எஸ். கோதண்டராமன்

 

     சர்வாதிகாரி அவர். நாட்டுக்கு அல்ல, வீட்டுக்கு. இங்கு அவர் வைத்தது தான் சட்டம். இன்று என்ன உணவு சமைக்க வேண்டும் என்பதிலிருந்து யார் யார் என்ன உடை அணிய வேண்டும் என்பது வரை அவர் தீர்மானத்தைப் பொறுத்தது. இட்லி சாப்பிட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கும்போது, வேறு எதாவது கொடுத்தால் அவருக்கு வரும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே. வீட்டில் மாவு இல்லாவிட்டால் கடையிலோ, அங்கும் இல்லாவிட்டால், அக்கம் பக்கத்து வீடுகளில் யாசகம் வாங்கியோ செய்து போட்டால் தான் மற்றவர்கள் பிழைக்க முடியும். அவர் தூங்கும் போது தான் மற்றவர்கள் அவரவருக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தொலைக் காட்சியில் காண முடியும். தொலைபேசி ஒலித்தால் அவர் தான் முதலில் எடுக்க வேண்டும். அவர் பேசி விட்டுக் கொடுத்த பிறகு தான் மற்றவர்கள் பேச முடியும். சில சமயம், தானே பதில் சொல்லிவிட்டுப் போனை வைத்து விடுவார். யாரிடமிருந்து ஃபோன் என்று கேட்டால் பதில் வராது. “உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயம். சொல்லித் தான் ஆகணுமோ?” என்பது போல முகத்தைத் திருப்பிக் கொள்வார். இவ்வளவு வல்லாட்சியாளராக இருந்தும், வீட்டிலுள்ள அனைவரும் அவருக்கு இன்முகத்துடன் அடங்கி நடப்பார்கள்.

     எந்த வல்லாட்சியும் நிலைத்ததாக வரலாறு இல்லை. ஆனானப்பட்ட சதாம் உசேனின் சர்வாதிகாரம், எண்ணைப் பணமும் ஏராளமான ஆயுதங்களும் இருந்தும், அமெரிக்கப் படை பலத்துக்கு முன் நிற்க முடியவில்லை. ராணுவ வலிமை மிகுந்த ஹோஸ்னி முபாரக்கோ தன் சொந்த நாட்டு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தில் பதவி இழந்தார். இந்நிலையில் இரண்டே முக்கால் வயதான இந்த சர்வாதிகாரி எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? ஆம். நம் கதாநாயகன் பிறந்து இன்றோடு 1000 முறை சூரியன் உதித்திருக்கிறான்.

     வல்லாட்சிக்கு எதிரான போராட்டத்திற்கான விதை தூவப்பட்டது அவரது இரண்டாவது பிறந்த நாள் அன்று. கையில் சாக்லேட் டப்பாவைத் தூக்கிக் கொண்டு பக்கத்து பிளாட்காரர்களுக்கு ‘பாப்பாக்கு பத்தே (பர்த் டே)’ என்று சொல்லி அவர்களுடைய கொஞ்சுதல்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வரும் போது உடன் சென்ற அவனது தாயிடம் ஒரு பெண்மணி கேட்டார், “அடுத்த வருஷம் ஸ்கூல்லே சேர்க்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டிங்களா?”

     “இப்பத் தானே ரெண்டு வயசு முடிஞ்சிருக்கு. ஜூனுக்கு இரண்டரை வயசு தான் ஆகும். மூணு வயசு முடிஞ்சாத் தானே எல்கேஜியிலே சேத்துப்பாங்க.”

     “உலகம் தெரியாம இருக்கீங்களே. நல்ல ஸ்கூல்லே எல்கேஜியிலே சேர்க்க மாட்டாங்க. ப்ரீகேஜியிலே தான் சேத்துப்பாங்க. நீங்க இப்பவே ட்ரை பண்ணினாத் தான் கெடைக்கும்.”

     உடனே தாயும் தந்தையும் எது நல்ல பள்ளி என்று தெரிந்து கொள்வதற்காக இணையதளத்தில் பெற்றோர் குழுமத்தின் உரையாடல்களை எல்லாம் அலசினார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு குறை. இருந்தாலும் பொது மக்கள் மத்தியில் எது பிரபலமானது என்று தீர்மானித்து அந்தப் ப…… பள்ளிக்கு போன் செய்தார்கள்.

     “ப்ரீகேஜி அட்மிஷனை நாங்க அப்பவே முடிச்சுட்டோமே.”

     “நான் அடுத்த வருஷத்துக்குக் கேக்கறேன். ஜூன் மாசம் ஆரம்பிக்கிற கிளாசுக்கு அட்மிஷன் வேணும்.”

     “அதைத் தான் நான் சொல்றேன். வர ஜூன் பேட்சுக்கு இந்த நவம்பரிலேயே நாங்க அட்மிஷனை முடிச்சுட்டோம். இடமில்லே. சாரி.”

     “சரி, அதுக்கு அடுத்த வருஷம் எல்கேஜியிலே சேர்க்கணும்னா எப்ப அப்ளை பண்ணணும்?”

     “நாங்க ப்ரீகேஜிலே மட்டும் தான் அட்மிஷன் பண்றது. மத்த கிளாசிலே புதுசா யாரையும் சேக்கறது இல்லே.”

     இப்படி ஒவ்வொரு பள்ளியாக விசாரித்து விசாரித்து எல்லாப் பள்ளிகளிலும் எதிர்மறை விடையே கிடைத்ததால் நமது குழந்தையின் எதிர்காலமே பாழாகி விடுமோ என்ற கவலை வந்து விட்டது.

     மீண்டும் தேடுதல் வேட்டை.

     எதிர்வீட்டுப் பெண்மணி சொன்னார், “பக்கத்திலேயே ஒரு ஸ்கூல் இருக்கு. சுமாரா இருக்கும். பரவாயில்லே. ஃபீசும் கம்மி தான். வேணுமானாப் பாருங்க.”

     அந்த சுமார் பள்ளிக்குப் போனார்கள். நல்ல வேளை சேர்க்கை இன்னும் துவங்கவில்லை.

     “அட்மிஷனுக்கும் வகுப்பு துவங்குவதற்கும் இடைவெளி மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பது அரசாங்க உத்தரவு. நாங்கள் மட்டும் தான் அதைக் கடைப்பிடிக்கிறோம்.

     உங்கள் குழந்தையைச் சேர்த்துக் கொள்கிறோம். ஸ்கூல் ஃபீஸ், அட்மிஷன் ஃபீஸ், ஸ்பெஷல் ஃபீஸ்,  புத்தகம் எல்லாம் சேர்த்து 16500 ரூபாய் கட்டிவிடுங்கள். இந்த விலாசத்தில் ஸ்கூல் யூனிஃபார்ம் வாங்குங்கள். ஜூன் முதல் தேதி குழந்தையை அழைத்துக் கொண்டு வாருங்கள்.”

     அப்பாடா, ப்ரீகேஜி பிரச்சனை தீர்ந்தது. அடுத்த வருஷம் எல்.கே.ஜி. இங்கே படிக்கக் கூடாது. வேறு நல்ல பள்ளியாக இப்பொழுதிலிருந்தே பார்க்க வேண்டும்.

     ஜூன் பிறப்பதற்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே குழந்தையை ஸ்கூலுக்குப் போகப் போகிறோம் என்று சொல்லிச் சொல்லித் தயார் செய்தாகி விட்டது. அந்த நாளும் வந்தது. புதுச் சீருடை போட்டுக் கொண்டு பக்கத்து வீடுகளில் எல்லாம் போய் “புதூ தத்தை, ஊனிஃபாம்” என்று காண்பித்து விட்டு வந்தான் குழந்தை.

     முதல் நாள். எல்லாக் குழந்தைகளும் தாய் தந்தையுடன் வந்திருந்தார்கள். பூஜைகள் நடந்தன. ஒரு மணி நேரத்தில் அவரவர் குழந்தையுடன் வீடு திரும்பினார்கள். நாளை முதல் முறையான வகுப்பு என்று சொன்னார்கள்.

     மறுநாள். குழந்தை உற்சாகத்துடன் சீருடை மாட்டிக் கொண்டு தாயுடன் பள்ளிக்குப் போனான். கேட் அருகில் போனவுடன் அங்கிருந்த ஒரு ஆயா தாயை வெளியிலேயே நிறுத்தி விட்டுக் குழந்தையை மட்டும் வெடுக்கென்று பிடுங்கி உள்ளே தூக்கிக் கொண்டு போனார். மிரட்சியில் அழுதது குழந்தை. சில விநாடிகளில் சத்தம் நின்று விட்டது.

     ஆபரேஷன் தியேட்டரிலும், நர்சரி வகுப்பறைகளிலும் என்ன நடக்கிறது என்பது வெளி உலகிற்குத் தெரியாது. முன்னதில் நோயாளி மயக்க நிலையில் இருப்பார். பின்னதில் குழந்தைகள் நடப்புகளை வாய் விட்டுச் சொல்லத் தெரியாதவர்கள். கண நேரம் கூடச் சும்மா இராமல் ஆட்டம் பாட்டம் துள்ளல் என்று இருக்கும் சக்தியே வடிவமான 30 குழந்தைகளை மூன்று மணி நேரம் எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பது இரண்டாவது தாயான அந்த ஆசிரியைக்கு மட்டும் தான் தெரியும். வெளியில் வரும்போது குழந்தைகள் உற்சாகமாக வருவார்கள். அந்த உற்சாகம் விடுதலை பெற்ற மகிழ்ச்சியா, இது தான் நம் தலையெழுத்து என்று குழந்தை தன்னைத் தானே உணர்ந்து கொண்ட ஞானப் பரிபக்குவமா, தெரியாது.

     நாட்கள் ஓடின. தினசரி, குழந்தையை அழ அழப் பள்ளியில் கொண்டு விடுவதும் திரும்பும்போது சிரிப்புடன் வருவதும் வழக்கமாகிவிட்டது. குழந்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படும் சிறார் பாடல்களைத் தன் மழலை மொழியில் உதிர்க்கும்போது பெற்றோர் அக மகிழ்ந்தனர். ஒரு நாள் பாடல்களின் நடுவே    அவன் சொன்ன ஒரு சொல் வித்தியாசமாக இருக்கவே, மறு நாள் தாய் ஆசிரியையிடம் கேட்டாள்.

     “மிஸ், தூக்கத்திலே குழந்தை டார்க் ரூம், டார்க் ரூம் னு அடிக்கடி சொல்றானே, அது எந்த ரைமிலே வருது?”

     “அதுவா, அது ஒண்ணுமில்லே. இன்னொரு பையன். மகா சேட்டை. அவனைக் கொஞ்சம் வழிக்குக் கொண்டு வருவதற்காக டார்க் ரூமிலே போட்டுப் பூட்டிடுவேன்னு சும்மா சொன்னது அது.”

     ஒரு நாள், பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் குழந்தை “ஊனிபாஃம் வாந்தாம்” என்று தகராறு செய்தான். “யூனிஃபார்ம் வேண்டாமென்றால் விட்டுவிடேன், சாதாரணச் சட்டையைப் போட்டு அழைத்துக் கொண்டு போ. இவன் என்ன ராணுவப் பயிற்சிக்கா போகிறான்? என்றான் அவளது கணவன். “இன்னிக்கு ஒரு நாளைக்கு இடம் கொடுத்தா இதுவே வழக்கமாயிடும்” என்று கூறித் தாய் அவனுக்கு வலுக்கட்டாயமாக அதை அணிவித்து அழ அழக் கூட்டிக் கொண்டு போனாள். மதியம் திரும்பும் போது வழக்கம்போல உற்சாகமாக இருந்தான். மாலையில் கணவன் வீடு திரும்பியதும், “பார்த்தீங்களா, காலையில் சற்று நேரம் அழுதானே தவிர சமாதானம் ஆகிவிட்டான். அவன் சொன்னதைக் கேட்டு நாம் அவனுக்கு யூனிஃபார்ம் அணிவிக்காமல் அழைத்துச் சென்றால் அதுவே அவனது ஒழுங்கீனத்துக்கு வழி வகுக்கும். இப்பொழுதிலிருந்தே பழக்கம் பண்ணினால் தான் படிப்பில் சிரத்தை வரும். உயர்ந்த நிலையை அடைய முடியும். அவன் நாசாவின் டைரக்டர் மாதிரி உலகளவில் பெரிய பதவிக்கு வரணும், குறைஞ்சது அப்துல் கலாம் போல ஒரு இஸ்ரோ டைரக்டராகவாவது வரணும் ” என்றாள்.

     நீ சொல்ற அந்த அப்துல் கலாம் ப்ரீகேஜியும் படிக்கல்லே, எல்கேஜியும் படிக்கல்லே. உயர்நிலைப் படிப்பு வரையில் சாதாரணப் பள்ளியில் தான் படித்தார் என்று அவன் நினைத்துக் கொண்டான். சொல்லவில்லை.

     அடுத்த நாள் சாப்பிட மாட்டேன் என்று சண்டித்தனம், அதற்கு அடுத்த நாள் குளிப்பதற்கே மறுப்பு, அடுத்த நாள் பல் துலக்கவே போராட்டம் என்று வர வர அவனுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாகி வந்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் எழுந்ததிலிருந்தே அழுகை. “கூல் வாந்தாம், கூல் வாந்தாம்” என்று சிணுங்கிக் கொண்டிருந்தான். கால ஓட்டத்தின் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்து, அது வரை வாய் மூடி, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வீட்டுப் பெரியவர்கள் இப்பொழுது வாய் திறந்தார்கள். “இது என்ன பெரிய கிளாசா, ஒரு நாளைக்கு கொஞ்சம் விட்டுப் பிடியேன். அழ விடாதே” என்றாள் குழந்தையின் பாட்டி.

     “அவங்க மிஸ் சரியாத் தான் சொன்னாங்க, வீட்டிலே பெரியவங்க இருந்தா செல்லம் குடுத்துக் குழந்தையைக் குட்டிச் சுவராக்கிடுவாங்கன்னு. உங்க காலம்னு நினைச்சீங்களா, இப்பல்லாம் 99 சதவீதம் வாங்கினாப் போதாது, ஒரு அரை மார்க் கால் மார்க் கூட வாங்கினவன் அடிச்சுகிட்டுப் போயிடுவான். நாள் தவறாம ஸ்கூலுக்குப் போனாத் தான் படிப்பிலே ஈடுபாடு வரும்.” இது தாய்.

     குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லத் தூக்கியபோது அவன் தன் முழு பலத்துடனும் திமிறிக் கொண்டு தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான். சமாளிக்க முடியாத நிலையில் தாய் அவன் முதுகில் ஒரு தட்டு தட்டி விட்டாள். அது வரையில் பிறர் அடிக்கப்படுவதைக் கூடப் பார்த்திராத அந்தப் பி்ஞ்சு உடல் துடித்து விட்டது. சுற்றி நின்றவர்கள் கண்களில் நீர் ததும்பியது. அவனுடைய முரண்டல் நின்றது. அழுது கொண்டே சென்றவனைப் பள்ளியில் விட்டு வந்தாள் தாய். மதியம் அவனை அழைக்கப் போனபோது அவனுடைய ஆசிரியை சொன்னார், “குழந்தை அழுகிறான் என்பதற்காக பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து விடாதீர்கள். அதுவே வழக்கமாகிவிடும்.” குழந்தை அழவில்லை என்றாலும் அவனது முகத்தில் இருந்த மலர்ச்சியைக் காணவில்லை.

     மாலையில் உடல் கொதித்தது. காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய்க் காட்டி மருந்து வாங்கி வந்தாள். இரவு தூங்கும் போது இடை இடையே அவன் விசிக்கும் சத்தம் கேட்டது. அவ்வப்போது “தாக் ஊம் வாந்தாம்” என்று அவனது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

     தாய் தூங்கவில்லை. ஆத்திரப்பட்டுக் குழந்தையை அடித்து விட்டோமே என்று அழுது கொண்டிருந்தாள். இவனை எப்படி அழாமல் பள்ளிக்குப் போக வைப்பது என்று யோசித்துக் கொண்டும் இருந்தாள்.

     தந்தை தூங்கவில்லை. குழந்தைக்குப் பள்ளிச் சூழ்நிலையை ஏற்றுக் கொள்வதற்கான மன முதிர்ச்சி இன்னமும் வரவில்லை என்பதை அவன் அறிந்து கொண்டான். கட்டாயப்படுத்தாமல் தன் இயல்புப்படி விட்டாலே அவனுடைய அறிவு வளரும் என்பதைத் தன் மனைவிக்கு எப்படிப் புரிய வைப்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

     பெரியவர்களும் தூங்கவில்லை. குழந்தைகளின் குதூகலத்தை, குறுகுறுப்பை, கற்பனையை, துள்ளலை, எதையும் வியப்புடன் பார்த்து மகிழும் பால் மனத்தை இந்தக் காலக் கல்வி அடக்கி ஒடுக்கிச் சிறைப்படுத்துகிறதே, இவர்கள் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குகிறார்களே என்று மனத்துக்குள் புலம்பிக் கொண்டிருந்தனர்.

     இதோ பொழுது புலரப் போகிறது. சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் துவங்க இருக்கிறது.

     அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தாய் செய்யும் செயல்களைச் சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. தன் மகனைச் சான்றோன் ஆக்கி, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க வேண்டும் என்ற ஆசை அது. அது என்றும் நிலைத்திருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சர்வாதிகாரி!…

  1. விதம் விதமான படைப்புகள் மூலமாக, வல்லமையில் சதம் கண்ட தங்களுக்கு வாழ்த்துகள்.  

    டார்க் ரூமை நினைத்தால், எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது. 🙁

  2. நன்றி, அண்ணா கண்ணன். வல்லமைக்கு என்னை அறிமுகப்படுத்தியது நீங்கள் தான். உங்களுடைய ஊக்கம் தரும் சொற்களால் உந்தப்பட்டு வல்லமையில் நான் எழுதி வெளிவந்தவை 116.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *