— நாகேஸ்வரி அண்ணாமலை

இதுவல்லவோ ஒரு மதத் தலைவருக்கு அழகு!

 

பல நாட்களுக்குப் பிறகு மனதை வருடிக் கொடுக்கும் மிக நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது.  போப் ஃப்ரான்ஸிஸ் மத்திய கிழக்கிற்கு வந்து எல்லா மதத்தினருக்கும் இணக்கமான பேச்சுக்களாகப் பேசி தீராத பிரச்சினையான இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய நல்லுரைகளை வழங்கியிருக்கிறார்.  நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்ற பாணியில் தன் கருத்துக்களைக் கூறிவருகிறார்.  இதுவல்லவோ ஒரு மதத் தலைவருக்கு அழகு!

அதுவும் இவருக்கு முந்தைய போப் பெனெடிக்ட் ஒரு முறை அவர் ஆற்றிய உரையில் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு முஸ்லீம் அரசர் ஏதோ சொல்லியதாகக் கூறப் போய் உலகம் முழுவதும் – அப்போது எப்போதையும் விட முஸ்லீம் எதிர்ப்பு அதிகமாக இருந்தது – கொந்தளித்தது.  ஒரு மதத் தலைவர் சர்ச்சையை ஏற்படுத்தும் சொற்களைக் கூறலாமா என்று நான் ஆயாசப்பட்டிருக்கிறேன்.  உலகில் உள்ள மக்களிடையே நட்பும் நல்லெண்ணமும் நிலவப் பாடுபடுவதுதான் மதத் தலைவர்களின் தலையாய கடமை என்றால் போப் ஃப்ரான்ஸிஸ் இந்த இலக்கணத்திற்கு மிகவும் பொருத்தமானவர்.

இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்று முழக்கமிடும் ஒரு கோஷ்டியோடு நெருக்கமுள்ள ஒரு அரசியல் தலைவர் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறாரே என்று பயப்படும்படியாகத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் இந்த நேரத்தில் எல்லா மதங்களையும் இணைக்கும் விதத்தில் பேசிவரும் ஒரு மதத் தலைவரின் செயல்கள் உலகம் உய்ய இன்னும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைத்து மனதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.

இஸ்ரேலுக்கு இதுவரை வந்த போப்கள் சாதாரணமாக வாடிகனிலிருந்து நேரடியாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவிற்கு வருவார்கள்.  இவர் அதில் ஒரு மாற்றம் செய்தார்.  நேரே ஜோர்டான் வழியாகப் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள பெத்லஹேமுக்குச் சென்றார். தன் நாட்டு ஜனத்தொகையில் பாதிக்கு மேலாகப் பாலஸ்தீன அகதிகளையும் சமீபத்தில் உள்நாட்டுப் போரின் விளைவாக சிரியாவிலிருந்து வந்திருக்கும் ஆறு லட்சம் அகதிகளையும் வரவேற்றிருக்கும் ஜோர்டானைப் புகழ்ந்ததோடு உலகின் மற்ற நாடுகளும் இதில் ஜோர்டானுக்கு உதவ வேண்டும் என்று அறிவுரையும் கூறினார்.  சிரியாவில் அமைதி ஏற்பட எல்லோரும் பாடுபட வேண்டும் என்றும் ஆயுதங்கள் மூலம் அமைதியை வாங்க முடியாது என்றும் அமைதி எல்லோரும் ஒத்துழைத்துப் பெற வேண்டிய ஒன்று என்றும் கூறினார்.

இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் வெஸ்ட் பேங்கிற்குப் போகும் முதல் போப் இவர்தான்.  2012-இல் ஐ.நா. சபை பாலஸ்தீன அத்தாரிட்டிக்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்து (non-member observer status) கொடுத்திருப்பதை ஆதரிக்கும் முகமாக போப் ஜோர்டானுக்குச் சென்று, பின் அங்கிருந்து பெத்லஹேமிற்குச் சென்றார்.  பெத்லஹேமில் இயேசு பிறந்த இடத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் அகதிகள் முகாமில் வசிப்பவர்களோடு மதிய உணவு அருந்தினார்.  பக்கத்தில் இருக்கும், 1948-இல் நடந்த இஸ்ரேல்-அரபு போரில் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, சுமார் 12,000 அகதிகளும் அவர்களின் சந்ததிகளும் வாழும் அகதிகள் முகாமிலிருந்து வந்திருந்த சிறுவர்களின் பாடலைக் கேட்டார்.  இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இவர்கள் படும் கஷ்டங்களைக் கேட்டறிந்தார்.

பெத்லஹேமிலிருந்து வாடிகன் திரும்பிய போப் பலர் கொடுத்த பரிசுகளைத் தன்னோடு கொண்டுவந்தார்.  அதில் விலை மதிக்க முடியாதது அகதிகள் முகாமில் இருக்கும் பெத்லஹேம் சிறுவர்கள் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த ஒரு அடையாள அட்டை.  அதில் குடும்பத்தின் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருப்பவர் இயேசு.  குடும்பத்தின் அங்கத்தினர்கள் யார் யார் தெரியுமா?  காந்திஜி, நெல்சன் மண்டேலா, யாசர் அராபத், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர்.  இயேசு வெஸ்ட் பேங்கிலிருந்து இஸ்ரேலுக்குப் போக விரும்பினால் அவர் கூட ஒரு அடையாள அட்டை இல்லாமல் போக முடியாது என்பதையும் அதனால் அவர்கள் படும் துன்பங்களையும் எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் இந்தச் சிறுவர்கள்!  (இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வெஸ்ட் பேங்கில் வாழும் பாலஸ்தீனர்கள் வேலைக்காகவோ, தங்கள் நிலங்ளில் உழைப்பதற்காகவோ, ஜெருசலேமில் உள்ள தங்கள் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போவதற்காகவோ இஸ்ரேலுக்குள் போவதற்கு இந்த அடையாளச் சீட்டுகள் வேண்டும்).

Mideast Popeபெத்லஹேமிலிருந்து ஜெருசலேம் போகும் வழியில் யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று தான் சென்றுகொண்டிருந்த வாகனத்திலிருந்து இறங்கி, இஸ்ரேல் வெஸ்ட் பேங்கில் யூதர்களைக் குடியேற்ற அமைத்திருக்கும் குடியிருப்புகளை உள்ளடக்கிப் பாலஸ்தீன தற்கொலைப் போராளிகள் இஸ்ரேலுக்குள் வருவதைத் தடுக்கக் கட்டியிருக்கும், பிரமாண்ட கான்கிரீட் சுவரில் ‘போப் அவர்களே, நியாயத்தைப் பற்றிப் பேச எங்களுக்கு யாராவது தேவை’ என்று பெயின்டால் எழுதப்பட்டிருந்த இடத்தில் சுவரில் தலையை வைத்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். பாலஸ்தீனர்கள் தினம் தினம் இல்ரேலுக்குப் போய்வருவதில் உள்ள கஷ்டங்களைக் கேட்டறிந்தார்.  இவர் கிறிஸ்தவ மதத்தினராயினும் பாலஸ்தீன முஸ்லீம் அகதிகள் படும் கஷ்டங்களைக் கேட்டு உணர்ந்து அவர்களுக்காக இஸ்ரேல் அரசிடம் நியாயம் கிடைக்க வேண்டியிருக்கிறார்.  அது மட்டுமல்ல முதல் முதலாக போப்பின் இணையதளத்தில் (web site) பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி ‘பாலஸ்தீன நாடு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இது பாலஸ்தீனர்களுக்கு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது.

சாலை வழியாக பெத்லஹேமிலிருந்து ஜெருசலேம் சென்றால் அரை மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.  ஆனால் போப் இஸ்ரேலியர்களைத் திருப்திப்படுத்த முதலில் டெல் அவிவ் சென்றார்.  அங்கிருந்து தன் பயணத்தைத் தொடர்ந்து ஜெருசலேம் சென்றார்.  போப் கான்கிரீட் தடுப்புச் சுவரில் தன் தலையை வைத்துப் பிரார்த்தனை செய்ததை அறிந்த இஸ்ரேல் அரசு உடனேயே தாங்களும் கஷ்டப்பட்டதாகப் போப்பிற்குத் தெரிவிக்க விரும்பி ஸயனிஸம் (யூதர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று முயன்று அதில் வெற்றி கண்ட இயக்கம்) தோன்றியதற்கு முக்கிய காரணமாக இருந்த தியோடர் ஹெர்ஸல் என்பவரின் கல்லறைக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைக்க ஏற்பாடு செய்தனர்.  இப்படி யூதர் ஒருவரின் கல்லறைகுச் சென்று மலர் வளையம் வைத்த முதல் போப் ஃபிரான்ஸிஸ்தான்.  இதே ஹெர்ஸல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அதாவது நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ரோமில் அப்போதிருந்த போப்பைச் சந்தித்து தனி நாடு நிறுவப் பாடுபடும் அவருடைய முயற்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டபோது அந்த வேண்டுகோளை போப் நிராகரித்துவிட்டார்.  அதனால் இப்போது ஹெர்ஸல் கல்லறைக்கு போப் சென்றது யூதர்களுக்குப் பெரிய ஆதரவின் அடையாளமாகத் தெரிகிறது.  மேலும் யூதர்களின் பெயர்பெற்ற டேவிட் அரசரின் கல்லறை இருக்கும் இடம் என்று யூதர்களாலும் இயேசு கடைசியாகத் தன் சீடர்களோடு இரவு விருந்தை உண்டதாகக் கிறிஸ்தவர்களாலும் உரிமை கொண்டாடப்படும் ஸயன் மலைக்குன்றில் போப் பிரார்த்தனை நடத்தினார்.

2000-த்தில் இரண்டாவது ஜான் பால் (John Paul II) முதல் முதலாக யூதர்களின் புண்ணிய இடமான மேற்குச் சுவருக்குப் போனபோது அவர் பெயரில் இஸ்ரேல் தபால்தலை வெளியிட்டது.  இப்போது போப் ஃப்ரான்ஸிஸ் கான்கிரீட் சுவரில் தலைவைத்துப் பிரார்த்தனை செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் பொருட்டு அவர் பெயரில் தபால்தலை வெளியிடப் போவதாக பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் போப்பிடம் கூறினாராம்.

சாதாரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யும் போப்கள் அங்குள்ள நிலவரம் பற்றி எதுவும் வெளிப்படையாகச் சொல்வதில்லை.  ‘சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுப்பானேன்’ என்றுதான் அவர்கள் நினைப்பார்கள்.  ஆனால் போப் ஃப்ரான்ஸிஸ் அப்படியல்ல.  உலகில் சமத்துவமின்மை நிலவுவதைக் கண்டிக்கும் இவர் மத்திய கிழக்கிலும் அமைதி நிலவ வேண்டும், அப்படி ஏற்படும் அமைதி பாலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வு கிடைத்த பிறகு ஏற்படும் அமைதியாக இருக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

போப் ஃப்ரான்ஸிஸ் எல்லா மதத்தினரையும் சந்தித்திருக்கிறார்.  ஜோர்டானுக்குச் சென்று அங்குள்ள முஸ்லீம் அரசரைப் புகழ்ந்திருக்கிறார்.  இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்ற இடமான செப்பல்கர் (Sepulcher) கோவிலில் பிரார்த்தனை புரிந்திருக்கிறார்.  யூதர்களின் புண்ணிய தலமான மேற்குச் சுவரில் தலையை வைத்துப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.  எந்த மதத்தையும் குறைத்துப் பேசவில்லை.  மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட வேண்டிய அவசியத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுதுரைத்திருக்கிறார்.

எல்லா இடங்களிலும் போப் ஃப்ரான்ஸிஸ் பிரர்த்தனை செய்திருக்கிறார்.  இதற்கு மேலும் இஸ்ரேல் ஜனாதிபதி பெரெஸையும் பாலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸையும் வாடிகனில் உள்ள தன் அப்பார்ட்மென்டிற்கு பிரார்த்தனை செய்ய அழைத்திருக்கிறார்.  (போப்பிற்குரிய பெரிய பங்களாவில் இவர் வசிக்கவில்லை.  எளிய வாழ்க்கை நடத்தும் இவர் ஒரு அப்பார்ட்மென்டில்தான் வசிக்கிறார்.  பிரார்த்தனை மூலம் எதையும் சாதிக்கலாம் என்று நம்புகிறார்.  இந்தப் பிரார்த்தனை சமாதானப் பேச்சு போன்றதல்ல; இதனால் பெரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்று பத்திரிக்கையாளர்களும் சில தலைவர்களும் கூறினாலும் சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இது ஒரு ஆக்கமுறையான (positive effect) எண்ணத்தைத் தோற்றுவிக்கும் என்பதை ஒத்துக்கொள்கிறார்கள்.

இந்துத்துவம் என்று பேயாக அலையும் ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்த, புதிதாகப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் மோடியின் மூலம் இந்தியா முழுவதும் இந்துத்துவத்தைப் பரப்பிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் போப் ஃப்ரான்ஸிஸைப் பின்பற்றுவார்களாக.

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீஃப் வேறு இடத்தில் வசிக்கும் தன் தாயை அடிக்கடி சென்று பார்த்து வருவாராம்.  தாயின் மேல் அவ்வளவு பாசமாம்.  மோடியின் தாயார் மோடிக்கு இனிப்பு வழங்குவதைப் பார்த்து நெகிழ்ந்து போனாராம்.  இவர்கள் இருவரும் போப் ஃப்ரான்ஸிஸின் செய்கைகளைக் கண்டு நெகிழ்ந்து போனால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பகைமையே ஏற்படாது.

 
 
 
 
படம் உதவி:

http://thinkprogress.org/world/2014/05/29/3442219/pope-francis-middle-east-prayer-summit-is-more-about-religion-less-about-politics/
http://thinkprogress.org/wp-content/uploads/2014/05/AP661693373459.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *