காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர் பயிலரங்கம்.

1

9.7.2014 அன்று காரைக்குடி இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கத்தினை தன்னார்வத் தொண்டு ஆர்வலர் திரு சொ.வினைதீர்த்தான் நடத்தினார். பாரம்பரியமிக்க இந்நகராட்சிப்பள்ளி 1938ல் தொடங்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆற்றல்மிகு தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர் ராசா வழிநடத்தலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திரு பீட்டர் ராசா பயிலரங்கு நடத்த ஆர்வத்துடன் தக்க ஏற்பாடுகள் செய்தார்.

23

பத்தாம் வகுப்புப் படிக்கும் 24 மாணவ மாணவியரும், ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் 60 பிள்ளைகளும் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

46

நேர நிர்வாகம், நினைவாற்றல் பெருக்கல், உறவுகளை மேம்படுத்தல் பற்றிச் சில சிந்தனைகளை இளம் மாணவர் நெஞ்சங்களில் விதைக்க முடிந்தது.

கற்றல் பற்றி (Registration, Retention, Recall) வாசிப்பு, சிந்திப்பு, படைப்பு என்ற நிலைகள் ஆராயப்பட்டன. ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி நெஞ்சில் நிறுத்தல் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. “நான்கேட்கிறேன்; மறந்துவிடுகிறேன்; நான் பார்க்கிறேன்; நினைவுகூர்கிறேன்; நான் செய்கிறேன் புரிந்துகொள்கிறேன்!”என்பதனை ஒரு செயல் முறை மூலம் விளக்கப்பட்டது. நான் சொல்வதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு “உங்கள் ஆட்காட்டி விரலைக் கன்னத்தில் வையுங்கள்’ என்று கூறி அவர்கள் பார்க்க தன் பெருவிரலைத் தாடையில் பயிற்சியாளர் வைத்தார். பார்த்த மாணவர்கள் அனைவரும் அவ்வாறே அவரவர் பெருவிரலைத் தாடையில் வைத்தனர். பயிற்சியாளர் கூறியதான ஆள்காட்டி விரலை கன்னத்தில் வைக்கவில்லை. மாணவர்கள் பார்த்ததை செய்ததை ஆரவாரத்துடன் ஒத்துக்கொண்டார்கள். செயல்முறையால் I HEAR I FORGET; I SEE I REMEMBER; I DO I UNDERSTAND என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

நினைவாற்றல் பெருக்கலில் ஒவ்வொரு கேள்விக்கான பதிலிலும் 4,5 சொற்களே பிரதானமாக உள்ளன என்பது எடுத்துக்காட்டுகளுடன் சுட்டப்பட்டது. படிக்கும்போது ஒரு பாடத்திலிலுள்ள ஒவ்வொரு கேள்விக்கான பதிலின் பிரதான 5,6 சொற்களைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் குறிப்புப் புத்தகம் பாடத்தினை உணர்ந்து படிக்கவும் நினைவுபடுத்திக்கொள்ளவும் உதவும்.

கற்க! கசடறக் கற்க!!
கற்பவை கற்க! கற்றபின் கற்க!!
நிற்கக் கற்க!

என்று குறளைப் பிரித்துச் சொல்லி ஒருமுகக் கல்வி, பன்முறை படித்தலும் உரைத்தலும், பயனுறு கல்வி (FOCUSED LEARNING, POWER OF REPETITION, PURPOSE OF LEARNING) ஆகியவை வலியுறுத்தப்பட்டது.

5

நேர நிர்வாகத்தில் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றும் செயல்களைத் திட்டமிட்டு ஒழுங்குபடித்திக்கொள்ளுதலே நேர நிர்வாகம் என்பது விளக்கப்பட்டது. ஒருவர் செய்யும் செயல்கள் 1.அவசியம்/அவசரம், 2.அவசியம்/அவசரமில்லை, 3.அவசியமில்லை/அவசரம்,4.அவசிமும் இல்லை/அவசரமும் இல்லை என்று நான்கு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அலசப்பட்டன.

அவசியமான செயல்களான 1.உடலினை உறுதி செய்தல், 2.அறிவையும் திறனையும் பெருக்கல், 3.உறவுகளை மேம்படுத்தல் வலியுறுத்தப்பட்டன. அவசியமான செயலைத் தாமதப்படுத்தும்போது அது அவசரமான செயலாகிவிடுகிறது. படிப்பினை நாளை பார்க்கலாம் எனத் தள்ளிப்போடும்போது தேர்வு நெருங்கிப் படிக்க முடியாது மதிப்பெண் குறைந்துவிடுகிறது.

‘என்றும் ஒருவுதல் வேண்டும் புகழ்
நன்றி பயவா வினை.’

குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது புகழோ நன்றியோ கிடைக்காவிட்டால் அச்செயலை என்றும் செய்யக்கூடாது என்றார் வள்ளுவர். அது அவசியமும் அவசரமும் இல்லாத செயல். அச்செயல் நேரத்தை வீணடிக்கும். ஒரு செயல் செய்யும்போது அது செய்பவரின் திறனை வளர்த்து அவர் புகழ் பெற உதவ வேண்டும். அல்லது அச்செயல் பிறருக்குப் பயன்பட்டு நன்றியுடைவர்களாக ஆக்கவேண்டும். தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்துகொண்டு கிரிக்கெட்டோ அல்லது சினிமாவோ பார்ப்பதாலும் செல்போனில் வேண்டாதவற்றைப் பேசுவதாலும் புகழும் வராது, நன்றியும் கிடைக்காது என்பதை மாணவர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். தாங்கள் பயிற்சியில் அறிந்துகொண்டவை பற்றிக் கருத்துரை (Feed back) எழுதிக்கொடுத்தார்கள்.

Share

About the Author

சொ. வினைதீர்த்தான்

has written 7 stories on this site.

சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த கண்டரமாணிக்கம் என்ற சிற்றூரில் 1950ல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளங்கலை வேதியல் பட்டம் படித்தவர். இன்சூரன்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவில் ஃபெல்லொஷிப் பட்டயம் பெற்றவர். இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் 1971 முதல் 40 ஆண்டுகாலம் நிர்வாகம், மார்க்கெட்டிங், டிரெயினிங் துறைகளில் பல்வேறு பதவிகள் வகித்துப் பகுதி மேலாளராக ஓய்வு பெற்றவர். பணியின் இறுதி ஆறு ஆண்டுகளில் பயிற்றுனராக 6000 முகவர்களுக்கும், அலுவலர்களுக்கும் இன்சூரன்சு கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் மனித உறவுகள் குறித்துப் பயிற்சியளித்துள்ளார். தற்போது உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவச் செல்வங்களுக்கு சுய முன்னேற்றப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். தணியாத தமிழார்வம் உடையவர். அம்பத்தூர் கம்பன் கழக ஆயுட்கால உறுப்பினர். காப்பீடு விற்பனை பற்றிய ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மனம் கவரும் மேடைப் பேச்சாளர். வல்லமை, மின்தமிழ், தமிழ்மன்றம்,மழலைகள் முதலிய இணைய மடலாடல் குழுமங்களில் ஆர்வத்துடன் பங்குபெற்றுத் தன் கருத்துக்களைப் பதிவுசெய்து வருகிறார். தமிழ் இலக்கியங்கள் கூட்டுறவும், தமிழ் ஆர்வலர்கள் ஒட்டுறவும், மாணவச் செல்வங்கள் உயர்வும் அவருக்கு உவப்பானவை.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.