அன்பு நண்பர்களே,

vimalaஇன்று முதல் (23-05-2014) நம் வல்லமையில் மன நலம் என்ற புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருமிகு. எம். விமலதாரணி, ஹோமியோபதி மருத்துவம் மற்றும் மன நல ஆலோசகர் உளவியல் சார்ந்த பல கருத்தரங்குகளை நடத்தி வருபவர், மற்றும் திரு. ஆ.கார்த்திகேயன் , வழக்கறிஞர், மன நல ஆலோசகர் ஆகிய இருவரும் நம் வல்லமை வாசகர்களுக்கான மன நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க இசைந்துள்ளனர். இவர்கள் சென்னை அண்ணா நகரில் (மேற்கு) காவியா ஹெல்த் ஹோம் எனும் மனநல ஆலோசனை மையம் நடத்தி வருகின்றனர். இம்மையத்தில் மாணவர்களுக்க்கான சிறப்பு மன நல ஆலோசனை, கல்வி மற்றும் தொழில் சார்ந்த வழிநடத்தல், குடும்ப நல ஆலோசனை வழங்கப்படுகிறது. இவர்கள் உளவியல் மற்றும் சட்டம் சார்ந்த பல கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். திரு ஆ. கார்த்திகேயன் மற்றும் திருமிகு எம். விமலதாரணி ஆகியோரிடம் தங்கள் பதிலைப் பெறுவதற்கு, vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் வினாக்களை அனுப்பலாம். பெயர் குறிப்பிட விரும்பாவிட்டால் அதையும் தெரிவிக்கலாம். இவர்களிடம் அண்மைக் காலத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் இங்கே:

கேள்வி:1

எனக்கு வயது 21. என் அக்காவிற்குத் திருமணமாகி விட்டது. என் அப்பா பத்து ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துKarthi விட்டார். 43 வயதான என் தாய் சமீப காலமாக வேறு நபருடன் நட்பாக பழகி வருகிறார். எங்கள் உறவினர்களில் சிலர் இதை தவறாகப் பேசுகின்றனர். இதைப் பற்றி அம்மாவிடம் கேட்கவும் பயமாக இருக்கிறது. சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. என்ன செய்வது?

பதில்: நமது சமூகத்தில் ஆண் பெண் நட்புறவை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதுவும் விதவைப் பெண் ஒரு ஆணுடன் நட்பாக பழகினாலும், தவறான ஒரு ஆணுடன் நட்பாகப் பழகினாலும் தவறான நோக்கிலான பார்வைகளே அதிகம். உங்களுக்கு உங்கள் தாயை பற்றித் தெரியாதா? மற்றவர்கள் தவறாக பேசுகின்றனர் என்பதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. நீங்களும், உங்கள் தமக்கையும் உங்கள் தாயாரிடம் பேசலாம். அந்த நபர் நல்லவராகவும் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அக்கறை உடையவராகவும் அவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த நட்பை சரியாகப் புரிந்து கொள்கின்றனர் என்றால் இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

கேள்வி: 2

எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. நானும் என் மனைவியும் எதோ இயந்திரம் போல ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறோம். பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் எங்கள் திருமணம் நடந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் எங்களுக்குள் எந்த ஈடுபாடும் வளரவில்லை. நாங்கள் இருவருமே மனப்பூர்வமாகப் பிரிந்து விட நினைத்தாலும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் கட்டாயப்படுத்தலும் மிரட்டலும் எங்களுக்கு சமீப காலமாய் விரக்தியை ஏற்படுத்துகிறது.

பதில்: உங்களிடம் எந்த ஈடுபாடும் இல்லை என்கின்றீர்களேத் தவிர உங்களுக்குள் வெறுப்பு உள்ளது எனச் சொல்லவில்லை. நீங்கள் ஈடுபாடு எனச் சொல்வது தாம்பத்திய வாழ்விலா?அல்லது பொதுவான அனைத்து விஷயங்களிலுமா என்பது பற்றி உங்கள் கேள்வியில் தெளிவில்லை. சரி விவாகரத்து பெற்று விடுகிறீர்கள் என வைத்து கொள்வோம். பின்னர் என்ன செய்வதாக உத்தேசம்? மறுமணமா?அல்லது தனியாகவே இருந்து விடப் போகிறீர்களா?

உங்களுக்கு கட்டாய மணம் செய்துவிட்டனர் என்ற கோபம் கூட தற்போதைய ஈடுபாடில்லா வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கலாம் அல்லவா? நீங்களும், உங்கள் மனைவியும் மனம் விட்டு இதுபற்றிப் பேசி இருக்கிறிர்களா? உங்கள் இருவரின் வாழ்விலும் வேறு நபர் குறிக்கீடு ஏதும் இல்லை என்றால், பிரச்சனை என்னும் மாய வலையிலிருந்து உங்களால் மிக எளிதாக வெளியே வந்து விட முடியும். மனநல ஆலோசகரை அணுகுங்கள்.

கேள்வி : 3

என் கணவருக்கு நான் இரண்டாம் தாரம். மூத்த மனைவி இறந்து விட்டார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். நான் அவனை கண்டிப்பதால் மற்றவர்கள் என்னைத் தவறாக நினைப்பார்களா?

பதில்: அந்தப் பையனை நீங்கள் உங்கள் சொந்த மகனாகத்தான் கருத வேண்டும். அப்படி நினைத்தால் இந்த பயமே உங்களுக்கு தோன்றாது. குழந்தைகள் தவறு செய்யும் போது கடமை உணர்வோடு அவர்களைத் திருத்த வேண்டும். அதே போல் அந்தப் பையனையும் தவறு செய்தால் திருத்துங்கள் அரவணைக்கும் போது பாசமும் காட்டுங்கள். குழந்தைகளைக் கண்டித்தும், அரவணைத்தும் வளர்த்தால் அவர்கள் பாதுக்காப்பாக உணர்வார்கள். அதே நேரத்தில் கண்டிப்பு என்பது குழந்தையின் மனநிலைக்குத் தக்கப்படி அளவோடு பக்குவமாக இருக்க வேண்டும்.

கேள்வி : 4

எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. நான் என் மனைவியிடம் பாசமாக இருக்கிறேன். எதேச்சையாக அவள் பெட்டியில் அவள் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற சீட்டை கண்டுபிடித்தேன். ஆனால் அவளோ, அவள் பெற்றோரோ இதைப் பற்றி எதுவும் கூறாததால் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறேன். மேலும் என் மனைவி மன நோயாளியாக இருப்பதால் அவளிடம் நான் எப்படி நடந்து கொள்வது?.

பதில்: உங்கள் மனைவிக்கு எத்தகைய பாதிப்பு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் இது அச்சத்துக்கோ, ஆபத்துக்கோ உரியது இல்லை. மன நோயும் உடல் நோயைப் போலவே குணப்படுத்தக் கூடியது தான். உங்களிடம் உங்கள் மனைவி இதை மறைத்ததற்கு காரணம் அவளுடைய நோய் குணமாகி இருக்கலாம். அல்லது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு அவரை வெறுத்து விடலாம் என்பதற்காகக் கூட இருக்கலாம் அல்லவா? எப்படி ஆனாலும் உங்கள் மனைவிக்கு இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் நீங்கள் இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம். தேவையெனில் அவரிடம் பேசி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு அவசியம் ஏற்பட்டால் நீங்களே ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மன நல ஆலோசனைகள்

  1. இந்தப் புது பகுதியை வரவேற்கிறேன் . மனம் திறந்து பேசவும் மனம் இலேசாகப்போவதற்கும் இது மிகவும் தேவை என கருதுகிறேன் .வாழ்த்துகள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *