என் பார்வையில் கண்ணதாசன்

-பாலகணேஷ்

Kannadasanகண்ணதாசனை என் பார்வையில் எழுதுவது என்றதுமே பலத்த யோசனை சிந்தையை ஆட்டி வைத்தது. நண்பனாய், அண்ணனாய், ஆசானாய், ஞானியாய் பலப்பல முகம் காட்டி வாழ்வில் பங்குபெற்றவரான கண்ணதாசனின் எந்த முகத்தைச் சொல்வது நான்? சற்றே ஆழ்ந்து யோசித்தால் நான் கண்ணதாசனைக் கண்ணதாசனாகவே அதிகம் ரசித்திருக்கிறேன். அதாவது கண்ணனுக்கு அவர் தாசனாக இருந்த காரணத்தாலேயே எனக்கு அவரைப் பிடிக்கும்.

பாரதியார் கண்ணனை அம்மாவாக, தோழியாக, காதலியாக, சேவகனாக இப்படிப் பலப்பல ரூபங்களில் கண்டு நெகிழ்ந்து கவிதைகளைப் பொழிந்தது போலக் கண்ணதாசனும் கண்ணனை நினைந்து நெகிழ்ந்து நெக்குருகித் தமிழ்த் திரையிசைக்கு அளித்த பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்தான். ’கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல; கல்லும் முள்ளுமே பூவாய் மாறும்’ என்றால் மானிடனான கண்ணதாசன் மலர்ந்து கவிதை மழை பொழிந்ததில் என்ன வியப்பு?

’ராமு’ படப்பாடலில் சொல்கிறார்: ’தேடிநின்ற கண்களிலே கண்ணன் வந்தான் ; தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்’ அப்படி வருகிற கண்ணன் எப்படியிருப்பான்? ’கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்; கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்’. யார் எந்த வடிவத்தில் பார்க்க விரும்பினாலும் அந்த வடிவில் கண்ணன் இருப்பானாம். அப்படி எதுக்குய்யா அவன் வரணும்?

’தர்மம் என்னும் தேரிலேறிக் கண்ணன் வந்தான்; தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்’ என்கிறார். தீராத துயரால் வருந்தி அழைப்பவர்க்கு விடிவெள்ளியாய்க் கண்ணன் வருவான், பிருந்தாவனம் அழைத்துச் செல்வான். அந்த இடம் எப்படிப்பட்டது? அதையும் சொல்கிறார் தாசன். முடவர்களை நடக்க வைக்கும், மூடர்களை அறிய வைக்கும், குருடர்களைக் காண வைக்கும், ஊமைகளைப் பேச வைக்கும்… கண்ணனின் வசிப்பிடமே அத்தனை மகிமை வாய்ந்ததெனில் கண்ணனை என் சொல்ல…?

கடவுள் கண்ணன் அப்படி என்றால், கோபிகையருடன் ராஸலீலை செய்யும் காதலன் கண்ணனை எப்படிச் சொல்கிறார் தாசன்? ‘கண்ணன் என்னைக் கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடித் தந்தான்’ இப்படியெல்லாம் செய்து மயக்கிய கள்வன் ‘கண் திறந்து பார்த்தேன், கண்ணன் அங்கு இல்லை. கண்ணீர் பெருகியதே’ என்று புலம்பிக் கண்ணீர் வடிக்க வைத்துவிட்டு மாயாவியாக மறைந்து விடுகிறான் என்கிறார்.

’இப்படிச் செய்துவிட்டானே!’ என்று கண்ணன் மேல் கோபம் வருகிறதா என்ன…? அப்போதும்கூடக் ‘கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னன் முகம் காண்பதில்லை, கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை’ என்று கண்ணனையே எண்ணி உருகத்தான் முடிகிறது. முத்தாய்ப்பாகக் ’கண்ணன் வரும் நாளில் நான் இருப்பேனோ, காற்றில் மறைவேனோ’ என்றுவிட்டு ‘நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன்’ என்று முடிக்கிறார். இதில் காதல் பாவத்தை விட்டு அருள் புரியவரும் கண்ணனின் நெஞ்சில் எனக்கு ஓர் இடம் வேண்டும் என்று ஆன்மீக பாவத்திலும் கண்ணதாசன் துடிப்பை நம்மால் உணர முடியும்.

கண்ணதாசன் இயற்றிய ‘கிருஷ்ண கானம்’ இசைத் தொகுப்பு மிகப்பிரபலமானது; கேட்பவரை உருக வைப்பது. அதில் ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் கண்ணனைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பார். கோகுலத்தில் பசுக்களெல்லாம் அந்தக் கோபாலன் பேரைக் கேட்டாலே நூறுபடி பால் கறக்கின்றன என்று துவங்கிக் கண்ணன் பெருமைகளைப் பாடுவார். சகல உயிரினங்களையும மயக்கும் கண்ணனின் வேணுகானத்தைப் பொழியும் புல்லாங்குழலை, அதைத் தந்த மூங்கில்களையே புகழ்ந்து பாடச் சொல்லுவார் கண்ணதாசன். பாரதியாருக்குச் சற்றும் குறைவில்லாமல் இந்தத் தொகுப்பு முழுவதிலும் கண்ணனைப் பல பாவங்களில் பல கோணங்களில் வைத்துக் கவிஅடைமழை பொழிந்திருப்பார் கண்ணதாசன்.

கண்ணனைக் கொண்டாடுதலின் உச்சமாகக் கண்ணன் நேரில் வந்தால் என்ன வரம் கேட்பது என்பதைச் சொல்கிறார். கண்ணதாசனின் வாழ்க்கை அனுபவங்கள் ஓருருக் கொண்டதுபோல் அது தொனிக்கிறது. ‘பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள், அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான், நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்? இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்!’’ இன்பத்தையே மனம் நாடும் இவ்வுலகில் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளத்தைக் கேட்க அந்தக் கவிஞன் எத்தனை அனுபவங்களால் பக்குவப்பட்டிருக்க வேண்டும்?

அந்த அனுபவங்களின் சாறை நமக்கு அளிக்கிறார் ’உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா… இதை உணர்ந்து கொண்டல் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா’ என்கிற இரண்டே வரிகளில். நம் உள்ளம் எத்தனை உயரமோ அத்தனை உயரம்தான் உலகில் நமக்குக் கிடைக்கும் ஏற்றமும் வாழ்வும்.

இன்னும்… இன்னும்… என சொல்லிக் கொண்டே போனால் அதற்கு முடிவேயிராது. ஆக…கண்ணனை எல்லா நிலைகளிலும் பார்த்துப் பரவசித்து அவனுக்குத் தாசனாக இருக்கும் கண்ணதாசன், அந்த அனுபவங்களையும் அதனால் தனக்குக் கிடைத்த ஞானத்தையும் எந்தவிதச் சிரமமும் இன்றி நமக்கும் இனிய திரைப்படப் பாடல்களின்வழி கடத்தி விட்டிருக்கிறார். ஒவ்வொன்றையும் கேட்கும் போதெல்லாம் புதுப்புது நயங்கள் மனதில் தோன்றி கண்ணதாசனை வியக்கத்தான் வேண்டி இருக்கிறது. எனவே கண்ணனுக்குத் தாசனாகவே என் மனதில் சிம்மாசனமிட்டு கண்ணதாசன் வீற்றிருப்பதில் வியப்பென்ன…?

 

Share

About the Author

has written 1019 stories on this site.

5 Comments on “என் பார்வையில் கண்ணதாசன்”

 • மதுரைத்தமிழன் wrote on 16 June, 2014, 19:45

  அருமையான பதிவு..பாராட்டுக்கள்

 • அவர்கள் உண்மைகள் wrote on 16 June, 2014, 19:50

  கண்ணதாசன் அருந்தி மகிழ்ந்தது சரக்கு அதனால்தான் என்னவோ நாம் கேட்டு மகிழ பல சரக்குகளை விட்டு சென்று இருக்கிறார். மதுவினால் தான் அடைந்த போதையை(இன்பத்தை) மது அருந்தாதவர்களுக்காக பாடல்கள் மூலம் விட்டு சென்று இருக்கிறார்.

 • ரிஷபன் wrote on 16 June, 2014, 20:47

  புல்லாங்குழல் கொடுத்த கண்ணன்.. கண்ணதாசனுக்கு தன் மீது பிரேமையும் நல்ல தமிழையும் சேர்த்து கொடுத்து விட்டான்..
  அவர் பாடல்களைச் சொல்லி கண்ணன் மீதான காதலையும் சொல்லிய விதம் மிக அருமை.

 • revathinarasimhan wrote on 16 June, 2014, 22:36

  ஆஹா அருமையான தலைப்பை  எடுத்துக் கொண்டீர்கள் கணேஷ்.கண்ணதாசன் எனும் மாக்கடலில் மிகப் பெரிய முத்து கண்ணனைப் பற்றிய பாடல்கள்.ஒவ்வொரு கண்ணன் பாட்டும் அழியா வரம் பெற்றவை. உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்  இருவரின் கணக்கிலும் வரவு  வைத்தான்  பாடலாகட்டும்.  கேட்டதும் கொடுப்பவனே  கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே  பாடலாகட்டும்  இன்னும் எத்தனையோ கண்ணதாசன் கண்ணன் மேல் கொண்ட காதலை விளக்கும். என்னையும் கண்ணதாசன் பாடல்களோடுப் பயணம் செய்ய வைத்ததற்கு மிக நன்றி  கணேஷ்,.

 • S. பழனிச்சாமி wrote on 17 June, 2014, 10:05

  மிகவும் அருமையான பதிவு. ஒவ்வொரு வரியும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள்!

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.