இசைக்கவி ரமணன்

இலக்கியவாதி சிட்டியைப் பற்றி…

chittiஅவரை நான் சந்தித்தபோது அவர் படுத்த படுக்கையாய்த்தான் இருந்தார். ஆம். அந்த ஆர்ப்பாட்டமில்லாத கட்டில், அதில் கூச்சத்துடன் இளைத்திருந்த சிறுமெத்தை, இவற்றின்மேல், ஜடாயுவின் இறகுபோல் தெரிந்தார் அவர்.

அனுபவம், அதன்மூலம் வாய்க்கப்பெற்ற ஞானம், இவற்றைக் காணும்போது, வயது என்னும் பேச்சே கேலிக்குரியதாக இருக்கிறது. அவருக்கு வயது ஐந்திலிருந்து சில நூற்றாண்டுகள் வரை இருக்கலாம் என்றுதான் தென்பட்டார்!

அவசரமாய் உடம்பைப் புரட்டக்கூட முடியாத களைப்பில்தான் அவரிருந்தார். அப்போதும், கட்டளையிடாமல் கனிவாய்ப் பேசியே மற்றவர்களிடம் வேலை வாங்கும் ஒரு ரிஷியின் லாகவம் அவருக்கு இருந்தது.

கறுத்த முகத்திலிருந்து புறப்பட்ட சிரிப்பு, தலைகோதிக் கொண்டுவரும் இளநிலவைப்போல் இருந்தது.

பெரியகுளம் கோவிந்தசாமி சுந்தரராஜன் என்றால் அவரேகூட யாரென்று நம்மைக் கேட்கக்கூடும். அந்த அளவுக்கு அவர் ‘சிட்டி’ என்னும் தனது புனைப்பெயராலேயே பெரிதும் அறியப்பட்டார், நேசிக்கப்பட்டார். மிகச் சுருக்கமான அந்தப் பெயரில் நேசத்தின் அம்சம் நிறைந்திருந்ததைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் அவர் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்! காலார நடக்கும்போது கன்னத்தை வருடும் தென்றலாக, தெருமுனையில் விழிக்கும்போது இனிய முகத்துடன் திசைகாட்டிவிட்டு நீங்கிவிடும் வழிப்போக்கனாக, ஒரு கடமைபோல் வாழ்வின் நடப்புகளைக் கவனித்துவைத்துக்கொள்ளும் சமுதாயத்தின் மனசாட்சியாக.

”மொழி பெயர்ப்பு, இலக்கிய வரலாறு, வானொலி நாடகங்கள், பேட்டிகள், படைப்பிலக்கிய மதிப்பீடு, நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதை, ஆங்கில நூலாக்கம், தி.ஜானகிராமன் தவிர கே.சிவபாத சுந்தரத்தோடு இணைந்து பயண இலக்கியம் என்ற பன்முகத் திறனுடைய படைப்பாளர் அவர். மூன்று தலைமுறைகளின் தமிழுக்கு அவர் நெருக்கமானவர். அவருடைய தாய்மொழி தெலுங்கு. பணம், பதவி, பரிவட்டம் என்று தலை தெறிக்க ஓடுகிறது ஜனசமூகம். இதில் சிட்டி எதிர்த் திசையில் தனியாக, மெதுவாகப் பயணித்தார்,” என்று அவருடைய பங்களிப்பை நயம்பட விளக்குவார் நண்பர் சுப்பு.
தன்னைக் ’கோமாளி’ என்று குறிப்பிட்டுக்கொள்வதில் அவருக்கு சந்தோஷம் இருந்தது. ஏனெனில், தன்னை ஒரு பெரும் அறிஞனாகவோ, தான் ஏதோ பெரிதாய்ச் சாதித்துவிட்டதாகவோ அவர் கருதிக்கொள்ளவில்லை. எழுத்து என்பது அவருடைய ஆன்ம இயல்பாக இருந்தது. அவருடைய நினைவாற்றல் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

இறுதிவரை, சிறுதீனி, மதுரை மணி ஐயர், சிரிப்பு, நகைச்சுவை போன்ற அவருடைய பரிவாரங்கள் புடைசூழத்தான் அவர் வாழ்ந்தார். வாழ்ந்ததைப்போலவே, ஆர்ப்பாட்டமின்றி, அவசரமின்றி மறைந்தார்.

இடுப்பு எலும்பு முறிந்து, அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் பிதாமகனைப்போல் படுத்திருந்தார். படுத்திருந்த அவருடைய காலைத் தொட்டு வணங்கும்போது மனசு நெகிழ்ந்துபோனது.

கையை உயர்த்திக் கனிவுடன் வாழ்த்தியதும், ஒரு ஜோக் அடித்ததும், அருகில் இருந்த அவருடைய மரியாதைக்குரிய மகன்களை ஏதோ ஒரு தேதியைச் சொல்லி ஒரு நாளிதழில் குறிப்புப் பார்க்கச் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.

அதென்னமோ பெரியவர்கள் முதலிலிருந்தே பெரியவர்களாக வாழ்கிறார்கள்! எந்தவிதமான எதிர்பார்ப்போ ஏமாற்றமோ இல்லாமல் கடமை புரியும்போதே கழன்றுகொள்கிறது அவர்களுடைய கடைசி மூச்சு.

He stood effortlessly tall among his peers, by his humility.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “எளிமையே ஏற்றம்

  1. ஜடாயுவின் இறகுபோல்! சிறகில்லை, இறகு! சிறகின் ஒரு துளிப்பகுதி! இந்த ஒரே உவமையின் மூலம் மிகத் தெளிவாகவும், எளிதாகவும் அமரர் சிட்டியை நம் நெஞ்சில் அமரச் செய்துவிட்டார் இசைக்கவி ரமணன். 
    உவமையின் இலக்கணம், (இனி தொல்காப்பியம், நன்னூல் எல்லாம் தேட வேண்டாம், விக்கிபீடியா இருக்கவே இருக்கிறது),
    “தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது.”
    ஆனால் நாம் பார்த்திராத ஜடாயுவின். இறகை உவமையாக்கி இலக்கணத்தையே புரட்டிப் போடுகிறார் ரமணன். இல்லை, தன் உள்விழிக்குக் கிட்டிய தரிசனத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

  2. “அதென்னமோ பெரியவர்கள் முதலிலிருந்தே பெரியவர்களாக வாழ்கிறார்கள்! எந்தவிதமான எதிர்பார்ப்போ ஏமாற்றமோ இல்லாமல் கடமை புரியும்போதே கழன்றுகொள்கிறது அவர்களுடைய கடைசி மூச்சு.”
    adhanaal thaan ulagam avargalai ‘periyargalaaga’ etrukkolgirathu !

  3. தங்கள் கட்டுரைக்கு நன்றி. நான் சிட்டி அவர்களின் ஒரே புதல்வி தங்களுடன் பேச விரும்புவதால் தங்களின் தொலைபேசி எண்ணைத் தரவும்.

    ஸ்ரீவித்யா ராம்
    9840233970

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *