இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(114)

0

–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்…

ஊரெல்லாம் திருவிழா, காரெல்லாம் இங்கிலாந்துக் கொடி, பேச்செல்லாம் இங்கிலாந்து உதை பந்தாட்ட அணியைப் பற்றி, என்ன எதைபற்றிய அலசல் எனும் கேள்வி எழுகிறதா ?

உலகக் கால்பந்தாட்டப் போட்டி பிரேஸில் நாட்டில் கோலாகலமாக ஆரம்பித்தது. மிகவும் எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்து அணி பிரேஸில் நாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்டது.

நான் இங்கிலாந்து நாட்டிற்குள் காலடி வைத்தது முதல் எப்போதும் நான்கு வருடத்திற்கொருமுறை நடைபெறும் இவ்வுதைப் பந்தாட்டப் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் இரசிப்பதுண்டு.

என்ன அதிலே விஷேசம் என்கிறீர்களா ?

அடிப்படை வசதியற்ற ஏழ்மை சூழ்ந்த நாடுகள் செல்வச் செழிப்பு மிக்க நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிடும் ஒரே நிகழ்வு எனும் காரணமே !

இதிலே போட்டியிடும் பல நாடுகள் பொருளாதர நிலையிலே பங்கு பெறும் பல நாடுகளை அண்மிக்கக் கூட முடியாது. இருப்பினும் இப்போட்டிக்குத் தமது அணிகளைத் தயார் செய்து மிகுந்த செலவுகளுடன் கூடிய பயிற்சிகளை அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி இப்போட்டிகளில் பங்கு கொள்ள வைக்கிறார்கள்.

ஆனால் இப்போட்டிகளில் பங்கு பெற்றும் தமது நாடுகளை தெருவோரம் நின்று தொலைக்காட்சி விற்பனை நிலையங்களின் காட்சிக் கண்ணாடிகளின் முன் நின்று பார்த்துக் கைதட்டி ரசிக்கும் அவ்வேழை மக்கள் அதே உணவுக்குக் கூட வழியில்லா நிலையில் தான்.

என்ன உலகமடா இது என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா ?

சரி இனி எமது நாடான இங்கிலாந்து நாட்டின் நிலைமைக்கு வருவோம். 1966ம் ஆண்டு உலக உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று உலகச் சாம்பியன்களாக வலம் வந்த பின்பு இன்றுவரை உதைபந்தாட்டப் போட்டியை நாம் தான் கண்டுபிடித்தோம் ( அதுவேறு சர்ச்சை) என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கிலாந்து நாட்டிற்கு மீண்டும் அந்தச் சந்தர்ப்பம் இன்றுவரை எட்டாமலே போகிறது.

இது ஒருவகை சாபமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது .

உலக அளவிலேயே உதைபந்தாட்டம் முக்கியமான விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்தில் நடப்பதே மிகவும் பிரசித்து பெற்றது.

ஏனைய உதைபந்தாட்ட நாடுகளில் உள்ள திறமையான உதைபந்தாட்ட வீரர்கள் பலர் இங்கிலாந்தின் உள்நாட்டு உதைபந்தாட்ட அணிகளில் தம்மை இணைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்டத்தின் தரத்தின் உயர்வைக் குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய உயர் அபிப்பிராயத்தினைக் கொண்ட உதைபந்தாட்டப்போட்டி நடைபெறும் நாடானது 1966ம் ஆண்டிற்குப் பின்னால் ஒரு தடவையாவது உலக உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் செல்லவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமே !

இங்கிலாந்து உதைபந்தாட்ட நிர்வாகக் குழுவினரும் இதுவரை எத்தனையோ திறமையான வெளிநாட்டு பயிற்சியாளர்களைத் தமது அணிக்கு முதன்மைப் பயிற்சியாளர்களாக நியமித்தும் அவர்களது இலக்கை இதுவரை அவர்களால் அடைய முடியவில்லை.

FIFA 2014 England2FIFA 2014 England

இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்ட உலகக் கோப்பை எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடைந்தவர்களில் நானும் ஒருவன் .

என்ன செய்வது இனி 2018ம் ஆண்டை நோக்கி எமது ஆவலைத் திருப்ப வேண்டியதுதான்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

 

படம் உதவி: Getty Images, www.gettyimages.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *