இங்கிலாந்திலிந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (102)

1

சக்தி சக்திதாசன்

1780843_587204171369869_249422305_n
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் கனத்த இதயத்துடன் என் விரல்கள் இவ்வார மடலை வரைகின்றன.

இன்று காலை இங்கிலாந்து நேரப்படி காலை ஏழு மணியளவில் என் அண்ணனின் தொலைபேசி அழைப்பு இதயத்தை அழுத்தும் துயரச் செய்தியைக் கொண்டு வந்தது.

ஆம் 32 அகவைகளே நிறைந்த எனது மூத்த சகோதரனின் மூத்த மைந்தன் நேற்று மாலை அகால மரணமடைந்த துயரச் செய்தி உள்ளத்தை வருத்தியது.

வாராவாரம் உங்களுடன் இம்மடலுடன் உரையாடும் எனக்கு இவ்வாரம் உரையாட முடியுமா? எனும் எண்ணம் எழுந்தாலும் இதயத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமையும் இவ்வெழுத்து ஒன்றே அதிர்ந்த மனதுக்கு அமைதியளிக்கும் அருமருந்தாகிறது.

வாழ்க்கை விசித்திரமானது, வியக்க வைப்பது, புரிய முடியாதது என்று வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு மடல்களில் நான் குறிப்பிட்டதுண்டு.

ஆனால் சமயங்களில் வாழ்க்கை கொடுமையானது கூட என்பது இப்போது தெள்ளிடைத் தெளிவாகத் தெரிகிறது.

உள்ளத்தின் உறைந்து கிடக்கும் உணர்வுகள் நிலநடுக்கம் வந்தால் கிளர்ந்தெழும் சில உறைநிலங்களைப் போல அதிர்வடையச் செய்யும் செய்திகளைக் கேட்டதும் ஒரு கிளர்ச்சி அடைந்து விழித்து உருக்கொண்டு எம்மை ஆட்டிப்படைக்கின்றன.

விளங்க முடியா நிகழ்வுகள், விளக்க முடியா வகையில் விசித்திரமான வடிவங்களில் வெவ்வேறு திசைகளில் இருந்து எம்மைத் தாக்கும் போது உள்ளம் சிறிது உருகத்தான் செய்கிறது.

ஆத்திகர் நாத்திகர் யாராக இருந்தாலும் இயற்கையின் நிகழ்வுகள் யாருக்காகவும் எப்போதும் நின்று போய் விடுவதில்லை பிறப்புக்களும், இறப்புக்களும் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கும் உள்ளாகி நடந்து விடாமல் இருந்து விடுவதில்லை.

மனித வாழ்க்கையில் நெடுங்கதைகளும் உண்டு குறுங்கதைகளும் உண்டு. தமது காரியங்களைச் செய்ய தமக்கு வாரிசுகள் வேண்டும் என விரும்பி தமது வாரிசுகளைப் பேணும் பெற்றோரே அவர்களுக்கு காரியம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது துர்பாக்கியமே !

ஆனால் துர்பாக்கியம் என்பதற்காக நிகழ்வுகள் நின்று போய்விடுவதில்லை. பிள்ளைகளைக் கண்முன்னாலே பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் தைரியம் படைத்தவர்கள் சிலரே.

என்னைவிட வயதில் பத்து வயது மூத்தவர் என் சகோதரர் . இருவரும் வாழ்வது பல்லாயிரம் மைல்களுக்கப்பால். ஈழத்தை விட்டு ஏறத்தாழ ஒரே சமயத்தில் வெளியேறியவர்கள் நாம். அது இற்றைக்குச் சுமார் 40 வருடங்களின் முன்னால். இதுவரை சுமார் நான்கு தடவைகள் சந்தித்திருப்போம்.

சுமார் ஆறு மாதங்களின் முன்னால் என் சகோதரரின் இளைய மைந்தனின் திருமணத்திற்குச் சென்றபோது மறைந்த இளவலை கடைசியாகச் சந்தித்தேன்.

இன்று அவனது மறைவால் தவித்துக் கொண்டே என் சகோதரரைத் தேற்றுவதற்கு வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.

வார்த்தையின்றிப் போகும்போது கண்ணீர் தான் கைகொடுக்குமோ !

என் மனதின் தவிப்புக்கு வடிகாலாக மனதின் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக நான் ஆண்டவன், வல்லமை, அனைத்திற்கும் மேலாக என் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்.

மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை

துயரத்துடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (102)

  1. அன்புமிகு சக்திதாசன் அவர்களுக்கு

    தங்கள் சகோதரரது மகன் பிரிவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். வாழ்க்கையின் பக்கங்களை சிலநேரம் கனமனதோடு கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்கிற நியதிக்கு எவருமே விதிவிலக்கல்ல.. எது நடக்க வேண்டியிருக்கிறதோ.. அது நடந்தே தீரும் என்கிற பகவத் கீதை நினைவில் கொள்ளப்பட வேண்டிய தருணம்..

    வாழ்க்கையை இன்னும் வாழ்ந்து பார்க்கவேண்டிய வயதில்.. ஏற்பட்ட இப்பிரிவு.. உங்கள் குடும்பத்தில் எத்தனை அதிர்வுகளைத் தந்திருக்கும் என்பதை உணர்கிறேன்!

    நீண்ட நெடிய காலப் பிரிவுகள்.. சில மணித்துளி சந்திப்புகள் என்று உறவுகளுக்குக்கூட வரையறை காணவேண்டிய கொடுமை நம்மைப்போல் அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு விதிக்கப்பட்ட மற்றுமொரு விதிதான்!

    வாழ்க்கையின் பொருள் என்னவென்று புரிந்துகொள்வதற்குள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.. வாழலாம் என்று துவங்கிடும் நேரத்தில் சில நேரம் முடிவுகள் வருகிறது!
    மனிதன் திட்டமிடுகிறானன்.. இறைவனல்லவா தீர்மானிக்கிறான்.. என்று பொதுநியதியை உச்சரிப்பதுதான் ஒரே வழியாக…

    உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்..
    அன்புடன்
    காவிரிமைந்தன் மற்றும் கண்ணதாசன் தமிழ்ச்சங்க நிர்வாகிகள்
    பம்மல்.. சென்னை 600075

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *