இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துகள் – நோட்டா ஒரு விளக்கம்

0

பவள சங்கரி

தலையங்கம்

இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த நாள் வாழ்த்துகள். மக்களுக்காக வாழ்ந்த மதபோதகர் இயேசு நாதர் மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் நல்வாழ்விற்காகச் சிலுவையைச் சுமந்து, கல்லடிபட்டு மரித்த இயேசு பிரான் மக்கள் நல்வாழ்வு வேண்டி மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் இந்நாள். அவரை நினைவுகூர்ந்து போற்றுவோம். அன்றிலிருந்து இன்றுவரை கிறித்துவம் என்றால் சேவை என்ற மனப்பான்மையுடன் வாழுகின்ற கிறித்துவ சகோதர, சகோதரிகளுக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

சுண்ணாம்புக் காளவாயில் நாவுக்கரசரைப் போட்டபோதும், கல்லோடுக் கட்டி கடலில் தூக்கிப் போட்டபோதும் இறையருளால் அந்தக் கல்லே தெப்பமாக மிதந்து வந்து அவரைக் காத்தது. அவரும்  மக்கள் நல்வாழ்விற்கு வழிகாட்டினார்.

அரியணையைத் துறந்த புத்தர் அன்பே இறைவன் என்று கூறியதால் மாபெரும் மத போதகரானார். எந்தச் சமயமாக இருப்பினும் ‘சமயம்’ என்றால் ‘வழிகாட்டுதல், நன்னெறிப்படுத்துதல்’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது.

நோட்டா ஒரு விளக்கம்

நோட்டா என்பது நமக்கு விருப்பமில்லையென்றாலும், நம் கடமையிலிருந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் நமது தொகுதியில் நிற்கக்கூடிய வேட்பாளர்கள் நம் கொள்கைகளுக்கு உடன்பாடாக இல்லாமல் இருப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு வாக்களிப்பதில் நமக்கு விருப்பமில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் மற்றும் நமது தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மக்களுடைய பிரச்சனை, எந்தவொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது அப்படியே தீர்க்கப்படாமலே இருக்கும் பட்சத்தில் நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதற்காகவும் நோட்டோவைப் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட ஒரு தொகுதியியில் நோட்டோ பதிவு முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் பதிவு ஏற்பட்டிருப்பின், அந்தத் தொகுதிக்கு மீண்டும் மறு தேர்தல் வைக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலில், ஐந்து தனித் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வேட்பாளர்களாக இருப்பதால் மற்ற சாதியைச் சார்ந்தவர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தத்திற்குரியது. டாக்டர் அம்பேத்கார் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த தலைவர்களின் சாதனைகளையும் மனிதாபிமானச் சேவைகளையும் நாம் நினைவுகூர வேண்டியது அவசியம். அந்தக் குறிப்பிட்ட ஐந்து தொகுதிகளிலும் 7 முதல் 11 சதவிகிதம் வரையிலான மக்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெத்தப் படித்த மேதாவிகளே வாக்களிக்கும் கடமையிலிருந்து தவறுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மனப்பான்மை மாறி, அனைவரும் சமம் என்ற உணர்வுடன் தேர்தலைச் சந்தித்து நமது கடமையை நிறைவேற்றுவோம்.

ஜெய் ஹிந்த்!!!

வாக்களிப்போம்!

ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

விலை போகாமல் வாக்களிப்போம்!!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *