— நாகேஸ்வரி அண்ணாமலை

 

Lok Sabha elections 2014 resultsதேர்தல் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியுள்ளது போல் பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸின் ஊழல்களும் சோனியா-ராகுல் தலைமையில் நடந்த குடும்ப ஆட்சியும் நாட்டின் பொருளாதார மந்தமும் பா.ஜ.க. வெற்றிக்குக் காரணம் என்றே வைத்துக்கொள்வோம். விபரம் போதாத தன் மகனைத் தலைமைப் பீடத்தில் அமர்த்த முயன்ற சோனியாவைப் பதவியிலிருந்து இறக்கிய இந்தத் தேர்தலின் முடிவை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் மோடியின் வெற்றி இந்தியாவில் என்னென்ன விபரீதங்களை விளைவிக்குமோ என்பதை நினைக்கும்போது பயம் ஏற்படத்தான் செய்கிறது.

சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் நரேந்திர மோடி பிரதமராக வந்துவிடுவார் என்று நம்பி அவருக்கு மிகுந்த ஆதரவு அளிக்கத் தயாராகி வருகிறார்களாம். மோடிக்கும் அவருடைய சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸில் அபார ஈடுபாடு உண்டு. அவருடைய இந்த ஈடுபாட்டை முழுவதுமாகப் பயன்படுத்தி நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடங்களாக இந்திய முஸ்லீம்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகளை நீக்கும் சட்டங்களையும் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து அளிக்கும் சட்டத்தையும் அரசியல் சாசனத்திலிருந்து நீக்குவதோடு பாடப் புத்தகங்களில் இந்துக் கடவுள்களைப் பற்றி அவர்கள் நினைப்பதற்கு மாறாகக் கூறப்பட்டிருக்கும் விஷயங்களையும் முஸ்லீம் அரசர் அக்பரை அதிகமாகப் புகழ்ந்திருக்கும் பகுதிகளையும் மாற்றி எழுதுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி அதற்காகத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

saiaustralia.orgஅரசியல் அதிகாரம் அவர்களுக்கு முக்கியம் அல்லவென்றும் இந்தியக் கலாச்சாரம்தான் உலகிலேயே சிறந்த கலாச்சாரம் என்றும் ஆரிய இனம்தான் மனித இனங்களிலேயே பெரிய இனம் என்றும் அகில உலகத்தையும் ஆரிய கலாச்சாரத்திற்கு மாற்றுவதே தங்கள் இலக்கு என்ரும் ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த ஒரு தலைவர் பேசியிருக்கிறார். இந்த இலக்குகளை அடைய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மோடி உதவுவார் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சமீபத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமெரிக்கப் பேராசிரியர் வெண்டி டோனிகெரின் (Wendy Doniger) புத்தகத்தை (The Hindus: An Alternative History) மேலைநாடுகளின் அச்சகங்களிலிருந்தும் தடைசெய்யப் போகிறார்களாம்! என்ன மடமை! எல்லாவற்றுக்கும் மேலாக ராமஜென்ம பூமியில் ராமர் கோவிலைக் கட்டியே தீரப் போகிறார்களாம்.

பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆர்.எஸ்.எஸ். செய்ய விரும்புவதை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததின் மூலம் சாதித்துக்கொள்ளலாம் என்று ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். செய்ய விரும்புவதை பா.ஜ.க. செய்யப் போவதாக தேர்தல் அறிக்கையில் கூறினால் தங்கள் வெற்றி வாய்ப்பு குறையலாம் என்று நினைத்த பா.ஜ.க. தலைவர்கள் அந்த மாதிரி விஷயங்களை ஒரு மூலையில் சேர்த்தார்களாம்.

மோடி தன் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. குஜராத்தை எப்படி பொருளாதாரத்தில் முன்னேற்றினார் என்றும் அது மாதிரி இந்தியாவையும் முன்னேற்றிவிடுவார் என்றும் அதற்குரிய தன்னுடைய திட்டங்கள் பற்றியும் மட்டும் கூறியதோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் போகப் போக இந்திய நாட்டை ஒரு இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற இவருடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை நிறைவேற்றத் தயங்க மாட்டர் என்று சிலர் பயப்படுக்கிறார்கள். அதிலும் இப்போது பா.ஜக.வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பதால் மோடியால் ஆர்.எஸ்.எஸ்ஸின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.

மோடி தேர்தல் பிரச்சாரங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகில் வளர்ந்துவிட்ட நாடுகளுக்குச் சமமாக உயர்த்தப் போவதாக வாக்களித்திருக்கிறார். அப்படி அவர் முயன்று பொருளாதாரம் முன்னேற்றம் கண்டாலும் அமெரிக்காவில் போல் ஏழை பணக்காரர்களுக்கு இடையே பெரிய பிளவு ஏற்பட்டு சமூகத்தில் சமத்துவமின்மை தோன்றலாம். இதுவும் சமூகத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கலாம். ஆனால் இதை விடப் பெரிய ஆபத்து அவர் ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டங்களை நிறைவேற்றினால் ஏற்படலாம். பெரும்பான்மை இந்துக்கள் வாழும் நாடு என்றாலும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற, பல இனங்கள் வாழும், பல மொழிகள் பேசப்படும், பல கலாச்சாரங்கள் நிறைந்த நாடு என்ற நற்பெயரை இழக்க நேரிடலாம். இந்த நிலை இந்தியாவுக்கு ஏற்படாமல் காக்கும் பொறுப்பு மோடிக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் அதற்கேற்றாற் போல் நாட்டை நடத்திச் செல்வார் என்று நம்புவோம்.

படம் உதவி:  http://victoria.saiaustralia.org.au/bulletin/samadhi-13.pdf, http://victoria.saiaustralia.org.au/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மோடியின் வெற்றி!!!

  1. இத்தனை காலம் (60 வருடங்கள்)  ஆண்டவர்கள் என்ன சாதித்தார்கள்?  சாதி,சமயம்,மத‌ம்,இனம்,மொழி ,பகுதி என்ற  குடிமகனின் தனிப் பட்ட  நம்பிக்கைகளை அரசியல் படுத்தி இன்னும் பிளவு படுத்தினார்கள். தெலுங்கானா…நாளை
    இதுபோல் இன்னும் ஒன்று பிரிப்பதில் வல்லவர்கள்.  அப்போது அஞ்சாமல் கண்டனம் தராமல்  இருந்து விட்டு வருகின்ற மாற்றத்தில் அஞ்சுவதா? இளைய தலைமுறைகள் சாதி,சமயம்,மத‌ம்,இனம்,மொழி, பகுதி, கடவுள்,நம்பிக்கை, பகுத்தறிவு  என்று ஏமாற்றியவர்களை நம்பவும் தயாராயில்லை. அதைச் சொல்லி சொல்லி மோடியைத் தவிர்ப்பதையும் மாற்றத்தை மறுப்பதையும் செய்யும் காலம் காலமாகிவிட்டது. இருந்தும் அடி பட்ட அரவுகளும் ஓநாய்களும் பேய்களும் களங்கப்படுத்த எது வேண்டுமானாலும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *