— விசாலம்

2012-03-04-YoganandawithAYமகா அவதார புருஷர் பாபாஜியை அறியாதவர் யார்? அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்களின் குரு என்றால் கேட்கவும் வேண்டுமா? தவிர விஜய் டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜனி அவர்கள் இமாலய பகுதியில் இருக்கும் குகைக்குள் செல்லும் காட்சியும் அங்கு அவரது அனுபவங்களும், அவர் தவத்தில் அமர்ந்திருக்கும் காட்சியும் கண்டு பலர் அந்த பாபாவை குருவாக நினைத்து கிரியா யோகத்தைக் கற்றுக்கொண்டனர். மகாஞானியும் மகா அவதார புருஷரும் ,பல நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றைக்கும் உயிருடன் இருந்தபடி அருள் புரிவதாகவும் கருதப்படும் ஸ்ரீ பாபாஜியின் சீடர் ஸ்ரீ லஹரி மகாசாயா அவர்கள். இவரின் அன்புச்சீடர் ஸ்ரீ யுக்தேஷ்வர்கிரி ஜி.

ஒரு நாள் இவர் முன் பதினெட்டு வயதான முகுந்தன் என்பவன் வந்து நின்றான். குரு யுக்தேஷ்வர்ஜியும் தன் கண்களால் அவனை உற்று நோக்கினார்.அவருடைய அருள் பார்வை கிடைக்க முகுந்தனின் தேகம் சிலிர்த்தது. அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து எல்லாவற்றையும் சமர்ப்பணம் செய்தான். “இறைவனைத் தரிசித்தவர் இந்த மகான். அவரது நற்பாதங்களைப்பிடித்து கொண்டால் நமக்கு நல்வழி காட்டுவார் “என நினைத்தபடி தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு வணக்கம் செலுத்தினான்.

“வா முகுந்தா. நீ வருவாய் என எனக்குத்தெரியும். உன்னை நானே ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இது எப்படி தெரியும் என யோசிக்கிறாயா? எனக்கு அந்த பாபாவே உன்னை என்னிடம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்,” எனக்கூறி அவனை அன்புடன் அழைத்து ஆசீர்வதித்தார். யார் இந்த முகுந்தன்? உத்திரப்பிரதேசத்தில் கோரக்பூரில் ஒரு வங்காள குடும்பத்தில் க்ஷத்ரியனாக பிறந்தான் முகுந்தன். சிறு வயதிலேயே அவனுக்குள் ஒரு தேடல் இருந்தது. இறைபக்தியுடன் வளர்க்கபட்டான் அவன். தனக்கென்று ஒரு குருவைத்தேடி மடம் மடமாக, பல ஆஸ்ரமங்களாகத் தேடி அலைந்து பின் பதினேழாவது வயதில்தான் பாபாஜியின் சீடர் வழி வந்த யுக்தேஷ்வரர்ஜியை தனது குருவாக ஏற்றுக்கொண்டான். சிறு வயதிலிருந்தே அவனுக்கு கடவுள் பக்தி அதிகம். தினமும் ஒரு கோயில் செல்லுவான். அத்துடன் இல்லாமல் பல வேத வித்தகர்கள், சன்யாசிகளையும் பார்த்து வணங்குவான்.

“அண்ணா உன்னைப்பார்க்க ஆவலாக இந்த ஆக்ராவுக்கு வந்து விட்டேன். இங்கிருந்து எனக்கு மதுரா,பிருந்தாவன் எல்லாம் போக வேண்டும் “

“என்ன முகுந்தா. உனக்கு இதே வேலையா போச்சு. எப்பொழுது பார்த்தாலும் கோயில், குளம் என சுற்றுகிறாய்..நன்கு படித்து ஆக வேண்டிய காரியத்தைப்பார்”

“இல்லை அண்ணா. என்னை மன்னித்துக்கொள். எனக்கு அந்தக்கோயில் போக வேண்டும். கண்ணன் என்னை அழைக்கிறார்.”

“நீ இப்படிக்கோயில் கோயிலென்று ஊர் சுற்ற அப்பாவின் சொத்தில் ஒரு நயா பைசா கூட உனக்குக் கிடைக்காமல் போய்விடும். தெரியுமா உனக்கு?”

“அண்ணா, கடவுள் எனக்குத் தேவையானதை தருவார். “

“ஹாஹாஹா அப்படியா? சரி உனக்கும் உன் நண்பனுக்கும் மதுரா போக மட்டும் டிக்கட் எடுத்து தருகிறேன், மற்றபடி ஒரு செல்லிக்காசு கூட தரப்போவதில்லை . நீங்கள் மதுரா போங்கள். பிருந்தாவனம் போங்கள். வயிறார சாபிடுங்கள். அங்கும் இங்கும் சுற்றிப்பாருங்கள். ஆக்ரவுக்கு திரும்பி வாருங்கள். ஆனால் ஒருவரிடமும் பணம் கேட்காமல் என்னிடம் திரும்பி வாருங்கள். திருடவும் கூடாது . இது போல் நடந்து விட்டால் நான் என்ன செய்வேன் தெரியுமா?”

“அண்ணா என்ன செய்யப்போகிறீர்கள்?”

“தம்பி நானே உனக்குச் சீடனாகி விடுவேன்.”

“சரி அண்ணா, என்னை வாழ்த்தி அனுப்பி வை’

முகுந்தன் அந்தச்சவாலை ஏற்றான். தனது நண்பன் ஜிதேந்திராவுடன் கிளம்பினான். ரயில் ஓடிக்கொண்டிருக்க மதுராவின் ஒரு ஸ்டேஷன் முன்பாக நின்றது. அங்கு இரு பெண்மணிகள் ஏறினர் . முகுந்தனுக்கு எதிரில் அமர்ந்தனர். பின் மதுரா ஸ்டேஷன் வந்தது. இருவரும் இறங்கினர். அந்த இடத்தில் முகுந்தனும் தன் நண்பனுடன் இறங்கினான். அந்தப்பெண்மணிகள் இவர்கள் இருவரையும் அழைத்து ஒரு குதிரை வண்டியில் அமரச்சொன்னார்கள். பின் அவர்களை ஒரு ஆஸ்ரமத்திற்கு அழைத்துச்சென்றனர்.

உள்ளிருந்து ஒரு குரல் வந்தது.

“என்ன ,கௌரிம்மா, வந்துட்டயா ? போன காரியம் என்ன ஆச்சு?’

அதற்கு அந்தப்பெண்மணி ,”அம்மா அந்த இளவரசியால் வர முடியவில்லை. ஆகையால் நாம் செய்த விருந்து ஏற்பாடுகள் வீணாகி விடக்கூடாதே என்று இரண்டு இறை பக்தர்களை அழைத்து வந்து விட்டோம்.”

“நல்ல காரியம் செய்தாய் கௌரிம்மா. அவர்களுக்கு எல்லா உபசாரங்களும் நடக்கட்டும்.”

அவ்வளவு தான் கடவுள் கிருபையினால் அவர்களுக்கு பல வகை பண்டங்களுடன் விருந்து படைக்கப்பட்டது. பின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தபடி மேலே நடந்து நடந்து ஒரு மரத்தடியின் கீழ் இளைப்பாறினர். அப்போது ஒருவன் அவர்களை நோக்கி ஓடி வந்தான். நேராக முகுந்தனைக்கண்டு வணங்கினான்.

“நான் தான் பிரதாப். நான் நேற்று இரவில் கண் மூடிய போது கனவில் கண்ணன் தோன்றினார். உங்கள் இருவரையும் காட்டி உங்களுக்கு பிருந்தாவனத்தைச் சுற்றிக்காட்டும்படி கட்டளையிட்டார்..இது என் கிருஷ்ணன் இட்ட கட்டளை. ஆகையால் தயவு செய்து என்னுடன் வாருங்கள்” என்றபடி அவர்கள் இருவர் கைகளை தன் கையில் இழுத்துக்கொண்டான் .

“இங்கு என்னதான் நடக்கிறது” என்று பிரமித்துப்போய் அவனுடன் நடந்தான் முகுந்தன். பின் என்ன! பிருந்தாவனத்தில் ஓடும் நதி. கண்ணன் விளையாடிய இடம் , என்று பல பார்த்து ரசித்து தன்னையே மறந்தான். பின் இரவு ஆனதும் அவர்களை அழைத்துப்போன பிரதாப் திரும்பி ஆக்ராவுக்கு ரயில் டிக்கெட்டும் வாங்கிக்கொடுத்து அவர்களை வண்டி ஏற்றிவிட்டான் . ஆக்ராவும் வந்தது தன் வீடு திரும்பிய முகுந்தனையும் அவனது தோழன் ஜிதேந்தராவையும் கண்ட அவனது அண்ணா கேலியாக “என்ன ! எல்லா தரிசனமும் கிடைத்ததா?’ என்று கேட்க ஜிதேந்திரா கடவுளின் கிருபையை நினைத்து அழுதேவிட்டான். பின் நடந்த எல்லாவற்றையும் அண்ணனுக்கு விளக்க அண்ணன் தம்பி முகுந்தனின் தெய்வ கடாக்ஷம் கண்டு அவனது சீடரானார்.

இந்த முகுந்தன் தான் இன்று எல்லோராலும் போற்றப்படும் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அவர்கள். நம்பிக்கை கடவுளைவிட மேலான சக்தி என்பதை நிரூபித்த மகான். இவரது தாய் இட்ட பெயர் முகுந்தலால் கோஷ். இவர் தனது இருபத்திரண்டாவது வயதில் சன்யாசியாக ஆனார். அன்றையதினத்திலிருந்து முகுந்தன் என்ற பெயர் போய் யோகானந்தகிரி என்று ஆனது. அவரது குருவும் அவரது வருங்காலத்தை ஓரளவு அறிந்துக்கொண்டதால் அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம் என்பதை உணர்ந்தார். இதனால் அவர் கொல்கத்தா காலேஜில் ஆங்கிலம் எடுத்து படித்து வெற்றி பெற்று பட்டமும் பெற்றார். ஒவ்வொரு அவதாரபுருஷரும் அவரது கடமையை ஆற்ற கடவுளால் அனுப்பப்படுகிறார். இவருக்கும் அந்தக்காலம் வந்தது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உலக சமய மகாநாடு நடக்க இருந்தது. அதற்கு இந்தியப்பிரதிநிதியாக ஸ்ரீயோகானந்தகிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஸ்டன் நகரில் அவர் இந்திய கலாச்சாரம், யோகக்கலை, தியானம் இந்து சமயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அந்நாட்டு மக்கள் அப்படியே அசையாமல் அமர்ந்து தங்களை மறந்து யோகியின் மேதாவிலாசத்தைக்கண்டு வியந்துப்போயினர். அந்த நாட்டிலேயே அவர் ‘கிரியா யோகம் என்கிற அற்புத யோகக்கலையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இது மனித உடலின் இயக்கமும் உள்ளத்தின் ஓட்டமும் இணைந்து ‘மனிதனென்பவன் தெய்வமாகலாம் ‘என்ற கவியரசர் திரு கண்ணதாசன் பாடலுக்கேற்ப உண்மையாகவே தெய்வ நிலைக்கு வரமுடியும் .

இந்த சூட்சுமகலையினால் மனிதன் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தை அடைய முடியும். இந்த யோகப்பயிற்சி மகாவதார் பாபாவிடமிருந்து சீடருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இந்தக்கலையை அவர் பலருக்கு படிப்பிக்க ‘தன்னிலை உணருவோர் சங்கம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.வெளி நாட்டவர்கள் வாழும் விதத்தில் டென்சன் நிறைய உண்டு. இயந்திரமே உலகம் என்று அவர்கள் வாழ்க்கை இருக்கும். அதனால் தான் வாரக்கடைசியில் ‘வீக் என்டு’என்று வெளியில் சுற்ற போய்விடுவார்கள். ஆனாலும் அதில் கேளிக்கைகளும் உடல் சுகமும் முக்கிய இடத்தைப்பிடிப்பதால் அங்கு மன நிறைவு சில மணி நேரம் தான் கிடைக்கிறது. நிரந்திர நிம்மதியோ, மன அமைதியோ, ஆத்ம திருப்தியோ கிடைப்பதில்லை . ‘மெடீரியல் ஹேப்பினஸ்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். வெளிப்பொருட்களால் அடையும் சிற்றின்பம் நிலைக்காதது, அழியக்கூடியது. பேராசை ஒரு பேய் போல் நம்மையே அழிக்க வல்லது. மானிடப்பிறவியுடன் அஹங்காரமும் கூடவே வந்துவிடுகிறது. மனிதனின் துன்பங்களுக்குக் காரணம் அவன் பொறாமை. ஆசை, வெறுப்பு , தன்முனைப்பு என்று பல தன்னுள் கொண்டிருப்பதால் தான்.

அவன் ஏற்ற உடல் ஒரு நாள் அழியக்கூடியது என்று அவன் உணருவதில்லை. பல தவறுகள் செய்கிறான். நிம்மதியை இழக்கிறான், இதிலிருந்து விடுபட இறையுணர்வு மிகவும் இன்றியமையாதது. ‘காயிலே புளிப்பதென்ன கண்ணப்பெருமானே, கனியிலே இனிப்பதென்ன கண்ணப்பெருமானே’ என்று மகாகவி பாரதி இறையுணர்வை வெளிபடுத்துகிறார். இறையுணர்வால் பலர் பலவிதமான வியப்பான அனுபவங்களைப் பெற்றிருக்கின்றனர்.

இறைவன் அமைத்த நாடக மேடையில் நாமெல்லாம் நமக்கு கொடுத்த பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறோம். நாடகம் முடிந்து திரை விழுந்ததும் நம் பாத்திரமும் முடிந்துவிடும். ஆனால் பலரும் அந்தப்பாத்திரம் நிலையானது என்று எண்ணி அந்தப்பாத்திரத்துடன் ஒன்றிப்போய்விடுகின்றனர். வாழ்க்கை ஒரு நாடக மேடை. இறைவனே அதன் சூத்ரதாரி. அவன் தாள் பணிந்தால் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு தெரியும். அந்த இறைவனை அணுகும் எளிய வழி மஹாவதார் பாபா ஆசிகளுடன் வந்த “கிரியா யோகம்.” இந்தக்கிரியா யோகத்தை தியானம் தீக்ஷை மூலம் கற்றுக்கொள்ள பல அமெரிக்கர்கள் வந்தனர். பாஸ்டன் மகா நகர மக்கள் யோகானந்தகிரியின் போதனைகளாலும், கிரியா யோகப்பயிற்சியினாலும் மிகுந்த பலனை அடைந்தனர்.

சுமார் பதினைந்து வருடங்களுக்குப்பிறகு அவர் தனது குருவைப்பார்க்க இந்தியாவுக்கு வந்தார். மேலும் தனது இந்தப்பணியை இந்தியாவிலும் பரப்ப ஆசை கொண்டார். தனது குருஜி ஸ்ரீ யுக்தேஷ்வர்ஜியை சந்தித்தார். குருஜி அவரைப்பார்த்து மிகவும் பெருமிதத்துடன் அவரை அணைத்துக்கொண்டார்.

“யோகானந்தா, உன் ஆன்மீக வளர்ச்சி என்னைப்பெருமைக்கொள்ளச்செய்தது. இன்றைய தினத்திலிருந்து உனக்கு “பரமஹம்ஸ” என்னும் பட்டத்தையும் அளிக்கிறேன். இனி நீ “பரமஹம்ஸ யோகானந்தர்” என்று அழைக்கப்படுவாய்.”

இதுவே அவர்களது கடைசி சந்திப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். பின் சில நாளில் ஸ்ரீ முக்தேஷ்வர்ஜி முக்தியடைந்தார். அதன் பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் திரும்பவும் அமெரிக்கா சென்றார். தன்னுடைய ஆன்மீக அனுபவம் பற்றி ” ஆட்டோபயாகிரபி ஆப் யோகி ” அதாவது ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற புத்தகத்தை எழுதினார். இன்று உலகத்திலேயே மிக அதிகமாக விற்பனையான புத்தக வரிசையில் இது இடம் பெற்றுவிட்டது. தவிர பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிறப்பென்றான்றால் இறப்பும் உண்டே ! அந்த நாளும் வந்தது, 1952ம் வருடம் மார்ச் மாதம் ஏழாம் தேதி லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கப்போகும் ஒரு விருந்துக்கு அவரும் அழைக்கப்பட்டார். அதில் அமேரிக்காவின் இந்திய தூதரும் அவரது மனைவியும் கலந்துக்கொண்டனர். அந்த விருந்தில் பரமஹம்ஸ் யோகாநந்தருக்கு உடல் நிலை ஒரு மாதிரி ஆனது . அவரது முடிவு அவருக்குத்தெரிந்தது.

“கங்கை நீர் இமயமலைக்குகைகள் இறைவனைத் தொழுது வாழும் மக்கள் எனக்கொண்ட பாரத புனித மண்ணை ஸ்பரிசித்ததே பெரும் பேறு” என்று சொல்லியபடி அப்படியே சரிந்தார். இறைஜோதியுடன் கலந்து ஐக்கியமானார். இறந்தப்பின் ஸ்ரீ அரவிந்த மஹரிஷிக்கு ஏற்பட்ட நிலை இவருக்கும் ஏற்பட்டது. ஸ்ரீ அரவிந்த மகரிஷியின் உடல் தங்க மயமாக அப்படியே உயிருடன் இருப்பது போலவே இருந்தது. ஒரு விதமான துர்நாற்றம் வீசவில்லை. உடல் நல்ல நிலையில் இருந்ததை பலர் வந்து தரிசித்தனர். அதேபோல் பரமஹம்ஸ் யோகானந்தரின் திருமேனி இறந்து இருபது நாட்கள் ஆன பின்பும் கெடவில்லை . உடல் கட்டைப்போல் ஆகவில்லை. இந்த மிரகிளைப்பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தனராம். இந்த அதிசயத்தைக்கண்டு வியந்தனர். பின்னர் அவரது திருமேனியை கலிபோர்னியாவில் அடக்கம் செய்தனர். இதை நான் எழுதிக்கொண்டிருந்த போது நான் கேட்ட பாடல் “முகுந்தா முகுந்தா ,வரம் தா வரம் தா” என்ன பொருத்தமான பாடல். வியந்துப்போய் அதையே தலைப்பாக வைத்தேன் .

குருவுஜிக்கு என் பணிவான வணக்கங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *