதியிருக்கிறார்கள்.  முத்துக்குமார் இதைப்படித்த உடன் ‘இது ஒரு கால ஆவணம்’, எனக்கருதி நூலாக வடித்தார். அய்யாவின் இளம் வயது புகைப்படம் அட்டைப்படமாக அமைந்தது. பின்னட்டையில் இன்றைய தி.க.சி. அத்தோடு கி.ரா.வின் அழகான குறிப்பு!

எனக்குக் கிடைத்த நண்பர்களில் தி.க.சி. வித்தியாசமானவர். என்னிடமுள்ள நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டவர். சுமார் அறுபது ஆண்டுகளாக எங்கள் நட்பு நீடித்து வருகிறது. நான் மாறிக்கொண்டே வந்திருக்கிறேன் பலபல விசயங்களில். அவர் மட்டும் அச்சு அசல் தி.க.சி.யாகவே இருந்து வருகிறார். ‘மூத்த பிள்ளை’ என்று எங்களுக்குள் நாங்கள் தி.க.சியை குறிப்பிட்டுக்கொள்வோம். தி.க.சியை எதோடு ஒப்பிட்டுச் சொல்லுவது என்று நினைக்கிறபோது எனக்கு அவரை சுக்குக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ரசிகமணி சொல்லுவார்: “நாக்குக்குத்தான் -சுக்கு காரம்; குடலுக்கு ரொம்ப இதம்”. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் உண்டா?

இந்நூலைப் பதிப்பிக்க சந்தியா பதிப்பகம் முன் வந்து, இம்மாதம் 15 ஆம் நாள் அய்யாவின் கைகளில் அமரும் படி செய்துவிட்டனர். இதைவிட தி.க.சி. அவர்களுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும். நிச்சயமாக இந்நூல் கிடைத்ததும், ஒரு குழந்தையைப்போல் மகிழ்ந்திருப்பார். அந்த மகிழ்ச்சியின் நீட்சியிலேயே எனக்கொரு பிரதியும் அவர் கையால் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலியானேன். அப்பாக்கியத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பேறும் உடனே கிடைக்கப்பெற்றுவிட்டேன்.

ஆம். இது ஒரு கால ஆவணம்தான். 1925 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் நாள் தொடங்கிய வாழ்க்கையின் நீட்சியில் ஒரு கூறின் செயல்பாடு. அச்செயல்பாட்டு நாட்களின் சில குறிப்புகளை உங்களுக்கு அந்நூலிலிருந்து அளிக்க விழைகின்றேன்.  இதோ:&

Friday, 30th January 1948

சர்வஜித்து தைமீ 17 வெள்ளி

இன்று மாலை 5.30 மணிக்கு உலகம் போற்றும் உத்தமர், அகிலமெங்கும் அஹிம்சை ஒளிபரப்பி அண்ணல், மகாத்மா காந்தி பிர்லா மாளிகையின் முன்பு, பிரார்த்தனைக் கூட்டத்தில், காக்கிச் சட்டையணிந்த ஒரு இந்துவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  மார்பிலே ஒரு குண்டும், வயிற்றிலே 2 குண்டுகளும் பாய்ந்தன.  காந்திஜியின் மரணச் செய்தி உலகையே கண்ணீர் விடச் செய்து விட்டது.  இந்தியா முழுவதும் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்தது.  ‘நல்லவனுக்கு இது காலமில்லை’ என்றார் ஷா. 8.30 மணிக்கு நேருவும், பட்டேலும் ஒலிபரப்பினர்.  நாளை காலை 11 மணிக்கு பிர்லா மாளிகையிலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு யமுனை நதிக்கரையில் அடக்கம் நடைபெறுமாம்.

Friday, 30th January 1948

சர்வஜித்து தைமி 18 உ சனி

இன்று நகரெங்கும் பரிபூரண ஹர்த்தால் கார், வண்டிகள், ரயில்கள் ஒன்றும் ஓடவில்லை.  கடைகள் மூடப்பட்டன.  விட்டு விட்டு லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

காலையிலே 10 முதல் 2 வரை ஆபீசிலே வேலை நடந்தது!  ‘Petty cash, Postage வவுச்சர்கள் போட்டு supplementary day book  எழுதினார்கள். Cash bookகிலும் நான் கை வைத்தேன்.

நேற்றைய General Ledger விஷயமாக, posting விஷயமாக Accountantக்கும் எனக்கும் சிறு சண்டை வந்தது.  அவர் அதைச் செய்கிறேன் என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார்!

மாலையிலே ரேடியோக் கேட்டு விட்டு நகர்சுற்றி, நயினார்குளம் வரை போய்த் திரும்பினோம். இரவு சபாபதி வீட்டில்  ரேடியோ கேட்டோம்.  5 மணிக்கு காந்திஜியைத் தகனம் செய்தார்கள் யமுனை நதிக்கரையில்.

Thursday, 12th February 1948

சர்வஜித்து தைமீ 30உ வியாழன்

காலையில் குமரகுருபரன் வீட்டிற்கு வந்தார்.  இன்று காந்திஜியின் சாம்பல் கரைக்கும் நாள்.  காலையிலே ஊர்வலம் சென்றது.  மாலையில் லாலா சத்திரமுக்கில் பந்தல் அமைத்து பாவையர் நூல் நூற்றனர்.  சாயங்காலம் சர்வகட்சிகளும் அடங்கிய மாபெரும் ஊர்வலம் ஒன்றும் ஆற்றங்கரையை நோக்கிக் கிளம்பியது.  ‘சுப்பரம், தீச்சட்டி, மொட்டைத் தலை’ ஆகியவைகளுடன் ஊழியர்கள் துக்கம் கொண்டாடினார்.

நானும் சோமுவும் 10.30 மணிக்கு ரகுநாதன் வீடு சென்றோம்.  பேச்சு, திருக்குறள், காமத்துப்பால் ஆராய்ச்சி, ராஜரத்தினத்தின் கதையைத் திருத்துதல் ஆகியலை நடந்தது.  இரவு அண்ணாச்சி வீட்டில் ‘Oil’ முகவுரையை வாசித்து விட்டு பார்க்கிலே People’s Age  படித்தோம்.  இரவு 12 வரைக்கும் மீண்டும் People’s Age வாசித்தேன்.

(Oil -அமெரிக்க எழுத்தாளர் அப்டன் சிங்லர் எழுதிய நாவல்)

Monday, 23rd February 1948

சர்வஜித்து மாசி மீ 1உ திங்கள்

Letter to  கலியபெருமாள்

படிப்பு : People’s Age – Illustrated weekly

அரசியல் : காந்திஜியின் கொலையைப் பற்றி கிமிசிசி யில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் குற்றச் சாட்டும் படேலின் பதிலும்.

பொருளாதாரம் : பாங்கில் நிறைய தங்க நகைகள் அடகுக்கு வருகின்றன, மக்கள் தனது கடைசி உடைமைகளையும் அடகு வைக்கின்றனர்.

சமூகம் : சபாபதி வீட்டிலே இரவு ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.  கட்சி அபேட்சகர்கள் 8 இல் 4 பேர் திருச்சி கவுன்சிலர்கள் ஆயிருக்கின்றனர்.

இலக்கியம் : ‘தேனீயின் விளம்பரம் பார்த்தேன்.  மற்ற மறுமலர்ச்சிப் பத்திரிகைகளின் கதி தான் இதற்கும் என்றார் சபாபதி.  ஆம், உண்மை.

நண்பர்கள் : தி.ப.தி.க்கு ஜலதோஷம் எனக்கு அஜீரணம்.  மோரீஸ் பழத்தினால் புளிச்சேப்பம் உண்டாகிறது.

தேனீ & எம்.வி. வெங்கட்ராமை ஆசிரியராக கொண்டு கும்பகோணத்திலிருந்து வெளிவந்த இலக்கிய மாத இதழ்

Friday, 27th February 1948

சர்வஜித்து மாசி மீ 15 உ வெள்ளி

Letter to Chidambaram; Salary Day

அரசியல் : Draft Const. ஐ புகழ்ந்து பத்திரிகைகள் பிதற்றுகின்றன.  1951 வரை எலெக்ஷன் கிடையாது என்றுவிட்டார் படேல்.

பொருளாதாரம் : தையல்காரன் கூலியை 8 அணா லாபப்படுத்திக் கொடுத்ததற்காக சங்கரனுக்கு ரூ.0-1-3 லஞ்சம் காப்பிச் செலவு! இது தொழிலாளி வயிற்றில் அடிப்பது தான்.  8 உருப்படிக்கு ஒன்னரை ரூபாய்!

இலக்கியம் : ஜகன்நாதன் எனக்கு தன்னம்பிக்கை இல்லை என்றார் ‘கலைஞர் கழக’ விஷயமாக.  நீங்கள் தான் அதற்கு வெட்கப்பட வேண்டும் என்றேன் நான்.  Typical  திருநெல்வேலிப் பண்பாடு ஜகன்நாதன் பேசியது என்றார் தி.ப.தி.

நண்பர்கள் : நடராஜன் நேற்று முழுவதும் தூக்கமில்லை, அண்ணாச்சி வருந்தும் படி ரேடியோவை நிறுத்திவிட்டதால் & எனறு தனது முன்கோபத்தைப் பற்றிச் சொன்னார்.  இரவு 10 மணிக்கு கொஞ்ச நேரம் அவர் பாணியில் பேசிக் கொண்டிருந்தேன்.  சென்னைப் பயணத்தைப் பற்றிய கனவுகளால் இன்று தூக்கமில்லை.

Wednesday,  21st April 1948

சர்வஜித்து சித்திரை மீ 9 உ புதன்

Letter to Sailappan; Letter from Va.Ka

அரசியல் : காஷ்மீரைப் பற்றிய ஐ.நா தீர்மானத்தை ஜயங்கார் மறுத்து விட்டார்.  லாகூரில் பஞ்சாப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரொமேஷ் சந்திரா கைது செய்யப்பட்டார்.

ஆபீஸ் : டவுன் ஆபீசை மூடும்படி உத்தரவு வந்துவிட்டது.  தந்தியில் விளம்பரம் வருகிறது.  அதற்கு 2 * 2 காலத்திற்கு ரூ. 16 கூலி!

மாலையில் நேற்றைப் போல் இன்றும் ஆற்றிலே குளிக்கச் சென்றோம்.  பேச்சு sex விஷயத்தை சுற்றிச் சுற்றி வந்தது.  இன்று சற்று முன்னே எட்டிப் போய்க் குளித்தோம்.

நேற்று குளித்ததினால் இன்று கால்வலி வந்துவிட்டது.  வலதுகால் மட்டும் அதிகமாய் வலித்தது.  இரவு பாலகணபதி விலாசில் சாப்பாடு, நடராஜன் பற்று ரூ. 2-8-0!

Wednesday, 5th May 1948

சர்வதாரி சித்திரை மீ 23உ புதன்

Letter to Va.Ka & Chidambaram; Letter from Chidambaram

அரசியல் : ராஜாஜி, கவர்னர் ஜெனரல் ஆகிவிட்டார்.  தென்னிந்தியாவில் குதூகலம்.  ஜவஹர் அடுத்த மாதம் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம்.

இலக்கியம் : ‘தேனீ விமர்சனம் வ.க.வுக்கு.

சமூகம் : ராஜாஜியின் நியமனத்தைக் கண்டு அய்யங்கார்கள் துள்ளுவார்களாம்!

பொருளாதாரம் : பல்புரூசு ரூ. 1-1-0, பல்பசை ரூ.0-14-0, பல்பொடி ரூ.0-1-0, கேசவர்த்தினி ரூ.0-12-0, பூட்ஸ் ரூ.3-5-0, இப்படியாக பல சாமான்கள் வாங்கினேன். தையல் கூலி ரூ.0-1-2-0.

குளிப்பு : இன்று சபாபதி வராவிட்டாலும், நேற்று குளிக்காததை ஈடு செய்ய இன்று 9 மணிக்குப் போய் குளித்தோம்.

Friday, 28th May 1948

சர்வதாரி சித்திரை மீ 15உ வெள்ளி

‘ஷாப் சட்டப்படி வேலை முடிந்தாலும் நீங்கள் 7 மணி வரை ஆபீசிலேயே இருக்க வேண்டும். S.I.Bankல் அப்படித் தான் சட்டம்!  என்றார் ஏஜண்டு. வேலையில்லாமல் சும்மா இங்கே உட்கார்ந்திருப்பானேன்? Indian Bank இல் எப்படி நடக்கிறது பார்த்தீர்களா? என்றேன் நான்.

‘சிவாஜி’யிலே என் பெயரையும் சேர்த்து எழுத்தாளர் மகாநாட்டுப் பிரதிநிதிகளில் ‘பிரபலஸ்தர்கள்’ என்று திலோகம் குறிப்பிட்டிருக்கிறார்!

தலைமறைவாயுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு தங்க இடமோ, குடிக்கத் தண்ணீரோ, பணமோ கொடுத்தால் 3 மாதக் கடுங்காவலும், 1000ரூ அபராதமும் விதிக்கப்படும் என்ற பாசிஸ அவசரகச் சட்டம் நேற்றைய பத்திரிகைகளில் வந்துள்ளது.

திருலோகம் & திருலோக தீதாராம்: சிவாஜி இதழாசிரியர்

Fridaay, 23rd July1948

சர்வதாரி ஆடி மீ 8உ வெள்ளி

படிப்பு : ‘லெனின் பிறந்தார்’

அண்ணாச்சியிடம் ரகுநாதன் கடிதத்தைக் காட்டினேன்.  அமப்பித்தனின் ‘செல்லம்மாளை’ ரொம்பவும் பாராட்டினார் நடராஜன்.  சபாபதி ஆபீசுக்கு வந்தார் சம்பத்துக்கு மணியார்டர் செய்ய.

இன்று Junior சிவசங்கரனுக்கு 6 மாதப் பிறந்த தின விசேடம்.  எனக்கு பாயாசச் சாப்பாடு! இரவு சபாபதி வீட்டிலே சீட்டாட்டம்.  ராத்திரி சாப்பிடாததால் உறக்கமில்லை.  Weeklyல்  C.R.Mandyயின் கதைப் படித்தேன்.

கே. வேலாயுதம் ரொம்ப பெரிய மனுஷன் ஆய்விட்டான், நண்பர்களை மறந்துவிட்டான்’ என்று கூறினார் தி.ப.தி.

Friday, 24th September 1948

சர்வதாரி புரட்டாசிமீ 9உ வெள்ளி

Office safety ordinance issued!.

1. பியூன்களை சொந்த வேலைக்கு ஏவக் கூடாது.

2. ஆபீஸ் நேரத்தில் வெளிச் செல்லக் கூடாது.

3. ஆபீசில் பத்திரிகைகள் படிக்கக் கூடாது.

4. இடைவேளியில் அரசியல் பேசக் கூடாது.

ஏஜண்டு மட்டும் இத்தனையும் இதற்கு மேலும் செய்யலாம்.  அநீதி!  ஆபீசில் கருங்காலி C.V.R. பண்ணிய வேலை இது! கருங்காலிகளைக் கருவருப்போம்!

இரவு 8 முதல் 9, மாணிக்கம், தி.ப.தி. நான் ஆகியோர் இலக்கியம், சினிமா, கலைகள்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

இரவு ஆகாரம் கஞ்சி. இரவு 12 மணிக்கு தம்பியை ஏசினேன்.

Wednesday, 6th October 1948

சர்வதாரி புரட்டாசி மீ 21உ புதன்

Book Post from A.I.R

இன்று ஆபீசில் விரோதம் ரொம்ப வளர்ந்து விட்டது.  மேஜையில் தான் உட்கார்ந்து மதுசூதனனுடன் பேசிக் கொண்டிருப்பது பற்றி ஒவ்வொருவரையும் explanation கேட்டார் ஏஜண்டு.  பிறகு இன்னொரு explanation.

Cashier-க்கும் Accountant க்கும் எவ்வித சம்பந்தமுமில்லையா? Fixed deposit இருக்கிறதே?  என்று கேட்டு ஏஜண்டை எதிர்த்து விட்டேன்.  இதை ராமகிருஷ்ணய்யர் சபாபதியிடம் சொல்லி ரொம்ப கண்டித்தாராம்.

முத்தையா என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டான்.  இதை நான் எதிர்பார்க்கவில்லை, C.V.R ம் பாதி துரோகம் பண்ணி விட்டான்.  ராமகிருஷ்ணய்யர் நடுநிலைமை.  இரவு மதுசூதனன் வீட்டிற்குச் சென்று 2 மணி நேரம் மந்திராலோசனை செய்தோம்.  வழக்கம் போல் சபாபதி வீட்டிற்குச் சென்று ஸோமாசுடன் பேசிவிட்டு 10.30க்கு வீடு.

Monday, 15th November 1948

சர்வதாரி ஐப்பசி மீ 30உ திங்கள்

Post from People’s Age; Card to Chidambaram

காலையில் வ.க. சகோதரர்க்ள 9.30 மணிக்கு வந்தனர்.  பாளையங்கோட்டை பைண்டிங் ஆபீஸ் போய் விட்டு மீண்டும் மத்தியானம் வந்தனர்.  ஆபீஸ் ஜோலியை முடித்து விட்டு, பொன்னு கடைக்குச் சென்றோம்.  பின் ஸோமாஸைப் பார்க்கச் சென்றோம்.  போகும் போது, ‘அதிர்ஷ்டம், விதி, தர்மம், கடவுள்’ இவைகளில் அசோகனுக்கு அதிக நம்பிக்கை வந்துவிட்டதென்றும் அவைகளைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்னவென்றும் கேட்டார் வ.க.

முயற்சி, திட்டமிட்ட உழைப்பு, தன்னம்பிக்கை, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துதல்’ ஆகியவற்றில் தான் எனக்கு நம்பிக்கை என்றேன்.

பிறகு பார்க்கில் உட்கார்ந்து, ‘சிந்தனை, இலக்கிய விமர்சனம், கிராம ஊழியன், சல்லியர் கோன் கதைகள்’ இவைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  உண்மையான விமர்சனத்தைப் பாராட்டும் பண்பை தமிழ்நாடு பெறவில்லை என்றார் வ.க.

Tuesday, 16th November 1948

சர்வதாரி கார்த்திகை மீ 1உ செவ்வாய்

Letter to  தி.ப.தி; Letter from Raghunathan

இன்று மனைவி வீடு தொடும் விசேடம் நடந்தேறியது.  பாயாசத்துடன் சாப்பாடு.  குழந்தையின் பெயர் ஜெயலெட்சுமி.  வாழ்க அவள்!

“1948ல் நானெழுதிய நாட்குறிப்புகள் ஒரு முதிரா இளைஞனின் இலட்சியத் தேடல்களையும் பல்வேறு உளநிலைகளையும் பலவீனங்களையும் ஓரளவிற்குப் பிரதிபலிக்கின்றது” என்று தி.க.சி. அவர்கள் கூறுகிறார்.

இந்நூலை மகாகவி வழிவந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் தோழர். இரா. நல்ல கண்ணு, தோழர் என்.சங்கரய்யா, தோழர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு மனமுவந்து காணிக்கையாக அளித்திருக்கிறார்.

ஒரு நூற்றாண்டின் இயக்க, இலக்கிய, திறனாய்தலின், நடுநிலை விமர்சனத்தின், இளம் படைப்பாளிகளின் ஊக்கமாய், இலக்கியத் தோட்டக்காரனாய் அனைத்துக்கும் மேலாக மனுசத்தனம் வற்றா ஊற்றாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார்  தி.க.சி.

நூல்: தி.க.சி.யின் நாட்குறிப்புகள்

தொகுப்பாசிரியர்: வே.முத்துக்குமார்

பக்கம் & 176

விலை & 125 ரூபாய்

பதிப்பகம் & சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை & 83

& கி.ரா.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *