ஈழநாட்டு சித்தர் சிவயோகசுவாமி – பகுதி 2:

0

இரமேஷ் சிவநாதன்

சிவயோகசுவாமி
சிவயோகசுவாமி

தன் குருநாதர் செல்லப்பசுவாமியைப்பற்றி யோகசுவாமி தன் அடியார்களிடம் விவரித்திருக்கிறார். “ பிறரை நாம் கவரவேண்டும் என்றால் அவர்களுக்குப் பெரும்பாலும் ஏதாவது பிடித்த ஒரு பொருளைக் கொடுத்து கவர்வோம். ஆனால் என் குருநாதன் என்னிடமுள்ள எல்லாவற்றையும் கழற்றியெறிந்து போட்டு என்னைக் காந்தம்போல் கவர்ந்திழுத்தான். என்னை சேவை செய்யவோ, முன்னே நிற்கவோ, எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளவோ, சித்திகள் பெற்றிருக்கவோ, பிற யோகியர் அல்லது சாதுக்களிடம் பழகவோ அவர் விடவில்லை. அவர் என்னை சுற்றித்திரியக்கூட விடவில்லை” என்று கூறியிருக்கிறார்.

செல்லப்பசுவாமி  யோகநாதரிடம் தான் குரு என்று ஒருநாளும் கூறியதில்லை. அப்படி யெல்லாம் அவரிடம் பேசியதும் கிடையாது. ஆனால் யோகநாதனை நாளும் பக்குவப்படுத்திக்கொண்டு வந்தார். யோகசுவாமியும் செல்லப்பரின் எண்ணங்களுக்கு ஒப்ப,  குணத்துக்கு, உணர்வுக்கு ஒப்ப,  திட்டங்களுக்கு, பேச்சுக்கு, நடையுடைக்கு ஏற்ப குருசொற்படி நடந்துகொண்டு, குரு வாயிலிருந்து அவ்வப்போது உதிரும் அமுதமொழிகளைக் கேட்டு பரவசப்பட்டுக்கொண்டிருந்தார்.

யோகசுவாமியின் மனம், மொழி, மெய் ஆகியன எல்லாம் ஒருமுக சிந்தனையுடன் ஒழுக்கத்தோடிருக்க செல்லப்பர் பழக்கினார். சற்றேனும் ஆணவம், குணக்கேடுகள் இருந்தாலும் அவற்றை சீடனுக்குத் தெரியாமலேயே உணரா வண்ணம் உடனே செல்லப்பர் தகர்த்தெறிந்துவிடுவார். யோகசுவாமியின் பொறிபுலன்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அனத்தும் மெய்ப்பொருள் ஒன்றைத்தவிர வேறு எதிலும் சார்த்திருக்கக்கூடாது என்பதில் செல்லப்பர் மிக கவனமாக இருந்தார்.

குருநாதரோடு இருக்கும்போதெல்லாம் ஓய்வு என்பதில்லை, ஒரு திட்டமுமில்லை, ஒரு வழக்கமுறையுமில்லை. செல்லப்பரோடு ஒருநாள் வாழ்ந்தாலும் அது யோகசுவாமிக்கு பல்லாண்டு அனுபவத்துக்கு நிகராக இருந்தது.

irameshபொறிபுலன்களுக்கு அடிமையாகாமல் மனம் பக்குவப்படவும் சிந்தை திரியாமல் ஏகாக்கிரமாக இருக்கவும் செல்லப்பர் பல வழிகளைக் கையாண்டு யோகசுவாமிகளைப் பழக்கினார். நல்லூர் கோயில் தேரடியில்தான் இருவரும் இருந்தனர். சிலசமயங்களில் சொந்தமாக சமைத்து சாப்பிடுவதுண்டு. காய்கறி வாங்க யோகசுவாமியை ஏறக்குறைய இரண்டு மணிநேரம் நடந்தே கூட்டிச்செல்வார் செல்லப்பர். சந்தையில் தனக்கு மிகவும் பிடித்த கத்தரிக்காயை வாங்கிக்கொண்டு வந்து பானையில் போட்டு சோற்றொடு சமைப்பார்கள். சமையல் மணம் மூக்கைத் துளைத்து யோகசுவாமியின் வாயில் உமிழ் சுரந்தாலும் உடனே பானயை உடைத்துவிடுவார். அன்று அவ்வளவுதான். சாப்பாடு ஏதுமில்லை .இப்படி  மனத்தை பொறிபுலங்களுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து விலகி நிற்க, மனவடக்கப் பயிற்சி அடிக்கடி கொடுத்து யோகநாதனைப் பக்குவப்படுத்திக்கொண்டே வந்தார் செல்லப்பர்.

ஒருமுறை  வடக்கே இருக்கும் கீரிமலைக்கு குருவும் சீடரும் நடந்தே சென்றனர். பலமணிநேரம் வெய்யிலில் நடந்து கீரிமலையை அடந்தனர். கடுமையான வெயில் என்பதால் போனதுமே கீரிமலைக் குளத்தில் குளித்துவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டுவந்தார் யோகசுவாமி. கீரிமலையும் வந்துசேர்ந்தாயிற்று. செல்லப்பரும் யோகசுவாமியும் குளத்துக்கு அருகே சென்றனர். குளத்தில் போய்விழவேண்டும் என்று யோகசுவாமிக்கு ஆசை.

உடனே செல்லப்பர் “ என்ன குளத்தைப் பார்க்கத்தானே வந்தோம். பார்த்தாயிற்று, வா போகலாம்” என்று சட்டென திரும்பி நடந்து சென்றுவிட்டார். குருசென்றுவிட்டால் பிறகு சீடருக்கு அங்கே என்ன வேலை?

இப்படி புத்தி சுவாதீனம் அற்றவரைப்போலவே, பைத்தியக்காரன், விசரனைப்போலவே சுமார் நாற்பது ஆண்டுகள் தன் சுய ரூபத்தைக் காட்டாமலே தன் குருநாதன் செல்லப்பன் சென்றுவிட்டான் என்று யோகசுவாமி கூறியிருக்கிறார். ஆனால்  கூடவே இருந்த யோகசுவாமிக்கு மட்டுமே அவர் ஒரு மாபெரும் சித்தர் என்ற உண்மை தெரிந்திருந்தது. அவரை ராஜகுரு என்றே வர்ணித்திருக்கிறார்.

1915ல் செல்லப்பசுவாமிகளின் மறைவுக்குப்பிறகு அவரின் அருள்வாக்குகளை ஞானமுத்துக்களாகக் கோர்த்து  வெளியே கொண்டுவந்தவர் யோகசுவாமிகள். குரு உபதேசித்த அதே மகாவாக்கியங்களை அடியார்களுக்கும் போதித்தார்.

நற்சிந்தனைப் பாடல்கள் ஒன்றில் தன் சற்குரு செல்லப்பசுவாமியைப் பற்றி யோகசுவாமி குறிப்பிட்டிருப்பதாவது:

ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்

ஒருபொல்லாப்பு மில்லையென்றான் உணர்.

 

ஓதாமல் வேதம் உணர்ந்த குருநாதன்

உண்மை முழுதுமென்றான் உணர்.

 

நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை

நாமறியச் சொன்னான் நய.

 

முடிந்த முடிவென்று முன்னாளில் ஆசான்

அடியவர்முன் சொன்னா னறி.

 

தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினந்திடுவான்

ஆரறிவார் என்பா னவன்.

 

ஒருநாள் அதிகாலை நான்கரை மணிக்கு முதன்முறையாக சந்திக்க வந்த ஒருவரை உட்காரவைத்து சுமார் ஒரு மணிநேரம் வழக்கமான தியானத்துக்குப்பின் அவர் உபதேசித்தது:

“ ஒருவருக்கும் ஒரு குறையுமில்லை. உன்னைப் போலத்தான் நான். என்னைப் போலத்தான் நீ, நூதனமொன்றுமில்லை. எல்லாம் எப்பவோ முடிந்த காரியம். எண்ணாயிரம் வருஷங்களுக்கு முன்னே, டெல்லிமாநகரில், செப்புத் தகட்டிலே எழுதிவைத்திருக்கு. அதன்படி நடக்கும். எமக்கென்ன கவலை?  பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவன் அவன். காப்பவனும் அவன். அழிப்பவனும் அவன். எனக்கும் உனக்கும் வேலை சும்மா இருத்தல்தானே. இரவில் நீ நித்திரைக்குப் போனபின் நடப்பது ஒன்றும் உமக்குத் தெரியாது. உன் வீடு வாசல், பொருள் பண்டம், காசு பணம், ஆடு மாடு யாவுக்கும் காவல் யார்? ஆரோ ஒருவன் இவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறான்தானே? காலையில் எழுந்தவுடன் நீ ஏன் என் வீடு, என் மாடு, என் மனைவி, என் பிள்ளையென்று எல்லாவற்றையும் உனது தலைப்பொறுப்பென்று நினைத்துக் கூத்தாடுவான்? இரவில் காப்பாற்றியவன் பகலில் காப்பாற்ற மாட்டானா? “ என்று அவருக்குக் கூறினார்.

அதிசயங்கள் பல சுவாமிகள் நடத்தியிருந்தாலும் தன் யோகசக்திகளை அவர் ஒரு போதும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதில்லை. ஒருமுறை இரண்டு பயணிகள் பஸ்ஸில் ஏறி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றனர். அப்போது யோகசுவாமிகளும் வவுனியாவில் நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். ஆனால் சுவாமிகள் பஸ்ஸில் ஏறவில்லை. பின்னர் பஸ் யாழ்ப்பாணம் அடைந்தபோது யோகசுவாமிகள் திடீரென அங்கே நின்று கொண்டிருக்கக் கண்டனர். வாயடைத்துப் போயினர். தமக்குள் அவர்கள் ‘இவர் மகா சித்தர். பஸ் ஏறாமலே அவர் இங்கு வந்துவிட்டார்!” என்று பேசிக்கொண்டதை யோகசுவாமிகளுக்கும் கேட்டதாம்.

 “ பஸ் வண்டியிருக்கு. புகைவண்டியிருக்கு, நான் ஏன் ஆகாயத்தில் ஒருவருங் காணாமல் பறக்கவேணும்? “ என்று சொல்லி சுவாமிகள் பக்தர்களிடம் சொல்லி சிரித்தாராம்.

இதேபோல் இன்னொரு சம்பவம் . சுவாமிகள் ஆண்டுதோறும் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம்வரை  யாத்திரைக்கு நடந்தே செல்வது வழக்கம். அப்படி அந்த ஆண்டும் யோகசுவாமிகள் சென்றிருப்பார் என்று நினைத்த ஓர் அன்பர் (யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அவர் அடிக்கடி யோகசுவாமியை சென்று தரிசிப்பது வழக்கம்.) சுவாமி இல்லாவிட்டால் என்ன? நாம் போய் அவர் குடிலை தரிசனம் செய்தாலே போதும் என்று நினத்து அங்கு சென்றிருக்கிறார். சென்றவர்க்கு ஆச்சரியம். சுவாமிகள் குடிசையில்தான் இருந்தார். “உடம்பு சுகமில்லை அதனால் யாத்திரை போகவில்லை” என்று அவர்களை வரவேற்று, அமர்த்தி, சற்றுநேரம் பேசிவிட்டு அனுப்பிவிட்டார்.

ஓரிரு நாட்கள் கழித்து கதிர்காம யாத்திரைக்கு சென்றுவந்த அன்பர் ஒருவர் அங்கே படக்காட்சிகள் எடுத்திருந்தார். அதை இவரும் பார்த்தபோது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். யோகசுவாமிகள் கதிர்காமத்திலும் இருந்திருக்கிறார். அங்கே சமயச் சொற்பொழிவும் ஆற்றியது படச்சுருளில் பதிவாகி இருந்தது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கும் அற்புத யோகசக்திகளைப் பெற்றிருந்தாலும் அவர் அதை பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை.

வறுமை, துன்பம், கல்வி குடும்பப் பிரச்னைகள் என்று அன்போடும் பக்தியோடும் வந்த அன்பர்களுக்கு  உதவியும் ஆலோசனையும் வழங்கிட அவர் தவறவில்லை.

 ஒருமுறை தன் பெண்பிள்ளயின் திருமணத்தை நடத்திவைக்க பணமில்லாமல் ஒருவர்  சுவாமியிடம் வந்தார். ஒன்றும் பேசாமல் அழுதுகொண்டிருந்தார். அவரை “இடரினும் தளரினும்” என்ற தேவாரப் பதிகத்தை முழுதும் பாடச் சொன்னார் சுவாமிகள். அப்படியே அவரும் அப்பதிகத்தை மனமுருகப் பாடிமுடித்ததும், ஓர் கார் வந்து வாசலில் நின்றது. வந்தவர் தான் சுவாமியின் அருளால் மலாயா நாட்டுக்குப் போனதாகவும் அங்கே அவருக்கு ரயில்வேயில் நல்ல வேலை கிடைத்ததாகவும், சுவாமிக்கு நன்றி செலுத்தும் வகையில் தன் சேமிப்பிலிருந்து  முப்பது தங்கக் காசுகள் செய்து கொண்டுவந்திருப்பதாகவும் கூறி, ஒரு  தட்டில் அதை சுவாமியிடம் கொடுத்தார். சுவாமிகள் உடனே அதை தேவாரம் பாடியவரிடம் கொடுத்து, “ பார்த்தாயா உன் பாட்டு சிவபெருமான் காதில் விழுந்து உனக்கு பொற்காசுகள் அனுப்பியிருக்கிறார். சந்தோஷமாக பிள்ளை திருமணத்தை நடத்தி முடி,” என்று வாழ்த்தியனுப்பினார்.

 ஆத்ம தொண்டு செய்வதிலும் அவர் முன்னிலை வகித்தார். சிவதொண்டன் நிலையத்தைத் தொடக்கிவைத்து அது ஆன்மீகப் பயிற்சி மெற்கொள்ளும் இடமாகவும்,  சும்மா இருக்க மனத்தைப் பழக்கவும், தியானம் செய்யவும், ஞானதானத்தை புத்தகங்கள்மூலம் பரப்பவும் வழிகோலினார். சிவதொண்டன் என்ற ஒரு பத்திரிகையும் அன்பர்களை தொடங்கச் செய்தார். அதில் அன்பர்களின் ஆத்ம அனுபவங்களும், அவர்கள் பெற்ற உபதேசங்களும், சுவாமிகளின் நற்சிந்தனை பாடல்களும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

முதல் இதழில் சுவாமிகளின் நற்சிந்தனையின் ஒரு பகுதி: “ நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை. அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது. நமக்கு ஒரு குறைவுமில்லை. நாம் என்றுமுள்ளோம். எங்குமிருக்கிறோம். எல்லாமறிவோம். இப்படியே நாம் சிந்தித்து சிந்தித்துக் கீழ்மையான குணங்களைப் போக்கி, மேலான தெய்வ தத்துவத்தை அடைவோமாக.”

சிவயோகசுவாமிகளின் சீடர்களில் மிக முக்கியமாகக் கருதப்படுபவர் அமெரிக்கா ஹவாயைச் சேர்ந்த சிவாயசுப்பிரமுனியசுவாமி. செல்லப்பசுவாமிகள் தன் தலையில் ஓங்கியடித்து தீட்சை வழங்கியதுபோல, யோகசுவாமிகளும் ஆன்மீக சாதனையில் மிகவும் பக்குவப்பட்ட நிலையில் இருந்த தன் அமெரிக்க சீடருக்கும் முதுகில் ஓங்கி அடித்து ஞானதீட்சையளித்தார். அவருக்கு ‘சிவாய சுப்பிரமுனியசுவாமி’ என்ற தீட்சா நாமத்தை வழங்கி, முதுகில் அடித்த அந்த ஓசை அமெரிக்காவில் கேட்கட்டும். பல கோயில்கள் நீ கட்டுவாய். பலருக்கு நீ உணவளிப்பாய்” என்றார்.

யோகசுவாமியின் வாக்கு தவறவில்லை. அமெரிக்காவில் கவாய் தீவில் ஒரு ஆதீனத்தை அமைத்து, சிவாலயத்தை எழுப்பி, இந்துயிசம் டுடேய் என்ற சஞ்சிகை மூலமும், பல சமய புத்தகங்கள் மூலமும், பலருக்கும் ஞான உணவை அளித்துக் கொண்டடிருக்கிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *