கார்த்திகேயன்

கேள்வி : 1

                       என்னுடைய வயது 26. 15 வயதிலேயே என் பெற்றோர் இறந்து விட்டனர். என் உறவினர் வீட்டில் வளர்ந்து கல்லுரி படிப்பு வரை முடித்தேன்.எப்போதும் நான் தனி அறைக்குள்ளே முடங்கிக் கிடப்பேன். யாரிடமும் பேச மாட்டேன் என்னை குடும்பத்திலே ஒரு சிலர் அன்னியர் போல பாவிக்கின்றனர். இதனால் எனக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லை பாதுகாப்பு உணர்வும் இல்லை. என் மேல் பிரியமாக இருந்த என்னுடைய தாத்தா ஒரு வருடத்திற்கு முன்பு  மாரடைப்பால் இறந்தார். அதிலிருந்து எனக்கு மாரடைப்பு புற்று நோய் வந்து விடுமோ என்ற பயம் வந்தது. டாக்டரிடம் போனேன் அவர் என் பயத்தைப் புரிந்து கொண்டு எல்லா சோதனைகளையும் செய்து விட்டு , எனக்கு உடல் ரீதியாக எந்த கோளாறும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் எனக்கு பயம் நீங்கவில்லை. நான்  பயம் இன்றி வாழ்வது எப்படி?

பதில் 

                              எப்போதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் நீங்கள் அனாவசிய பயத்திற்கு உள்ளாகிறீர்கள். மற்றவர்கள் நம்மிடம் எப்படிப் பழகுகிறார்கள் என்பது நாம் எப்படி மற்றவர்களிடம் பழகுகின்றோம் என்பதைப் பொறுத்து அமைகிறது. நீங்கள்  அன்பாக மற்றவர்களுடன் பழகி அவரவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தால் உங்களை யாரும் அன்னியராகப் பார்க்க மாட்டார்கள். உங்கள் மேல் பிரியமாக இருந்த தாத்தாவைப் பற்றிய எண்ணம் சுழன்று கொண்டிருப்பதால் நீங்கள் அதிகமாக யாருடனும் பேசாமல் ஒரே அறையில் முடங்கிக் கிடப்பதாலும் உங்கள் தாத்தாவின் இறப்பிற்குக் காரணமான மாரடைப்பு நோய் பற்றி நீங்கள் அதிகமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டீர்கள். மற்றபடி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு குறிப்பிட்ட நோயைப் பற்றி அதிகமாக யோசிக்கும் போது நமக்கே அந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்கின்ற பயம் ஏற்படுவது இயல்பு தான். இன்னமும் சொல்லப் போனால் மருத்துவம் படிக்கும் மாணவர்களே கூட பேத்தாலஜி எனப்படும் நோயியல் பாடம் படிக்கும் போது அதில் சொல்லப்படுகின்ற நோய்கள் நமக்கும் இருக்கின்றனவா? என்ற குழப்பத்திற்கு உள்ளாவதுண்டு. எனவே கவலையை விடுங்கள் எல்லோரிடமும் கலந்து பேசிப் பழக ஆரம்பியுங்கள் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதற்கு அல்ல.

கேள்வி : 2

                            என்னுடைய பையனுக்கு தற்போது வயது 8 ஆகிறது. இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பிற்குச் செல்கிறான். வீட்டில் அமைதியாக இருப்பான். ஆனால் நண்பர்கள் உறவினர் வீட்டிற்கு செல்லும் போது அங்குள்ள பொருட்களை எடுத்து விளையாடச் செய்கிறான் பெரும்பாலும் உடைத்து விடுகிறான் அவன் செயலை தடுக்க முற்பட்டால் ரொம்ப அடம் பிடிப்பான் இதனால் நான் பெரும் மன வேதனை அடைகிறேன் அவனை எப்படி கட்டுப்படுத்துவது?

பதில் : 2

இந்த பிரச்சனைக்காக நீங்கள் அதிக கவலைப்பட வேண்டியதில்லை. 8 வயது மகனிடம் உங்களின் மனப்பக்குவத்தை எதிர்பார்க்கக் கூடாது. சிறுவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களைப் பக்குவமாகத் திருத்த வேண்டும். அது எளிது.

                     வீட்டில் அவன் அடங்கி இருப்பதால் அவன் மனதளவில் அடங்கி இருக்கிறான் என்று அர்த்தம் இல்லை. வீட்டில் பொருட்களை உடைத்தால் அடி கிடைக்கும் என்று அவன் தண்டனைக்கு பயந்து அடக்கமாக இருக்கிறான். வெளியே சென்றால் வீட்டில் செய்ய முடியாததைச் செய்யலாம் என நினைக்கிறான். அங்கே நாகரீகம் கருதி அவனை தண்டிக்க முடியாது என கருதுகிறான். ஒரு வேளை நீங்கள் கொடுக்கும் அதிகபட்ச தண்டனையால் உங்களைப் பழிவாங்கும் எண்ணத்தில் இப்படி பிள்ளையை வளர்த்து வைத்திருக்கிறாளே என்ற குறை உங்கள் மீது விழட்டும் என்று கூட அவன் இதைச் செய்யலாம். உங்கள் மகனிடம் அடக்கம் ஒடுக்கமாக இருப்பது நல்ல பண்பு வீடு, வெளி இடங்களுக்கு  எங்கு சென்றாலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்று பக்குவமாக எடுத்து கூறுங்கள். அவனை மிரட்டாமல் ஏன் பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை அமைதியாக விளக்கி என்பதையும் அடுத்த வீட்டிற்கு போய் பொருட்களை உடைப்பதால் அவர்களுக்கும் நமக்கும் ஏற்படும் சிரமங்களையும் உணர்த்துங்கள். இந்தக் குறையை வளர விடாமல் இப்போதே சரி செய்து விடுங்கள்

கேள்வி : 3

                 என் வயது 40. சென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பெரிய பதவியில் இருக்கிறேன். எனக்கு பணம்பெரிய விஷயமில்லை. நான் பாசத்திற்காக ஏங்குபவள். எனக்கு பாதுகாப்புக்கு இருக்கும் ஒரே ஜீவன் என் தாய் .அவருக்கு 65 வயது. நான் இவ்வளவு பெரிய நிலைக்கு வருவதற்கு நான் பட்ட சிரமம் எனக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள் ஏராளம். நான் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னை இழந்து விரக்திக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த போதெல்லாம் என் மீது ஒரு சுடு சொல் கூட பேசாமல், கண்னை மூடி ஆதரித்து ஏற்றுக் கொண்டு என்னை ஆளாக்கிய என் தாய் இப்போது மறதியால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அரை மணி நேரத்திற்கு முன்பு சொன்னதை கூட மறந்து விடுகிறார். பொருட்களை வைக்கும் இடத்தை மறந்து விடுகிறார். எதிலும் விருப்பம் இல்லாமல் யாரிடமும் பேசாமல் இருக்கிறார். சொந்தமாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரின் இறுதி காலம் வரை அவரை ஒரு குழந்தை போல் வைத்து பராமரிக்க விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

பதில் : 3

உங்கள் தாய் மீது பேரன்பு வைத்திருக்கிறீர்கள். மறதி நோய்க்கு சிறந்த மருந்து அன்பு காட்டுதல் தான்.அதுவே உங்களிடம் அதிகம் இருப்பது உங்கள் அம்மாவுக்கு பலம்.தொடர்ந்து எக்காரணம் கொண்டும் அந்த பாசத்தில் குறைவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளிக்காட்டும் பாசம் அவரால் உணரப்பட வேண்டும் என்பது தான் குறிப்பிடத்தக்கது. அவரால் என்னென்ன வேலையைச் செய்ய முடியும் என்பதை பகுத்து உணருங்கள். செய்ய முடியும் என்கின்ற வேலையை அவர் செய்யட்டும் முடியாததை வற்புறுத்த வேண்டாம். தினமும் அவரிடம் பொறுமையாகப் பேசுங்கள். அவர் சொல்வதை எல்லாம் கேளுங்கள். கோபம் கொள்ளவோ எதிர்த்துப் பேசவோ வேண்டவே வேண்டாம். அவரது மறதியை குறையாக வேறு யாரிடமும் பேசி விடக்கூடாது. அப்படி நீங்கள் பேசி அவர் காதில் விழுந்தால்  மறதி நோய் போய் அதிகப்படவே செய்யும். அவரது நினைவாற்றலை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். வயதுக்கு ஏற்ற உணவை சரியான நேரத்தில் வழங்கி விடுங்கள். அவரது விருப்பங்களை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். தனியாக எங்கேயும் விட வேண்டாம். இவை அனைத்தும் பொதுவான பராமரிப்பு விசயங்கள். மேற்கொண்டு குறிப்பிட்ட விசயங்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் நேரடியாக அணுகுங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *