கே.ரவி-

Picture2

பகவத் கீதை என்பது மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ள செய்யுட் தொகுதி. கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் என்று அது கருதப்படுகிறது. 18 அத்யாயங்கள் கொண்ட நீண்ட செய்யுட் தொடரைப் போர்க்களத்தின் நடுவே நின்று சொல்லியிருக்க முடியுமா என்ற விமர்சனக் கேள்வியைப் பலர் எழுப்பியுள்ளனர்.

உபதேசம் என்பதன் பொருள் என்ன? கதைக்குள் உபகதைகள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அதாவது ஒரு பெரிய வெளியில், சிறிய பகுதியாக இருக்கும் வெளி அல்லது இடம் உபதேசம். பாரத தேசத்தில் தமிழ்நாடு ஓர் உப-தேசம் என்று சொல்லலாம்.

எனவே உபதேசம் என்பது ஒரு சீடனை அவன் குரு தன் உள்வெளிக்குள் வரவழைத்துத் தன் அனுபவத்தில் அவனைப் பங்கேற்க வைப்பது என்று புரிந்து கொள்ளலாம். அதற்கு, முதல்கட்டமாக, குரு சீடனுக்குள் நுழைய வேண்டும்; நுழைந்து, அவனுடைய உயிர்நிலையைத் தம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதைக் கைப்பிடித்து மெல்ல உயர்நிலைக்கு, தம் அனுபவ நிலைக்கு ஏற்ற வேண்டும்.

இப்போது புரிகிறதா, “காற்று வந்து கைப்பிடித்துக் கூட்டிச் செல்வது எவ்விடம்” என்ற கவிதை வரியின் பொருள்! அந்தக் காற்று குருநாதனின் ப்ராண சக்தியே! குருவின் ப்ராண சக்தியானது, அவருடைய ஸ்வாஸ கதியின் அதிர்வுகளாக மாறிச் சீடனின் ஸ்வாஸ கதியுள் நுழைவதே உபதேசத்தின் முதற்கட்டம்! வானொலி நிலையத்தில் எழுப்பப்படும் ஒலியலைகள், வெட்டவெளியில் பரவியிருக்கும் மின்காந்த அலைகளின் அதிர்வுகளாக மாறி, மீண்டும் வானொலிப் பெட்டியில் ஒலியலைகளாக மாறி ஒலிக்கின்ற நிகழ்ச்சி அன்றாடம் நடப்பதுதானே?

அப்படியொரு நிலையில், 1988-ல் என்று நினைக்கிறேன், நான் இருந்த போது, என்னுள் இருந்து ஒருநூறு செய்யுள்கள் ஊற்றெடுத்து வந்தன. அவை, வடிவிலும் சரி, பொருளிலும் சரி, என் மற்ற கவிதைகள் போலன்றி வேறுபட்டிருந்தன. திருமூலரின் திருமந்திரம் சாயலில் இருந்ததால் அவற்றை என் கவிதைத் தொகுப்பில் “குரு மந்திரம்” என்ற தலைப்பில் சேர்த்தேன். அவற்றில் ‘உபதேசம்’ என்ற தலைப்பில் உள்ள ஐந்து செய்யுள்களைப் பொருத்தம் கருதி இங்கே தருகிறேன்:

அமைதி கொடுத்துப்பே ரானந்தம் தந்து
சுமையகல வைத்துச் சுழுமுனையுள் செல்லும்
சமநிலையும் தந்துயிர் சாதிக்கப் பாதை
அமைத்துத் தருவ(து) உபதேச மாமே

தன்னுள் விரிந்த தனிவெளியில் தத்துவமாய்
இன்னொன்றை வைத்திழைத்துத் தானும் அதுவாகி
முன்சென்(று) உயிர்த்துயிர் மூலத்தை ஆட்கொள்ளும்
உண்மைப் பிணைப்பே உபதேச மாமே

வெளியே இருந்துவிளக் கேற்றிவைக் காமல்
ஒளியாகி உட்புகுந்(து) ஊடுருவிச் சென்று
வெளியையே உட்கொள்ளும் வித்தை அறிவித்(து)
ஒளியாக்கும் உண்மை உபதேச மாமே

மூச்சுக்கு மூச்சு முறையாகி உள்ளத்தின்
பேச்சுக்குப் பேச்சு பதிலாகி உள்விதியின்
ஆச்சரிய மாகி அறமாகி அத்தனைக்கும்
சாட்சி தருவது தானுப தேசமே

ஓதி உணர்விப்ப(து) ஏதுமில்லை உள்ளுக்குள்
ஊதி உலைவைத்(து) ஒருகவளம் சோறாக்கிப்
பாதிநீ பாதிநான் என்று பகிர்ந்துண்ணும்
பேதமில் லாதது ப்ரம்மோப தேசமே

எனவே பகவத் கீதையென்பது போருக்கு நடுவே வார்த்தைகளால் செய்யப்பட்ட வாய் உபதேசம் இல்லை; வாயு சம்பந்தத்தால் வாய்த்த உபதேசம்; மேலே சொல்லப்பட்டது போல், கண்ணபிரான் அர்ஜுனனுக்கு ஒருகணத்தில் செய்த ப்ரம்மோபதேசம். அதற்குக் காலச் செலவு தேவையில்லை. ஒரு கணம் போதும்.

பாரதி, தன் வாழ்நாளிலேயே வெளியிட்ட ஒரு கவிதைத் தொகுப்பைத் தன் குருவுக்குக் காணிக்கையாக ஸமர்ப்பணம் செய்திருந்தான். ஸ்வாமி விவேகானந்தரின் சீடர்களில் ஒருவராக இருந்த நிவேதிதா அம்மையார் என்ற அயர்லாந்த் நாட்டுப் பெண்மணிதான் அவனுடைய குருமணி. மிகச்சுருக்கமாக பாரதி தன் காணிக்கையைச் செலுத்துகிறான்:

“எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஶ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கின்றேன்.”

ஒரு கடிகையில் நிகழ்ந்து விடக் கூடியதே உபதேசம். அது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். யார்மூலமாக வேண்டுமானாலும் நிகழலாம். யார்மூலமாக உபதேசம் கிடைத்தாலும், அதை அந்த வடிவில் வந்து தந்தது சாட்சாத் பரப்ரும்மமே. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஒரு ஸ்லோகம் இதைத்தான் சொல்கிறது.

“குரு ப்ரும்மா குரூர் விஷ்ணுஹு குரு தேவோ மஹேஸ்வரா
குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மைஶ்ரீ குரவே நமஹ”.

உபதேசம் ஒரு காட்சியாக இருக்கலாம்; ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விவேகானந்தருக்குத் தந்தது போல் ஒரு தொடுகையாக (ஸ்பரிஸமாக) இருக்கலாம்; “உலகெலாம்” என்று இறைவனே அடியெடுத்துக் கொடுத்ததும் சேக்கிழார் பெருமானின் உள்ளத்திலிருந்து திருத்தொண்டர்கள் வரலாறு கவிதைகளாக ஊற்றெடுத்து வந்ததே, அப்படியொரு சொல்லாகவும் இருக்கலாம். பாரதிக்கு நிவேதிதா தேவி செய்தது போல், ஏன், சனகாதி முனிவர்களுக்குச் சிவபெருமான் செய்ததுபோல், சொல்லாமல் உணர்த்தும் உபதேசமாகவும் இருக்கலாம்.

அர்ஜுனனுக்குக் கண்ணன் காட்டியது போல எனக்குக் காட்டப்பட்ட சிகா-மணி விஸ்வரூபக் காட்சி அப்படியொரு உபதேசம்தானோ!

பாலகுருவாக, கந்தவேள், சிவபெருமானுக்குக் காதில் உபதேச மந்திரத்தை ஓதினாரா, ஊதினாரா? பகர்ந்தார் என்று சொல்லிவிட்டார் அருணகிரியார்.

“சிவனார் மனம்குளிர உபதேச மந்த்ரம் இரு செவிமீதிலும் பகர்செய் குருநாதா” என்பது அருணகிரிநாதர் வாக்கு. இவர் பகர்ந்தார், அவர் மனம் குளிர்ந்தார் என்று சொல்லிவிட்டார். சரிதானே! சிவ பெருமானுடைய அகத்துக்குள் சென்று அவருடைய ப்ராண சக்தியை வேறொரு குரு வந்து வழிநடத்திச் செல்ல வேண்டிய அவசியம் உண்டோ? அதனால் செவிமீது என்றார், பகர்ந்தார் என்றார். மனம் குளிர்ந்தார் என்றும் சொன்னார். தெளிவின் சிகரமான சிவபெருமானின் மனம் தெளியச் சொன்ன மந்திரமா அது? இல்லை, மனம் குளிரச் சொன்ன மந்திரம்.

‘பகர்செய்’ என்பதற்கு இரட்டை வினைத்தொகை என்று புது இலக்கணக் குறிப்புத் தரலாமோ?

பாரதி சொல்கிறானே: “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்”. என்ன பொருள்?

அப்பப்பா, கொஞ்சம் விட்டால் சிகாமணி கேள்விக் கணைகள் தொடுத்துக் கொண்டே இருப்பான். பதில் உடனே கிடைக்குமா? பொறுத்திருக்க வேண்டும்!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *