இசைக்கவி ரமணன்

மதுரையில், ராஜா முத்தையா மன்றத்திற்கு அருகே கற்பகம் உணவு விடுதி ஒன்றிருந்தது. அதுதான் எங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஒரே ஓட்டல் என்பதால் நாங்கள் கற்பகமே கதியாகக் கிடந்தோம். சாப்பாடு நன்றாகத்தானிருந்தது; சிற்றுண்டி இன்னும் நன்றாக இருந்தது. இருந்தாலும், தினமும் ஓட்டலில் தின்னுவது சரிப்படவில்லை. எங்களுக்கோ வேறு வழியும் இல்லை. அங்கிருந்த அத்தனைச் சிப்பந்திகளும் நண்பர்களாகி விட்டார்கள். வெளிச்சாப்பாடு, மாதாமாதம் அலுவற் பயணங்கள் இவற்றால், எப்போதும் கெட்டே இருந்த வயிறு இன்னும் கெட்டுப் போனது. வீட்டில் வளரும்போது, இட்டிலியை இளக்காரமாகப் பார்த்த நான் இப்போது ஏறக்குறைய இட்டிலிக்குத் தாலியே கட்டிவிட்டேன்! இட்டிலியைத் தின்றபிறகு வேறெதைத் தின்றாலும் ஒன்றும் செய்யாது என்பதாக ஒரு சித்தாந்தம் எங்களிடையே இருந்தது!

 raman

ஒருநாள், வழக்கம்போல் காலைச் சிற்றுண்டிக்காகச் சென்று, ‘என்ன இருக்குண்ணே?’ என்று கேட்டேன். சர்வர் பட்டியல் பலகையில் இருந்ததை — நான் நடுவில் தடுத்தபோதும் — ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார். ‘போதுங்க! போட்டுக் கொழப்பாதீங்க!’ என்றேன் நான். அவரோ, ‘எது? நானா கொழப்பறேன்?! நீங்க திங்கப் போறது ரெண்டு இட்லி, ஒரு வடை, அதிகம் போனா ஒரு பொங்க. நானும் பாத்துக்கிட்டுத்தானே இருக்கேன்! இதுக்கு நெதமும் ‘என்ன இருக்கு’ன்னு ஒரு கேள்வியை எதுக்குத்தான் கேக்குறீய்ங்களோ?!’ என்று ஒரே போடாய்ப் போட்டார்! பக்கத்தில், டபரா, டம்ளர் தட்டுக்களை எடுத்து வாளியில் போட்டுக் கொண்டிருந்த சிறுவன் கரணமலை, ரசித்துச் சிரித்தான். நான் பார்த்ததும், ‘ஒண்ணும் தப்பா எடுத்துக்கிட வேணாம்,’ என்றான். ‘இதுல தப்பா நெனக்கிறதுக்கு என்ன இருக்கு? நல்லா இருக்கியா?’ என்றேன். பதில்பேசத் தயங்காத மதுரையில்தான் எனக்கு எத்தனை விதமான நண்பர்கள்! சின்ன வாழை மட்டையால் டேபிளை நேர்த்தியாகச் சுத்தம் செய்தான் கரணமலை. இவர்களுக்குத்தான் சிரிப்பு எத்தனை இயல்பாகவும், முழுமையாகவும் இருக்கிறது!

ramana

ram

காப்பி முடிந்து வெளியே வந்தால், பெட்டிக் கடையில் பாலகிருஷ்ணன் தயாராக வெற்றிலை, பாக்குப் புகையிலையை நீட்டினார். பளிச்சென்று இருக்கும் அந்தக் கடைக்காரரோடு பேச்சுக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. சிரிப்பும், வம்புமாக இருக்கும் அவர் பேச்சு. அப்போது நடந்த ஓர் உரையாடலை என்னால் இன்றைக்கும் மறக்க முடியாது. வெற்றிலை வாங்கிக் கொண்டார் ஒருவர். பார்க்க மிகவும் சாதாரணமாக இருந்தார்.

‘சுண்ணாம்பு எங்க?’

– அந்தாத் தூணுலெ கட்டித் தொங்க விட்டிருக்கு, பாக்க மாட்டியளோ? புதுசாக் கேக்கீக?’

‘சரித்தான்; வெத்தலைய மருதயில வாங்க்கிக்கிட்டுச் சுண்ணாம்புக்குத் திண்டுக்க போக வேண்டி இருக்கு!’

நான் ரசித்துச் சிரித்தேன், பாலகிருஷ்ணனுக்கு முகம் தொங்கிவிட்டது. சுண்ணாம்பை எடுத்துக் கொண்டவர் அப்படியே போகாமல், கடையருகே வந்து நின்று வெற்றிலையில் பரபரப்பாகத் தடவிக்கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன் கடகடவென்று சிரித்தார்.

‘எதுக்கு இப்பம் சிரிக்கிறீய?’

– இல்ல, வெத்தலக்குத்தான் சுண்ணாம்பு தடவறீயளா, வீட்டுக்குத்தான் வெள்ளையடிக்கீகளான்னு பாக்கேன்

இவர் முகம் இறுகிப்போய்விட்டது. ஒன்றும் பதிலே சொல்லவில்லை. வெற்றிலையைச் சுருட்டி வாயில் திணித்துக்கொண்டு, மிஞ்சிய சுண்ணாம்பை, கடைப்பலகை அடியில் நாசூக்காகத் தேய்த்தபடிக் கேட்டார்:

‘பளம் எம்புட்டு?’

கழுத்தை வலதுபுறமாகச் சாய்த்தபடிப் பாலகிருஷ்ணன் சொன்னார்,

– எப்பமும் போல அம்பது காசுதான்

‘பளுத்திருக்கோ?’

குலையில் கைவைத்திருந்த பாலுவுக்குக் கொலைவெறி வந்துவிட்டது. தன்கடைப் பழத்தை யாரும் சந்தேகிப்பதைச் சகிக்கமாட்டார் அவர்!

– எல்லாம் வெளஞ்ச பழம்தான் நாங்க வியாவாரம் பண்ணுவம் பாத்துகிடுங்க!

‘அது பளம்கிறீய்ங்க; கையி பிடிச்சபடி இருக்கு; காலுரெண்டும் ஆகாசத்துல தொங்கிக்கிட்டிருக்கே அதான் கேட்டேன்!’ என்று ஓசைப்படாமல் இரண்டு பழங்களுக்கான காசை மிட்டாய் டப்பா மேல் வைத்துவிட்டு அப்பாவியாக நின்றார்!

பாலகிருஷ்ணனின் பரிதாபம், நான் பார்த்தால் அதிகமாகும் என்று நாலெட்டு வைத்தேன். அருகே, என் தோழியான இளநீர்ப்பாட்டி, கடை பரப்பியிருந்தாள். சின்னக் கோணிச்சாக்குப் படுதாவின் கீழ்தான் அவள் இந்தக் கடுமையான வெயில் மாதங்களைக் கழிக்க வேண்டும்.

கடந்த காலக் கதைகளை முகத்தின் ரேகைகளே

படம்போட்டுக் காட்டுகின்ற பாட்டி

படுதாவே கூரையாக, பாயுமாக, பரப்பிவைத்த கடையுமாக…

 

இவள் விதவையாகி எத்தனை நூற்றாண்டுகள் ஆகியிருக்குமோ? வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களால் விளைந்த அசதி அவளைக் கப்பிக் கிடந்தது. ஆனால், எதற்கும் யாரையும் குறைகூறாத ஒரு மனோபாவம் அவள் மனதில் அமைதியாய் நிறைந்திருந்தது. அவள் முகத்தின் விரிவற்ற இனிமைக்கு அதுதான் காரணம்.

‘என்ன பாட்டி செளரியந்தானே?’

– வாப்பு! வந்துக்க

என்று கழுத்திலிருந்து கையிடுக்கில் வழிந்தோடும் வியர்வையை, எத்தனை லாகவமாய்த் துடைத்துக் கொண்டாள்! ரவிக்கை போடாத அந்தப் பெண்மணியின் சேலை ஒருபோதும் விலகியதில்லை! அவள் துடைத்துக்கொண்ட பாங்கில், எனக்கும் களைப்பு நீங்கியது.

‘எளநி குடிப்பமா?’

– நான் எம்புட்டுத்தரம்தான் சொல்லுறதோ! அங்ஙன ஓட்டல் உள்ளறபோயிக் காப்பியக் குடிச்சிட்டு வந்து ஒடனே இங்க எளநி குடிக்க வேணாம்னு!

‘ஐயோ! மறந்துபோச்சு ஆத்தா!’

-எப்படித்தா மறப்பீயளோ? என்ன எளவட்டோ?

அந்த அக்கறை மிகுந்த கோபத்தால் குளிர்ந்துபோய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளோ, காய்களைச் சுற்றுமுற்றும் பார்த்துக் கண்ணால் ஊடுருவி, ஒன்றை எடுத்துச் சீவித்தந்தாள். எனக்கு ஸ்டிரா போட்டு உறிஞ்சுவது பிடிக்காது. வாயை வாயில் பதித்து, சொட்டு கீழே விழாமல் வானத்தைப் பார்த்துக் கொண்டே தொண்டையில் கவிழ்க்க வேண்டும். அந்தக் குளுமை, இனிமை இவை கலந்த சுகம் நெஞ்சில் இறங்க, கண், அதுபாட்டுக்கு மூடிக்கொள்ளும்! கடைசியில் கொஞ்சம் கவனம் பிசகி, நீர் சட்டையை நனைக்கும்! அப்படிக் குடித்தால்தான் இளநீர் குடித்தது போலிருக்கும். பாட்டி, அதற்கேற்ப, வாயை நறுவிசாக அகலப்படுத்தித் தருவாள்.

– அங்கிட்டு ஒக்காரு

இன்னும் கோபம் குறையவில்லை! அவள் சொன்ன பெட்டி மீது உட்கார்ந்து கொண்டு, இளநீரைக் கையில் வாங்கிக் கொண்டு (இல்லையென்றால் தரமாட்டாள்!) பேச்சைத் திருப்புவோமென்று கேட்டேன்:

‘சரி, வியாவாரமெல்லாம் எப்படி இருக்கு?’

அவளா? சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் விடுவாளா?

– இந்தா! இன்னும் ஒருக்கா இப்படிக் கண்ட மேனிக்கு எளநி கேட்டாத் தரமாட்டேன், சொல்லிப்புட்டேன் ஆமா!

‘சரி தாயி! அதான் சொல்லிட்டிங்கள்ளே! இனிமே கவனமா இருந்துக்குவேன்’

– அதுக்குத்தாஞ் சொல்லுறது; காப்பியக் குடிச்சுப்போட்டு எளநியையுங் குடிச்சென்னு வய்யி; அப்பொறம் கல்லுக்கொடலாயிப் பீச்சும். எல்லாம் நல்லதுக்குத்தாஞ் சொல்லுறது

என்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள். நான் அவள் தந்த இளநீரை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த போது ஒரு க்ளாசில் டீயுடன் உட்கார்ந்து கொண்டு மெல்ல உறிஞ்சத் துவங்கினாள்.

‘ஏம் பாட்டி! இந்த வெய்யில்ல எதுக்கு டீயைப் போயி குடிக்கறீங்க? ஒரு எளநியைக் குடிக்க வேண்டியதுதானே?’

– தே! பேச்சப் பாரு! நான் வாழற பவுசுக்கு எளநி கட்டுப் படியாவுமோ? டீ தான் தேறும்

என்று, இன்னொரு மடக்கு விழுங்கினாள். தாழ்ந்திருந்த அவள் பார்வையில், நினைவுகளின் ஆரவாரம் தெரிந்தது. டீயிலிருந்து எழுந்த ஆவி, அதற்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தது. எத்தனை அல்லல்களோ! என்னென்ன பின்னல்களோ! இத்தனைக்ககும் மத்தியில், வியாபாரம் செய்து வயிறு கழுவ வேண்டிய கட்டாயம். அதிலும், எந்த உறவுமில்லாத என்மீது வாஞ்சை. தாய்மனம், ஆள்பார்க்குமா அன்பு காட்ட? மனது பாரமாகி, பாதி இளநீரை நான் கீழே வைத்துவிட்டுக் கிளம்பியதைக் கவனிக்காமல் சிலையாக அமர்ந்திருந்தாள் பாட்டி.

பாட்டியும் டீயும்

 

கிழிந்த கோணிக் கூரையின்

ஓவியம் : ஜெயராஜ்
ஓவியம் : ஜெயராஜ்

கீழே இளநீர்ப் பாட்டி

தாகத்திற்கு டீ தான்

தருவித்து உறிஞ்சுகிறாள்

 

விறகு சுமந்து

வீதியில் கூவுகிறோம்

விற்கவந்த விறகே

விசித்திர ஆடையாகி

வீதி வளைவில்

வெந்து போகிறோம்

 

விற்க வந்தது

விற்று முடியாது

வாங்கவும் முடியாது

 

வேளாண்மை பொய்த்தாலும்

விதைநெல் மிஞ்சும்

மாளவிடாமல் வாழ்வை இழுக்கும்

மர்ம வினைபோல

 

மிஞ்சிய டீயிலும்

மினுக்கு கொஞ்சம் மிச்சம்

எடுத்துச் செல்லும் பையன்

எச்சிலைப் பார்ப்பதில்லை

களையான கருப்பு முகத்தில்

கசப்பின் குரூரம்

 

 புகைப்படங்களுக்கு நன்றி: இசைக்கவி ரமணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *