அமீர்
தோழி மணிமொழி….
உனக்கு அன்போடு
நான் எழுதிய கடிதங்கள் போலில்லாமல்
இது
மன ஆற்றாமையில்
எழுதுகிறேன் கவிதையோடு

ஊர் கூடி தேரிழுப்பது எங்கும் நடக்கும்
கூடிய ஊரை
தேர் இழுத்தது
என் ஊரில் மட்டுமே நடக்கும்
அதை செய்தது ஒரு வெள்ளாவிக்கூட்டம்
இது
இ.பி.கோ அஞ்சும்
மாபியா கூட்டம்

குட்டையை குழப்பி
கொள்ளை அடிக்கும் வித்தையை
விரல் நுனியில் வைத்திருக்கும்
சத்தத்தை எழுப்பி
சட்டத்தை அடக்கி
நம் தலைமேல் நிற்கும்

இப்படி
ஊருக்கு ஒன்பது கூட்டம்
பேருக்கு வெள்ளையும் சொள்ளையும்
அதற்கு பெயர் கட்ட பஞ்சாயத்து
இந்த அரக்க விதை
யார் போட்டு முளைத்தது?

ஆண்டவனை விலக்கி
ஆள்பவனை உச்சரித்து
ஒரு
அராஜகம் ராஜாங்கம் செய்ய தீர்ப்பு தரும்
இந்த திருவாளர் நாட்டாமை கூட்டம்
இது
கரம்பைக்காட்டின்
கள்ள நரியே தோற்றுப்போகும் தந்திரக்கூட்டம்

உயிர் இல்லா ஒன்றுக்காக
உயிர் எடுக்கும்
உயிர் உள்ள ஒன்றை
மயிர் என்றே மதிக்கும்

சீறும் சிங்கத்திற்கு
சோப்பு போடும்
சிலுப்பும் பிடறியில்
சீப்பு போட்டு பூவும் சூட்டும்

சாக்கடையை நிற்கவைத்து
பூக்கடை என்றே சொல்லும்
மறுப்பவரின் மூக்குடைத்து
பணக்கத்தை கறக்கும்

படமெடுக்கும் பாம்புக்கு
சலாம் போடும்
நல்ல புடம் போட்ட மனிதருக்கு
சமாதி கட்டும்

நம் முயலாமையை விரட்ட
நமக்கே
முயல் ஆமை கதை சொல்லும்
இக் கூட்டத்திடம் சிக்கும்
எந்த தளபதியின் தலையும் தலை பாதியாகும்.

மந்திரியும் தந்திரியாகி
காவலரும் கள்ளராகும்
பாவிப்பய ராஜ்ஜியத்தில்
கைக்கூலி வாங்கிக்கொண்டு
துலாக்கோல் பூஜ்ஜியமாக்கும்
இந்த
தத்தாரி கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை

தேளடைந்த வீட்டுக்குள்
என்னை பூட்டும்
இந்த சாவியில்லா பூட்டுக்களை திறக்க
அஃ றினை உயிரினை
தேடாமல்
துணிச்சலெனும் எறிகணை கொண்டு உடைத்திடவா
மிரட்சியும் மிரண்டலையும்
தூக்கியெறிந்து
முறுக்கிய தெம்போடு மிரட்டலை மிதித்திடவா

அனிச்ச மலராயில்லாமல்
அக்னி உடுத்திடவா
வருத்தம் கொண்டு உடையாமல்
விரட்டும் வேடனாகிவிடவா
கண்ணீரை கொட்டாமல்
கொதிக்கும் வெந்நீராய் மாறிடவா
உருகும் மெழுகாயில்லாமல்
உருக்கும் தீயாய் மாறிடவா

சொல் மணிமொழி
சொல்.
-அமீர்-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *