தி.சுபாஷிணி

நம்மோடுதான் பேசுகிறார்கள்

சீனிவாசன் & பாலசுப்ரமணியன்

su

                சென்ற ஆண்டு (2013) இறுதியில் டிசம்பர் 28 ஆம் நாள் தமிழூரில், பேராசிரியர் ச.வே.சுப்ரமண்யம் அவர்கள் நடத்திய கம்பன் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு மறுநாள் டிசம்பர் 29 ஆம் நாள் திருநெல்வேலி வந்தேன். அங்கு இடையறா இலக்கிய வேளாண்மை செய்து கொண்டிருக்கும், பொருணை இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். ஆயிரத்து 550 வாரங்களுக்கும் மேலாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் புலவர்கள், பேராசிரியர்கள் கூடி, சங்க மரபு இலக்கியங்கள் பற்றி கலந்துரையாடலும், சிறப்புப் பொழிவுகளும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டின் உறைவிடமான திரு.தளவாய் டி.ராமசாமி அவர்கள் இக்கட்டத்தின் புரவலராய் அவரது வீட்டில் சுப, அசுப நிகழ்வுகள் நடந்தாலும் தளராது நடத்தி வருகின்றார். அவரது அழைப்பின் பெருமிதத்தில் அவ்விழாவில் கலந்துகொண்டு, திரு.தி.க.சி. அவர்களைக் காணச் சென்றேன்.

                வழக்கம் போல், தன் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரவேற்றார் தி.க.சி.

                “அடடா! இப்பொழுதுதான் ஓவியர் சீனிவாசனும் வேங்கட சுவாமிநாதனும் என்னை வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள். ஒரு அரைமணி நேரம் முன்பு வந்திருக்கக் கூடாதா?” என்றார் தி.க.சி.

                எனக்கு வருத்தமாய் போயிற்று. ஏனெனில் வேங்கட சுவாமிநாதன் அவர்களை நான் இரு வருட காலமாக பார்க்க முயன்று கொண்டிருந்தேன். அதை நான் தி.க.சி. அய்யா அவர்களிடம் கூறினேன். உடனே சீனிவாசனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் இருவரும் நெல்லையை விட்டு மதுரையை நோக்கிச் சென்று விட்டனர். 31 ஆம் தேதியன்று சென்னையில் சீனிவாசன் வீட்டில் அவரைப் பார்க்கலாம் என்கின்ற தகவலைச் சொன்னார். அதன்படி 31-ந் தேதியன்று சென்னையை வந்தடைந்ததும், சீனிவாசன் வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.

                அடையாறிலுள்ள வீட்டைக் கண்டுபிடித்து, மூச்சிறைக்கப்போய் அவர் முன் நின்றேன். வேங்கட சுவாமிநாதன் “ஏனம்மா? இப்படி சிரமப்பட்டு என்னைப் பார்க்கலாமா?” என்று வினவினார். அப்போது அங்கு கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் இருந்தார். அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சகோதரி ஏற்கனவே அறிமுகமானவர்.

“சிரமம் இல்லை சார்! உங்களுடைய அறிவும், திறனாய்வு பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

திரு.நாஞ்சில் நாடன் உங்களைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். அன்றிலிருந்து உங்களைப் பார்க்க எண்ணம் கொண்டேன். உங்கள் எழுத்தைப் புரிந்துகொள்ளும் அளவு அறிவில்லாதவள் சார் நான். ஆனால் உங்களைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. நான் அனுபவத்தை இப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்” என என் நூல்களை அவரிடம் கொடுத்தேன். அவர் மிகவும் பிரியமாக என்னிடம் பேசினார். ‘அத்தகைய அறிவாளி’ என்கின்ற ஆணவம் இல்லாது, என்னைப்பற்றி கேட்டுக்கொண்டார். பின் சீனிவாசன் தன் நூலைக் கொடுத்தார். அதுதான் “நம்மோடுதான் பேசுகிறார்கள்”. ஓவியர் எழுத்தாளராய் காட்சியளித்தார். அந்த கணத்திலிருந்து நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.

                இப்படித்தான் என்னை நூல்கள் வந்தடைகின்றன. சீனிவாசன், பாலசுப்ரமணியன் என்னும் இரு ஓவியர்கள் நம்மோடுதான் எளிய பேச்சுநடையில் நம்முன் உட்கார்ந்து சம்மணம் போட்டுக்கொண்டு பேசுகிறார்கள். திடீரென்று எழுந்து ஜன்னல் அருகே நின்று சீனிவாசன் சீரியஸாகப் பேசுகிறார். அதைத் தூண்டிவிடுவது பாலசுப்ரமணியன். ‘என்னால் முடியலைப்பா? மூச்சு முட்டுது! கொஞ்சம் வெளியில் வாங்கப்பா! காலாற மெரினா வழியாக திருவல்லிக்கேணி செல்லலாம்” என்று அழைத்து செல்கிறார்கள்.

                ‘சுபாஷிணி’ என்று கூப்பிட்டு சொல்கிற மாதிரி இருக்கிறது. அதாவது “கலைங்கிறது கூடை முடையறது இல்லை. வாழ்க்கை. அனுபவம் வெளிப்பாடு. வாழ்க்கையைக் கத்துக்கவும் முடியாது. காமிக்கவும் முடியாது. கலையும் அப்படித்தான்”.

                மேலும் சீனிவாசன் தொடர்கிறார்.

                “சமுதாயத்துல மூணு விஷயங்களை வலுப்படுத்த வேண்டி இருக்கு. ஒண்ணு செவ்வியல் கலைகளை மீட்டெடுக்கிறது. பாதுகாக்கிறது. சமகாலக் கலையை வளர்க்கிறது. பிரச்சாரம் பண்றது, கலைபத்தின புரிதலை, நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கிறது. நாகரீகத்தைச் செழுமைப்படுத்துகிறது. இதை ஒரு கலை வெளிப்பாடாக இருக்கிற கட்டிடம் செய்ய முடியும்னா கலைஞனா இருக்கிற நம்மால் செய்ய முடியாதா? வாழ்வியல்தான் கலை, கலைதான் வாழ்வியல்.

                பொருளாதாரம் எப்பொழுதுமே கலை வெளிப்பாடுகளுக்கே தடையாக இருந்ததில்லை. மனநிலைதான் தடையாக இருக்கிறது. சிந்தனையும் சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடும் பொருளாதாரத் தடையினால் தடைப்பட்டதில்லை. மக்களையும் சமுதாயத்தையும் செழுமைப்படுத்துவது சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடுகளே!

                நூலின் நடை எளிய பேச்சு மொழியிலேயேதான் செல்கின்றது. ஆனால் அது கூறும் விஷயங்களோ பெரியது. மிகவும் பெரியது. ‘மஹா வாக்கியம்’ என்று கூறுவார்களே அதுபோல் இருக்கின்றது.

                சீனிவாசன் கேள்விகளைக் கேட்டு, குழப்புவதுபோல் ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்குகிறார். பின் ஏதோ நம்முடன் பேசித்தான் தெளிவடைவதைப்போல், அவரது சிந்தனையின் தெளிவை, எண்ண ஓட்டங்களின் முறையை நம்மிடம் பகிர்ந்துக் கொள்கின்றார். படிக்கும் நமக்கும் அவருடன் சேர்ந்து பயணிப்பது இன்பமளிக்கின்றது.

                சீனிவாசன் முன் வைக்கும் கேள்வி & ஓவியம் என்றால் என்ன? அதையும் தாண்டி படைப்புகள் என்றால் என்ன? அப்படியென்றால் ஓவியன் யார்? படைப்பாளி யார்?

                “திருத்தமாகச் செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் அழகுணர்வோடு இருக்குமானால் ஓவியம். அதே திருத்தமாக செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் சிந்தனை சார்ந்து இருக்குமானால் அது படைப்பு. சுருங்கச் சொன்னால், அலங்காரமாகவும் இருந்துகொண்டு, சிந்தனைகளையும் தூண்டுமானால் அது படைப்பு.

                ஒரு படைப்பாளனுக்கும் ஒரு ஓவியனுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் பார்வையாளன் மனதில் சந்தோசத்தை மட்டும் தூண்டுபவன் ஓவியன். சந்தோசம் என்பது பார்த்த மாத்திரத்தில் தொற்றிக் கொள்கிற விஷயம். தொற்றிக்கொண்ட பிறகு ஒரு விளக்கத்தைக் கொடுத்து உற்சாகத்தைக் கொடுத்து சிந்தனையைத் தூண்டி, நம்முடைய கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மீறிய அவரவர் சார்ந்த துறைகளில் அவரவர்களுக்கான ஊக்கத்தைக் கொடுப்பது படைப்பு. ஆக பயிற்சி, பயிற்சியின் முதிர்ச்சியில் விளைபவன் ஓவியன். பயிற்சியின் முதிர்ச்சியில் இருந்து விடுபட்டு சிந்தனாவாதியாக மாறி சிந்தித்தவற்றைப் படைப்பின் மூலமாக வெளிப்படுத்திச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படைப்புகள் இருக்குமானால் அவன் படைப்பாளி.”

                இப்படி அருமையான சிந்தனை ஓட்டம், விளக்கம் தருகிறார் சீனிவாசன் இந்நூலில். அதுவும் நெல்லுக்குள் அரிசி இருக்கு என்று போகிற போக்கில் சொல்வதுபோல் சொல்கிறார்.

                ‘கிளிப்பச்சையில் ஒரு காக்கா வந்துச்சுன்னு’ தொடங்கி, ஓவியத்தின், அருபத்தினைப் பற்றி விளக்குகிறார். சீனிவாசனின் அருப ஓவியங்களின் தேர்வைப்பற்றி பாலசுப்ரமணியம் அழகாகப் பகிர்ந்து கொள்கிறார். எல்லாம் ஓவியங்களில் தொழில்நுட்ப பெயர்கள். ஆனால் அதை மிகவும் எளிமையான மொழியில் கூறுகிறார். ஒரு அருப ஓவியத்திலேயும் வடிவம், டெக்சர், கலர், லைன்ஸ், உருவம் எல்லாமே இருக்குன்னு சீனிவாசன் சொல்கிறார். ஆனால் சீனிவாசன் ஓவியத்திலே அது இல்லாமலும் இருக்குன்னு சொல்கிறார் பாலசுப்ரமணியம். இதப்பத்தி சீனிவாசனிடம் மேலும் பேசியதை இங்கு பாலசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்

என்று நூல் முடிவடைகிறது.

                இந்நூலை படித்து முடித்தவுடன், “தி இந்து” தமிழ் நாளிதழில் (22.2.2014) கலை இலக்கியம் பகுதியில் ஓவியர் சந்தானராஜ் பற்றிய கட்டுரையில் எழுதியதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

                “புள்ளிகளை இணைப்பதல்ல கோடு. புள்ளிகளுக்கு இடையே ஒரு வெளி இருக்கிறது. அந்த வெளியையும் உள்ளடக்கியதுதான் கோடு”.

                இந்தப் புள்ளிகளுக்கு இடையிலுள்ள வெளியில் உருவாகும் படைப்புத் தெறிப்புகளால்தான், நான் சீனிவாசனின் தேடலை பார்க்கின்றேன்.

நூலின் தலைப்பு    –       நம்மோடுதான் பேசுகிறார்கள்

ஆசிரியர்                        &             சீனிவாசன் & பாலசுப்ரமணியன்

பக்கம்                               &             128

விலை                             &             200 ரூ

வெளியீடு                     &             வம்சி புக்ஸ்

                                                                19, டி.எம்.சாரோன்,

                   திருவண்ணாமலை & 606 601.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *