நாகேஸ்வரி அண்ணாமலை

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை என்பது நூறு ஆண்டுகளாக நடந்துகொண்டிருப்பது.  ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளிலிருந்து அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வருகிறது.  மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலுக்குச் சாதகமாகவே நடந்து வந்திருக்கிறது.

 pon2

பைபிள் காலத்தில் இப்போதைய சிரியா, லெபனான், ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீன நாடாக உருவாகப் போவதாக பாலஸ்தீனர்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் வெஸ்ட் பேங்க், காஸா இடங்களையும் சேர்த்து பாலஸ்தீனம் என்று அழைத்தார்கள்.  இப்போது மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஜோர்டான் நதியின் மேற்குக்கரைப் பகுதிக்கும் இடையேயான இடம் பாலஸ்தீனம் என்றும் அது தங்கள் மூதாதையர் மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தவந்த இடம் என்றும் அதனால் தங்களுக்கு அதில் முழுப் பாத்தியதையும் இருக்கிறது என்று கூறிக்கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து வெளியிலிருந்து வந்த யூதர்கள் அங்கு ஏற்கனவே மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையைத் தங்கள் வசதிக்காக மறந்துவிட்டுக் குடியேறிக்கொண்டே இருந்தார்கள்.  அப்போது வளம் மிகுந்த நாடான அமெரிக்காவில் ஏற்கனவே குடியேறி பல யூதர்கள் பெரும் செல்வந்தர்களாக விளங்கினார்கள்.  இவர்களின் பண உதவியாலும் ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள் தங்களோடு கொண்டுவந்த தொழிநுட்ப அறிவாலும் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் நிலங்களை வாங்கிப்போட்டு அந்த நிலங்களில் அமோக விளைச்சலை உண்டுபண்ணினர்.  இந்த நிலங்களில் யூதர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக்கொண்டனர்.  இதனால் அரேபியர்கள் தங்கள் நிலங்களை இழந்ததோடல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.  இதனால் பலர் அரேபியர்கள் கொதித்தெழுந்தனர்.  இதனால் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நிறைய மோதல்கள் நடந்தன.

1922-லிருந்து பாலஸ்தீனம் பிரிட்டிஷ் நியமனத்தின் (British Mandate) கீழ் இருந்து வந்தது.  பிரிட்டனும் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நடந்த மோதல்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் பல முயற்சிகளுக்குப் பிறகு பாலஸ்தீன நிர்வாகத்தை இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நாடுகளிடையே ஏற்படும் சச்சரவுகளைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட்டு பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது.  ஐ.நா.வும் வெளியிலிருந்து வந்த யூதர்கள், தங்கள் மூதாதையர்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னால் இருந்த சம்பந்தத்தைக் காட்டி பாலஸ்தீனத்தில் பங்கு கேட்பது சரியல்ல என்று யூதர்களுக்கு அறிவுறுத்தவில்லை.  சமரசம் செய்வதாக நினைத்து பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் கொடுத்தது.  வெளியிலிருந்து வந்த யூதர்கள் தங்கள் மூதாதையர் வாழ்ந்த தங்களுடைய புண்ணிய தலத்தில் தங்களுக்கு ஒரு தனி நாடு அமைக்கும் உரிமை கிடைத்தது என்று மகிழ்ந்துபோய் அந்தப் பிரிவினையை ஒத்துக்கொண்டனர்.  அரேபியர்களோ தங்கள் நாட்டை வெளியிலிருந்து வந்த, வரும் யூதர்களோடு எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று கோபமடைந்து தங்கள் ஆயுத பலத்தால் எப்படியும் தங்கள் நாட்டை யூதர்களிமிருந்து திரும்பப் பெற்றுவிடுவது என்று தீர்மானித்து காரியத்தில் இறங்கினர்.  அவர்களுடைய படைபலத்தை விட அமெரிக்க யூதர்கள் கொடுத்த பண உதவியால் இப்போது யூதர்களின் படைபலம் அதிக அளவு உயர்ந்துள்ளது என்பதை அவர்கள் உணரவில்லை.  பல முறை யூதர்களோடு மோதியும் பலன் இல்லை.  முழு நாடும் தங்களுக்கு வேண்டும் என்று அரேபியர்கள் வீம்பிக்கொண்டிருக்க, யூதர்கள் மிகவும் தந்திரமாக இஸ்ரேல் என்ற நாட்டை தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்டதோடு ஐ.நா. அரேபியர்களுக்குக் கொடுத்த இடங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது.  இஸ்ரேலைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையாதலால் இஸ்ரேல் தன்னிச்சையாகப் பாலஸ்தீனத்தில் இடங்களைப் பிடித்துக்கொள்ளும் தன் பேராசையைத் தொடர்ந்து வருகிறது.

தன் சொந்த நன்மைக்காகவும் அமெரிக்கா வாழ் யூதர்கள் கொடுத்த நிர்ப்பந்தித்தினாலும் அமெரிக்கா 1967-க்குப் பிறகு இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டு வருகிறது.  இதற்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் நிறைய அதிகாரம் வகிக்கும் அமெரிக்க யூதர்கள்.  அமெரிக்க யூதர்களிடம்தான் அமெரிக்காவின் பெரிய வங்கிகள் இருக்கின்றன.  ஹாலிவுட் முழுவதும் இவர்களின் கைகளில்தான்.  எல்லாவற்றிற்கும் மேலாக பத்திரிக்கைகள், ஊடகங்கள் எல்லாம் இவர்களின் அதிகாரத்திற்குள்தான்.  அமெரிக்க மக்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அமெரிக்கா வாழ் யூதர்களால் திசை திருப்ப முடிகிறது.

இதற்கும் மேலாக இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இவர்களின் பாக்கெட்டிற்குள்.  வித்தியாசமான அரசியல், பொருளாதாரக் கொள்கைகளையுடைய இரண்டு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் இஸ்ரேலைப் பொறுத்த வரை ஒரே மாதிரியான கொள்கைகளைத்தான் கொண்டிருக்கிறார்கள்.  ஏனென்றால் இவர்களுடைய தேர்தல் நிதி பெருமளவு யூதர்களிடமிருந்து வருகிறது.  யூதர்களைப் பகைத்துக்கொண்டு யாரும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராகவோ வர முடியாது.  இதனால்தான் தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்கள் எல்லோரும் இஸ்ரேலுக்குப் பக்கபலமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.  இஸ்ரேலை எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னாலும் அமெரிக்க அரசியலில் குப்பை கொட்ட முடியாது என்பது ஒபாமா உட்பட எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரிந்திருக்கிறது.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பாலஸ்தீனர்களின் மீது தனக்கிருந்த பச்சாதாபத்தைப் பற்றிக் கூறிய ஒபாமா, ஜனாதிபதி ஆன பிறகு அதை அறவே மறந்துவிட்டார்.  அமெரிக்க அரசு கூறும் எந்த அறிவுரையையும் இஸ்ரேல் செவிமடுப்பதாக இல்லை.  அதனால் ஒபாமாவும் அறிவுரை கொடுப்பதை விட்டுவிட்டு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நடுவே நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையில் அவருடைய வெளியுறவு அமைச்சர் கெரிக்கு கொஞ்சம் அதிகமாகவே சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

பல தசாப்தங்களாக நடந்துவரும் இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல அமெரிக்க ஜனாதிபதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  கார்ட்டர் தவிர மற்ற எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றிக் கவலையில்லை.  மேலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்து மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்பதை விட  எப்படியாவது பேச்சுவார்த்தைகள் முடிந்து – இன்னும் கொஞ்சம் அநீதி பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்டாலும் – அவற்றை முடித்த அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயர் சரித்திரத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கம்.

இஸ்ரேலுக்குச் சாதகமாகவே பேசிக்கொண்டிருக்கும் எல்லா அமெரிக்க மத்தியஸ்தர்களையும் போல் இப்போது பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு வரும் கெரியும் எப்படியாவது பாலஸ்தீன அத்தாரிட்டியின் தலைவர் அப்பாஸை வளைத்துப் போட்டுவிடலாம் என்று நினைக்கிறார்.  எப்படியாவது அவரை ஏதாவது ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.  பாலஸ்தீனத் தலைவர்கள் முன்னால் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை இப்போது அப்பாஸ் மறுக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வேறு.  பாவம் அப்பாஸ் அமெரிக்கா கொடுக்கும் நிர்ப்பந்த பிடியில் சிக்கித் தவிக்கிறார்.  அப்பாஸுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் இஸ்ரேல் மீதும் அமெரிக்காவுக்கு உள்ளுக்குள் கோபம் இருக்கும் போலும்.  ஏப்ரல் நான்காம் தேதி அல்ஜீரியாவுக்கும் மொரோக்கோவுக்கும் விஜயம் செய்த கெர்ரி நேற்று அல்ஜீரியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவரைப் பார்க்க வந்திருந்த தூதரக ஊழியர்களிடமும் அவர்களுடைய குடும்பத்தாரிடமும் தான் தாமதமாக வந்ததற்கும் அவர்களைக் காக்க வைத்ததற்கும் வருத்தம் தெரிவித்துவிட்டு ‘நான் இங்கு வருவதற்கு முன் போனில் பேசிக்கொண்டிருந்தேன்.  என்னோடு பேசிக்கொண்டிருந்தவருக்கு நான் பேச்சை முடித்துவிட்டேன் என்பதை புரிய வைப்பதற்கு மிகவு கஷ்டமாகப் போய்விட்டது’ என்று கூறியிருக்கிறார்.  இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹுவைத்தான் பேச்சை நீட்டித்தார் என்று மறைமுகமாகக் குறை கூறியிருக்கிறார்.  நேத்தன்யாஹுவிடம் இதை நேரிடையாகச் சொல்லத் தைரியம் இல்லை.  பாவம் அமெரிக்கா, அமெரிக்காவின் உதவியாலும் அமெரிக்கா வாழ் யூதர்கள் செய்யும் உதவியாலும் இன்று மத்திய கிழக்கில் இராணுவ பலத்தில் பூதாகாரமாக வளர்ந்திருக்கும் இஸ்ரேலுக்கு (மத்திய கிழக்கில் இஸ்ரேலிடம் மட்டும்தான் அணு ஆயுதங்கள் இருக்கின்றன) அமெரிக்கா பயப்பட வேண்டியிருக்கிறது.  இது காலத்தின் கோலமா அல்லது அமெரிக்கா இஸ்ரேலுக்குக் கொடுத்திருக்கும் /கொடுக்கும் அதிக சலுகையா?

படத்திற்கு நன்றி:

http://samuthayaarangam.blogspot.in/2013/12/blog-post_25.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *