எம்.ஜெயராமசர்மா-மெல்பேண்

 poster03

      வீரத்தை விவேகம் ஆக்கி

      வியந்துமே உலகம் பார்க்க

      பாரதம் ஈன்ற மைந்தன்

      பண்பிலே உயர்ந்து நின்றார்

 images (1)

      வேத சாரத்தை விளக்கி

      மக்கள் மனமெலாம் விதைத்து

      போதனை செய்து நின்று

      பொறியினை எழுப்பி விட்டார்

 

      இளமையில் துறவை ஏற்றார்

      பழமையில் புதுமை கண்டார்

      துறவிகள் வாழ்வில் என்றும்

      தூய்மையே வேண்டும் என்றார்

 

      ராம கிருஷ்ண பரம்ஹம்சர்

      நாளும் பாதம் பணிந்துநின்று

      நேரம் ஒன்றும் பார்த்திடாமல்

      யோக நிஷ்டை செய்துநின்றார்

 

      பரம் ஹம்சர் பார்த்தாலே

      பரவசத்தை அடைந்து விட்டார்

      உலகமீது அன்பு கொண்டு

      உழைப்பதற்குத்  தொடங்கி விட்டார்

 

      சித்துக்கள் செய்து அறியார்

      சொத்துக்கள் சேர்த்து அறியார்

      சத்தியத்தை மட்டும் அவர்

      தன்னுடனே சேர்த்து நின்றார்

 

     வேதத்தைக் கற்ற அவர்

     வித்துவச் செருக்கு ஒழித்தார்

     சாதகனாய் மாறி அவர்

     சரிதிரமாய் ஆகி விட்டார்

 

    ஆதரவு வேண்டி நிற்பார்

    அனைவரையும் அணை என்றார்

    போதனைகள் செய்ய முன்னர்

    போக்க வேணும் பசியென்றார்

 

    ஏழ்மையை போக்கி விட்டு

    இறைவனைக் காணு என்றார்

    தோழமை கொண்டு நாளும்

    தொடங்கிவிடு சேவை என்றார்  

 

    பெண்மையில் தாய்மை கண்டார்

    பிதற்றலை வெறுத்து நின்றார்

    மண்ணிலே நல்ல வண்ணம்

    வாழ்ந்திடப் பலவும் சொன்னார்

 

   சமயத்தின் சாரம் சொன்னார்

   இமயமாய் உயர்ந்து நின்றார்

   எமையெலாம் விழிக்கச் செய்தார்

   எழுமின்கள் என்றும் சொன்னார்

 

  வீர விவேகானந்தரை 

       என்றுமே வாழ்த்துவோம்

 விழிப்பினைத் தந்தவரை

         நாளுமே போற்றுவோம்

  நாடு சிறக்கவந்தவரை

        நாமெலாம் வாழ்த்துவோம்

 நம்முடை மனமெல்லாம்

     நல்லெண்ணம் எழுந்திடட்டும் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *