இசைக்கவி ரமணன்

 

எந்த உறவு சொந்தமுடன்
எனது குறைகளைச் சுட்டிக் காட்டுமோ
எந்த உறவு சுட்டிக் காட்டினால்
இடைமறிக்காமல் ஏற்றுக்கொள்ளுமோ
அந்த உறவே அமையவேண்டும்
அன்னாய்! உன்னை வேண்டுகின்றேன்
எந்த உறவும் அந்த உறவாய்
இயற்றி விட்டால் பாடுகின்றேன்!

அவரவர் போக்கில் அவரவர் பயணம்
அவரவர் மனதில் அவரவர் சலனம்
அழுகையும் சிரிப்பும் அவரவர் அனுபவம்
அறியாமைகளில் ஆயிரம் தனித்துவம்!
எவரெவர் எப்படி இருந்தால் என்ன?
எதையும் பேச நமக்கே துரிமை?
இருக்கும் உரிமைகள் புகழவும் போற்றவும்
இறங்கி மேலும் இறங்கிப் பணியவும்
ஏதும் அறியான் போலே இருப்பதும்
இங்கிதமாக விலகவும் தானே??!!

நேசம் இருப்பதால் நெஞ்சு பதைக்கலாம்
நெஞ்சு பதைப்பதை நேரில் சொன்னால்
நெருடல் முளைக்கலாம்; உரிமை மீறலாய்க்
கருதப் படலாம்; கலகம் நேரலாம்
வாசம் வண்ணம் வழங்குதற்கப்பால்
வாழ்ந்து உதிரும் மலர்க்கென்ன உரிமை?!
வாழ்த்தி வணங்கி நகர்வதல்லவா
வழிப்போக்கர்க்கு வாய்த்த கடமை!

தவறும் சரியும் முறையாய்த் தெரிந்தால்
தவமும் எதற்கு? தவிப்புகள் ஏது?
அவர்கள் அறியார்; ஆயினும் அன்பர்;
அறிந்ததாய் எண்ணி அயரும் மழலையர்!

ரசனைகளின் ராட்சதத்தனங்களும்
நாகரீகத்தின் மோக முகங்களும்
கல்வியிருந்தும் காதலிருந்தும்
கண்ணில் ஏனோ படுவதில்லையே!
கசடு தெரியுமா கண்ணில் இருந்தால்?
கண்டவர் சொன்னால் மனதுதான் ஏற்குமா?
கடவுளே! என்குறை அன்றி வேறெதும், என்
கண்ணில் படாமல் காத்தருள்கவே!

நான்
நேசிக்கின்ற இதயங்களுக்காய், என்னை
நேசிக்கின்ற நெஞ்சங்களுக்காய், உன்னை
யாசிக்கின்றேன் ஒருவரம் அருள்வாய்!
ஊசிமுனை அளவு கூட, அவர்கள்
உள்ளத்தினிலே குறையின்றிக் களைக!
உலகில் அவர்கள் நலமாய் வாழ்க!
ஒருபிழையும் அவர் செய்யாதிருக்க!
ஒருதீங்கும் அவரை அண்டாதிருக்க!
வலமும் இடமும் எதிரும் பின்னும்
மேலும் கீழும் உள்ளும் புறமும்
நீயே இருந்தவரைக் காவல் செய்க
நலமே அந்த நல்லவர்க்கருள்கவே!

16.06.2014 / திங்கள் / 22.43

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *