இசைக்கவி ரமணன்

(இன்று எங்கள் 34 ஆவது திருமண நாள். 26 ஆம் திருமண நாளில் எழுதிய ஒரு சிறு குறிப்பை இங்கே இடுகிறேன்)

என் மனைவியும் நானும், யார் திருமணத்திற்குச் சென்றாலும் ஒரே வாழ்த்துத்தான் சொல்வோம்: ‘நீங்கள் இருவரும் எங்களைப்போல் இருக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.’

எனக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று என் தாயார் அழகான கடிதமொன்றை எழுதினார்கள். நான் ஒரே வரியில் பதில் எழுதினேன்: ‘சரி; ஆனால் பெண்பெண்ணாய்ப் பார்க்கின்ற பேதைமையிலிருந்து என்னைக் காப்பாற்று.’ எனவே, நான் பெண்பார்க்கப் போவதில்லை என்று நிச்சயமாயிற்று. சில நாட்கள் கழித்து, என் தாயார், ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, ‘இவளைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறோம். உன்முடிவு என்ன?’ என்று கேட்டிருந்தார்கள். கொஞ்சம் க்லாக்சோ பேபி போல், சேலையில் சிரமப்பட்டுத் தோற்றமளித்த அவளைப் பற்றி என்ன அபிப்பிராயம் சொல்லமுடியும்? வாழ்ந்து பார்த்தே புரிந்துகொள்ள முடியாதவர்கள்; அதிலும் பெண்கள்!

மதுரையிலிருந்த நான், நேரே மீனாட்சி கோவிலுக்குச் சென்றேன். ஒரே சினிமாக்
காட்சிதான் போங்க!

காலை வைத்தவுடனேயே எல்லா மணிகளும் சேர்ந்தொலிக்க அடுக்கடுக்காய் தீபாராதனை. நான் கையில் ஒரு கவரோடு நின்றுகொண்டிருக்கிறேன். விறுவிறுவென்று வந்த அர்ச்சகர், வெடுக்கென்று கவரைப் பறித்துச் சென்று, அம்மனின் காலடியில் கிடத்தி, கற்பூரம் காட்டி, பெரிய மாலையைக் கழற்றி என்கழுத்தில் போட்டு, இலையில் ஏகப்பட்ட குங்குமத்தைக் கொடுத்து, கவரைத் திருப்பித்தந்து, ‘எல்லாம் நல்லது போடா,’ என்றாரே பர்க்கலாம்!!

பிரமித்துப்போன நான், வெளியே வந்தபோது புரிந்துகொண்டேன். தாயாருக்குக் கடிதம் போட்டேன். ‘இவள்தான் என்மனைவி. நான் அவளைப் பார்க்கத் தேவையில்லை. அவள் பார்க்க விருப்பப்பட்டால் நடக்கட்டும்.’ அதன்படி, பிள்ளை பார்க்கும் படலம் (!) பெசண்ட் நகரில் அவள் பெரியம்மா வீட்டில் நடந்தது. பத்மா சுப்ரமண்யம் அவர்களும், அவர்களது அண்ணியாரும் வந்திருந்தார்கள். ( “நீ யாரையாவது பண்ணிண்டுடாதேடா! நாங்க வந்து பாக்கறோம்.”)

அகன்ற நெற்றி; கொடுவாள் மீசை; பூஞ்சை உடம்பு; விலாவெலும்புகள் தெரிய ஒரு ஆரஞ்சு ஜிப்பா; பெரிய நெற்றியில் கூராகக் குங்குமம். ஏறத்தாழச் சம்பல் கொள்ளைக்காரன் போல் அந்த நாளில் (அந்த நாளிலும் என்கிறார் அப்பா!) தோற்றமளித்த நான் அவர்கள் வீட்டில் நுழையும்போது, ‘என்னடி இது! பொட்டெல்லாம் இட்டிண்டிருக்கான்!’ என்ற பலத்த முணுமுணுப்பும், ‘குங்குமப் பொட்டுக்காரா கோணக் கிராப்புக்காரா’ பாட்டும் என்காதில் விழத்தான் செய்தன!

ஏதோ ஒரு பந்து பொத்தென்று காலில் விழுந்து தாவியது. அதுதான் பெண்ணென்றார்கள். பெண்வீட்டுக்காரர்கள் ‘ஓ! ஹிந்துஸ்தானியெல்லாம் பாடுவாளே!’ என்று கேட்காத கேள்விக்குப் பலத்த குரலில் பதில் சொல்லிவிட்டுப் பாடச் சொன்னார்கள். அவள் பாடினாள்.. கதவிடுக்கில்
சிக்கிக்கொண்ட எலியும், கல்லறையிலிருந்து அப்போதுதான் எழுந்த அன்றலர்ந்த பேயுமான குரலைக் கேட்டுப் பீதியுற்று, நாற்காலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு நானும் என் நண்பன் சுப்புவும் ஒருவரையொருவர் முழிபிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒருவாறாய் விபரீதம்
முடிந்ததும், அருமையான அல்வாவும், போண்டாவும் தந்தார்கள். இன்னொரு ரவுண்டுகூடப் பெண்பார்க்கலாமோ என்று தோன்றியது.

‘அவளோடு பேசவேண்டுமே’ என்றேன். ‘இங்கேயே பேசலாமே’ என்றார்கள் பெரியம்மா.
’என்னங்க இது, சினிமா ஷூட்டிங் மாதிரி ஆயிருமே’ என்றேன். என் தமிழ் அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ?! பத்மா சுப்ரமண்யம் அவர்கள், ‘நான் எங்காத்துக்குக் கூட்டிண்டு போறேனே,’ என்க அவர்களால் மறுக்க முடியவில்லை. காரில்தான் அவளுக்கு இந்தக் கவிதையைச் சொன்னேன்:

பாதையிலே தொலைவில் கிடந்தேன்நான் பார்வை படாதபடி – ஒரு
போதையிலே உடல்நெய்துவந்தாள் அவள் புன்னகை செய்தபடி – இன்ப
வேதனையில் மனம் விம்மிநின்றேன் நான் வார்த்தை இழந்தபடி – ஒரு
சாதனை செய்தது போல்பறந்தா ளவள் காற்றில் சிரித்தபடி..

அவள் இவள்தானா? மனமே மனமே அவள் இவள்தானா?

மல்லிகைப் பந்தல் சிலிர்த்தது போலென் மனத்தில் பனித்துளிகள் – நான்
சொல்லெடுக்க அவள் ஸ்ருதியெடுக்க அங்கு சொர்க்கங்கள் தவமிருக்க
தெள்ளிய நீர்மடுவே ஒரு தேமலர் வீழ்ந்து தெளும்புதல்போல் – என்
உள்ளுணர்வூறிய கள்ளுறைக் கவிதையில் உண்மையெனத் தெரிந்தாள்

அவள் இவள்தானா? மனமே மனமே அவள் இவள்தானா?

அவளுக்குப் பிடித்தது உடனே தெரிந்தது.

பத்தூக்காவின் நடன அரங்கு. மாடியில். பெரிய நிலைக் கண்ணாடி. என்னையும், அவளையும் விட்டுவிட்டு, ‘டேய்! உன்ன நம்பி விட்டுட்டுப் போறேண்டா!’ என்று கண்சிமிட்டிச் சென்றார்கள்.

அவள்தான் அனுராதா. என் காதற் கண்ணம்மா. கவிதைக்குக் கிரியா ஊக்கி. கடுமையான விமரிசகர். ‘இல்லற வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் பரஸ்பர மரியாதைதான். ஒருவரையொருவர் அவரவர் வார்ப்பு எப்படியோ அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும். அதன்பின், பதியம்போடப்படும் நேசக்கொடிதான், நாளெல்லாம் நன்மலர்களாய்ப் பூத்துக் குலுங்கும்,’ என்பாள். இந்தக் காவல் தெய்வத்தோடு நான் கழித்த இந்த 26 ஆண்டுகளும் இனிமையானவை. பரிசாய் விளைந்தனர் இரட்டை மகன்கள்.

இன்றுதான் திருமணமானதுபோல் இன்றும் இருக்கிறோம்.

காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்

என்ற பாரதி வாக்கின் பொருளை எனக்கு வாழ்வின் அனுபவமாய்த் தந்த என் மனையாளுக்கு வாழ்த்துச் சொல்லி, இதோ உங்களுக்கு அறிமுகம் செய்தேன்!

(இதோ! இந்த மணநாளுக்கு அனுவுக்கு எழுதிய கவிதை!)

ஆல வாயனின் கோயிலிலே

அன்னை மீனாட்சி சந்நிதியில், ஒரு

மாலை நேர மணியொலியில், உன்னை

மனைவியாக்கினாள் மாதங்கி

காலச் சக்கரச் சுழற்சியிலே

கடந்தோம் பற்பல காதங்கள்

சோலையும் பாலையும் சேர்ந்ததுதான்

சுந்தர வாழ்க்கை ஆகியது!

 

அருகே இருந்து விமர்சித்தாய்

அருமைக் குழந்தைக ளைத்தந்தாய்

கரிய பொழுதுகள் சூழ்கையிலும்

கலங்கா தென்னோ டுடனிருந்தாய்

குருவை உணர்ந்து கும்பிட்டாய்

கூட்டுக்குள்ளே குடில்வளர்த்தாய்

சிறிதும் பெரிதும் பார்த்துவிட்டாய்

நிறைவை நெஞ்சில் சேர்த்துவிட்டாய்!

 

பூவில் புயல்கள் சுழியோடும்

புனலில் எரிமலை பொங்கிவரும்

பாவனைகள் பல பந்தாடும்

பாவலனை நீ கைபிடித்தாய், உன்

தேவைகள் தீராதிருந்தாலும், நான்

தெருவில் பாடித் திரிந்தாலும்

ஆவலோ அன்போ எதனாலோ

அகலா தென்னுடன் வாழ்கின்றாய்!!

 

மனதில் குறைகள் எனக்கில்லை

மறிக்கும் சிறைகள் உனக்கில்லை

கனவாய் விரையும் வாழ்வினிலே, நாம்

கவலைப் படவே வாய்ப்பில்லை

இனிமேல் உன்திசை உனதெனவே

இதயம் திறந்து சொல்கின்றேன்

மனதுக் குகந்த வழியினிலே, நீ

மலர்கள் கொய்து மகிழ்ந்திருப்பாய்!

 

வாழ்வு முடிந்தது என் முன்னே, புது

வாசல் திறந்தது கண்முன்னே

ஊழ்வினை உடம்பைத் தொட்டாலும், உயிர்

உயரே உயரே பறக்கிறது!

தாழ்வும் உயர்வும் இல்லாமல், பரா

சக்தியின் இச்சையில் தொடர்கின்றேன்

சூழ்வன யாவும் அவள்விருப்பம், என நீ

கொண்டால் வணங்கி மகிழ்கின்றேன்!

 

ஆயிரம் பிறைகள் நீ காண்க!

ஆரோக் கியமாய் நீ வாழ்க!

வாயினில் இன்சொல் வளர்ந்திடுக!

வழியில் வாய்மை துணைவருக!

காயாய்ப் புளித்த கதையெல்லாம், உள்ளக்

கனிவில் கனியாய் இனித்திடுக!

போயுன் இலக்கில் பொருந்திக்கொள்! என்

புண்ணியத்தையும் அருந்திக்கொள்!

ரமணன்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பெண் பார்த்த படலம்

  1. பெண்ணின் குரலைக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட எலிக்கு ஒப்பிட்டது  நல்ல நகைச்சுவை.
    “பூவில் புயல்கள் சுழியோடும்
    புனலில் எரிமலை பொங்கிவரும்
    பாவனைகள் பல பந்தாடும்
    பாவலனை நீ கைபிடித்தாய், உன்
    தேவைகள் தீராதிருந்தாலும், நான்
    தெருவில் பாடித் திரிந்தாலும்
    ஆவலோ அன்போ எதனாலோ
    அகலா தென்னுடன் வாழ்கின்றாய்!!”

    துணைவியின் அருமையை உணர்ந்து எழுதிய இவ்வரிகள் அற்புதம்!
    பாராட்டுக்கள்!

  2. திருமதி அனு அவர்களை 2014 மே மாதம் மயிலை நிகழ்ச்சியில் சந்தித்தேன். மேடையில் ரமணன் பாடிக் களிக்க, அனு அம்மா கீழே தரையில் அமர்ந்து, கன்னத்தில் கை வைத்து ரசித்த காட்சி, ஒரு சின்னஞ்சிறு கிளி போல் அவரைக் காட்டியது. இடையிடையே சேர்ந்தும் பாடினார். 

    ‘நீங்கள் இருவரும் எங்களைப்போல் இருக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறோம்.’ என்ற வாழ்த்து அரியது. 

    ஆயிரம் பிறைகள் நீர் காண்க!
    ஆரோக் கியமாய் நீர் வாழ்க!

  3. இந்தகாலத்து இளைஞர்கள் படிக்க வேண்டிய விஷயம் நிறைய உள்ளது(எடுத்ததெற்கெல்லாம் டைவோர்ஸ்) நல்ல விஷயம் கூறியதற்கு நன்றி.
    முனைவர் லட்சுமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *