சு. ரவி

 

7D83B7BE-1A74-4E7A-980C-FDCAA5E06091

இளைஞனே,

நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை.
பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை.
கண்ணீர் மன அழுத்தத்தைக் கரைக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை.
அது உன் திறமையையும் தன்னம்பிக்கையையும் தகர்த்து விடுகிறது.

அழுகை ஆன்மாவைப் புனிதமாக்குகிறது என்பது வேலையற்றவரின் வெட்டி வேதாந்தம்.

என் இனிய இதயமே,

உன் அழகிய விழிகளில் துளிர்த்து உதிர்வன உன் ஓராயிரம் நிறைவேறாத ஆசைகளே.
உனக்காக நெகிழ்வதை நிறுத்து.

“வாடிய பயிர்களைக் கண்டு” வாடினால் நீ வடலூர் வள்ளல் ஆகலாம்.
அப்போது நீ உனக்காக அழமாட்டாய்- உலகத்து உயிர்களுக்காக அழுவாய்.
அது உயர்ந்த யோக மார்க்கம்!

என் நம்பிக்கையே,

கண்ணீரும், அழுகையும் கோழையின் ஆயுதங்கள். பெண்மையின் பலவீனங்கள்.
ஒரு துளி பன்னீர் கிடைக்க ஓராயிரம் ரோஜா மலர்கள் தேவை..
ஆம் ஒரு ஞான யோகி உருவாகுமுன் இந்த மண்ணில் ஒராயிரம் கர்மயோகியர் அவதரிக்க வேண்டும்.

உன் வாடைக்காலப் போர்வையை வீசி எறி. வஸந்தம் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறது.

கர்மயோகியே,

கண்ணீர் உலர்ந்து கடமை உணர்ந்து
திண்மை செறிந்து நொய்ம்மை தவிர்த்து
எழுந்திரு!

நீ பிறந்தபோது அழுதாய். அது அறியாமல் செய்தபிழை.
அது உன் வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடங்க
நீ ஊதிய வெற்றி சங்க முழக்கமாகட்டும்.

உன் புன்னகை மிளிரும் முகத்தில் நாளைய உலகின் அருணோதயம்
தெரிகிறது.
இதோ உன் கண்ணீர் நின்றுவிட்டதால் இந்தியத் தாயின் ஜீவநதிகள்
பிரவாகமெடுத்து ஓடுகின்றன!
கண்ணீரின் தடங்கள் மறைந்த பாதையில் உன் வீறு நடை போடு!

என் இனிய இந்திய இளைஞனே,

நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை
பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை.

சு.ரவி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை

  1. சூடாக வசனத்தில் சு.ரவிவியுன் வார்த்தைகள்
    பாடாய்ப் படுத்தியென் பாழ்மனத்தைத் துளைத்தங்கே
    வாடா மலரொன்றை வைத்தழகு கூட்டியது
    கோடானு கோடி இளைஞர்களைக் கூவி
    எழுப்பித் துயில்கலைத்த எம்மான் விவேகா
    நந்தன் குரலை எதிரொலிக்கும் வாசகத்தில்
    சிந்தை மலர்ந்தேன் செயலூக்கம் மிகக்கொண்டேன்
    அழாதே எனச்சொன்ன அன்பிலே கண்பனித்து
    விழுந்த துளியில் விளக்கேற்றி வைக்கின்றேன்
    பொழுது புலரட்டும் புன்னகையால் மாலையிடு
    அழாதே எனச்சொல்லி அன்புடனே ஆணையிடு.
    கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *