அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.

உள்ளத்தினுள்ளே ஆயிரம் கேள்விகள், அவையனைத்தும் உதட்டின் வழியே வெளியே வந்தால் உறவின் அர்த்தங்களே மாறிப் போய்விடும்.

நாளை என்றொருநாள் இல்லாமல் போய்விடுமோ எனும் ஆதங்கத்தில் ஒவ்வொரு நாளையையும் முழுதாக வாழ்ந்து அனுபவித்து விட வேண்டும் எனும் அவாவின் உந்தலினால் வாழ்வது போன்று கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்.

மனிதனை மனிதனாகப் பார்க்காமல் இலாப நட்ட கணக்கோடு அளந்து பார்க்கும் ஒரு அவலநிலைக்கு இன்றைய மக்கள் சிலரின் பேராசைகள் அல்லாடிக் கொண்டிருக்கின்றன.

ஒரு மனிதன் உயிரோடிருப்பதால் என்ன இலாபம்? இறப்பதால் என்ன இலாபம் என்னும் அளவிற்கு வரவு செலவுக் கணக்குகள் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்படும் கொள்கைகளும் அதன் வழி தீட்டப்படும் திட்டங்களுமே சுபிட்சமான நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடும் எனும் வாதத்தோடு அரசியல் கட்சிகள் அதுவும் குறிப்பாக அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் தமது விளக்கங்களை முன் வைக்கின்றன.

தொலைநோக்கான பார்வை இருக்க வேண்டியது அவசியமே ! அதன் வழி தீர்க்கமான திட்டங்களும் தீட்டப்பட வேண்டியதும் அவசியமே! ஆனால் அவைகளை நிறைவேற்ற தற்போதைய வாழ்க்கை வசதிகளில் எவற்றைத் தியாகிக்க வேண்டியுள்ளது என்பதே முக்கியமான விடயமாகிறது.

வாழ்க்கை வசதிகள் என்று நான் குறிப்பிடும் போது ஆடம்பரமான வசதிகளைக் குறிப்பிடவில்லை, அத்தியாவசியமான தேவைகளையே குறிப்பிடுகிறேன்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதர சேவையின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

உலகிற்கே எடுத்துக்காட்டாக உள்ள இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை இத்தகைய நிலை அடையக் காரணம் யாதென்ற கேள்வி அனைத்து மக்களின் மனதிலும் முன்னனி அரசியல் அவதானிகளின் மத்தியிலும் எழுந்த வண்ணமே உள்ளது.

வைத்திய சேவையைப் பெறுமிடத்தில் மக்களுக்கு அச்சேவை இலவசமாக இருக்க வேண்டும் எனும் அடிப்படை தத்துவத்தை மையமாக வைத்தே சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் முன்னதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை ஆரம்பிக்கப் பட்டது.

அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திற்கும், இன்றைய காலக்கட்டத்திற்கும் பெரிய வித்தியாசமுண்டு. அன்றைய சமூக கட்டமைப்பும், இன்றைய சமூக கட்டமைப்பும் முற்றிலும் வேறுபட்டதாக அமைந்துள்ளது.

அன்றைய சராசரி மனிதனின் வாழ்வு 60 ஆகக் கணிக்கப்பட்டது. ஆனால், இன்றைய இங்கிலாந்திலோ 90 வயது வரை வாழும் மனிதர்களின் தொகை அதிகரித்துள்ளது.

வருமானவரி செலுத்துபவர்களும், தேசிய சுகாதர சேவைக்கான நியமனக் கட்டணத்தை வரிமூலம் செலுத்துவோர்களும், அவற்றை செலுத்தாத வேலைஅற்றோர் பட்டியலில் இருப்பவர்களை பராமரிக்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு இன்றைய அதிகரிக்கப்பட்ட ஜரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் நுழையும் மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமற்ற நிலையில் அவர்களுக்கான் வைத்திய சேவையை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இங்கிலாந்து தள்ளப்பட்டிருக்கிறது.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பார்கள். அதுபோல பொருளாதார நிலை இடம்கொடுக்காத நிலையில் இதே சேவையை இலவசமாக இன்னும் எத்தனை காலத்திற்கு அரசாங்கத்தினால் வழங்க முடியும் எனும் கேள்வியே இன்றைய காலக்கட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

தேவைகள் பெருகப் பெருக அப்பெருக்கத்திற்கு நிகராக அச்சேவைய வழங்கக்கூடிய பொருளாதாரம் இல்லாவிட்டால் வழங்கப்படும் சேவைகளின் தரம் குன்றிப் போகிறது.

இதுவே இன்று நாம் கண்கூடாகப் பார்க்கும் யதார்த்த நிலையாகிறது.

மிகவும் அத்தியாவசியமான இக்கேள்விகளுக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எந்தக் கட்சி தமது திட்டங்களை தகுந்தவாறு முன்வைக்கிறதோ அக்கட்சியே அடுத்த வருடம் நடக்கும் பொதுத்தேர்தலில் அரசமைக்கும் அங்கீகாரத்தைப் பெறும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்து.

இவ்வொரு வருட காலத்தில் ஏற்படும் பல மாற்றங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

 

 

படம் உதவி: http://www3.gehealthcare.com/en/Services/Equipment_Financing – http://www3.gehealthcare.com/en/Services/~/media/Images/Services/Equipment%20Financing/Servcices-HFS-Equipment-Financing.jpg?mw=482

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *