எந்தன் கணிணி திறப்பின் ரகசிய குறியீடு எண்ணாக உன் பெயரே!!

அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே..

எண்ணங்களில் உனைச் சுமந்து.. ஏட்டளவில் அதை வரைந்து.. எழுதிவைக்கும் கடிதங்கள் எல்லாமே உன் திசை நோக்கி ஏற்றிய தீபங்களே!!  அன்பின் அடர்த்தியை அன்றாடம் எனக்களித்து ஆதாரம் நீ என்பதை என் நெஞ்சில் நிலைநிறுத்தியவளே! கண்துயிலும் நேரம்கூட கனவுகளில்தான் கலந்து ஒன்றாகி இருக்கின்ற உறவே! மண்மூடும் நாள்வரையில் மறக்காத உன்னை நான் ஒரு நாளும் எண்ணிடவே மறவேன்! இதயத்தில் எழுதிவைத்த உன் பெயரில் இம்மியளவும் மாற்றமில்லை பார் என்றே இரவுபகல் துடிக்கின்ற இதயமது சொல்வதை நீ வந்து கேள் கண்ணே!  நாட்கள் கழிகின்றன! வாரங்கள் வருகின்றன! மாதங்கள் செல்கின்றன! வருடங்கள் உருள்கின்றன! மங்கையே நீ எங்கே சொல்? 

பிரிவென்னும் இருளினிலே தவிக்கின்ற என்னை நீ மறந்தாயோ என்றுமட்டும் என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை! கண்களால் பேசும் கலையினைக் கற்றுத்தந்தாய்!  காதல் என்னும் பல்கலைக்கழகத்தைக் கண்களிலே திறந்துவைத்தாய்! கவிஞன் என்கிற அடையாளத்தை உனக்காக வரைகின்ற ஒவ்வொரு வரியிலும் நிச்சயித்தாய்! ஆழ்மனதில் உன்னைமட்டும் பத்திரமாய் வைத்திருப்பேன் என்று நீ சொல்லிய சொற்கள் இன்னும் என் காதுகளில்! அன்பின் நீலாம்பரியாய் நீ அனுதினமும் என்னில் வந்தாய்! தினமும் காலையிலே பூபாளம் பாடி எனைத் துயிலெழுப்ப வருகின்றாய்! அனுதினமும் அமிர்தவர்ஷினியாக அன்புமழை பொழிகின்றாய்! இமைப்பொழுதும் நீங்காதிருக்க இரவிலும் நீலாம்பரி நீயாகின்றாய்! இத்தனை சுகங்களிருக்க.. ஏனடி முகாரி தந்து பிரிவில் என்னைத் தள்ளுகிறாய்? திகட்டத்திகட்டப் பேசியிருந்த காலங்கள்.. திசைமறந்து போனது இக்கணமோ?

கவிதைவழி உறவே.. கனிந்துருகும் நினைவே.. நீ எனக்காக எழுதிய மடலொன்று உன் மனதின் பிரதிபிம்பமாய் இதோ என் நினைவுப்படலத்தில் நித்தம் நிழலாடுகிறது!

மாயம் செய்தவனே!!

ஒன்றா இரண்டா உன் மடல்கள்

ஒவ்வொன்றும் எனக்கானதன்றோ?

தேனா கள்ளா நானறியேன்

திசைகள் மறந்து நான்பறந்தேன்!!

 

கவிதைப் பாற்கடல் வார்க்கிறாய்

காதலில் நூதனம் சேர்க்கிறாய்

களவியில் வாழ்க்கைப் பாடத்தை

கரும்பென வார்த்தையில் வடிக்கிறாய்!!

 

தலைப்புகள் தருவதில் மன்னனாய்

தலைப்புக்குள் நீயொரு கண்ணனாய்

மயக்கம் தருபவன் நீயன்றோ?

மலர்ந்தேன் நானும் பெண்ணன்றோ?

 

காவிரி என்கிற பெயர்கொண்டு

கரைபுரண்டு ஓடும் தமிழ்கண்டு

ஆவலைத் தூண்டும் அலைகடலே – நான்

காவலைத் தாண்டும் நாள்வருதே!!

 

எழுதும் ஒவ்வொரு சொல்லிலும்

ஏகாந்தம் கலப்பது எப்படி?

ஏட்டினில் பதியும் மடல்களில்

எத்தனை எத்தனை சுகமடி??

 

உறக்கம் மறக்க வைக்கிறாய்

உள்மனதில் எப்போதும் நிற்கிறாய்

உலகம் முழுக்க சொர்க்கமாய்

உடனே மாற்றிக் காட்டுகிறாய்!!

 

முத்தம் மோகம் மோகனம்

பித்தம் பிடிக்கவே வைக்கிறாய்

நித்தம் இதுபோல்நீ தொடர்ந்தால்

சித்தம் என்னடா ஆகிடும்??

 

நீ பொழியும் கவிமழையில்

நான் நனைந்தபிறகுதான்

என்னிருவிழிகள் மெளனமாய்

தூக்கம் கொள்ளச் செல்லுமே!!

 

செந்தமிழில் தொட்டில்கட்டி

என்தலைவன் பாடும்போது

உன்மடியில் தலைவைத்தே

கண்ணயர்வேன் கண்ணாளா!!

 

சிந்துகவிச் சரம்யாவும்

வந்துவந்து மோதுகையில்

என்வசத்தில் நானின்றி

உன்வசமாய் ஆகின்றேன்!!

 

அன்புமழை தினம்பொழிந்து

ஆனந்தத் தேனில்நனைந்து

இன்பமதை அணுஅணுவாய்

இதயம்வழியத் தருபவனே!!

 

உன்னிதயம் நான் வசிக்கும்

பள்ளியறை ஆனதடா!!

‘ம்’என்ற ஒற்றைச் சொல்லும்

உன்வரையில் நாதலயம்!

 

கண்மலர்ந்து கவிதைசொல்ல

காதலனே நீ வருக!!

என்னிடத்தில் உள்ளதெல்லாம்

உனதென்று உரிமை கொள்க!!

 

பெண்மையினை பேசவைக்கும்

உன்மடல்கள் ஆயுதமா?

உன்னை நான் களவாட..

என்னுள்ளம் எங்கும் நீயாட

உன்னடிமை ஆனதனை

உரிமையோடு கூறிடுவேன்!”

மறக்குமா நெஞ்சம்? மறந்தால் உயிர் நிலைக்குமா இன்னும்!!  எழுதிவைத்த ஓவியம்போல் என் நெஞ்சில் குடிகொண்ட உன் வார்த்தைகள் எத்தனை இன்பமடி!!

செவ்வாய் கனிந்து அவ்வாய் மலர்ந்து அருளிய முத்தங்கள் தித்திக்க.. பெண்மையின் மென்மையில் பேசமறந்த நான் உன்னை எண்ணியே வாயசைக்க.. இன்னுமா என்று நீ கேட்டாய் கண்ணசைவால்!  ரத்தத்தில் கலந்தினிக்கும் முத்தத்தைக் கொண்டு சித்தத்தைக் குளிரவைக்கும் கலையினையே காதல் புத்தகத்தில் எல்லாப் பக்கங்களும் பக்கம் பக்கமாக விவரிக்க.. கண்ணே.. உன்னிடம் நான் சொல்லவந்த சேதி என்ன தெரியுமா? அக்கம் பக்கம் யாரும் இல்லை.. வெட்கம்விலக்கி இங்கே வா! முன்னுரை எழுத முகம் மட்டும் தா! கன்னங்கள் இரண்டும் கடன்கள் கேட்கும்.. நமக்குள் என்ன கணக்கா? 

வண்ணம்சிதறாமல் வந்துவிழும் முத்தங்களை ஒன்றுவிடாமல் சேர்த்துவைக்க கன்னங்களைவிட ஏற்ற இடம் எங்கே சொல்? கலகலவென நீ சிரிக்க.. உன் கெண்டைக் கொலுசுகள் ஜதிசொல்ல.. வாயாடி வளையல்கள் சிணுங்க.. அப்பப்பா.. எத்தனை சப்தஸ்வரங்கள்.. இதற்கிடையில் சத்தமிடாமல் முத்தமிடுவது எப்படி? புதிதாய் ஏதோ வரம்கேட்பதுபோல்.. புன்னகைப் பூவே.. உன்னிடம் நான்.. ஒன்று என்கிறேன்.. வேண்டாம் என்கிறாய்! ஆவல் தீரவே அள்ளி அணைக்கிறேன்.. அதற்குள் என்ன அவசரம் என்கிறாய்! கிடைக்கும்பொழுதை இனிக்க வைப்பதற்கு இதுபோல் சேவைகள் வேண்டும் என்றேன்! தேவைகளுக்கு புதிய பெயர் சேவைகளா என்று செல்லமாய் கிள்ளினாய்! ஏதோ கோர்வையாய் வருகிறதே என்று சொல்லிவைத்தேன் என்றேன்! கவிஞருக்கு எதுகையும் மோனையும் கைவந்த கலைதானே என்றாய்! ஒருபக்கம் நீயும் உன் பக்கம் நானும் இருந்தால் முப்போதும் நான் கவிஞன்தானே!

நேற்றிரவு ரகசியமாய் உன் நெஞ்சம் தொட்டு எழுதிய வரிகளிவை..  பார் கண்ணே!  இன்பக் காதல்!  இலக்கியக் காதல்!  நினைக்கும்போதே இனிக்கும் காதல் என்பதில் வியப்பென்ன?

அசைந்தாடும் அழகிய வண்ணங்கள்.. நீர் அள்ளித்தெளித்து அங்கே புள்ளிவைத்து நீ வரைந்த கோலங்கள்.. வைத்த கண் வாங்காமல் அதை நான் பார்த்த காலங்கள்! காலையிளந் தென்றல் போகும் வழிதனிலே மங்கை நீ நடைபோட்ட மாயங்கள்! ஊரணியை நோக்கி நீ நடந்து ஓர்குடத்தைச் சுமந்து நீர் கொண்டுவர.. காதலியைத் தேடி நானும் பின்தொடர்ந்து பல்லவியைத் தொடரும் சரணம்போல! உன் பாதக்கொலுசொலி சொல்லிய ஜதியைக் கேட்டு என் திசைகள் திரும்பிக்கிடந்தன!  ஓரவிழிப்பார்வையால் ஒரு பார்வை பார் என்றே என் உள்ளம் உன்னை நோக்கித் தவமே கிடந்தது! மண்ணை நோக்கிய உன் பார்வை என்னை நோக்குவது எப்போது என்கிற கேள்விக்கு விடைகிடைக்காமல்..

தன்னையே உன்னிடம் தந்தவனாய்.. தாகம் உன் மேல் கொண்டவனாய்.. பெண்மையே வரம்தர வேண்டுமென்று நித்தமும் காத்திருக்கும் என் நெஞ்சம்! தும்பைப்பூ மலர்காட்டும் நிறம்தன்னை தூய நின் உள்ளத்திற்கு உவமையிட்டு.. சொல்லவிரும்பும் காதலை சொல்வதற்கு வார்த்தைக்கு வலிமையின்றி.. நான் தவித்த கதைதன்னை நீயறிவாய்!  ஏதோ விக்கல் வந்தவனாய் நான் நடிக்க..  அதையும் அறிந்தே நீ வந்து நீர்கொடுக்க.. கண்சிமிட்டும்நேரத்தில் நம் கண்கள் ஒன்றோடு ஒன்று கலந்துகொள்ள.. தீராத தாகமங்கே தீர்ந்ததென்பேன்! ஆறாத காயமங்கே ஆறியதாய்.. அன்பே நான் உணர்ந்தேன் அக்கணமே! போராட்டம் நடத்திய உன் இமைச்சிறகுகள் தாமாக தாழ்ந்தனவே வெட்கத்தால்!

யாரேனும் பார்த்துவிடப்போகிறார்கள் என்கிற பதட்டம் மட்டும் உன்னில்! மாலைக்கருக்கலென்றாலும் மலர்வனமே.. சோலைக்குள் நாம் கொஞ்சம் ஒதுங்கிநிற்கலாம்! காலைக் கதிரவனின் கடமையாற்றலிலே இவ்வுலகம் வெளிச்ச இதழ்களின் விரிப்பில் மலர்கிறதே!  நீர்த்துறையிலிருந்து நிறையவே பெண்கள் யார் கண்ணில் யாரென்று கணக்கெடுத்து வருகின்றார் பாரும் என்று உன் கண்ணசைவில் சொல்லிவிட்டுச் சென்றாய்! நீ அவசரத்தில் அள்ளியதால் குடத்தில் நிறைவுக்கு வழியின்றி நீரும் தள்ளாடித் தள்ளாடி நடத்தும் சங்கீதம் கேட்டபடி நானும்.. உன் வழியே நடைபோட்டுப் போனேன்! தொட்டுவிடத் தோதின்றி தொடர்ந்துவந்த உறவில்.. கண்பட்டுவிட்டால் போதுமென்று காத்திருந்த காலம்!

மாலை வருகிறேன் என்று மலர்க்கூந்தல் தனைப்பின்னி மகராணி காட்டிவிட்டாய் கோலம்! மனக்கதவைத் திறந்துவைக்க.. அங்கே எனக்கான ராஜ்ஜியங்கள்.. மையல்காலத்தில் மெளன ராஜாங்கம்! உந்தன் கரங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ள நினைக்கும் மனம்! எண்ணத்தை எழுதிவைத்ததுபோல் எப்படி நீயும் அப்படியே நினைக்கிறாய்? கற்பனைக் கலப்பில்லை.. கவிதைக்கு இடமில்லை.. சொற்களின் கூட்டணிகள் ஒருதுளியும் அங்கில்லை!  கண்கள் நான்கு  கலந்தபடி.. காதலின்பம் பொழிந்ததடி!  இந்திரசபை போல இதயம் திறந்ததடி!  மந்திரம் செய்தாயோ மாற்றம் நிகழ்ந்ததடி!! வார்த்தைகளைவிட அங்கே மெளனமே சிறந்ததடி! என்றும்  இருதயத்தின் அடித்தளத்தில் குடியிருப்பு நடத்தும் பெண்ணே.. நீ எந்தன் காதலி என்கிற பந்தம் கர்வம் தந்ததடி!

உன் பெயரைச் சொல்வதிலே உள்ள சுகம் என்றைக்கும் குறையாது என்பேனே! உயிர்சுமந்து செல்கின்ற வழியெல்லாம் உன் பார்வைதான் வேண்டும் பொன்மானே! கண்வழியே நீ நடத்தும் காதல்  பாடங்கள் காலமெல்லாம் நான் படிக்கும் நூலாகும்! தேன்சிந்தும் மோகனங்கள் உன்னிலுண்டு.. அவைதானே நான் விரும்பும் அச்சகங்கள்!! மறுபிறவி வரை உனை விரும்பும் என் மனம் மாற்று இங்கே கொள்வது எவ்விதம்? மனசுக்குள் மழைபொழியும் காதலியே.. மெளனத்தால் எனை அழைக்கும் காதலியே.. ரகசிய பாஷைகள் போதாதா பரிமாற.. அவை உன் கண்வழியே பிறந்து எனைத் தாக்க!!  இதழ்திறந்து பேசடி நீ என்றேனே.. அப்போது இதயம்திறந்து காட்டுவாய் என்பதால்தானே!! ஒவ்வொரு வார்த்தையிலும் இனிப்பிருக்கும் என் அஞ்சுகமே.. நீ எப்போதும் என்னருகே இருக்கும்போது!!  மலர்வாய் மொழிசொல்லும் மரகதமே!  இன்பயாழ்மீட்டும் விதம்போலன்றோ உன் குரலே! கண்ணாடி முன்நிற்கும்போது நீ உன்னழகில் மயங்கிவிடாதே.. எந்நாளும் எனக்கான ராணி நீ!  எனைக் களவாடிய கணம் முதலாய் மறவாதே!  பிடிவாதம் எதை நீ செய்தாலும் அடியேனை அணைத்துக்கொள் என்றுதானே கேட்கிறேன்!  ஊடலுக்கும் கூடலுக்கும் நடுவினிலே அடடா.. எத்தனை ஆழமான பள்ளமது சொல்லவா? தப்பித்தால் கரையேறிச் செல்லலாம்!  தடுமாறி விழுந்தால் நான் என் செய்வேன்?  கோபம் நீ கொள்வதெல்லாம் சரிதான்!  என் மீது வேண்டாம் என்றுதானே சொல்கிறேன்!  கரைதொடவே வரும் அலைகளை நீ பாரடி.. கதறுவதாய் கொண்டாலும் கொள்ளலாம்! மகிழ்ச்சியிலே புரளுவதாய் கொண்டாலும் கொள்ளலாம்! மனம் எதை எடுத்துக் கொள்கிறதோ சொல் நீ!  காதலுக்கு இலக்கணங்கள் என்ன உண்டோ கண்ணே அதை நீ கடைப்பிடி!  மாறாய்.. வேதனையை பரிசளிக்க நீ விரும்பினாலும் மறுப்பில்லை.. வாழ்வியலில் வகைகளில் அதுவும் ஒன்று என்று  கொள்வேன்!  ஆதலினால் காதல் செய்யும் லீலை இது!

ஒரு நாள் ஏதோ உனது உதடுகள் உச்சரித்த உஷ்ண வார்த்தைகளில் என் உள்ளம் நொறுங்கிக் கிடந்தேன்! எந்தச் சூழலில்.. எந்தத்தருணத்தில்  இந்த வார்த்தைகள் வந்து விழுந்தன என்பது இதயத்திற்கு மட்டுமே தெரியும்!  மனதிடம் உள்ள குறைகள் ஆயிரம் இருந்தாலும் மனது அதை ஒப்புக்கொள்வதில்லை.. எந்த விகிதத்திலும் இதயங்கள் துடிக்கலாம் என்பது தெரிந்திருந்தும்.. உடன்பட முடியாமல் விலகும் பந்தமாக நான்! எங்கே இதன் தொடக்கம்.. எங்கே இதன் அடக்கம்.. என்பது உயிருக்கேப் பொருந்தும்போது உறவுக்கு அது இன்னுமல்லவா மிகப் பொருந்தும்?  இந்த நிலை தெரிந்திருந்தும்.. இதயம் ஏன் இப்படி அல்லலுறுகிறது? இது அன்பின் அதீதம் என்பது உனக்குத்  தெரியாதவரை.. என் வரையில் நான் எங்கே துயில்வது?  பேசிக்கொள்வது பல நேரங்களில் சரியாக இருக்கும்!  பேசிக் கொல்வது கூட சில நேரங்களில் நடக்கும்.. இது கூட காதல்பாடம் என்பதே காலம் சொல்லிக் கொடுக்கும்!  எல்லாம் இந்த மனம் என்னும் சிற்றிடம் படுத்தும் பாடு என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால்.. இதன் விளைவுகள் அலைகளாய் தொடர்கின்றனவே!

எந்தப் பாதையில் நடந்து சென்றோமோ.. அதே பாதையில் தனியாக நடந்துவர நேரும்போது.. இதயம்  எதையெதையோச் சொல்லியழும்!  மறந்துவிடு என்று நீ சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.. மண்ணுலகில் எத்தனையோ பேர் சொன்னதைத்தான் நீயும் சொல்கிறாய் என்று விட்டிருப்பேன்.. அட..மறப்பதற்கே என்னை நினைத்திடு என்றாயே.. எப்படி?   கவிதையோடு கவிதை இணையவில்லையே என்கிற கவலை இன்றோடு போகட்டும்! அது எப்படி இரண்டு ஒரேவிசை துருவங்கள் இணைசேர முடியும்.. இந்த இயற்கை நியதியைப் புரிந்துகொள்ள இத்தனை ஆண்டுகள் ஆனதோ? எதையோ தேடிக் கொண்டிருந்தோம்.. இன்று இனம் கண்டுகொண்டோம் என்று நமது சந்திப்பின் துவக்கத்தில் சொன்னதெல்லாம் உண்மைதான்! ஆனால்.. அதன் கனபரிமாணங்கள் என்னவென்று காலம் அல்லவா தீர்ப்பு சொல்கிறது!!

ஏதோ ஒரு நிழல்போல என்னுடன் வந்தாய் என்கிற சுகம் அலாதியாகத்தான் இருந்தது. புதிதாய் அமைகின்ற எதுவும் புரியாத இன்பத்தைத் தரும் என்கிற பழைய நியதிதான் நமக்குப் புரியாமலிருந்திருக்கிறது.  சொந்தம்  சொல்கிற ஒரு பந்தம் கிடைத்துவிட்டதாய் பெருமிதம் கொண்ட மனம்.. தன் ராஜ்ஜியத்தை உறுதிசெய்ய நினைத்தபோது.. ஏற்படும் கேள்விகளுக்கான விடைகள் பெரும்பாலும் எதிர்மறையாகத்தான் இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டேன்.  எத்தனை முறை வலித்தாலும் காதலை மட்டும் மனிதன் அனுபவித்துத் தெரிந்துகொள்வதுதான் சாத்தியம் என்று சாசனம் எழுதிவைத்திருக்கிறான் போலும்!!  அறிவுநலம் சூழ்ந்திருந்தாலும்.. அன்பின் ஆழத்தில் பயணிக்கிறபோது.. அங்கே உள்ள சுழல்களும் சூறாவளிகளும் அல்லவா அந்தப் பயணத்தை தீர்மானிக்கின்றன.. நான் கவிஞனாக.. இருக்கிற வரை கடலலைகளோடு கொண்டிருக்கிற உறவு மாறப்போவதில்லை.. நான் புலவனாக இருக்கின்ற வரையில் விண்ணில் நிலவோடு வேறுபடப்போவதில்லை.. கண்ணே.. உன்னோடு மட்டும்தானே.. காரணம் நீ பெண்ணல்லவா?  எந்த ஆணும் இதுவரை தான் காதலித்த பெண்ணை முழுமையாக மறந்ததில்லை.. எனவேதான் மறக்க முடியாத உன்னை மனதில் வைத்துக்கொண்டு.. நான் உன்னை மறப்பதற்கே நினைக்கிறேன் என்று பல்லவி பாடுகிறேன்! இங்கே எந்தன் கணிணி திறப்பின் ரகசிய குறியீடு எண்ணாக உன் பெயரே!!

அன்புடன் கவிச்சந்திரன் 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *