-செண்பக ஜெகதீசன்

மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.
          (திருக்குறள் -624: இடுக்கண் அழியாமை)

 

புதுக் கவிதையில்…                                                  bullock cart reached home

கரடுமுரடான பாதையிலும் வண்டியைக்
கலங்காது இழுத்துச் செல்லும்
காளைமாடு…

இத்தகு
இயல்புடை மாந்தரிடம் வரும்
துன்பமும்
துவண்டிடும் துன்பப்பட்டே…!

குறும்பாவில்…

கடும்பாதையிலும் வண்டியை இழுத்துச்செல்லும்
காளை போன்றோரிடம் வரும்
துன்பமும் துன்பப்படும்…!

மரபுக் கவிதையில்…

கல்லும் முள்ளும் நிறைந்திருக்கும்
     கரடு முரடாம் பாதையிலும்,
நில்லா திழுத்தே வண்டியுடன்
     நீண்ட தூரம் சென்றுவரும்
வல்லமை மிக்க காளையொத்த
     வலியரைத் தேடி வந்துசேரும்
தொல்லை தந்திடும் துன்பமதும்,
     துன்பப் பட்டுப் போய்விடுமே…!

லிமரைக்கூ…

பழுதான பாதையிலும் வண்டியிழுக்கும் காளை,
அத்தகையோரின் துன்பமும்
துன்பமுறும், அன்னவரைச் சேர்ந்திடும் வேளை…!

கிராமிய பாணியில்…

காளகாள வண்டிக்காள
காடுமேடு போறக்காள,
கரடுமொரடு பாதயிலும்
கச்சிதமாப் போவுங்காள…

இந்தக்
காளபோல மனுசங்கிட்ட
கஸ்டம்வந்தா கஸ்டப்படுமே
கவலவந்தா கவலப்படுமே
கண்ணுலபடாம ஓடிருமே…!

காளகாள வண்டிக்காள
காடுமேடு போறக்காள…!

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “குறளின் கதிர்களாய்…(29)

  1. குலையாத மனது
    நிலையாக இருந்தால்
    விலையாக கேட்கலாம் உலகை. 

    வழக்கம் போல் அனைத்தும் அருமை.

  2. சின்ன திருத்தம் 
    “விலை கேட்கலாம் உலகை.”

  3. தொடர்ந்து கருத்துரை வழங்கிச் சிறப்பித்துவரும்
    திருவாளர் அமீர் அவர்களுக்கு,
    மிக்க நன்றி…!

  4. மரபுக் கவிதை அருமை நண்பரே! தங்களின் தொடர் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

  5. வாழ்த்துக்கள் வழங்கிச் சிறப்பித்த
    நண்பர் சச்சிதானந்தம் அவர்களுக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *