மாதவன் இளங்கோ

என்னைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. இந்தியாவின் ஏதோவொரு கிராமத்தில் பிறந்து,  நகரத்திற்கு இடம்பெயர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, உலகின் ஒரு கால்பகுதியேனும் சுற்றிவிட்டு தற்போது ஐரோப்பாவின் ஹாலந்து நாட்டின் மாஸ்ட்ரிக்ட் எனும் நகரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஒரு என்.ஆர்.ஐ ஆசாமி.

விடிந்தால் தீபாவளி. ஆனால், மறுநாள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால், முந்தைய நாள் மாலையே நகரிலும், நகருக்கு வெளியிலும் இருக்கும் இந்திய  நண்பர்கள் சிலரின் வீடுகளுக்கு மனைவி, மகன்கள் சகிதம் சென்று, வாழ்த்துக்களையும் இனிப்பு பதார்த்தங்களையும் வழங்கி, ஒவ்வொரு வீட்டிலும் சிறிது நேரம் அளவளாவிவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த போது மணி பத்து.

பால்கனிக்கு சென்று நின்றேன். அங்கே பல வண்ண வானவேடிக்கைகளில்லை. கண்கவர் மத்தாப்பூக்கள் உண்டாக்கும் வளையங்களைக் காண முடியவில்லை. வெடிச்சத்தம் சிறிதும் இல்லை. அமைதி, எங்கும் அமைதி. காதைச் செவிடாக்கும் அமைதி!  தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடக் கூட்டம் இல்லை. அந்த விறுவிறுப்பும், பரபரப்பும் இல்லை. ஆர்பாட்டங்கள் இல்லவே இல்லை! அட, இது இந்தியாவே இல்லை!

ஒருவித ஏக்கத்தோடும், வெறுமையோடும் எனது அறைக்குச் சென்று, ஹீட்டரை பொருத்திவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினேன். பக்கத்து அறையில் என் மனைவி யூட்யூபில் சரவெடி காணொளிகளைக் காட்டி, தீபாவளி பற்றி என் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அவ்வளவுதான், என் மனம் கிட்டத்தட்ட ஒரு இருபது தீபாவளிகள் பின்னோக்கி, மின்னல் வேகத்தில் பாய்ந்து பயணித்தது.

அப்போதெல்லாம் நாங்கள் தீபாவளி கொண்டாடியதில்லை. இப்போதும்  அப்படித்தான் – என் ஊருக்குச் சென்றால் தீபாவளி கொண்டாடுவதில்லை.

என் தந்தை ஒரு தீபாவளியன்றுதான் அவருடைய தாயாரையும், சகோதரர்களையும், அந்த சமயத்தில் பரவிய ஒரு வகையான விஷக்காய்ச்சலுக்குப்  பறிகொடுத்துவிட்டார் என்றும், அன்றிலிருந்து அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை என்றும் என் தாயார் சொல்லிக் கேட்டிருக்கிறோம் நானும் என் தம்பியும். ஆகையால் அந்த நாளில், பெரும்பாலும் அவர் மௌனமாகவோ அல்லது தியான நிலையிலோ தான் இருப்பார்.

இது எங்களுக்குத் தெரிந்த நாளிலிருந்து, அவரது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் நாங்களும் தீபாவளி கொண்டாட விரும்பியதில்லை – கொண்டாடியதில்லை. “பட்டாசு வேண்டும்! புத்தாடை வேண்டும்!” என்று நானோ, என் தம்பியோ கேட்டதே இல்லை. இந்தியாவில் பண்டிகைகளுக்கா பஞ்சம்? தீபாவளிக்குப் பதிலாக வேறு எதையாவது கொண்டாடிவிட வேண்டியதுதான்.

இருந்தாலும், நாங்கள் சிறுவர்களாதலால், மற்ற சிறுவர்கள் சரவெடிகள் வெடிப்பதையும், மத்தாப்பூக்கள் கொளுத்துவதையும் பார்க்கும்போது மனம் “நமக்கும் கிடைக்காதா?” என்று ஏங்குவதை தவிர்க்க முடிந்ததில்லை. “பரவாயில்லை, மத்தாப்பூ மட்டுமாவது வாங்கலாமே? என்ன ஆகிவிடப்போகிறது?” என்று எனக்கு மனது மாறினாலும், “வேண்டாம்!,” என்று மறுத்துவிடுவான் என் தம்பி. அந்தச் சிறுவயதிலேயே அவன் கொண்டிருந்த  நேர்மையும், பெருந்தன்மையும், புரிதலும் ஆச்சர்யமானவை தான். ‘குழந்தைகள் பாவம் விளையாடிவிட்டுப் போகட்டும்’ என்கிற பெருந்தன்மை பெரிய மனிதர்களுக்கே இல்லாதபோது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நினைக்கும் மழலையின் பெருந்தன்மை போற்றுதலுக்குரியதல்லவா?

தீபாவளி நாளன்று நாங்கள் நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது வழக்கம். எங்கள் எதிர் வீட்டு நண்பன் வாசு வண்ண வண்ண வெடிகளாய் வெடித்து மகிழ்வதை நாங்கள் இருவரும் மாடிப்படியில் அமர்ந்து பார்த்து ரசிப்போம்.

அதற்கு பின்னால் நாங்கள் செய்ததை இன்று நினைத்தால் இன்றுகூட எனக்கு சிரிப்பு வருகிறது.

என் பக்கத்து வீட்டு நண்பன் சரவணன், “நீங்க வெடிக்கலையா….? ஏ…ன்? எதற்கு…?” என்று ராகத்தோடு கேட்டுப் பாடாய்ப் படுத்தி எடுத்துவிடுவான். அதனால், அவன் எழுவதற்கு முன்னரே, எதிர்வீட்டு வாசலில் இருக்கும் வெடித்த காகிதக் குவியல்களையெல்லாம் அள்ளி எடுத்து வந்து எங்கள் வீட்டு வாசலில் போட்டு விடுவோம்.

பட்டாசு வெடிப்பதை  விட, இந்த விளையாட்டு தான் எங்களுக்கு சுவாரஸ்யமாகவும், பேரானந்தம் தருவதாகவும் இருந்தது.

விடிந்ததும் நம் பக்கத்து வீட்டு நண்பர் சரவெடி கிளப்புவார். வழக்கம் போல வந்து கேள்விக்கணைகளை தொடுப்பார். “அதெல்லாம் நாலு மணிக்கே ஆயிடுத்து!” என்று ஒரு கதையை அள்ளி விட்டுவிடுவோம். அவனும் அதை நம்பி சரவெடியில் மீண்டும் மும்முரமாக இறங்கி விடுவான்.

அப்போது என் மனதை மிகவும் கவர்ந்த இன்னொரு விஷயம் ஒன்று உண்டு. தெருவில் சரவெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தால் போதும், குறவர் இனச் சிறுவர் கூட்டம் ஒன்று எங்கிருந்தாலும் ஓடி வந்து, சரவெடியை கண்டுகளித்து ஆர்ப்பாட்டம் போடும். ஒரு நீண்ட சரவெடியை கொளுத்தும் போது, எல்லா வெடிகளும் வெடிக்காது, ஒன்றிரண்டு வெடிகள் தப்பிப் போயிருக்கும். சரவெடி ஓய்ந்ததும், அந்தச் சிறுவர்கள் தப்பியவற்றையெல்லாம் தேடியலைந்து பொறுக்கியெடுத்து வெடித்து மகிழ்வார்கள். அதிலும் பார்த்தீர்களேயானால், அவர்கள் பொறுக்கியெடுத்த வெடிகள் பலவற்றில் திரிகளே இருக்காது. இருந்தாலும் விடாமல் அவற்றையெல்லாம் பிய்த்தெடுத்து, உள்ளிருக்கும் மருந்தையெல்லாம் சேகரம் செய்து கொண்டு போய் மொத்தமாகக்  கொளுத்தி விட்டு ஆட்டம் போடுவார்கள்.

அவர்கள் என்னவோ இதையெல்லாம் குதூகலத்தோடு செய்து கொண்டிருந்தாலும், அவ்வாறு அவர்கள் தேடித்திரிவதைப் பார்க்கப் பரிதாபமாகவும், சிறிது விந்தையாகவும் கூட இருக்கும். எனக்கும் அவர்களைப்போலவே பட்டாசு கிடையாது தான். ஆனால், அது போதாமையினாலோ, இல்லாமையினாலோ அல்ல என்கிற புரிதல் எனக்கு இருந்தது. அவர்களுக்குத் தருவதற்காகவாவது கொஞ்சம் பட்டாசு வாங்கினால் நன்றாக இருக்குமே என்று மட்டும் நினைத்துக் கொள்வேன்.

அந்தக் கூட்டத்திலிருந்து நான் கண்டெடுத்த ஒரு நண்பன் தான் – ‘குகன்’. அவனை இன்று நினைத்தாலும் என் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்கிறது. மேமாத சென்னையில் நான்கு மணிநேரம் பைக்கில் அலைந்துவிட்டு, திடீரென குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தால் எதிர்கொள்ளும் குளிர்ச்சியை என்னால் உணரமுடிகிறது. மகிழ்ச்சி என் மனதை நிறைக்கிறது.

அவர்களுடைய வாழ்க்கைமுறை எவ்வளவு  வித்தியாசமானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. பேச்சுவழக்கில் அவர்களை நாம் “குருவிக்காரங்க” என்று அழைப்போம். அது குகனுக்குப் பொருத்தமான ஒரு பெயர்தான். அவன் ஒரு பறவை; எந்தக் கவலையும் இன்றி, சிட்டுக்குருவியைப்போல் எப்போதும் ஆனந்தமாக  சிறகடித்துப் பறக்கும் ஒரு ‘சுதந்திரப் பறவை’.

என்னுடைய வாழ்க்கையும்  ‘கொஞ்சம்’ சுதந்திரமானது தான். மாலை நான்கு மணிக்கு பள்ளி விட்டால், நான்கு பதினைந்திற்குள் வீட்டில் இருக்க வேண்டும். என் சுதந்திரம் அந்த அளவில் இருந்தது.

அவன் எனக்கு நண்பனான பின், நான் நிறையவே மாறிவிட்டிருந்தேன். அவனோடு வேட்டையாடச் சென்றேன், தெருவில் கில்லி, கோலி எல்லாம் விளையாட ஆரம்பித்தேன். அவன் கூடாரத்திலெல்லாம் (அதுதான் வீடே!) பலமுறை அவனுடன் அமர்ந்து  உணவருந்தி மகிழ்ந்திருக்கிறேன். கூடாரத்தைப் பற்றி அங்கு யாருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்போது சென்றாலும் அங்கே ஆனந்தம், ஆர்ப்பாட்டம் தான். எங்கள் வீட்டில் அதற்கு நேர்மாறாக எப்போதும் ஒரு ‘பின் டிராப் சைலன்ஸ்’ இருந்தாக வேண்டும்.

அந்தக் கூடாரத்தைப் பற்றியும், அந்த வாழ்க்கை முறையைப் பற்றியும் எழுதினால் நிச்சயமாக இந்தக் கதை ஒரு குறுநாவலாகிவிடும். அவன் செய்வதையெல்லாம் அப்படி ரசித்திருக்கிறேன்.

அவனை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆரம்பத்தில் ஏனோ என் தாயார் அதை விரும்பவில்லை. அவனையும் எங்களுக்குச் சமமாக  நடத்தவேண்டும் என்று அவனது அங்கீகாரத்திற்காக வீட்டில் ஒரு பெரிய யுத்தமே நடத்தினேன். அது வேலைக்கு ஆகாததால் பிறகு, காந்திய வழியில் உண்ணாவிரதமெல்லாம் இருந்ததுண்டு. வெகு விரைவில் அவன் கிட்டத்தட்ட எங்கள் வீட்டில் ஒருவனாகவே மாறிவிட்டிருந்தான். எல்லோருக்கும் அவனைப் பிடித்துப்போய் விட்டது.

அவனோடு சேர்ந்து நான் கோலி விளையாடியது மாறி, அவன் எங்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். அவ்வளவு ஏன்? அந்த சமயத்தில் பிரபலமான பாக்மான், பாராட்ரூப்பர், பிரின்ஸ் ஆப் பெர்ஷியா போன்ற விளையாட்டுகளெல்லாம் கூட, எங்கள் வீட்டு கணிப்பொறியில் விளையாட ஆரம்பித்தான்.

பள்ளிப்படிப்பை நிறுத்தியிருந்த அவன், என் தந்தையின் உதவியோடு ஒரு பள்ளியில் சேர்ந்து படிக்கவும் ஆரம்பித்தான். அந்த வயதிலேயே எனக்கு தெரிந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். எதைச் சொன்னாலும் அப்படியே ‘பற்றிக்கொள்ளும் அவனது திறம்’ என்னை வியக்க வைக்கும்.

அந்தப் பறவை மெதுவாக எங்கள் கூண்டுக்குள் அது அறியாமலேயே சிக்கிக் கொள்ள ஆரம்பித்தாலும், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

ஒரு சமயத்தில் அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகளால், அவர்களின் கூடாரங்களெல்லாம் அகற்றப்பட்டன. சிறகடித்து பறக்கும் சுதந்திரப் பறவைகளின் வாழ்க்கை என்று நான் கருதிய அந்த நாடோடிகளின் வாழ்க்கையில் இருந்த சிரமங்களும், சிக்கல்களும், அப்போது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

நாமெல்லாம் இன்று வைபை (Wi-fi) சமிக்ஞைகள் சில நொடிகள் வரவில்லையென்றால் கூட பொறுமையிழந்துவிடுகிறோம். ஆனால்,  படுக்கைகளையும், பொருட்களையும், மூட்டைகளையும் தூக்கிக் கொண்டு இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருந்த அந்த நாடோடிக் கூட்டத்தின் வாழ்க்கையை நினைத்து அன்றிரவு அழுதது இன்றும் நினைவிலிருக்கிறது.

தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு, தலையில் இருந்த மூட்டையை ஒரு கையில் பிடித்துகொண்டு, மறுகையை என்னை நோக்கி அசைத்தவாறு, ‘வெளிநாட்டுக்குச் செல்வது’ போன்று மகிழ்ச்சியோடு  சிரித்துக்கொண்டே அவன் சென்ற அந்தக் காட்சி உண்மையில் என்னுள் உறைந்து போயிருக்கிறது.

அதன் பிறகு, அவனைச் சந்திக்கும் வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லை. இடம்பெயர்ந்து போனது என்னவோ என் நண்பன் தானே ஒழிய, எங்கள் நட்போ அல்லது அந்த நட்பின் மூலம் கிடைத்த அனுபவமோ அல்ல.

என் மனவெளியில் அடிக்கடி உலவிக்கொண்டிருக்கும் அத்தினங்களின் நினைவுகளைப் பதிவுசெய்து, உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், இந்த நட்பும், அனுபவமும் சாஸ்வதம் பெற்றுவிடும் என்று நம்புகிறேன். அதேபோல, இரைச்சல் நிறைந்த இன்றைய வாழ்க்கை சூழலில், இதுபோன்ற குளிர்ச்சியான நினைவுகள் மனதிற்கு சிறிதளவேனும் இதமும், இனிமையும் தரும் என்றும் நம்புகிறேன். இன்றைக்கு அது போன்ற ஒரு நட்போ அல்லது எனக்கு அப்போதிருந்த மனநிலையோ கோடி கொடுத்தாலும் கிடைக்குமா எனத் தெரியவில்லை.

அவன் நிச்சயம் எங்கோ இருக்கிறான். ஆனால் அவனை மீண்டும் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். ஒருவேளை நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தாலும், அது சாத்தியம்!

இருப்பினும், உங்களுக்கு ஒரு கோரிக்கை!

ஒருவேளை நீங்கள் அவனை சந்திக்க நேர்ந்தால்.. சந்திக்க நேர்ந்தால்..

‘என்னைப் பற்றி அவனிடம் தயவுசெய்து எதுவும் கூறி விடாதீர்கள்!’

அதுவும் இந்த பாழாய்ப் போன உலகத்தில், ‘கார் எப்போ வாங்குற? கார் எப்போ வாங்குற’ என்று திரும்பத் திரும்ப கேட்டு உயிரெடுத்த உடன்பணிபுரிபவர்களின் வாயடைக்க கடனுக்கு கார் வாங்கி, ‘நீ வீடு இல்லாமல் இருப்பது எனக்கு அவமானம்’ என்று கூறிய தந்தையின் கௌரவத்திற்காக கடனுக்கு வீடு வாங்கி, மேலும் காதணி, நிச்சயதார்த்தம், திருமணம் என்று பல விழாக்களில் சொந்தங்கள் முகத்தைத் தூக்கி மும்பையில் வைப்பதை காணச் சகிக்காமல், அவர்களோடு பெருமையுடனும் புன்னைகையுடனும் மேடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, கடன் அட்டை உபயோகித்து தங்க நகைகள், துணிமணிகளெல்லாம் வாங்கி, பொறுப்போடு நான்காம் தேதிக்குள் அத்தனை தவணைகளையும் கட்டி, எஞ்சியிருந்த காசில் வீட்டுக்கு மளிகைப்பொருட்கள் வாங்கி, பிள்ளைகளுக்கு பொம்மைகள், எனக்குப் புத்தகங்கள் வாங்கி மாத கடைசியில் கையில் காசில்லாமல் கஷ்டப்பட்டு, நண்பர்களிடமும் கடன் வாங்கி, கடன் பட்டியல் கூட்டுத்தொடராகவும், கடன் பணம் பெருக்குத்தொடராகவும் வளர்ந்து, மன அழுத்தத்துக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி, வெறுத்துப்போய் ஒரு நாடோடி போல் மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு ஓடிவந்து, ‘எங்கள் வேலையைப்  பறித்துக்கொள்ள வந்த களவாணிகளே!’ என்பது போன்ற பார்வையை வீசிய அந்நியர்களின் (உண்மையில் நாங்கள் தான் இங்கு அந்நியர்கள்!) எதிர்ப்பைச் சுமந்து, கடின உழைப்பாலும், தாய்நாடு தந்த அறிவாலும் அவர்களின் நம்பகத்தன்மையைப் பெற்று, சிறிது சிறிதாக அவர்களில் ஒருவனாகி,

(மூச்சு வாங்குகிறது… இரண்டு நிமிடங்கள் பொறுத்துக்கொள்ளவும்..)

சரி. இப்படி ஆறு வருடமாக கைகட்டி, வாய்கட்டி, செலவு பண்ணாமல் சேர்த்து வைத்து, இந்திய ரூபாய் வீழ்ச்சியடைகிற நாளை எதிர்நோக்கிக் காத்திருந்து, இந்தியாவிற்கு சிறிது சிறிதாக பணத்தை அனுப்பி, அங்கு வந்து வீட்டுக்கடனை அடைத்து, நிம்மதியாக தெருவோர தேநீர் கடையில் ஒரு சனிக்கிழமை தேநீர் பருகும்போது, ‘வீட்டு விலையெல்லாம் இந்த என்.ஆர்.ஐ நாய்களால ஏறி போயிடுச்சு’ என்று தேநீர் கடையில் தினசரி படிக்கும் மேதைகளிடம் பட்டம் பெற்று, வீட்டுக்கடனை முழுவதுமாக அடைத்து எஞ்சிய தொகையில் நிலம் வாங்க விரும்பி, என் பெற்றோர் ‘திஸ் இஸ் மை சன் ப்ரம் அப்ராட்’ என்று வீண்பெருமையடித்துக்கொண்டு அறிமுகப்படுத்தியதால், இருபது கோடி மதிப்புள்ள நிலத்தை ஏஜெண்ட் காட்ட, ‘நான் அந்த மாதிரி என்.ஆர்.ஐ இல்லைங்க, வேற மாதிரி. இந்தியாவில் இருக்கற எல்லாரும் எப்படி அனில் அம்பானி இல்லையோ, அதேபோல் வெளிநாட்டுல இருக்கற எல்லா இந்தியனும் லக்ஷ்மி மிட்டலும் இல்லை. நான் ஒரு நார்மல் மிடில் கிளாஸ் என்.ஆர்.ஐ!’ என்று எடுத்துச் சொல்லி அவரது மேலும் கீழும் பார்வையை தர்மசங்கடத்துடன் வாங்கி,

உதவி என்று வந்த உறவுகாரனுக்கு ஆயிரம் ரூபாய் தந்து, ‘வெளிநாட்டுல கோடிக்கணக்குல சம்பாதிக்கிறான், பிச்ச காச தர்றான் பாரு பரதேசி’ என்கிற பட்டத்தையும் பெற்று, இன்னும் ‘திமிர் புடிச்சவன்’, ‘கஞ்சன்’, ‘கர்வி’, அதிமேதாவி, ‘நாட்டுப்பற்று இல்லாதவன்’ என்று எனக்கு முற்றிலும் பொருந்தாத அத்தனை அடைமொழிகளையும் தாங்கி,

இறுதியாக இன்றைக்கு பழைய வாழ்க்கையை நினைத்து, உண்மையான அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் என்னைப் பற்றி தயவு செய்து குகனிடம் கூறி விடாதீர்கள்.

அவன் என் நிலைமையை நினைத்து மிகவும் வருத்தப்படுவான். இன்னும் சொல்லப்போனால், இதெல்லாம் அவனுக்குப் புரியவும் புரியாது.

அவன் ஒரு பறவை.

யாரையும் வேதனைக்கும் உட்படுத்தாமல், எந்தக் கவலையும் இன்றி, யாருக்காகவும் இல்லாமல், அவனுக்காகவே வாழ்ந்து, எப்போதும் ஆனந்தமாக சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துப் பறக்கும் ஒரு சுதந்திரப் பறவை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நாடோடியும், நான்-ரெசிடண்ட் இந்தியனும்

  1. கதை வெகு இயல்பாக இருந்தது.உங்கள் சொந்த அனுபவத்தை எழுதுகிறீர்கள் என்று தான் படிக்க தொடங்கினேன். கடைசி வரை அந்த எண்ணம் தொடர்ந்தது. முடித்தபின் தான் இது கதை என்பதை உணர்ந்தேன். பாராட்டுகள்.
    கோதண்டராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *