கோ. நாதன்

images (7)

பனிப் புல்லின் நுனியிலிருந்து இறங்குவதற்காகக்
காத்திருக்கும் இடையன்
சூரிய ஒளி எழும்புகின்ற தருணம்
ஒற்றைக்காலைத் தூக்கி
கரங்களை மேலெழுப்பியபடி நமஸ்காரத்துக்குப்
பின்னர்
சேகுவரா வடிவமான தொப்பியூடே நகந்தார்.

மௌனமாய்ப் பொழுதினை அசை போட்ட ஆடுகளும்
இடையனின் ஒரு வார்த்தை ஓசை விழுந்ததும்
எல்லாம் எழுந்து ஒரே குரலில் கத்தியது.
கொட்டில் கதவு திறப்புக்காய் நீளுகையில்
மோதுண்டு
அவரின் வழி நடத்தலில் முன் செல்கின்றது.

ஆடுகளை மேய்ச்சலுக்காய் காடுகளும்,நதிகளும்
அழைத்துத் திரிகின்ற போது
காடுகளை வேவு பார்க்கும் ஒற்றனென
அவரது அமைதி வாழ்வில் வதை நீடிக்கின்றன.
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளும் படை
சந்தேகத்தில் ஆண் ஆடுகள்
வாகனத்தில் ஏற்றிக் கடத்தப்பட்டது

செருப்புகளற்ற பாத நடையில்
தூரத்துப் பார்வைக்கான கண்ணாடி அணிந்து
அருகினில் கண்ணாடி கழற்றிய வயோதிக இடையன்
ஒவ்வொரு முள்ளின் வலியும்
இரத்தமும் ,வியர்வையும் கிழிந்த உடலினூடே
உயிர் சிதைக்கும் எலும்புத் தேய்வின் வாழ்வு.

ஆளரவமற்ற வயல்வெளியின் வரப்புகளூடாக
சூட்டிப்பின் வைக்கோல் கத்தைகளுள்
உள்நுழைந்துப் போயிருந்த மிருகங்களிடையே
அவரது மிகுதி மொழி அச்சப்படுத்தியும் ,கத்தியும்
கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கி அடங்குகின்றது
காலவெளி மழை,வெயில் பொழுதுகளை

அடித்துக் கொல்லப்பட்ட இடையனின்
இரத்தம் தோய்ந்திருந்த பிணம்
சிறுநீரும்,பிழுக்கையும் துவைத்திருந்தது
மரண வாக்கு மொத்த ஆடுகளும் சப்பித்தீர்மானிக்கின்றது.
இறைச்சிக்காக அறுபட்டுக் கொண்டிருக்கின்ற
ஆடுகளோடு இடையனின் இறைச்சியும் பொதியாகியது.

 

படத்திற்கு நன்றி

http://spanishnewstoday.com/guadalajara-grazing-goats-creating-natural-forest-fire-protection_19157-a.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *