ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. கவிஞர் வாலி!…

0

கவிஞர் காவிரிமைந்தன்

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..

உள்ளத்து உள்ளது கவிதை என்பார் நாமக்கல் கவிஞர்.  அது ஊற்றுக்கண் திறந்ததும் புனலாய் வெளிப்பட்டு உருவாகும் வெள்ளம்!  கவிஞர்தம் நெஞ்சமும் அப்படித்தான்!  உள்ளத்துள் தான் உணர்ந்ததை உணர்வின் வெளிப்பாடல் கவிதை வடிவில் மொழி பெயர்த்துவிடுகிறான்!

இதில் திரைப்படப்பாடலாசிரியரோ.. ஒருவகையில் கதையை, கருவை, கதாபாத்திர இயல்புகளை பாடல்வரிகளில் பிரதிபலிக்க வேண்டிய பணியில் ஈடுபட்டு சொற்சித்திரம்தனை இசைக் கோர்வைக்குள் அமைத்திட ஒரு வகையில் தவமே கொள்கின்றான்.  இந்தக் கற்பனைக் கலவையில் உருவாகிடும் பல்லாயிரம் பாடல்களில் – திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் ஈடிலா நடிப்புத்தித்தால்.. வெள்ளித்திரையில் நம் உள்ளம் தொட்டப் பாடல்களின் வரிசையிதோ..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அவர்களும் அற்புத நடிப்பை அள்ளி வழங்கி நம் கண்முன்னே காட்சியளித்ததுடன் மனக்கண்முன் நிழலாடுகின்றனர்!

‘செல்வம்’ திரைப்படத்தில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில், டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் உணர்வுகளை வார்த்தெடுத்து பாவங்களைச் சேர்த்தெடுத்து ஒற்றைப் பாடலில் கொட்டித்தீர்த்துள்ளார்கள்.

கணவன் – மனைவிக்கு இடையே தாம்பத்யம் சில காலம் ஒத்திப்பபோடப்பட வேண்டும் என்று ஆரூடம் சொன்னதாலே.. தலைவி தன்னுள் எழுகின்ற அத்துணை மனப்போராட்டங்களையும் அழுத்தமாய்.. அளவாய், அற்புதமாய் வெளிப்படுத்த புன்னகை அரசியின் பூமுகம்.. நம் கண் முன்னே காட்டும் கோலங்களும்.. நாடுதல், தேடுதல், ஏங்குதல்.. அதையெல்லாம் ஒன்றாகத் தாங்குதல் என முத்திரைப் பதித்த முக பாவணைகளும் கலந்து சிவாஜியின் பெரும் பங்களிப்பும் – காண்போரை வசமாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

ஏதோ காட்சியல்ல.. இதயம் தொடும் காட்சி!  கதாபாத்திரங்கள் தத்தம் நடிப்பு முத்திரைகளால் பரிணமிக்கச் செய்த இப்பாடல் வரிகளில் வார்த்தைகளை வழங்கிய வள்ளல் வாலியாவார்!

http://www.youtube.com/watch?v=6uNf_KRgp18

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..maxresdefault

உள்ள உணர்ச்சியை வார்த்தையில்

வடித்துச் சொல்ல.. எண்ணம்..

உயிரா உடலா பிரிந்து செல்ல

நாம் பிரிந்தது எந்நாளும் கலந்து கொள்ள..

நின்றால் நடந்தால் உன் நினைவு

என் நினைவே அகன்றால் உன் கனவு

கனவு ஒன்றா.. இரண்டா எடுத்துச் சொல்ல..

நினைவும் கனவும் எனக்காக – என்

நெற்றியில் குங்குமம் உனக்காக

நான் உயிரா உடலா பிரிந்து செல்ல..

குங்குமம் நிலைக்கும் குலமகளே.. நான்

குலவிடத் துடிப்பது உன் நிழலே

நிழலும் நினைவும் அநித்தியமே.. என்றும்

நிலையாய் நிற்பது சத்தியமே.. சத்தியமே.. சத்தியமே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *