தஞ்சை வெ.கோபாலன்                               ’

கோயிலில் புராணிகர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் ஒன்றும் அதிகமில்லையென்றாலும், கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அக்கறையோடு கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் அந்த வழியாகப் போகும்போது ஒலிபெருக்கியில் அவர் பேச்சு காதில் விழுந்தது. அவர் பேசிக் கொண்ர்ருக்கும் விஷயம் பூர்வ ஜன்ம வினைப் பயன் மறுபிறவியிலும் வந்து உறுத்தும் என்பது. ‘சிலப்பதிகாரம்’ காப்பிய நோக்கத்திலும் இதைத்தான் சொல்லுகிறது என்பதால் நான் சற்று கோயில் வாயிலில் நின்று புராணிகரின் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அவர் சொன்னார் முந்தைய பிறவியின் கர்ம பலன்கள் அடுத்தடுத்தப் பிறவியிலும் அவனையே வந்து சேருவதோடு, இந்தப் பிறவியிலும் செய்தவைகளும் சேர்ந்து கொள்ளும். பழைய பாக்கியைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுவதோடு, இந்தப் பிறவியிலும் புதிதாக அவனுக்கு கர்ம வினைகள் வந்து சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எத்தனைதான் உயர்ந்தவன், மேலானவன், நல்லவன் இப்படி எல்லாம் இருந்தபோதும் அவனுக்கும் ஒரு தீங்கு வருகிறது என்று சொன்னால் அது வினையின் பயன் என்றார். அவர் பேச்சில் ஒரு சித்தரைப் பற்றி குறிப்பிட்டார். அவர் காலில் ஒரு புண், ஆறாத புண் அதில் ஏராளமான சின்னஞ்சிறு புழுக்கள். அவர் அவற்றைப் பார்த்து ஊம் தின்னுங்கள், சண்டைபோடாமல் அவரவருக்குத் தேவையானதைத் தின்னுங்கள் என்று தன் உடம்பைத் தின்ன அந்த புழுக்களுக்கு அன்போடு உபசரிப்பாராம். தான் அனுபவிப்பது கர்ம வினை என்பதால் அதை அனுபவித்தே ஆகவேண்டுமென்பது அவருக்குத் தெரியும் என்றார்.

downloadஅப்போது மற்றொரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. ஒரு முறை காஞ்சிப் பெரியவர் கண் பொறைக்காக சென்னையின் பிரபல கண் மருத்துவரிடம் அறுவை சிகிச்சை மடத்திலேயே செய்து கொண்டாராம். அப்போது சீடர்களில் ஒருவர் தாங்கள் நினைத்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து கொள்ள முடியாதா என்று வெகுளித்தனமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு சுவாமி சொன்னாராம், “ஏண்டா, நான் மறுபடியும் வந்து பிறந்து அவஸ்தை படணும்கிறியா?” என்றாராம். தனக்கு விதிக்கப்பட்ட கர்ம வினையைத் தான் அனுபவிக்காவிட்டால் அது மீண்டும் தொடராதோ என்பது அவரது வினா.

அந்த கதையில் அந்த புராணிகர் சொன்ன செய்திகள் எனக்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இப்படியும் இருக்க முடியுமா? அல்லது இவைகள் எல்லாம் இவருடைய கற்பனைகளா? இவர் சொல்வதற்கு ஏதேனும் ஆதாரங்களை இவர் காட்டுவாரா, எந்த புராணத்திலாவது அவர் சொன்ன அந்த கற்பனைக் கதைகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.

என் மனவோட்டத்திற்கு பதில் சொல்வதைப் போல புராணிகர் தொடர்ந்து கதை சொல்லலானார். மகாபாரதக் கதையில் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கர்ணன் மகாவீரன், அர்ஜுனனும் அவனுக்குச் சற்றும் குறைந்தவனல்ல. இவ்விருவருக்கும் நடக்கும் யுத்தத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதைக் காண அனைவருக்கும் ஆவல். கர்ணனின் கடுமையான தாக்குதல்களில் அர்ஜுனன் திணறுகிறான்.

பீஷ்மர் படைத்தலைமை ஏற்றிருந்தவரை போர் புரியாமல் ஒதுங்கியிருந்த கர்ணன் துரோணரும் மாண்டபின் 16ஆம் நாள் யுத்தத்தில்தான் தலைமை ஏற்கிறான். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வரையில் அர்ஜுனனின் தேரை கர்ணன் இருந்த இடத்துக்கு ஓட்டிக்கொண்டு வராமல் கிருஷ்ணன் தவிர்த்து வந்தார். இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று அர்ஜுனனுக்குக் கவலை. அர்ஜுனனுடைய கவலையைப் புரிந்து கொண்டு கிருஷ்ணன் சொல்கிறார் கர்ணன் இப்போது உச்சகட்ட வீரத்துடன் போர் புரிகிறான். அவனுக்குச் சில சாபங்கள் உண்டு. அவை அவனை சரியான தருணத்தில் பாதித்து அவனுடைய வீரத்துக்குப் பின்னடைவு ஏற்படும் அப்போது போய் அவனோடு நீ மொதினால் உனக்கு ஜெயம் கிட்டும் என்று கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனும் ஏற்றுக் கொண்டானாம்.

கர்ணன் பரசுராமரிடம் அஸ்திர வித்தைகளைக் கற்றானாம். ஒரு சமயம் பரசுராமர் தன்னிடம் இந்த அஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொள்ளும் கர்ணன் ஒரு தேரோட்டி மகன் என்பதைத் தெரிந்து கொண்டு, தன்னை ஒரு க்ஷத்திரியன் என்று சொல்லியல்லவா போர்க்கலையைப் பயின்றாய், நீ பொய் சொல்லி என்னை ஏமாற்றி கற்றுக் கொண்டதால், இந்த வித்தைகள் உனக்கு ஆபத்து ஏற்படுகின்ற சமயத்தில் உன்னை கைவிட்டுவிடும். அஸ்திர வித்தைகள் மந்திரங்கள் உனக்கு நினைவுக்கு வராது என்று சாபம் இட்டுவிட்டாராம் பரசுராமர். அப்படியொரு நிலை அவனுக்கு இப்போது போர்க்களத்தில் உண்டான நேரத்தில் அர்ஜுனன், கர்ணனுடைய தேர் சக்கரம் மண்ணில் புதைந்தபோது அதை எடுக்க முயன்ற நேரத்தில் அவனை அம்பு எய்து கொல்கிறான்.

இந்த அதர்மமான முறையில் அர்ஜுனன் கர்ணனைக் கொன்றது சரியா என்ற கேள்வியை புராணிகர் எழுப்பினார். அர்ஜுனனுடைய குமாரன் அபிமன்யுவையும் கர்ணன் உள்ளிட்ட துரியோதனாதியர்கள் அதர்மமான முறையில் அல்லவா கொன்றார்கள். சகல சாஸ்திரங்கள், தர்மங்கள் அனைத்தையும் அறிந்த பீஷ்மரும், துரோணரும், கிருபாச்சாரியாரும் அல்லவா அவனைக் கூடி நின்று கொன்றார்கள். அதுபோலவே கர்ணன் கொல்லப்பட்ட முறையும் தர்மத்துக்கு மாறானதுதான் என்று சொல்லிவிட்டு அப்படி ஏன் ஒரு நிலைமை அவனுக்கு நேர்ந்தது தெரியுமா? அது அவனது கர்ம வினை என்றார். அது என்ன விவரம் என்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.

இதற்கு புராணிகர் அளித்த விவரம் சற்று புதிதாக இருந்தது. அப்படியொரு விளக்கம் நான் கேள்விப் பட்டதில்லை. அவர் சொன்னார், இராமாவதாரத்தில் தேவர்கள் இந்த பூமியில் பல்வேறு பாத்திரங்களாக வந்து அவதரித்தார்கள். நாராயணன் இராமனாகவும், இலக்குமி சீதையாகவும் வந்து அவதரித்தார்கள். இந்திரன் வாலியாகவும், சூரியன் அம்சமாக சுக்ரீவன், வாயுவின் அம்சம் அனுமன் இப்படி பலரும் பலவிதங்களில் இராம கைங்கர்யத்தை நிறைவேற்ற பூமியில் அவதரித்தார்கள்.

இராமவதாரத்தில் சூரியனுடைய குமாரனான சுக்ரீவன் இராமபிரான் மூலமாக இந்திரன் மகனான வாலியைக் கொன்றான். இந்த செயலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்தப் பிறவியில் இந்திரன் மகனான அர்ஜுனன் மகாவிஷ்ணு அவதாரமான ஸ்ரீகிருஷ்ணன் உதவியால் சூரியகுமாரனான கர்ணனைப் போரில் வஞ்சமாகக் கொல்கிறான், இது பழிக்குப் பழியாக பூர்வ ஜன்ம வினையால் செய்யப்பட்டது என்றார்.

கதை என்னவோ சரிதான், ஆனால் அவர் சொன்ன லாஜிக் எனக்கு அதிசயமாக இருந்தது. நம் பண்டைய புராணங்கள் எத்தனை ஆழமாக தெளிவாக தர்மங்களையும், வினைப் பயன்களையும் அழகாக எடுத்துரைக்கின்றன, அவைகள் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல, வரலாறும் அல்ல, ஆனால் தர்மங்களை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைக்கும் பொக்கிஷங்கள் என்பதை என் மனம் உறுதியாக ஏற்றுக் கொண்டது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வினைப் பயன்

  1. //கர்ணன் பரசுராமரிடம் அஸ்திர வித்தைகளைக் கற்றானாம். ஒரு சமயம் பரசுராமர் தன்னிடம் இந்த அஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொள்ளும் கர்ணன் ஒரு தேரோட்டி மகன் என்பதைத் தெரிந்து கொண்டு, தன்னை ஒரு க்ஷத்திரியன் என்று சொல்லியல்லவா/

    Wrong.. Parasuramar taught only to Bramins as he hate kastriyas… He was angry because karnan told he was a bramin…

    how no one noticed this mistake

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *