கே.ரவி

ரமணனும் நானும், ஓ, அந்த உறவை எப்படி வர்ணிப்பது! நட்பா, ரசனையா, ப்ரமிப்பா, எல்லாம் சேர்ந்த கலவையா? தெரியவில்லை. வள்ளுவரின் முதிர்ச்சி, கம்பனின் கற்பனை வளம், பாரதியின் உணர்ச்சி, கண்ணதாசனின் எளிமை எல்லாம் அங்கங்கே பளிச்சிடும் அவன் கவித்துவம் மட்டுமே இந்த ஈர்ப்புக்குக் காரணம் என்றும் சொல்ல முடியாது. சில விஷயங்கள் சொல்லுக்கு அப்பாற்பட்டவை. விட்டுவிடுகிறேன்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ரமணன் ஒருநாள் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு என்னைக் காண வந்திருந்தான். என் பணியிடம் அதுதானே.

அங்கே முதல் மாடியில் ஒரு முற்றம் (qudrangle) உண்டு. காற்றாட நின்றுகொண்டு பேசலாம் என்று அங்கே போனால், காற்றே வரவில்லை. சலித்துக் கொண்டேன். உடனே ரமணன் பாடினான்:

“காற்றே வா கவிதை தா ஆற்றாமை அதைநீ மாற்றாமல் தாகம் என்ற யாகம் பெருகத் தண்ணீர் ஊற்றிவிடு காற்றே வா கவிதை தா”

பாடி முடிக்கும் முன் வந்ததே காற்று!

இந்தப் பாடலில் ஓர் அழகான முரண்பாடு, தன்னைக் கவனிக்கச் சொல்லி முரண்டு பிடிக்கிறதே! தாகத்தைத் தணிக்கவும், யாகத்தை அணைக்கவும் தண்ணீர் ஊற்றுவதுதான் வழக்கம். ஆனால் தாகம் என்ற யாகம் பெருகத் தண்ணீர் ஊற்றச் சொல்கிறானே! அதுவும் காற்றை! கவிஞன் சொன்னால் என்ன வேண்டுமானாலும் நடக்குமோ, இயற்கையில்!

காற்று மட்டும் இல்லை, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் கவிதைக்குக் கட்டுப்பட்டவை. இதையும் அருட்குறள் மூவாயிரத்தில் ரமணனே சொல்கிறான்:

“தீயென்றால் காடெரியத் தேனென்றால் பூமகிழ வாய்நின்ற பேரருளே வாக்கு.”

காலத்தில் இன்னும் சற்றுப் பின் நோக்கிப் போவோமே. 1977ஆம் ஆண்டு, கார்த்திகைத் திருநாள். மந்தைவெளி நார்ட்டன் லேன் வீட்டில், முன் வராண்டாவில் ஈஸிசேரில் உட்கார்ந்திருந்தேன். இருபதாவது பிறந்தநாள் பரிசாகத் தன் மகனுக்கு சாய்வு நாற்காலி (அதற்கு நாலு கால் இருந்ததோ?), வாங்கித் தந்த ஒரே தந்தை என் வளர்ப்புத் தந்தையாகத்தான் இருக்க முடியும்! அந்த சாய்வு இருக்கையில் சாய்ந்து கொண்டு, வெறுமை சூழ்ந்த மனத்தோடு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன், குறிப்பாக எதையும் பார்க்காமல்.

வெற்று மனத்துடனோ – ஆழம் மேவிய சிந்தை ஒருமையில் மூழ்கியோ சற்று விழிகுவித்து – நானும் சாய்ந்திருக் கின்ற பலசம யங்களில் கொத்து மலர்க் கூட்டம் – அழகு குலுங்கக் குலுங்கவென் உள்விழி யில்மின்னல் இட்டு மறைந்துவிடும் – அடடா இதுவே இதுவே தனிமையின் பேரின்பம்

(“For oft, when on my couch I lie In vacant or in pensive mood, They flash upon that inward eye Which is the bliss of solitude”)

ஆங்கில மாக்கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் அமர வரிகளை அப்போது நினைத்துக் கொண்டேனோ இல்லையோ, இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

அப்படி நான் சாய்ந்திருந்த அந்தச் சாய்ங்கால நேரத்திலே, சற்று நேரத்துக்கெல்லாம், வெறுமை சூழ்ந்த என் மனத்தில் ஒரு பேரொளி எழுந்து சுடர் விட்டுச் சிரித்தது. அதுவும் வரிசை, வரிசையாக ஒளிச்சுடர்கள். மனத்திலா? அதோ, தெருவெல்லாம், எல்லா வீட்டு வாசல்களிலும்! ஓ, கார்த்திகையாயிற்றே! வீடுதோறும் அகல்விளக்குகள், நிரல்நிரலாக! அந்தக் காட்சியிலிருந்து என் கையைப்பிடித்து வேறொரு ப்ரும்மாண்டமான காட்சிக்கு அழைத்துச் சென்றது காற்று.

ஒரு சராசரி மனிதனின் பார்வையில் சாதாரண, அன்றாட நிகழ்வாகத் தெரியும் ஒரு காட்சி, சில நேரங்களில் ஒரு கவிஞனை பிரம்மிக்க வைக்கும் ப்ரும்மாண்டத்துக்கு அழைத்துச் செல்லக் கூடும்.

மாலை மயங்கி இரவாக மாறப் போகும் அந்தி நேரம். கிழக்கு வானில் நிலா உதயம். இது தினமும் நடப்பதுதானே! அன்றும், அதாவது, சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்தது. அதை ஒரு புலவர் பார்த்துவிட்டாரே! போதாதா? பாட்டு வந்தது பாருங்கள், அதுதான்யா பாட்டு!

“கானெலாம் மலர்ந்த முல்லை ககனமீ தெழுந்த தென்ன வானெலாம் வயங்கு தாரை நிறைநிறை அடர்ந்து தோன்ற வேனிலான் விழவின் வைத்த வெள்ளிவெண் கும்ப மென்ன தூநிலா மதியம் வந்து குணதிசை தோன்றிற் றம்மா”

காடு முழுக்க மலர்ந்த முல்லைப்பூக்கள் குபீரென்று, தாங்கள் மலர்ந்த செடிகொடிகளை விட்டுப் பிரிந்து, மேலெழுந்து பறந்துபோய் வானத்தை நிறைத்து விட்டதாம்! அப்படி வானம் முழுக்க நட்சத்திரக் கூட்டம் கொட்டிக் கிடந்தது என்கிறார், புலவர். அவற்றுக்கு மத்தியில் நிலா எப்படி வந்து உட்கார்ந்து கொண்டதாம்? மன்மதனுக்கு விழா, அதாவது காமன் திருவிழா, அதில் வெள்ளிக் கும்பம் வைக்கப் பட்டிருக்குமே, அப்படியாம்! நிலா எனப்படும் மதியொளியின் கம்பீரத்தையும், குளுமையையும் அப்படியே படம்பிடித்துக் காட்டும் கவிதையிது. வில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிய பாரத காவியத்தில் உள்ளது இந்த மகோன்னதமான கவிதை.

மீண்டும் 1977- மந்தைவெளி, நார்ட்டன் லேனுக்கு வருவோம். அன்று வீடுதோறும் ஏற்றப்பட்ட கார்த்திகை அகல்விளக்குகளின் பேரணியை என்நெஞ்சில் அகலாமல் இடம்பெறச் செய்த அந்தக் கவிதை இதோ:

காற்றுப் பல்லக்கிலே – செல்லும் கார்த்திகைத் தீபங்களே – உங்கள் காதல் வனப்புகள் ஆடிக் களித்திட ராகங்கள் நான்தருவேன் – இனிய ராகங்கள் நான்தருவேன்

நேற்று நினைவுகளில் – துள்ளும் நெஞ்சத் துடிப்புகளே – நீங்கள் நேர்வந்தென் கண்முன் நின்று சிலிர்த்திடத் தேகங்கள் நான்தருவேன் – புதிய தேகங்கள் நான்தருவேன்

(காற்றுப் பல்லக்கிலே)

புரியாத கதியோடு சுகமான ஜதியோடு நதியாக வந்தாலும் நான்பாடுவேன் – இன்னும் புலராத பொழுதுக்குப் புகைபோடும் மார்கழிப் பனியாக வந்தாலும் பாட்டிசைப்பேன்

(காற்றுப் பல்லக்கிலே)

முடியாத பாட்டுக்கு முதலாக என்னுயிரை முழுதாக நான்தந்து விளையாடுவேன் – அந்தப் பாட்டுக்குக் கருவாகிப் பண்ணென்ற உருவாகிப் பாரெங்கும் காற்றாகப் பறந்தோடுவேன்

(காற்றுப் பல்லக்கிலே)

காற்றையே பல்லக்காக்கி அதிலேறி அமர்ந்துகொண்டு, மயிலைக் கபாலி கோயில் திருவிழாவில் சப்பரங்களில் போகும் அறுபத்து மூவரைப்போல் தீபங்கள் போகும் அந்த அதியற்புதக் காட்சி, இல்லை, தரிசனம், இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

முதன்முதலில் இந்தப் பாட்டை நண்பர் வ.வே.சு.வுக்குப் பாடிக் காட்டினேன். என்ன ராகம் என்று கேட்டார். ‘சுபபந்துவராளியில் ஒரு ஸ்வரம் மட்டும் நீங்கல்’ என்று பதில் சொன்னது நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது. அவ்வளவுதான் சாமி நம்ம ராகஞானம்! ஏதோ, காதிருக்கிறது, காற்றடிக்கிறது, வாயசைகிறது, பாடல் வருகிறது, அம்புடுதேன், ஆனால், அம்புட்டும் தேன்!

பருகலாம், உருகலாம், களி பெருகலாம்.

இதுவும் தொடரலாம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *