–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
இன்னொரு வாரம், இன்னொரு மடல், இன்னொரு சந்திப்பு.

ஐக்கிய இராச்சியம் நான் அறிந்த நாள் முதல் வட அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் எனும் நான்கு பகுதிகளின் சேர்க்கை ஆகும்.

இந்த ஒன்றிணைப்பான ஐக்கிய இராச்சியம் தான் ஒரு காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியமாக தனது காலனித்துவ நாடுகளின் மீது கோலோச்சியது.

இங்கிலாந்து அரசர் முறையே வேல்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளை வெற்றி கொண்டு பிளவு பட்ட அயர்லாந்தின் வடபகுதியையும், வேல்ஸ்சையும் ஒன்றாக இணத்தார்.

அதன் பின்பு இரண்டு அரசுகள் அதாவது இங்கிலாந்துடன் இணைக்கப்பட்ட வேல்ஸ், வடஅயர்லாந்து உள்ளடங்கிய ஒரு அரசும், ஸ்கொட்லாந்து அரசும்  தனியே இயங்கி வந்தது.

பின்பு 1503ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் அரசரான ஐந்தாவது ஜேம்ஸ் இங்கிலாந்தின் அரசரான 7வது ஹென்றியின் மூத்த புதல்வி மார்கிரெட் டியூடோர் என்பவரை மணந்ததும் தான் ஸ்காட்லாந்து அரசரின் கனவான இங்கிலாந்து அரசும் ஸ்காட்லாந்து அரசும் இணையும் படலங்கள் ஆரம்பமாகின.

englandஇப்படியாக மலர்ந்ததுதான் ஐக்கிய இராச்சியம். இந்த ஐக்கிய இராச்சியம் ஒன்றான  யூனியன் ஆக அமைந்திருந்தாலும் கடந்த லேபர் கட்சியின் அரசு டோனி பிளேயரின் தலைமையின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின் அங்கங்களான ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் என்பனவற்றிற்கு சட்டசபை முறையிலான அதிகாரங்களை வழங்கியது.

இன்று அப்பகுதிகளுக்கு இந்திய முறையப் போன்று முதலமைச்சரும் சட்டசபைகளும் உண்டு.

ஆனால் பிரச்சனை அத்தோடு நின்று விடவில்லை. ஸ்காட்லாந்து அரசியல் கட்சியில் ஒன்றான ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தாம் தனிநாடாகத் திரும்பப் பிரிந்து போக வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்து பல தேர்தல்களில் ஜயித்தது.

அத்தோடு ஸ்காட்லாந்து உள்நாட்டுத் தேர்தலில் அக்கட்சியே ஜெயித்து சட்டசபையை அமைத்தது.

அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அரசாங்கம் ஸ்காட்லாந்து நாடு தனியே பிரிந்து போவதை அந்நாட்டு மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு பொதுஜன வாக்கெடுப்பை ஸ்காகொட்லாந்தில் நடத்தப் போவதாக அறிவித்து அதற்கான திகதி இவ்வருடம் செப்டெம்பர் மாதம் என அறிவித்தது.

இதோ ஜூன் வந்து விட்டது, ஸ்காட்லாந்து பிரிவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி தேசியக் கட்சியும், அதனால் ஸ்காட்லாந்து அடையப்போகும் தீமைகளைப் பற்றி இங்கிலாந்தின் மற்றைய பிரதானக் கட்சிகளும் கடுகதிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.

ஆனால் இங்கிலாந்து மக்களை ஸ்காட்லாந்து தாம் பிரிந்த பின்பு எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் சில விடயங்கள் மிகவும் எரிச்சலூட்ட வைக்கின்றன.

குறிப்பாக ஸ்காட்லாந்து பிரிவினையை வேண்டுவோர் பிரிவின் பின்னரும் தமது நாட்டின் கரன்சியாக பிரிட்டிஷ் பவுண்ஸ்சையே வைத்திருக்கப் போகிறோம் என்பது பல இங்கிலாந்து மக்களுக்கு மிகவும் ஆத்திரத்தையும் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணுகிறது..

இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இது மிகவும் சிக்கலான சந்தியாகிறது முடிவு எதுவாயினும் அது இரு பகுதிகளையும் பாதிக்கத்தான் போகிறது.

சரி செப்டெம்பர் மாதத்தின் பின்னால் இதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமே !

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *