— கவிஞர் காவிரிமைந்தன்

தெய்வம் தந்த வீடு….

வாழ்க்கை வெறுக்கத் தக்கதுமல்ல!
வாழ்க்கை விரும்பத் தக்கதுமல்ல!!
வாழ்க்கை வாழத் தக்கதுவே!!

வாசல் இல்லாத வீடும்.. பிரச்சினை இல்லாத மனிதனும் சிருஷ்டிக்கப்படவில்லை என்பது கண்ணதாசன் வாக்கு.

எவருக்குத்தான் வாழ்க்கை விரும்புவதுபோல் அமைகிறது?  எந்த மனதில்தான் சஞ்சலமில்லை!  சங்கடமில்லை??

தன்னை ஆள்வது தவம் என்பார்கள்!  எங்கே மனிதன் தன்னை ஆள்கிறான்?  தன் மனதை வென்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தீர்க்கமான முடிவெடுப்பது அவ்வளவு சாதாரண விஷயமா? பேரறிஞர்கள் கூடத் தோற்றுப் போவது சொந்த வாழ்க்கையில்தான்!

தட்டுத்தடுமாறிக் கரைசேரும் ஓடம்போல் மனித வாழ்க்கை.. அதுவும் நடுத்தர வர்க்கம் முதல் வறுமைக் கோடுகள் வரை அன்றாடம் சந்திக்கும் பிரச்கிகனைகள் சொல்லில் அடங்காதவை.  ஒவ்வொரு நாளும் ஏன்தான் விடிகிறது என்கிற கேள்வி எழாத இதயங்கள் இல்லை.  அன்பாலும் பாசத்தாலும் உறவுகள் ஒத்தடம் கொடுக்கப்பட்டாலும் .. பணம் என்கிற பொருளாதாரத் தேடலும்.. மனம் என்பதை கட்டிக் காக்க மறந்த மனிதர்களின் ஓலங்களும்.. ஓய்வதே இல்லை..

தமிழ்த்திரையுலகில் இயக்குனர் வரிசையில் பீஷ்மர் என்று போற்றப்படும் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பல.  ஒரு இயக்குனர் படத்தில் இருக்கிறார் என்பதை படத்தின் பெயர்ப்பட்டியலைத் தவிர.. அடிக்கடி நினைவு கூறப்பட்டவராய்.. பரிணமிப்பது பாலச்சந்தர் ஸ்பெஷல் என்றே சொல்லலாம்.

deivam thantha veeduஅவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது.  குடிகார அண்ணன் பாத்திரத்தில் திரு.ஜெய்கணேஷ் நடித்திருக்க.. ஒரு காட்சியில் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.  கதையும் காட்சியும் சொல்லவந்ததை, கவிதையில் (பாடலில்) சொல்ல இயக்குனர் விரும்புகிறார்.  பாடல் எழுத கவிஞர் வரவழைக்கப்படுகிறார்.  பாலு (கவிஞர் பாணியில்) கதை சொல்ல.. கவிஞர் பாடல் தருகிறார். மெல்லிசை மன்னர் இசை அமைக்கிறார்.  கடவுளின் அருளால் பெற்ற காந்தர்வக்குரலால் கே.ஜே.யேசுதாஸ் பாடுகிறார். பாடல் எழுத முற்படும்போது இயக்குனர் கவிஞரிடம் சொன்னதென்ன தெரியுமா?  இது ஒரு தத்துவப்பாடலாக அமைய வேண்டும். 18 சித்தர்களும் பட்டினத்தாரும் தந்த தத்துவங்களைக் கொட்டிக்கவிழ்க்க வேண்டும்.. கவிஞரின் சிந்தனையில் அந்த அற்புதம் நடந்தேற இப்பாடல் பிறக்கிறது!

 

 

 

தெய்வம் தந்த வீடு-http://youtu.be/AGuuEpdDpTY

 

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ….

படம்: அவள் ஒரு தொடர்கதை
பாடல்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: கே.ஜே. ஜேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு …..
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ..
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? – இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த சாபம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு இதில்
நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேவம் உன்
மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன – இதில்
தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் – அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன இதில்
தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு …..
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ……

 

தமிழ் மண்ணில் .. கலையின் வளர்ச்சியில்… திரைத்துறையில்.. இணைந்த கலைஞர்களின் கூட்டணி வெற்றிக்கு இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்?  ரசிகப்பெருமக்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற பாடல் அல்லவா?

2003ஆம் ஆண்டு கண்ணதாசன் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களிடம் இந்தப்பாடல் பற்றிக் குறிப்பிட்டுக் கேட்டபோது தனது சிறப்புரையில்  திரு.கே.ஜே.யேசுதாஸ் முன்னிலையில் பதிலும் தந்தார்.  (இதோ…)

“காவிரிமைந்தன் சொன்னதுபோல்.. இந்தப்பாடலை ஒரு தத்துவப்பாடலாக தரவேண்டும் என்று கவிஞரிடம் கேட்டுக்கொண்டதெல்லாம் உண்மைதான்.. அதுசரி.. கண்ணதாசனைவிட இந்தச் சூழலுக்கு பாடல் எழுதத் தகுதி உடையவர் யார்” ரென்றும் தன் உரையில் முத்திரை பதித்தார் அந்தப் பெருமகன்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *