கேள்வி :1

நான் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் என் வகுப்பில் ஒரு பெண் எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதனால் நான் மிகவும் தவிப்பாக உணர்கிறேன். அவள் பாடத்தைக் கவனிப்பதில்லை. அவளால் நானும் பாடத்தை சரியாக கவனிக்க முடியாமல் இருக்கிறேன். இது காதலாக மாறி விடுமோ என்று பயமாக இருக்கிறது. என் எதிர்கால கனவுகளும் இதனால் பாதிக்கப்படுமோ என்றும் பதட்டமாக இருக்கிறது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

பதில் :

நீங்கள் பதட்டப்படுவதை தவிர்த்து ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும். உங்கள் வயதில் இந்த மாதிரி எதிர் பாலினத்தால் கவரப்படுவதும் இந்த உணர்வுகளும் இயல்பானது தான். அந்தப் பெண் உங்களை பார்க்கிறாள் என்பதே நீங்கள் அவளை பார்ப்பதால் தானே உங்களுக்குத் தெரிகிறது. நீங்களும் அவள் பால் கவரப்பட்டிருக்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த உணர்வுகள் இயற்கையானது தான் எல்லோருக்கும் உள்ளது தான் என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

         அடுத்து இம்மாதிரி கவரப்படுவது காதலில் முடிந்து விடுமோ இதனால் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்பதெல்லாம் உங்கள் பதட்டத்தினால் ஏற்படும் பயம்.இது தேவையில்லை. உங்கள் உணர்வுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் உங்களை மீறி எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அந்தப் பெண்ணுடன் மற்ற பெண்களுடன் பேசுவது போல் சகஜமாக பேசுங்கள். உங்கள் லட்சியத்தில் உறுதியாக இருங்கள். இப்போதைய உங்கள் கடமை நன்றாகப்  படிப்பது என்பதில் தெளிவாக இருங்கள். அந்தப் பெண்ணுடன் சகஜமாக பழக ஆரம்பித்தாலே தேவையற்ற இந்த சஞ்சலம் போய் விடும்.

கேள்வி : 2

            என் மகனுக்கு வயது 5. அவன் மிகவும் புத்திசாலி. எதைப்பார்த்தாலும் அதைப்பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து விடுவான். நான் ஓரளவிற்கு அவன் கேள்விக்கு பதில் சொல்லி விடுவேன். இப்போதெல்லாம் நான் எப்படி பிறந்தேன்  என்று கேட்கிறான். அவனது பிறப்புறப்பை காட்டி விளக்கம் கேட்கிறான். இம்மாதிரி கேள்விகளுக்கு அவனுக்கு எப்படி பதில் சொல்வது?

     குழந்தைகள் வளரும் வயதில் இப்படி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பது நல்லது. அவர்களுக்கு முடிந்த வரை உண்மையான பதில்களைத் தான் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தெரியாத கேள்விகளுக்கு எனக்கு தெரியவில்லை கண்டுபிடிச்சி சொல்கிறேன் என்று கூறி எங்காவது பதிலை கண்டுபிடித்து சொல்லுங்கள். அதுவே நீங்கள் தவிர்க்க விரும்பும் கேள்வியாக இருந்தால் அதற்கு மறைமுகமான பதில்களைக் கூறுங்கள். என் வயிற்றுக்குள் தான் நீ இருந்த அப்புறம் டாக்டர் உன்னை வெளியே எடுத்துக் கொடுத்தாங்கன்னு சொல்லலாம். கர்ப்பிணி பெண்களின் புகைப்படத்தைக் காட்டி விளக்கலாம். மேலும் பிறப்புறுப்புகளை நாம் எப்போதுமே மூடி வைத்து அதை ரகசியமான ஒன்றாக சொல்லி வைப்பதாலும் குழந்தைகளுக்கு அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருக்கும். மற்ற உறுப்புகளைப் போல் அதுவும் ஒன்று. அதன் வேலை சிறுநீர் கழிப்பது என்று விளக்குங்கள் .உண்மையான பதிலையே நீங்கள் குழந்தைகளுக்கு கூறலாம். குழந்தை ஜட்டி போடாத போது அதை கேலி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

கேள்வி: 3

எனக்கு இப்போது வயது 48. 30 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. குடும்ப வாழ்க்கை இவ்வளவு நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி இல்லை. எனக்கு வாலிப வயதில் சுய இன்ப பழக்கம் இருந்தது. இப்போது தாம்பத்தியத்தில் இன்பம் அடைய வழி சொல்லுங்கள்

பதில்:

கடந்த 18 வருடங்களாக உங்கள் தாம்பத்ய உறவு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. தற்போது உங்களுக்கு 48 வயது என்பதால் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சமயம்  (மெனோபாஸ்) போல் ஆண்களுக்கும் ஏற்படும் (ஆண்ரோபாஸ்). இந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் தாம்பத்ய உறவில் நாட்டம் குறைவது, விறைப்புத் தன்மை குறைவது, சீக்கிரம் விந்து வெளிப்படுவது போன்றவைகளும் இருக்கலாம். சுய இன்ப பழக்கத்திற்கும் தற்போதைய நிலைக்கும் சம்பந்தம் இல்லை. பதட்டம் இல்லாமல் இருந்தால் தானாகவே இப்பிரச்சனை சரியாகும்.பிரச்சனை  தொடர்ந்தால் முறையான மருத்துவரை (செக்சாலஜிஸ்ட்) அணுகுங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *