கே. ரவி

Smart-Air-Now
நான் ஒரு பெரிய மனிதன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. சுரதா, ஒளவை நடராஜன், சுகி சிவம், இசைக்கவி ரமணன், வ.வே.சு. போன்ற பெரிய மனிதர்களோடு என் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பின்னியிருப்பதால், சுயசரிதை எழுதும் அளவுக்கு நானும் ஒரு பெரிய மனிதன்தான் என்ற நம்பிக்கையோடு இத்தொடரைத் தொடர்கிறேன்.

சோவுக்கு பதில் சொல்வதாக அமைந்த சுரதாவின் கவிதையை ஒட்டியும் ஆமோதித்தும் சுகி சிவம் ஒரு கவிதை எழுதினான் என்று சொன்னேன் இல்லையா? அதில் சுரதாவைப் புகழும் போக்கில் மிக அழகாக இரண்டு வரிகள் போட்டிருந்தான்.

‘ஆடியடங்கும் வாழ்க்கையடா’ என்று சுரதா எழுதிய ஒரு பழைய திரைப்பாடலில் வரும் இரண்டு வரிகள் தெரிந்தால்தான் சிவத்தின் கவிதையை ரசிக்க முடியும்.

 “முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா – கண்
 மூடினால் காலில்லாக் கட்டிலடா”

இவை சுரதாவின் கவிதை வரிகள்.

சிவம் எழுதியிருந்தான்:

 “காலில்லாக் கட்டிலெனக் கவிதை சொன்னீர்
 எட்டுக்கால் கட்டிலென எதிர்த்துச் சொல்வேன்”

சுரதா தம் கவிதையை மிகக் கச்சிதமாக முடித்திருந்தார்:

 “மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை, மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை”

அதை அடியொட்டி, சிவம் தன் கவிதையை இப்படி முடித்திருந்தான்:

“எலிதாக்கிப் புலியிங்கே வீழ்வதில்லை
எருக்கம்பூ தாமரையாய் ஆவ தில்லை”

நான் பாராட்டினேன். படித்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். ஒளவை நடராஜனும் முதலில் பாராட்டினார். பிறகு சிவத்தையும், என்னையும் தனியே அழைத்துச் சொன்னார்:

‘ராஜா, கோபுர மதிற்சுவரை மாடு முட்டுவது இயற்கையாக, அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இப்படி இயல்பான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டிவிட்டு, மாடு முட்டும் ஆனாலும் கோபுரம் சாய்வதில்லை என்கிறார் சுரதா. அது போல், கூழாங்கல் மாணிக்கம் ஆவது இயற்கையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. ஆனால் மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை என்கிறார் சுரதா. இப்பப் பாரு ராஜா, எலி போய்ப் புலியைத் தாக்கும் நிகழ்ச்சி எங்கேயாவது நடக்குமா? இல்லை எருக்கம்பூ தாமரையாவோ, தாமரை எருக்கம்பூவாவோ ஆவதுண்டா? யோசிச்சுப் பாருங்க, அப்பத்தான் சுரதாவின் உவமைகள் எவ்வளவு யதார்த்தமானவை என்பதும், அர்த்தம் பொதிந்தவை என்பதும் புரியும்’ என்று அவர் அருமையாகப் பாடம் எடுத்த லாவகம் எங்கள் மனத்தில் அப்படியே பதிந்து விட்டது.

மெல்ல, மெல்லப் புரியத் தொடங்கியது, சிகாமணி இல்லாமல் மனோன்மணி மட்டும் பிரயோசனமில்லை என்று. சிகா-மனோ உறவில்தான் கவிதை மலர வாய்ப்புண்டாகிறது என்ற மர்ம முடிச்சு அவிழத் தொடங்கியது.

அந்த உறவை அற்புதமாகப் பிரதிபலிக்கும் இன்னொரு கவிதை எழுந்த வரலாற்றை இங்கே சொல்லாமல் இருக்க முடியாது. அந்த வரலாற்று நாயகரும் ஒளவை நடராஜன்தான்.

எங்கள் கல்லூரி நாட்களில், சிவமும் நானும் ஒளவையுடன் அதிக நேரம் உடனிருப்போம். பெரும்பாலும் அப்போதெல்லாம் அவரோடு எங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கலாம். அவர் “சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்” என்று முனைவர் பட்டத்துக்காக ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அதற்கு ஓரளவு உறுதுணையாக இருந்த பெருமைக்கு நாங்கள் இருவரும் உரியவர்கள் ஆனோம். ஒரு சிலர் நாங்கள் ஒளவையோடு சுற்றிக் கொண்டிருந்ததைக் கடுமையாக விமர்சனம் செய்யுமளவுக்கு நாங்கள் நெருக்கமாகக் காணப்பட்டோம்.

சிறிது காலத்துக்குப் பிறகு, எங்கள் படிப்பு, குடும்பம் என்ற பணிகள் காரணமாகவோ என்னவோ சிவமும், நானும் ஒளவையை அடிக்கடி சந்திக்க முடியாமற் போய் விட்டது. பல மாத இடைவெளிக்குப் பிறகு ஒரு கூட்டத்தில் ஒளவை மேடையில் வீற்றிருந்தார். நான் பார்வையாளனாக அரங்கில் சென்றமர்ந்தேன். அப்போது அவர் என்னைப் பார்த்துவிட்டு ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி அனுப்பினார். பிரித்தேன், படித்தேன், நெகிழ்ந்தேன். அந்தத் துண்டுக் காகிதத்தில் நாலு வரிகள், அமர வரிகள், எழுதப் பட்டிருந்தன:

“ஊரார் அலர் உரைக்கக் கேட்டு – நீ
உள்ளம் வெதுப்புறலாமா
ஆரார் எதுசொன்ன போதும்
யாழா முழவோடு மோதும்”

சற்று நேரம் சிலையாகி விட்டேன். யாழும் முழவும் மோதிக் கொள்ளலாமா? ஸ்ருதியும், லயமும் இணைந்தால்தானே சங்கீதம்! எவ்வளவு பொருத்தமான ஓர் உருவகத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார்! அதுவரை அவர் எழுதியதாக எந்தக் கவிதையையும் அவர் எங்களிடம் படித்ததில்லை, காட்டியதில்லை. ஏதாவது கவிதை அதற்குமுன் எழுதினாரா என்றே தெரியவில்லை. அதற்குப் பிறகும் அவர் கவிதை எழுதியதாகத் தெரியவில்லை. ஒரே பாடலால் காலம் கடந்து வாழும் காக்கைப் பாடினியார், செம்புலப் பெயல்நீரார் போன்ற மிக உயர்ந்த புலவர்கள் வரிசையில் இந்த ‘யாழ்முழவார்’ சேர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது.

சிகா-மனோ சரியான அளவில் கூடிய கவிதைக்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு என்பதால் சொன்னேன்.

ஆனால், சிகா-மனோ உறவு போகப் போக மேலும் தெளிவுபடலாயிற்று. அப்போதுதான் முதல் பகுதியில் சொன்னேனே, சிற்றறிவு, பேறறிவு என்று, அந்த பாகுபாடும் புரியத் தொடங்கியது; சிகாமணியின் விஸ்வரூபம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தரிசனமாகத் தொடங்கியது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “காற்று வாங்கப் போனேன் – பகுதி (9)

  1. Dear Ravi,

    Ni ezhuthappatta piRanthavan. Ni nii sa AyuLoodu aarookyamaaka vaazhththuk thamizgk kavithaith thayakkam  navanamaay aNikaL punainthu alankarikka veeNdum.

    Naan rasikka veeNdum. 

    Ayyappan aruLai veendukinReen!

    Su.Ravi

  2. 3.9.2015

    அன்பு ரவி,
    அந்தக் காலத்தில் சுரதாவின் கவிதையை விமர்சித்து, கவிதையுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத சோ எழுதிய கம்பாசிடர் கவிதை ஆனந்த விகடனில்  பிரசுரமானது. அதை, அரசியல் ரீதியில் சோவுக்கு ஆதரவான நம்மைப் போன்ற பலர் ஏற்கவில்லை, அவருக்குப் பின்னால், த. கோவேந்தன் என்ற கவிஞர் இருந்தபோதும்.   அப்போதுதான் சுகி சிவம் மாணவரிசத்தில் எழுதிய கவிதை (சுரதாவின் கவிதையைப் போலவே அமைந்தது) பிரசுரமானது. அதைச் சிலாகித்து சுகி சிவத்திடமும் உங்களிடமும் கூறியிருந்தேன். அப்போது சு. ரவியும் என் நண்பர். மேலும்,  ஏ.சி. அழகப்பா டெக்னிக்கல் கல்லூரி மாணவர் இரா. மோகன் (நம்ம கிரேசி மோகன்)  ஆகியோரெல்லாம் பழக்கம். (அவர்கள் எவருக்கும் நினைவில் நான் சுத்தமாக இல்லை). 
    மாணவரிசம் இதழில் இடாக்குடர் என்று கலைஞர் கருணாநிதியைக் கிண்டல் செய்து எழுதியது, ஜெகந்நாதாசாரியாரை உருவகப்படுத்தி வெளியான கட்டுரை,   கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல் தொடர்பான சுவையான கோஷங்கள் (ரூப்பு தேரா மஸ்தானா, என்னை எதிர்த்தவன்தான் ஜெயிச்சானா… மேரே சப்புனோக்கி ராணி எனக்கு ஓட்டுப் போட வாநீ..) ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன.. (நினைவுக்கொசுவத்தி சுருளுக்குப் பின்னால்…) சிந்தனைக் கோட்டம் மாலை 6 மணிக்கு காந்தி சிலைக்குப் பின்னால் கூடும் கூட்டம். எழுபதுகளில் தொடர்புச் சங்கிலி இன்னும் அறுந்துபோகாமல் இருப்பது வியப்பு…  

  3. “சுரதாவை உமைச்சிலபேர் குறைத்துச் சொல்வர்
    சுடுகின்ற தென்நெஞ்சம் எந்த நாளும்
    எருதாவைப் போல் பாலை நல்காதிங்கே
    எதிர்த்திங்கே எவரும் கவி எழுத ஒண்ணார்.”

    எனக் கவிதை அமையும்..

  4. கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா…..சுரதா சரியாகத் தான் சொல்லியுள்ளார்…..இந்த உடலைக் காற்றடைத்த பை என்பார்கள்.  கால் என்றால் காற்று என்ற பொருளில் இந்த உடல் மூச்சுக்காற்றில்லாத கட்டை என்பதைக் காலில்லாத கட்டில் எனச்சொன்னார்.

                 கவிஞர் இளவல் ஹரிஹரன். D I G OF REGISTRATION (R)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *