–சு.கோதண்டராமன்.

என்னதான் இருக்கிறது வேதத்தில் – 11

என்னதான் இருக்கிறது வேதத்தில் – 13

மரணத்திலிருந்து அம்ருதத்தை நோக்கி

vedic pic

சாதாரண மனிதனாக இருப்பவன் வேள்வி செய்யும் நரன் ஆக உயர்கிறான். மேலும் உயர்ந்து பிரார்த்தனைப் பாடல் இயற்றும் ரிஷி ஆகிறான். அடுத்த நிலையில் தன் அருட்செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்கும் மகோனன் ஆகிறான். கடைசியாக சூரி எனப்படும் நிலையை அடைந்து மக்களுக்கு வழிகாட்டுகிறான். இதற்கு அடுத்த நிலையில் அவன் தேவன் ஆகிறான். இவ்வாறு படிப்படியாக உயர்ந்து மனிதன் தேவன் ஆகிறான்.   

 

வேதத்தில் ஐந்து வகை மனிதர் என்று பொருள்படும் பஞ்சஜநா:, பஞ்சக்ஷிதய:, பஞ்சக்ருஷ்டய: என்ற சொற்கள் அடிக்கடி காணப்படுகின்றன. (पञ्चजनाः, पञ्चकृष्टयः, पञ्चक्षितयः). இவை பிராமண க்ஷத்ரிய வைசிய சூத்ர சண்டாளர்களைக் குறிக்கும் என்று சாயணர் கூறுகிறார். இது ஏற்கக் கூடியதல்ல. ஏனெனில், ரிக் வேதத்தில் நான்கு வர்ணங்களைப் பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில் பத்தாவது மண்டலத்தில் புருஷ சூக்தத்தில் ஆதி புருஷன் யாகம் செய்வதை வர்ணிக்கும் இடத்தில் விராட் புருஷனின் முகத்திலிருந்து பிராமணன் தோன்றியது முதலான விவரம் வருகிறது. ரிக் வேதம் முழுவதும் வேறு எங்கும் இது பற்றிய மேல் விவரம் கிடைக்கவில்லை. பத்தாவது மண்டலம் காலத்தால் பிற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வர்ண முறை ஏற்பட்ட பிறகு இயற்றப்பட்டு இடைச்செருகலாகப் புகுத்தப்பட்ட பகுதி இது. அதனால் இதை ரிக் வேதத்தின் ஆதாரக் கருத்தாகக் கொள்வதற்கில்லை.

இதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு, மேலும் ஒரு சான்று தரப்படுகிறது. சாயணர் குறிப்பிடும் சண்டாளர் என்ற சொல் ரிக் வேதம் முழுவதும் இல்லவே இல்லை.
ராட்சசர்/ தஸ்யு என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டவர்களே பிற்காலத்தில் சண்டாளர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்லக் கூடும். இதுவும் தவறு. ஏனெனில் ரிக் வேதம் ஐவகை மனிதர்களும் நன்றாக வாழ வேண்டுமென்று எல்லா இடங்களிலும் பிரார்த்திக்கிறது. ராட்சசர்களையும் தஸ்யுக்களையும் அழிக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆக ராட்சசர்கள்/ தஸ்யுக்கள் இந்த ஐவகை மனிதர்களில் அடங்கியவர்கள் அல்லர்.

ப்ரம்ம என்ற சொல் எல்லா இடங்களிலும் மந்திரம் என்ற சொல்லில் தான் வருகிறது. ப்ராம்மண என்ற சொல்லும் மந்திரம் சொல்பவர் என்ற பொருளில் தான் வருகிறது.  க்ஷத்ர என்ற சொல் வீரம் என்ற பொருளில் வருகிறதே தவிர க்ஷத்ரிய ஜாதி அல்லது வர்ணம் என்ற கருத்தைக் காண முடியவில்லை. அரசரைக் குறிக்க ராஜன்ய என்று தான் கூறப்படுகிறது. வைசிய சூத்ரர்களைப் பற்றிய குறிப்பு இல்லவே இல்லை.

ரிக் வேதம் முழுவதும் ஆழ்ந்து கற்கும்போது ஆங்காங்கு கிடைக்கின்ற குறிப்புகளைத் தொகுத்துப் பார்த்ததில், மனிதன் தேவ நிலையை அடையும் வழியில் உள்ள படி நிலைகளே இந்த ஐவகை மனிதர் என்று கருத இடம் உள்ளது. அவர்கள் 1 மர்த்யர், 2 நரர், 3 ரிஷி, 4 மகோனர், 5 ஸூரி. அந்த ஐவகை மனிதர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1 – மர்த்யர்கள்
இதன் நேர்ப் பொருள் இறக்கக் கூடியவர் என்பது. எல்லா மனிதரும் சாகத்தானே போகிறார்கள். இதற்கு ஏன் சில மனிதரை மட்டும் சாகக் கூடியவர் என்று கூற வேண்டும்? இவர்கள் வாழ்க்கையின் உயரிய விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. இவர்கள் ராட்சசர்களைப் போல நாத்திகரோ, யக்ஞங்களுக்கு இடையூறு செய்பவரோ அல்லர். இவர்கள் கடவுளை வணங்குகிறார்கள், யாகமும் செய்கிறார்கள்.

யக்ஞம் என்பது மேலோரைப் போற்றலும், கீழோரைக் காத்தலும் ஆகும் என்பதை வரவிருக்கும் தலைப்பு ஒன்றில்  விரிவாகப் பார்க்க இருக்கிறோம். மர்த்யர்கள் யக்ஞம் என்பதன் முழுப் பொருளையும் உணராமல் (மேலோரைப் போற்றுவதையும் கீழோரைக் காப்பதையும் செய்யாமல்) தன் சொந்த நலனுக்காக மட்டும் வேள்வி செய்பவர்களாக இருந்திருக்கக் கூடும்.

உண்பதிலும், உணவிற்காக உழைப்பதிலும், சின்னஞ் சிறு இன்பங்களை அனுபவிப்பதிலும், பிறருக்குத் துன்பம் தருவதிலும்[1], போரிடுவதிலும்[2] அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இன்றி ஒரு நாள் இறந்து போகிறார்கள். இவர்கள் இறப்பதற்கே பிறந்தவர்கள். அதனால் மர்த்யர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் பாரதியாரின் பின் வரும் பாடலில் குறிப்பிடப்படும் வேடிக்கை மனிதன் போலவே இருக்கிறார்கள்.
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதர் ……………….

 2 –  நரர்
நரர் என்ற சொல்லுக்குத் தலைவர் என்றும் மனிதர்  என்றும் பொருள். மர்த்யர்களை விட மேம்பட்ட இவர்கள் விழிப்புப் பெற்ற மனிதர்கள். மிருகங்களைப் போல, புழு பூச்சிகளைப் போல, சாவதற்கென்று பிறந்தவர்கள் அல்ல நாம் என்று உணர்ந்தவர்கள். இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர்கள். இந்தப் படியைக் கடந்து தான் ஒருவன் மேல் நிலைக்குப் போக முடியும்.

இந்த நரர்கள் விழிப்புப் பெற்றார்களே அன்றி என்ன செய்தால் தேவ நிலையை அடையலாம் என்று அறியாதவர்கள். அதனால் தமக்கு மேல் நிலையில் உள்ள ரிஷிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். அவர்கள் சொன்னபடி யக்ஞம், பிரார்த்தனை, சோமம் வடித்தல் முதலானவை செய்கிறார்கள். இவர்களுக்கு காரு, வஹ்னி, வாகத, ஸபாத, ஆயு என்ற வேறு பெயர்களும் உண்டு.

3 – ரிஷி
இவர்கள் யாகம் செய்யும் நிலையிலிருந்து மேலே உயர்ந்தவர்கள். இவர்கள் தேவர்களைக் குறித்த பிரார்த்தனைப் பாடல்களை அறிந்தவர்கள். முன்னோர்களின் பாடல்கள் மட்டுமன்றி, புதிய பாடல்களையும் இயற்றுவார்கள். இவர்களுக்கு விப்ர, விப, கவி, வித்வான் என்ற வேறு பெயர்களும் உண்டு. “வஹ்னிகள் ருதத்தின் மகனை (அக்னியை) (ஹவிஸ் முதலான) காணிக்கைகளால் நிரப்பும்போது, விப்ரர்கள் ருதத்தைப் பிரார்த்தனைகளால் நிரப்புகிறார்கள்[3] என்பதிலிருந்து விப்ரர் எனப்பட்ட ரிஷிகள், வஹ்னி என்ற நரர் போல் வேள்வி செய்வதில்லை என்றும் அவர்கள் தோத்திரங்களைப் பாடி தேவர்களைத் துதிக்கிறார்கள் என்றும் அறிகிறோம். வேத மந்திரம் முழுவதும் இத்தகைய ரிஷிகள் இயற்றியவை தாம். தன்னை விடக் கீழ் நிலையில் உள்ள மர்த்யர், நரர் ஆகியோருக்காகவும், மேல் நிலையில் உள்ள மகோனர், சூரி ஆகியோருக்காகவும் சேர்த்து இவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

4 – மகோனர்
இந்தச் சொல்லுக்கு செல்வம் மிக்கவர்கள் என்று பொருள். இவர்கள் அதை மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். அந்தச் செல்வம் எத்தகையது என்பதை பின்னால் வரும் ஒரு பகுதியில் காணலாம். ஓரிடத்தில் மட்டும் இந்திரா, பிறருக்குக் கொடுக்காத மகோனரால் உனக்குத் துன்பம் நேராதிருப்பதாக[4] என்று வருகிறது. எனவே, வாரி வழங்காத மகோனரும் அபூர்வமாக ஓரிருவர் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

இவர்கள் ரிஷியாக இருந்து உயர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் தனக்காகப் பிரார்த்தனை செய்வதில்லை. ஓரிரு இடங்களில் “மகோனராகிய எங்களுக்கு செல்வம் அருள்க” என்று பொருள் கொள்ளக் கூடிய மந்திரங்கள் உள்ளன. மற்ற இடங்களில், பிரார்த்தனை செய்யும் ரிஷிகள், “எங்களுக்கும் எங்கள் மகோனர்களுக்கும் உணவு, இருப்பிடம், மக்கட் பேறு, செல்வம், புகழ், பாதுகாப்பு, எதிரிகளை வெல்ல வலிமை முதலானவை கிடைக்க வேண்டுமென்று” தேவர்களை வேண்டுகிறார்கள். இவர்கள் ரிஷிகளால் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள்.

மகோனர்களைப் பற்றிய ஒரு மந்திரத்தில், இவர்கள் பல விதமான எண்ணங்களை உடையவர்கள். வாயிலே எப்பொழுதும் துதிகளைக் காக்கிறார்கள். ஒளியின் முன்னே தர்ப்பைகளைப் பரத்துகிறார்கள். தானே புகழ் அணிந்து கொள்கிறார்கள். மக்களுக்கு நிறைய தானம் செய்கிறார்கள். இவர்களுடைய தேர் தடைபடாமல் செல்லட்டும் என்று ரிஷி வேண்டுகிறார்.[5]

5 – ஸூரி
இவர்கள் தன்னைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாதவர்கள். தன்னிடமுள்ள செல்வத்தை மக்களுக்கு வாரி வழங்குபவர்கள். முற்றிலும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியவர்கள். இவர்களுக்கு செல்வம், உணவு மிகுதியாகக் கிடைக்க வேண்டும் என்று ரிஷிகள் தான் வேண்ட வேண்டியிருக்கிறது. இவர்கள் தேவ நிலையை அடைவதற்கு முந்திய படியில் உள்ளவர்கள். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு அக்னி மகிழ்ச்சி அளிப்பதாக வேதம் கூறுகிறது.[6] இவர்களும் மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள். பிரார்த்தனை செய்வோருக்கு செல்வத்தையும் புகழையும் கொடு,  சூரிகளுக்கு வஸுத்வனத்தையும் அம்ருதத்தையும் கொடு என்று ரிஷி வேண்டுகிறார்.[7] இதிலிருந்து சூரி நிலைக்கு அடுத்த நிலை வஸு என்ற தேவநிலை என்று தெரிகிறது.

இவர்கள் யக்ஞம் செய்வதாகக் கூறப்படவில்லை. ஆனால் யக்ஞத்தைத் தோற்றுவித்ததாகக் கூறப்படுகிறார்கள்.[8] இவர்கள் யந்தார (வழிகாட்டிகள்) என்று கூறப்படுவதால், இவர்கள் மற்ற மக்களுக்கு தேவர்களின் அருளைப் பெறுவதற்கான வழியாக வேள்வி முறையைச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடும் என அறிகிறோம். தேவர்கள் தங்கள் எதிரிகளிடமிருந்து அபகரித்த செல்வத்தை இவர்களுக்கு வழங்குகிறார்கள். அதை இவர்கள் மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறார்கள். பிறருக்குக் கொடுக்காத சூரி எவரும் இல்லை.

இவர்கள் மகோனர்களை விட மேல் நிலையில் உள்ளவர்கள் என்பது எதனால் தெரிகிறது என்றால், எல்லா மந்திரங்களிலும் எங்கள் சூரிகளுக்கு செல்வம், புகழ், நீண்ட ஆயுள், நல்ல இருப்பிடம், மக்கட்பேறு, துன்பம் இல்லாத வாழ்வு முதலியவை கிடைக்க வேண்டுமென்று ரிஷிகள் வேண்டுகிறார்கள். சூரிகள் தங்களுக்காக எதையும் வேண்டுவதாக எந்த மந்திரமும் கூறவில்லை.

ருதத்தின் (தர்மத்தின்) படி நடந்து இவர்கள் மற்ற மக்களையும் நன்னெறிப் படுத்தும் வேலை இவர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

மனிதன் எப்படி தேவ நிலையை அடைகிறான் என்பதை ஒரு மந்திரம் விளக்குகிறது. ருதத்தைத் (தர்மத்தைத்) தாங்கிக் கொண்டு அதைப் போற்றுவதையே செல்வமாகக் கருதி, பல இடங்களிலும் தேடிக் கொண்டு, வேறு எதிலும் ஆசை வைக்காமல், தங்கள் வேலையைச் செய்துகொண்டு, தேவர்களை மகிழ்வித்துக் கொண்டு, தேவப் பிறப்பை நோக்கிச் செல்கிறார்கள். [9]

மர்த்யனாக இருப்பவன் இப்படி படிப்படியாக உயர்ந்து தேவ நிலையை அடையலாம். அப்பொழுது அவனுடைய உடல் மடிந்தாலும் அவனுடைய புகழ் மறையாது. அவன் தேவர்களோடு தேவர்களாகச் சேர்ந்து விடுவான். விண்ணில் ஒளியுள்ள உடல் பெற்று அமரனாக வாழ்ந்து கொண்டிருப்பான்.

இந்த ஐந்தில் நரர், கவி, மகோனர், சூரி ஆகிய அடைமொழிகள் இந்திரன், மருத்துகள், அக்னி, அச்வின்கள், வருணன், சோமன், ரிபுக்கள் ஆகிய எல்லாத் தேவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தேவர்கள் எல்லாரும் இந்த நிலைகளைக் கடந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது.

குறிப்புகள்:
1    1.27.3
2    1.27.7
3    8.6.2
4.    6.44.12
5     5.18.3-5
6     1.31.7
7     8.13.12
8     10.66.2
9    1.71.3

படம் உதவிக்கு நன்றி: http://swamiindology.blogspot.com/2013/10/mysterious-atharva-veda-part-2.html
http://cdn2-b.examiner.com/sites/default/files/styles/image_content_width/hash/7e/c6/7ec6f4beb41676c18c52e0c2c5e5ea62.jpg?itok=QP4ZC2sk

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “என்னதான் இருக்கிறது வேதத்தில்? -12

  1. வேதங்கள்  உடைந்து போய்க்கொண்டிருக்கும் தமிழ்மொழி பழமையை அறியச்செய்யும்.அதர்வண வேதம் குறித்த செய்திகள் அறியப்படவேண்டும்.(மந்திரம்,மாயை).இலக்கியங்களில் காணப்படும் இது குறித்த செய்திகள் இதன்வழி உறுதியாக்கப்படும்

  2. நாத்திகர்கள் ராட்சசர்களாக குறிப்பிடப்படுவதாக கூறுகிறீர்கள். ரிக் வேத காலகட்டத்தில் அல்லது ரிக் வேதத்திலேயே ஆத்திக நாத்திக வேறுபாடு தெளிவாக இருந்ததா?

Leave a Reply to Lakshmi

Your email address will not be published. Required fields are marked *